\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மஞ்சள் ஹாஃப் சாரி

Filed in இலக்கியம், கதை by on February 28, 2015 2 Comments

yellow-halfsari_620x940சுவாரசியமாகக் கல்லூரி நண்பன் ஒருவன் வாட்ஸப்பில் அனுப்பியிருந்த வீடியோவை பாத்ரூமில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் சேகர்.

‘ஏங்க.. யாரோ தொத்தாவாம் .. இந்தியாலேருந்து கூப்பிடறாங்க’ கதவைத் தட்டினாள் மகா.

‘இந்தியாவிலிருந்தா? திரும்பக் கூப்பிடறேன்னு சொல்லி நம்பர் வாங்கி வெச்சுக்கோ’ கண்ணை செல் ஃபோனிலிருந்து எடுக்காமல் சொன்னான் சேகர்.

‘சீக்கிரமா வாங்க.. உள்ளே போய் அரை மணி நேரமாவுது’

வீடியோ முடிந்த பாடில்லை .. பாவ்லாவுக்காக ஃப்ளஷ் பண்ணிவிட்டு வெளியே வந்தான் சேகர். மகா கொடுத்த நம்பரைப் பார்த்தால் லேண்ட் லைன் நம்பர் போலத் தெரிந்தது. 44 ஏரியா கோட் என்றால் சென்னையா? சென்னையிலிருந்து யாராக இருக்கும். அதுவும் தொத்தா என்ற பேரோடு?

நம்பரைப் போட்டான். யாரோ ஒரு குழந்தை எடுத்தாள். ‘ஹலோ தொத்தான்றவுங்க இருக்காங்களா?’

‘பாட்டி உனக்கு ஃபோன்’ கத்திவிட்டு அந்தப் பெண் ஓடியது கேட்டது.

‘ஹலோ .. சேகரு?’

‘ஆமாங்க நான் சேகர் தான் பேசறன். நீங்க யாரு.’

‘தொத்தா பேசறன் கண்ணு .. சரோஜா தொத்தா. எப்டிகிற.’

‘நல்லாருக்கேன் .. நீங்க ..’ குத்து மதிப்பாகப் பேசத் துவங்கியன், சினிமாக்களில் வில்லனைக் கண்டு பிடிக்கக் கம்யூட்டரில் ஒரு கோடிப் பெயர்களைப் புகைப்படத்துடன் ஓடவிட்டுத் தேடுவார்களே அதைப் போல மூளையில் செர்ச் என்ஜினை ஸ்டார்ட் செய்து தேடினான். இரண்டு மூன்று வினாடிகளில் ‘பச்சை நிற’ ஸ்கீரினில் ‘ட்ரிக்.ட்ரிக்’ என்ற ஒலியுடன் பளீர் பளீர் என்ற ஒளியுடன் ஒரு புகைப்படமும் பெயரும் நிற்குமே, அதைப் போல நின்றது அவனது செர்ச் எஞ்சின். ‘சித்தி .. சரோஜா சித்தி’.

‘எப்படியிருக்கீங்க சித்தி?’

‘நல்லாருக்கேன் சேகரு .. புள்ளைங்கெல்லாம் சௌரியமாகிதா?’

‘ஆங் .. எல்லாம் நல்லாருக்காங்க ‘ இவங்க எதுக்காக நம்மைக் கூப்பிடறாங்க என்ற குழப்பத்தில் தனக்கு ஒரே ஒரு  குழந்தை தான் என்பதை மறந்து போனான்.

‘எத்தினி புள்ளைங்கோ உனுக்கு?’

‘ஒண்ணு தான் சித்தி. ரொம்ப நாளாச்சு உங்களையெல்லாம் பாத்து..’

‘அக்காங் கண்ணு … அதுக்குத்தான் நேரம் கூடி வந்துக்குது.. தோ இரு .. சித்தப்பாவண்ட குடுக்கிறேன் .. தகவலு சொல்வாரு .. இந்தாங்க .. சேகரு பேசுது’

ஒன்றும் புரியவில்லை சேகருக்கு.

‘சேகரு … சித்தப்பா பேசறம்ப்பா.’

‘சொல்லுங்க சித்தப்பா எப்படி இருக்கீங்க?’

‘நாங்க ஃபைனாகிறோம் .. நீ எப்டிகிற? ரொம்ப நாளா பேசணும்னு தான் நெனச்சுகினுருந்தேன்.. அப்டி தட்டிகினே போயிட்து..’

‘வேற ஊரிலே எல்லாரும் நல்லாருக்காங்களா?’ என்ன பேசுவதென்று தெரியாமல் எதோ பேசினான்.

‘வூட்ல யாருகிறது? ஒர்த்தரும் இல்ல.. நானும் உங்க தொத்தாவும் தான்.. எங்க? அததுங்களுக்கு அதது பொழப்பே அக்கப்போராகிது.. எப்பனாச்சும் தீபாவளி பொங்கலுன்னா எட்டிப் பாக்குங்கோ.. அப்றம் அம்மாவாண்ட பேசினியா?’

‘நேத்து பேசினன்…நல்லாருக்காங்கா..’

‘ஆமா நீ இன்னா ஊர்லே கிற அமெரிக்கால?’

