பொய்க்கால் குதிரை ஆட்டம்
கடந்த வருடம் அலுவலகப் பணி காரணமாக தமிழகத்திற்கு பயணப்பட வேண்டி இருந்தது. அமெரிக்காவிலிருக்கும் எங்கள் கணிப்பொறிக் குழுவின் தலைவரிடம் பேசிப் பாண்டியர்களின் தலைநகராக விளங்கிய, மல்லிகைக்குப் பெயர் பெற்ற, தூங்கா நகர் என்று புகழ் பெற்ற, தமிழிற்குச் சங்கம் வைத்து வளர்த்த, நான் பிறந்த (இது முக்கியம்) பெருமைமிகு ஊரான மதுரையில் இருந்து பணி செய்யும் ஒரு வாய்ப்பினைப் பெற்றேன். தினமும் கிடைத்த காலை நேர வேளையில் ஏதேனும் ஒரு தமிழர் கலையை நமது ஊரிலேயே பயின்றால் என்ன என்று தோன்றியது. அப்போது தான், மதுரைக் கல்லூரியின் பேராசிரியரான முனைவர் திரு.சாகுல்அமிது என்ற ஒரு பலகலை வித்தகரின் தொடர்பு கிடைத்தது.
கட்டைக்கால் பயிற்சி
திரு.சாகுல் தலைமையில் கடந்த 2013ம் ஆண்டு மாமதுரையைப் போற்றுவோம் என்ற நிகழ்வில் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள அனைத்துக் கலைஞர்களையும் ஒன்று திரட்டி, மாபெரும் கலைப் பேரணியை நடத்திக் காட்டியவர் என்பதனையும், திரைப்பட நடிகர் திரு.கமல் அவர்களுக்கு தேவர்மகன் என்ற திரைப் படத்திற்காகச் சிலம்பம் பயிற்றுவித்தவர் (அவருடன் பயிற்சி பெறும் புகைப்படத்தினையும் பார்த்தேன்) என்பதனை அறிந்து வியப்புற்றேன். அவரின் வகுப்பில் முதல்நிலைச் சிலம்பப் பயிற்சி 20 வகுப்புகள் நிறைவு பெற்றபின், கட்டைக்கால் என்ற இரண்டு அடி உயர மரத்தால் ஆன கட்டையை காலில் கட்டிகொண்டு சிலம்பம் ஆடும் முறையைப் பயிற்றுவிப்பதாகக் கூறினார். அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதனைக் கற்றுக்கொள்ள ஆர்வமும் ஏற்பட்டது. இந்தக் கட்டைக்காலானது பொய்க்கால் குதிரையில் பயன்படுத்தப்படும் கட்டையை விட இரண்டு மடங்கு உயரம் உடையது. இதன் பயிற்சியானது சற்று வித்தியாசமானதாக இருந்தது.
முன்னங்கால் பகுதியைக் கட்டையோடு சேர்த்துத் துணிப்பட்டையைக் காலின் முட்டிப்பகுதி வரை வைத்து இறுக்கமாகக் கட்டுவார்கள். பின் ஆசிரியரின் துணையோடு தாயின் கையைப் பிடித்துச் செல்லும் குழந்தையைப் போல நடக்க வைக்கப்படுவர். நான் அதுவரை பார்த்துப் பழகிய எனது பார்வை மட்டம் இரண்டு அடி மேலிருந்து நடந்து கொண்டே பார்ப்பதால் சற்று வியப்பும், பயமும் தொற்றிக்கொண்டது. தொடர்ச்சியான முன்நோக்கி நடப்பது மற்றும் சுற்று நடைப்பயிற்சியோடு மூன்று முதல் நான்கு நாட்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது. பின் சிலம்பம் சுற்றும் முறையும் அதோடு சேர்த்துப் பயிற்சி எடுக்கப்பட்டது. கட்டைக்கால் கொண்டு செய்யப்பட்ட பயிற்சியானது பின் பொய்க்கால் குதிரை ஆட்டப் பயிற்சிக்குப் பெரும் உதவியாக இருந்தது. இதனைப் போன்று தமிழர் கலைகளில் பல வித நுணுக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்புடையாதாக இருப்பதாகவே தோன்றுகிறது.
பொய்க்கால் குதிரை பயணப்பட்ட கதை
எனது தமிழகப் பயணம் நிறைவு பெற்ற வேளையில், மினசோட்டா தமிழ்ச்சங்க விழாவில் அரங்கேற்ற முடிவு செய்து, தயார் செய்யுமாறு ஆணையிடப்பட்ட பொய்க்கால் குதிரை செய்யும் பணியும் நிறைவு பெற்றிருந்தது. ஆகவே நான் அமெரிக்காவிற்குத் திரும்பும் போதே என்னோடு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. குதிரை மற்றும் அதனைக் கொண்டு வரத் தேவையான அனைத்துப் பதிவுகளும் நண்பர்கள் சச்சி, மற்றும் சத்யா மூலமாக சிறப்பாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை ஆட்டக்காரர் திரு.இராசரத்தினம் ஐயாவிடம் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த நாளில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பணத்தினைக் கொடுத்துக் குதிரை பெற்றுக்கொண்டேன்.