‘நான் மினியாபொலிஸ்லே இருக்கன் சித்தப்பா..’

‘அதென்னவோ .. சரியா புர்ல .. ஒரு நிம்ஷம் . ந்தா சரோஜா.. அந்த பேனாவ எடு ..’

எதுக்காக இவர் ஊர் பேரைக் கேட்கிறார்?

‘இப்ப சொல்லு சேகரு .. இன்னா போலிசு?’

‘மினியாபொலிஸ்’

‘சரியா போச்சு போ.. ஃபெல்லிங் சொல்லு எய்திகிறேன்..’

மினியாபொலிஸ் ஸ்பெல்லிங்கை ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்தான். நிஜமாகவே அவனுக்கு புரியவில்லை.

‘மி – நி – ஏ – போலிஸ் .. ஷோக்கா கிது ஊர் பேரு .. போல்சு கோட்டர்ஸ் ஜாஸ்தியா உங்கூர்ல?’

ஸ்தல புராண விளக்கத்தைக் கேட்டுவிட்டு பொறுமையாக சொன்னார் சித்தப்பா.

‘ஒன்னுல்ல சேகரு .. உங்க தொத்தாவோட கூடப் பொறந்த அக்கா பையன் ஒர்த்தன் சிக்காகோல கிறான்.. அவன் ஒரே புடிவாதமா உங்க தொத்தாவையும் என்னியும் அமெரிக்கா பாக்க வர சொல்லி ஒரே தொந்துரவு.. உங்க தொத்தாவும் புள்ள ஆசையா கூப்டுது போயாந்துருவோம்னு சொல்லுச்சு.. விசால்லாம் பண்ட்டான் .. நாங்களும் ஜெமினியாண்ட கிதே ஒரு பில்டிங்கு? அங்க போயி எல்லாம் ஸ்டாம்ப் வாங்கியாண்டோம் .. அப்பால நாலு நாளிக்கி முன்னால ட்ராவல்ஸுக்கு போய் அட்த மாசம் பத்தொம்பதாம் தேதி பொறப்பட்டு வர்றதா டிகிட்டும் போட்டாச்சு.. இப்போ இன்னாடான்னா அந்த பையனுக்கு … அவம் பேரு கூட லோகு … லோகநாதன்னு சொல்வாங்கோ .. உனுக்கு கூட தெர்ஞ்சிருக்கும் .. எங்கனா விசேஷ்த்துல பாத்திருப்பே .. கொஞ்சம் வெட வெடன்னு இருப்பான்  .. கெவனங் கிதான்னு தெர்ல உனுக்கு’

‘தெரியல சித்தப்பா.. பேரு ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது ..’

‘அக்காங்.. மறண்டிருப்பே நீ.. பாத்தீன்னா கண்டு புட்ச்சுடுவே.. அத்த வுடு.. நேத்து காலங்காத்தால போன் போட்டிருந்தான் .. இன்னாடா சேதின்னு கேட்டா .. அவனுக்கு அங்க வேலை பூட்ச்சாம்.. வேற எங்கியோ நாட்டுக்கு மாத்திட்டாங்களாம்..இன்னா சித்தப்பா பண்றதுன்னு என்னாண்ட கேக்கறான்..’

லேசாகப் புரிந்து விட்டது சேகருக்கு ‘நீங்க ட்ராவல்ஸ்லே பேசினீங்கன்னா கேன்சல் பண்ணிடுவாங்க சித்தப்பா..’.

‘கேட்னே.. முடியாதுண்டானுங்கோ.. அது இன்னவோ மாத்த முடியாத டிகிட்டாம். இதென்னடாது இருந்திருந்து நாம கெளம்ப சொல்லோ ரோதனையா பூட்ச்சே ன்னு தவிச்சுகினு கெட்ந்தேன்..கபால்னு நீ அமெரிக்காலக்கறது கெவனம் வந்துது.. அப்பால அம்மாவாண்ட பேசி தான் உன் நம்பர வாங்கினேன்.. இன்னா நாங்க உங்கூட்டுக்கு வர்ரது உனுக்கு ஒன்யும் தொந்துரவு இல்லையே?’

சொரேர் என்றது சேகருக்கு.. ‘செத்தாண்டா சேகரு’ டயலாக் தான் ஞாபகத்துக்கு வந்தது .. ‘சேச்சே .. அதுல என்ன சித்தப்பா.. நாங்க இருக்கிறது சின்ன ப்ளாட்டு .. உங்களுக்கு வசதிப்படுமான்னு தான் யோசிக்கிறேன்..’

‘எங்ளுக்கு இன்னா வஸ்தி தேவ? குள்ச்சு முட்ச்சு சொக்கா மாட்டினு ஒக்காந்துகினு கெடக்க வேண்டியத்தான்.. நாங்க இன்னா அங்கியேவா தங்கிட போறோம்.. சொம்மா ஒரு நாலு மாசம் .. அப்பால ஊர்ல சொல்லிக்கிலாம்ல நானும் அமெரிக்கா பூட்டு வண்டேன்னு? அந்தப் பெரும தான்.. வேறென்னா.. .. உன் சம்சாரத்தாண்ட .. சம்சாரம்னா புர்தோ தெர்லியே உனுக்கு? வொய்பாண்ட ஒரு வார்த்த கேட்டுட்டு சொல்லு..’

நாலு மாசமா ..?? கன்பர்ம்ட் டெத் தான் ‘ஐயோ .. அவ ரொம்ப சந்தோஷப்படுவா..’ லேசாகத் தலையைத் திருப்பிப் பார்த்தான் .. தலைமுடியை வாரிக் கொண்டிருந்தவள் இடது கையால் பின் முடியைத் தூக்கிப் பிடித்தவாறு, வாயில் நாக்கைத் துருத்தி வலது கையால் சீப்பைக் காட்டி எச்சரித்தது குலதெய்வ அம்மனைக் கண் முன்னே கொண்டுவந்து சென்றது. ‘எப்போ வரீங்க சித்தப்பா?’ என்று இவன் கேட்டபோது தான் அவளுக்குப் புரிந்தது போலும். தூக்கிப் பிடித்த முடியை விட்டு இரண்டு தோள்களையும் தளர விட்டு மறுபடியும் விருந்தாளியா என்ற தொனியில் தொங்கிப் போனாள்.

சேகரும், மகாவும் அமெரிக்கா வந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்களாகிறது. ஆறு வயதில் ஒரு பெண் – அமலா. அதைத் தவிர அவன் சாதித்ததாகச் சொல்லிக் கொள்ள பெரிதாய் ஒன்றுமில்லை என்று மகா எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் சத்தியம் செய்வாள். பட்டினியில்லாமல் சாப்பிட முடிகிற; மாதமொருமுறை கோயில், மால், ரெஸ்டாரன்ட் என்று செலவழிக்க; இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியாவுக்கும், இடைப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்காவிலே எங்காவதும் போய் வரக் கூடியளவுக்குச் சம்பாத்தியம் சேகருக்கு. மகாவைப் பொறுத்தவரை அவனுக்கு ‘ஸ்மைலிங் ஃபேஸ்’, ‘ஓட்டாண்டி’, ‘வாய் சேகர்’ என்று பல பட்டங்கள். (கோனார் நோட்ஸில் தேடிப் பார்த்தால் இளிச்சவாயன், செலவாளி, வாயால் வடை சுடுபவன் என்று பொருள் கிடைக்கும்). நேத்து வந்த (சரியாகச் சொல்லப் போனால் மூன்றரை வருடங்களுக்கு முன்னால் வந்த) விமலாவும், கோமதியும் சென்றாண்டு சொந்த வீடு வாங்கிய பின்னர் மகாவின் பார்வையில் சேகர் படு கேவலமாகிப் போனான்.

பத்தாதற்கு சேகரின் ‘விருந்தோம்பல்’ அவளுக்குப் பத்திக் கொண்டு வரும். மினியாபோலிஸ் நகரெங்கும் ஆயிரம் ஹோட்டல்கள் இருந்தாலும் சேகர் என்ற ஒரு ஜந்து இருக்கிறது என்று தெரிந்தவர்களுக்கு அவை எதுவும் கண்ணில் தெரியாது. ட்ராவெலாசிட்டி லிஸ்டிங்கில் கூட சேகருடைய வீட்டு முகவரி அவ்வப்போது தோன்றி மறையும். போன வாரம் தான் டென்வரிலிருந்து பன்னீர், தன் ஒன்று விட்ட மாமாவின், நாத்தனார் பையன் மினியாபொலிசுக்கு இரண்டு நாள் வந்திருப்பதையறிந்து அவனைப் பார்ப்பதற்காக குடும்பத்துடன் வந்து சேகர் வீட்டில் ஒரு வாரம் தங்கிவிட்டுப் போனான். ஒண்ணரை மாதங்களுக்கு முன் அவனுடன் நான்காம் வகுப்பில் படித்த சியாமளா, அதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன் கல்லூரி நண்பன் தியாகு குடும்பத்துடன் வந்து நான்கைந்து நாட்கள் தங்கிப் போனர். கிட்டத்தட்ட ‘அதிதி தேவோ பவ’ என்று வாசலில் எழுதி மாட்டாத குறைதான். மகாவுக்கு இவர்கள் வந்து தங்கியிருப்பதற்கான ஏற்பாடுகள் செய்வது ஒரு போராட்டம். அவர்கள் இருப்பது ரெண்டு பெட்ரூம் அபார்ட்மென்ட் தான். இரண்டாவது பெட்ரூமில் அமலா, படுப்பதற்கு குட்டியாக ஒரு பெட் வாங்கினார்கள் என்று பெயர் தான். ஒரு நான்கு நாட்கள் சேர்ந்தமாதிரி கூட அவள் அதில் படுத்ததில்லை. வரும் விருந்தினரின் பிள்ளைகளுக்காகவே அமைந்து விட்டது அந்த படுக்கை என்றால் அது மிகையில்லை. இது ஒரு பக்கம்  என்றால் வருபவர்களுக்குத் தேவையானதை வகைவகையாய்ச் செய்து போடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும் மகாவுக்கு. ஆறு மாதங்களுக்கு முன் வந்து சென்ற சௌந்தருக்கு அல்சர் – காலை ஏழரை மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டாக வேண்டும் – அதுவும் ஸ்மைலி ஃபேஸ் சேகரின் மெனுபடி அப்பமும், தேங்காய்ப் பாலும் – அல்சரை ஆத்துமாம் – ‘இவர் அப்படியே சித்தா மெடிசின்ல டபுள் டிகிரி வாங்கினவரு, சொல்ல வந்துட்டாரு’ ன்னு கோவம் வரும் அவளுக்கு. பன்னீருக்கு ஷுகர் ; புல்கா ரொட்டி, ஓட்ஸ் உப்புமா, பாகற்காய்க் குழம்பு என்று செய்து ஓய்ந்து போனாள். இப்படிப் பல தர்மசங்கடங்கள். சேகர் இதையெல்லாம் உணரவே மாட்டான். வருபவர்கள், அவர்களாகவே வெளியில் சாப்பிடலாம் என்று சொன்னால் கூட ‘வேண்டாம்டா, வீட்டிலேயே ஃப்ரியா பேசலாம். மேட்டரு அரேஞ்ச் பண்ணிடறேன்; என்ன சாப்பிடணும்னு தோணுது சொல்லு; மகா ரெடி பண்ணிடுவா’ என்று சொல்லும் போது ஐந்து கேலன் கேஸலினை மொத்தமாக கொட்டிக் கொளுத்திப் போட்டது போல பற்றிக்கொண்டு வரும் மகாவுக்கு. இந்த நான்ககைந்து நாட்கள் தான் அவள் தங்களுக்காக வாழத் துவங்கியிருந்தாள். அதற்குள் அடுத்த விருந்தாளி.