அதனை எவ்வாறு சேதாரம் இல்லாமல் கொண்டு செல்வது என்று பலவித சிந்தனைகள் மனதில் வந்து சென்றது. அமெரிக்காவில் அனைத்துப் பெரிய கடைகளிலும் கிடைக்கும் பல அளவு அட்டைப் பெட்டிகளைப் போலத் தமிழகத்தில் கிடைப்பது மிக அரிதே. என்னால் ஒரு நாளில் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. நான் பயணிக்கும் எனது விமானம் அனுமதிக்கும் பெட்டியின் அளவினைத் தெரிந்து கொண்டு அதன் அளவிற்குள் குதிரையை வைத்து எப்படிப் பெட்டியைச் செய்வது என்று தி.நகரில் உள்ள விவேக் அன் கோ வில் எனது நண்பர்களுடன் சென்னையின் மழை நாளில் ஒரு போராட்டமே நடந்தது. கடைசியில் ஒரு குளிர்சாதனப் பெட்டியை மூடியிருக்கும் அட்டைப்பெட்டி முடிவு செய்யப்பட்டது. பல காகிதச் சுற்றல் கொண்டு மிகப் பாதுகாப்பாகச் சுற்றி அட்டைப்பெட்டியில் வைக்கப்பட்டது. வெளியில் ஒரு கயிறு கொண்டு சுற்றினால் நன்றாக இருக்குமே என்று கடையின் உள்ளே சென்று திரும்பினோம். நாங்கள் வைத்த பெட்டியைக் காணோம். மழை பெய்த குளிரிலும் தலை கிறுகிறு என்றது. அனைத்து நண்பர்களும் பரபரத்தனர். சற்று தொலைவில் ஒரு ஆட்டோ போன்ற ஒரு பெரிய வாகனத்தில் அனைத்துச் சரக்குகளுடன் குதிரைப் பெட்டியும் ஏற்றப் பட்டு எங்கோ கொண்டு செல்லத் தயாராகிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓடிச் சென்று ஓட்டுனரிடம் கேட்டோம். குளிர் சாதனப் பெட்டியைச் சரக்குக் கூடத்தில் வைப்பதற்காகத் தயார் நிலையில் இருப்பதாக எண்ணி ஏற்றியதாகக் கூறினார். குதிரைகளை வைத்து ஆட்டம் போடும் முன்பே நமக்குக் குதிரை ஆட்டம் காட்டுகிறதே என்றே தோன்றியது. கடை ஊழியர்களின் உதவியால் மீட்டெடுத்து அருகிலிருந்த ஒரு நண்பனின் இருப்பிடத்தில் வைத்தோம். விமான நிலையம் செல்லும் இரவு வேளையில் வந்து எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. விமான நிலையத்திற்குள் வந்தாகிவிட்டது அனைத்து விமான நிலைய உழியர்களும் பெட்டியைச் சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் இருந்தனர். பெட்டியை உள்ளே ஏற்ற வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு நான் விமான நிலையத்தின் உள்ளே நடக்க எத்தனித்தேன். அப்போது பெட்டியைச் சுற்றி வந்த ஒருவர் அருகில் வந்து தன்னால் தான் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் பெட்டி சென்றதாக முணுமுணுத்தார். அண்ணனின் நோக்கம் புரிந்தது. சற்றே அழவில்லை என்றால் என்னை விட்டிருக்க மாட்டார்.
பல இன்னல்களைத் தாண்டி, சுமார் 8400 மைல் (13518 கிமீ) கடந்து வந்த தஞ்சாவூர் குதிரைதான் நடை பெற்ற சங்கமம் விழாவில் அனைவரது பார்வைபடும் படியாகவும், அனைவரின் பேச்சுக்கான நிகழ்வாகவும் இருந்தது என்றால் மிகையல்ல!
– ஆ. சுந்தர மூர்த்தி
படப்பிடிப்பு – வடிவேலன் பழனிச்சாமி
மனமுண்டால் மார்க்கம் உண்டு
உண்மைதான்…
“பல இன்னல்களைத் தாண்டி, சுமார் 8400 மைல் (13518 கிமீ) கடந்து வந்த தஞ்சாவூர் குதிரைதான் நடை பெற்ற சங்கமம் விழாவில் அனைவரது பார்வைபடும் படியாகவும், அனைவரின் பேச்சுக்கான நிகழ்வாகவும் இருந்தது என்றால் மிகையல்ல!”
Very well written Sundar. Appreciate your interest on learning Tamil kalaigal..
ஆங்கில மோகத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் உலகில்…. தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் பண்பாட்டையும் நீ அச்சு பிசகாமல் வானில் ஏற்றி வையம் வியக்க வைத்த விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது, உனது கலை ஆர்வத்திற்கு என் கரமும் சிரமும் தாழ்கிறது ஏட்டளவில் படித்த என் முன்டாசுக்கவிஞனின் கனவை நினைவாக்க நீ எடுத்து வைக்கும் அடி தொடரட்டும். எட்ட நின்று கைகொட்டி மகிழ்ந்தாலும் உன் பக்கம் நின்று பாராட்ட முடியவில்லை என்ற ஆதங்கம் அதிகமே. உனது கலைப்பயணம் தொடரட்டும்…. வாழ்க வளமுடன்
அருமையான பதிவு. உங்கள் அனுபவத்தைப் பதிர்ந்ததற்கு மிக்க நன்றி. மேடையில் பொய்க்கால் குதிரை ஆட்டத்தை கண்ட பொழுது, என் மனதில் இந்த கேள்வி தான் ஓடிக்கொண்டே இருந்தது. “இதை எப்படி இங்கே கொண்டு வந்தார்கள்?” உங்கள் பதிவு, நல்ல விளக்கத்தைக் கொடுத்தது.
வாய்ப்புக் கிடைத்தால், உங்களைக் குதிரையுடன் சந்திக்க வேண்டும். 🙂