‘சித்தப்பாவும், சித்தியும் அமெரிக்கா வராங்களாம்.. கொஞ்சம் தூரத்து சொந்தம்தான்.. நீ கூட பார்த்திருக்கே அவங்களை.. நம்ப கல்யாணத்துக்கு கூட முதல் நாளே வந்திருந்தாங்க .. ஒரு எவர்சில்வர் குடம் பிரசென்ட் பண்ணாங்க இல்ல? ஃப்ரம் பச்சையப்ப முதலியார் ஃபேமிலின்னு அவங்க தான்..’ எனத் தொடங்கி, அவர் சிறு வயதில் தந்தையை இழந்தது, ரயில்வேயில் கலாசியாக வேலை பார்த்து, கடின உழைப்பால் உயர்ந்து, இரும்பு வியாபாரம் செய்து, சிறிதும் பெரிதுமாய் 97 வீடுகள் வாங்கியது, அவர்களது சிகாகோ பிளான் சொதப்பலாகிப் போனது என்று எல்லாவற்றையும் விவரித்தான்.

‘தெரியாமத்தான் கேக்கிறேன்.. உங்களுக்கு மண்டையில எதுவும் வைக்காம அனுப்பிட்டானா ஆண்டவன்? அப்படியே லலித் மஹால் கணக்கா வீட்டைக் கட்டிவைச்சிருக்கீங்க .. அதில தங்கறதுக்கு அயல் நாட்டு அமைச்சர் அரும மனைவியோட வராரு  ..  வீராணம் குழாயை விட ஒரு சுத்து பெரிசா ரெண்டு பெட்ரூம்.. இதில நம்ப மூணு பேரு நர்த்தனமாடறது  போறாதுன்னு நட்டுவாங்கத்துக்கு ரெண்டு பேரு.. எங்க அப்பா அம்மாவையே இதனால நான் கூப்பிடலே.. இதுல பச்சையப்ப முதலியாரு, பச்சையப்பாத முதலியாருன்னுகிட்டு…’

‘அப்படியெல்லாம் பேசாத மகா.. நாம போம்போது என்ன எடுத்துட்டு போப்போறோம் சொல்லு?’

முறைத்தாள் .. ‘இதை அங்க சொல்றது தானே .. போம்போது எதுவும் எடுத்துட்டுப் போகப் போறதில்ல சித்தப்பு .. வரும்போது எல்லாத்தையும் எடுத்தாந்து இங்க ஹோட்டல்ல தங்கிக்கோன்னு’

‘பத்தியா சொல்ல மறந்துட்டேன்.. தொத்தா .. ச்சீ .. சித்தி பேசும் போது, இந்தியாலேர்ந்து நமக்கு என்னல்லாம் வேணும்னு லிஸ்ட் போட்டு அனுப்பச் சொன்னாங்க .. அமலா பதிர்பேணி கேட்டா இல்ல? அது, அப்புறம் உனக்கு ஒத்த தலவலி, ஜலதோஷம் வரும்போது குடிப்பியே அந்தக் கஷாயத்துக்கு ஆடாதொடா எலையும் தாளிசபத்திரி மொக்கும் சொல்லிடு.. ரொம்ப நாளா இந்த ஹாஃப் சாரி ஸ்டைல்லே கேட்டுகிட்டு இருந்தே இல்ல புடவை .. அதையும் சொல்லிடு .. அவங்க வாஷர்மென் பெட்ல நாப்பது வருஷமா இருக்காங்க.. பாபுராவ் தான் அவங்க ஆஸ்தான டெய்லர் .. ப்ளவுஸ் என்ன கலர்னு சொல்லிட்டீன்னா தச்சிகிட்டு வந்துடுவாங்க .. அளவெல்லாம் நான் சொல்லிடறேன் ..’

கழுத்து நாப்பத்திஐந்து டிகிரி திரும்புமாறு கராத்தே பாணியில் கட்டை விரலையும் சுட்டு விரலையும் குமித்து வைத்து கன்னத்தில் செல்லமாக குத்தினாள்.

‘அந்த மஞ்ச கலர் ஹாஃப் சாரி மாடலா? அதுல நான் அழகா இருப்பனா?’

திரும்பி நின்று ‘அந்த சாரி ரொம்ப அழகாயிருக்கும் ..’ என்றான். அடுத்த இடியில், ஏற்கனவே ‘எக்ஸ்’  ஆக்சிஸில் திரும்பியிருந்த கழுத்து நார்மலுக்கு வந்தது.

சேவல் தலையைத் தூக்கிப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சேகர். மகிழ்ச்சியுடன், புன்சிரிப்புடன், தொலைபேசியில் பேசியவாறு வரும் வெள்ளைத் தோல்காரர்கள் எல்லாம் அவுட் ஆஃப் ஃபோகஸில் மறைந்தார்கள். பயம் கலந்த தயக்கத்துடன் நடந்து வருபவர்களை அவன் கண்கள் தேடியது. இவை இரண்டும் இருந்தாலும் ரேபான் கண்ணாடி, ரேபாக் ஷூ அணிந்து அதையெல்லாம் மறைத்துக் கடந்து போனான் ஒருவன். முகவெட்டு தெலுங்கானாவை லேசாகக் காட்டியது. கிட்டத்தட்ட அந்த ஃப்ளைட்டைப் பெருக்கி, துடைத்துப் பாலிஷெல்லாம் போட்டு எடுத்துப் போய் ஹேங்கரில் நிறுத்தியிருப்பார்கள். ஹால்வேயின் வளைவிலிருந்த சுவற்றுக்குப் பின்னேயிருந்து, மங்கி குல்லாய் அணிந்த ஒரு உருவம் தலையை மட்டும் நீட்டி இது சரியான வழிதானா என்பது போல் பார்த்தது. மகா அடிக்கடி சீரியல் பார்க்கும் மும்முரத்தில் அடுப்பில் மறந்து விட்ட பால் போல் மனதில் மகிழ்ச்சி பொங்கியது சேகருக்கு. கையை உயரத் தூக்கி ஆட்டினான். இருபத்தியாறு மணிநேரப் பயணச் சோர்வுக்கு நடுவில் சிறிதாய் புன்னகை தெரிந்தது அந்த உருவத்தில்.

கதவருகே சென்று, ‘வாங்க சித்தப்பா? எப்படி இருக்கீங்க? ஃப்ளைட் ட்ராவல் எப்படியிருந்தது?’

‘நல்லாகிறேன் சேகரு .. ப்ளேன்லாம் நல்லா வசதியாத்தான் இருந்துது.. ஒன்னியும் கொறையில்லை.. நடுப்புற நடுப்புற ஒண்ணுக்கிருக்க எழுந்து எழுந்து போறத்தான் செரமம்.. உங்க தொத்தாக்கு தான் காலு கொடச்சல் குடுத்துட்ச்சி.. கொஞ்சம் முடில பாவம் .. எங்க பாப்பாவ இட்டாரல?’

சித்தியின் கையிலிருந்த ‘திருவொற்றியூர் பெனிபிட் பண்ட்’ பையை வாங்கிக் கொண்டான். ‘எப்படியிருக்கீங்க சித்தி? அவ ஸ்கூலுக்குப் போயிருக்கா சித்தப்பா?’

‘எங்கனா டீச்சரா வேல பாக்குதா இன்னா?’

‘ஓ மகாவை கேட்டீங்களா சித்தப்பா? அவ வீட்ல தான் இருக்கா .. சமையல் எல்லாம் பண்ணிட்டிருக்கா. நீங்க அமலாவைக் கேட்டீங்களோன்னு நெனச்சேன்.’

‘அதாரு அது அம்லா?’

‘என் பொண்ணு சித்தப்பா.’

‘பொட்டப் புள்ளயா உனுக்கு.’ திரும்பி சித்தியைப் பார்த்து ‘கூறு கெட்டவளே.. பொட்டப் புள்ளயாண்டி.. நீ பாட்டுக்கு ஆம்பள பசங்க துணியை வாங்கியாந்தியே’ செல்லமாகக் கடிந்துக் கொண்டார். அமலாவுக்குத் துணி வாங்கி வரலியா? 140 கிலோமீட்டர் வேகத்தில் வந்த பந்து கணுக்கால் சில்லியைப் பேத்தாலும் அவுட்டாகாமல் தப்பித்தது புண்ணியம் என்று காலில் எதோ லேசாக தூசி பட்டது போல் ஆட்டிக்கொள்வாரே கிரிக்கெட் பேட்ஸ்மென் அது போல் தன்னைத் தானே தேற்றிக் கொண்டான் சேகர்.

‘பொட்டப் புள்ளயாமா? எனுக்கின்னா தெரியும்.. நல்லதா போச்சி ஆளுக்கு ஒத்தப் பொட்டி தான்னு சொல்லிட்டதால அந்தப் பொட்டியை தீபாவாண்ட குட்த்து வுட்டேன்.’

‘அந்தக் கூத்த கேளு .. நீயாவது சொல்ல மாட்ட எங்களுக்கு .. ட்ராவல்ல தஸ்தகீரு தலைக்கு ரெண்டு பொட்டின்னு சொன்னான்.. சரின்னு நாங்க எல்லா மூட்ட முடிச்ச கட்டிகினு ஏரோட்ரமுக்குத் தூக்கியாந்தா பைலட்டுங்கோ ஒரு பொட்டி தான் அலவுட்ன்னிடானுங்கோ .. இன்னாடா பண்றதுன்னு எங்க துணிமணி, மாத்திரைங்களை மட்டும் தூக்கினு மத்ததெல்லாம் வூட்டுக்குக் குடுத்தனுப்பிட்டோம்.’

அப்போ மஞ்சள் ஹாஃப் சாரி?

வெண்டிங் மெஷினில் வாட்டர் பாட்டல் வந்ததைப் பார்த்து ‘க்ரக்’ என்று நாக்கால் ஒலியெழுப்பி அசந்ததில் தொடங்கி, ‘ஸ்வீட்டு கட எங்ககிது இங்க.. காராபூந்தியும், ஜிலேபியும் வாங்கினு போலாம் புள்ளைக்கு’ என்று பாசம் காட்டி,  மூவிங் வாக்வேயைப் பார்த்து…’இதெல்லாம் அங்கியே வந்துட்ச்சு இப்போ’ என்று பெருமை பீத்தி,. பார்க்கிங்கில் ஆளில்லாத கவுண்டரில் கிரெடிட் கார்ட் செலுத்தியதும், குறுக்குக் கட்டை உயர்ந்து வழி விட்டதைப் பார்த்து ‘ஆட்டமட்டிக்கா  தொறக்குது பாத்தியா?’  என்று தன் மனைவிக்கு பாடம் புகட்டி,  காரில் போகும் போது ‘கீர் போட தாவலை?’ என்று ஆர்வம் காட்டி . டனல் வழியே சென்ற போது .. ‘பார்றா .. பட்டப்பகல்ல லைட்டு.. அல்லா கரண்டையும் நீங்க வலிச்சிட்றீங்க போலக்கிதே .. அதான் அங்க ஆசுபத்திரிங்கள்ளியே கரண்டைக் காணோம்.’ என்று அங்கலாய்த்து, அபார்ட்மென்ட் கராஜில் ஓப்பனரை அழுத்தியதும் கதவு திறந்ததைப் பார்த்து ‘அதெப்டி தம்த்தூண்டு பட்டன்ல அம்மாம் பெரிய கதவ தூக்கற ஃபவர வெச்சிகிறானுங்கோ’ என்று ஆராய்ந்து நவரசங்களையும் காட்டிவிட்டார் சித்தப்பா.

‘வாங்க சித்தப்பா, வாங்க சித்தி’ மஞ்சள் ஹாஃப் சாரி மனதில் காற்றடிக்க வரவேற்றாள் மகா. ‘நீயும் சித்தப்பான்றே?  .. மாமா, மாமின்னு சொல்லு.. எப்டிகிறே’ என்று ஆரம்பித்தார் சித்தப்பா. சோபாவில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவள் கொடுத்த காபியை ஒரு வாய் குடித்தவர் ‘எனக்கு இன்னும் கொஞ்சம் சக்கர போடும்மா .. உங்க மாமிக்கு தான் சுகரு.. சக்கர ஆவாது ..’ என்று தொடங்கி காப்பியைக் குடித்த பின் ‘ஃபுல் பேரு இன்னா உனுக்கு .. மகாலச்சுமியா, மகேஸ்வரியா?’ என்று கேட்டறிந்தார். அதற்குப் பின் நடந்த உரையாடலின் சுருக்கம்.

‘இன்னா ஊரு உன்து?’

‘சேலம் மாமா..’

‘சேலத்துல எங்க?’

‘ஆத்தூர்ல .. உடையார்பாளையம் மாமா.’

‘ஒடயார்பாளையமா .. அப்போ பட்டாபி மொலியார் சொந்தமா உனுக்கு..’

‘தெர்லிங்க மாமா..’

‘இன்னா போ நீ.. சேலத்துலயே பெரும்புள்ளி அவுரு.. சம்பந்த மொலியார் வழி அவுங்கலாம் .. பூரா செவ்வாப்பேட்டையே அவுர்து தான்.. இந்தப்பக்கம் அரிசி மில்லு அந்தப் பக்கம் துணி மில்லுன்னு எக்கச்சக்கம் .. அது கண்டி உனுக்கு தெரிஞ்சிருந்துதுன்னு வெச்சுக்கோ .. நீ நேரா அவுங்க மில்லுக்கு போயி பொடவ நெய்ய சொல்லிட்ருப்பே.. எங்களாண்ட கேட்ருக்க மாட்ட .. நாங்களும் ஊர்ல வுட்டுட்டு வந்திருக்க மாட்டோம்.’

அருந்ததி படத்தில் அனுஷ்கா திரும்புவதைப் போல அதிரடி பி.ஜி.எம்மில் மூன்று முறை திரும்பிய மகாவின் பார்வை சேகர் மீது நின்றது. ‘மவனே.. சிக்குனே .. சிக்ஸர் தாண்டா’ என்றது அந்தப் பார்வை.

குளித்து முடித்து இரவு உணவுக்காக அமர்ந்த போது கூட பாசமும், எனர்ஜியும் குறையாமல் பேசிக் கொண்டிருந்தார் சித்தப்பா. அமலாவை இழுத்து இழுத்து பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டார். ‘இஸ் இட் குட் டச் ஆர் பேட் டச்?’ என்று மகாவைக் கேட்டாள் அவள். மகாதான் வரிக்கு வரி மாமா என்றதை ரேஷன் படுத்திவிட்டிருந்தாள்.

‘கவுச்சி கிவுச்சியெல்லாம் சமப்பியா ஊட்ல?’

‘இல்லையே ஏன்?’

‘சொம்மா கேட்டன் .. உங்க மாமி சாப்ட மாட்டா .. நமுக்கு வசூலுக்கு போவ சொல்லோ வர சொல்லோ சாப்ட்டு பழகிப் பூட்ச்சி. உங்க மாமிக்கு தான் ஆசாரம்லாம் ..’ என்றார்.

சாப்பிட்டு முடித்து சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த பின், ‘படுக்கறீங்களா சித்தப்பா?’ என்றான்.

‘படுக்க வேண்டியத்தான் .. லேடிஸ்லாம் அந்த ரூம்ல படுக்கட்டும்.. நம்ப ரெண்டு பேரும் இப்பிடியே ஹால்ல படுத்துக்கலாம்.. ஜமுக்காளம் கிமுக்காளம் எதுனா இருக்குதா?’ என்றார்.

தூரத்தில் எங்கோ சங்கு ஊதுவது போல் கேட்டது சேகருக்கு. அதுவும் நல்லதுக்குத்தான். சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர் வந்திருந்த போது அப்படித்தான் .. நள்ளிரவில் எதோ ஒன்று உந்தித்தள்ள பக்கத்தில் படுத்திருந்த மகாவும் சற்றே ஒத்துழைக்க சத்தம் உண்டாக்காமல் செயலாற்ற முனைந்த போது ‘அங்க்கிள் .. நாளைக்கு ஹேலோ5 கேம் வாங்கித் தரேன்னு சொன்னீங்களே.. எப்போ போலாம்?’ என்று கதவைத் திறந்துக்கொண்டு வந்து நின்றான் சௌந்தரின் எட்டு வயது பையன்… அந்த மாதிரி அவஸ்தை இல்லை. இன்னொன்று மகாவின் சிக்ஸரில் சின்னாபின்னமாக வேண்டாம்.

த்து நாட்களில் அமெரிக்க வாழ்க்கை சற்றே பழகி விட்டிருந்தது சித்தப்பாவுக்கு. முதல் நாள் ‘பகிட்டி ஒன்யும் காணோம் குளிக்கரூம்ல?’ என்று கேட்டவர் ஷவரில் குளிக்கப் பழகிவிட்டிருந்தார். அமலாவும் ‘தாத்தா அம்மா நாஷ்டாவுக்கு கூப்டறாங்க’ எனுமளவுக்கு அவருடைய பாஷையைப் புரிந்துக் கொள்ளத் துவங்கியிருந்தாள். அவரும் சாயந்திரம் ஐந்து மணியானால் அமலாவையும், எதிர் வீட்டு ஆஷ்லியையும் கூட்டிக் கொண்டு அபார்ட்மெண்டில் இருந்த ஸ்விம்மிங் பூலில் ‘கவுண்ட் ஒன், டூ..’ என்று சொல்லிவிட்டு தண்ணீருக்குள் அமிழ்ந்திருப்பார். சில சமயங்களில் அவர்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்து கையால் இயக்கி ‘இவ்ளோ சோறு, இவ்ளோ சாம்பாரு’ என்றும் ஆஷ்லிக்கு ‘திஸ் பீசா, திஸ் சீஸ்’ என்று விளையாடுவார். மகாவுக்கு லேசாகக் கோபம் குறைந்திருந்தாலும் அவ்வப்போது அந்த மஞ்சள் ஹாஃப் சாரி கண்களில் நிழலாடும் போது முகம் காட்டுவாள். மாலை நேரங்களில்  சித்தப்பாவைப் பேச வைத்துக் கேட்பது அவளுக்குப் பொழுது போக்காகிப் போனது.

சில நேரங்களில் தன் இளவயதில் வாழ்க்கையைத் துவங்கிய போது தண்டவாளத்தைப் பார்வையிடும் எஞ்சினியர்களைச் சிறிய வண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு ஒற்றைத் தண்டவாளத்தில் ஓடியதை சீரியஸாக குறிப்பிடுவார்; முதன் முதலில் இரும்புக் கடையில் கிடைத்த ஏழு ரூபாய் லாபத்தில் சித்திக்கு நாலரை ரூபாயில் சின்னதாக மூக்குத்தி வாங்கியதை வேடிக்கையாகச் சொல்வார்; கூட்டுக் குடும்பமாக இருந்த சகோதரர்களிடையே  வேண்டாதவர் சிலர் சண்டை மூட்டிப் பிரித்ததை வேதனையுடன் சொல்வார்.

‘அன்னிக்கு .. தோ இம்மாம் பெருசு இருக்கும் ட்ரங்கு பொட்டி.. அத்த தூக்கினு என் பின்னாடி வந்தா இவ.. சொம்மா கெடையாது அவுங்க குடும்பம்.. நார்த் ஆற்காட்ல தொரமாருங்க கிட்ட வேலை செஞ்சவரு அவுங்கப்பா .. வேணி மொலியார்ன்னு பேரு.. பெர்ய மிராசுதாரு.. பேரைக் கேட்டாலே கிடு கிடுன்னு ஆடுவானுங்க ஊர்ல .. அந்தக் காலத்துலேயே மாரிஸ் மைனரு காரு வெச்சினுருந்தாரு .. அல்லாத்தையும் வுட்டுட்டு வந்தா.. எத்தக் கண்டு வந்தாளோ தெர்ல’ என்று சித்தியைப் பார்த்துச் சிரித்தார். ‘அன்னிக்கு வெச்ச கெடு தான் .. சாவறத்துக்குள்ள நூறு வூட்டையாவது வாங்கிப்புடனுன்னு .. மொத வூட்டை வாங்க சொல்லோ எனக்கு இருவத்திமூணு வயசு .. தோ ஆயிப் போச்சு.. பங்குனியோட எழுவத்திரண்டு வயசாயிடுச்சி.. அப்டி இப்டின்னு தொன்னுத்தொம்போது வூட்ட வாங்கிட்டேன்.. மூணு வர்ஷமா நூறாவது வூட்ட வாங்கிடனுன்னு அல்லாடினுகிறேன் .. குதிர மாட்டேன்னுது.. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி கூட ஒரு வூட்டப் போய் பாத்துட்டு வந்தோம்.. அதுக்குள்ள உங்க சித்திக்கு எதுனா ஃபாரினைப் பாத்துடணும்னு ஆச தொத்திகிச்சு.. சரி அத்த ஏன் கெடுப்பானேன்னு கிளம்பியாந்தேன்..’

‘தொன்னுத்தியோம்பது வீடு வெச்சிருக்கீங்களா மாமா?’ ஓரக் கண்ணால் நீயும் இருக்கியே மூதேவி என்று சேகருக்கு மெசேஜ் அனுப்பினாள்.

‘அத்தினியும் வூடு கெடயாது .. பதினாலு கடைங்கோ, மூணு குடவுனு, பாக்கில்லாம் ஊடுங்க. எல்லாம் தம்தம் வூடுங்கோ தான் …இப்போ பாத்து வெச்சிருக்கிறது தான் கொஞ்சம் பாந்த்ரா ஊடு.. ஊருக்குப் போன பிற்பாடு தான் பாக்கணும்’

‘அத்தை கொடுத்து வச்சவங்க மாமா..’

‘இன்னாத்த குடுத்து வெச்சேன்.. ஒண்டியாளா காயலான் கடையைப் பாத்துகிணு, கொடக்கூலி வசூலிச்சிகினு, புரோக்கருங்க பின்னாடி சுத்திகினு .. பத்தாதுக்கு அவனவன் ஊட்ட காலி பண்ண மாட்டேன்றானிட்டு ரௌடிங்க பஞ்சாயத்து பண்ணிகினு .. தெனத்திக்கும் அக்கப்போரு தான்.. போதும் சம்பாரிச்சது, லிட்டயராயி ஊட்ல உக்காருன்னா கேக்க மாட்டேன்றாரு .. நீ தான் மெச்சிக்கணும் உங்க மாமாவ.’ என்றார் சித்தி மகாவிடம்.

‘அது இல்ல அத்த .. ஆயிரம் கஷ்டப்பட்டாலும், மாமா உங்கள சந்தோஷமாக் கண்ணுல வைச்சு பாத்துக்கறார்  இல்லை.. அது போதாதா ..’ சில தண்ட முண்டங்களும் பூமிக்குச் சுமையா இருக்குதுங்களே என்ற அவளின் மைன்ட் வாய்ஸ் கேட்டது சேகருக்கு.

‘ரொம்ப லேட்டாயிடுச்சு சித்தப்பா .. சாப்பிடலாம் வாங்க’ என்று அந்த டிஸ்கஷனுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்தான்.

ன்னொரு நாள் ‘கிரவுண்டு இன்னா போவுது இங்க’ என்றார்.

‘கிரவுண்டு எங்கேயும் போவாது சித்தப்பா.. ‘

‘கலாய்க்கிறியா.. கிரவுண்டு இன்னா வெலன்னு கேட்டேன்..’

‘தெர்ல சித்தப்பா.. ‘

‘இன்னா புள்ள போ .. வூடு எதுனா வாங்கிப் போட்றது தானே .. ‘

கிச்சனில் ரவா உப்புமாவுக்குத் தாளித்துக் கொண்டிருந்தவள் நிறுத்தி விட்டு ஓடி வந்தாள். ‘நல்லாக் கேளுங்க மாமா.. நாலு வருஷமா நானும் செவிடன் காதுல சங்காட்டம் ஊதறேன். ஓரைக்க மாட்டேங்குது’.

‘இங்க வீடு வாங்கறது ஈஸி இல்ல சித்தப்பா.. லோன் போட்டுத் தான் வாங்கணும்.. அதுக்கு டவுன் பேமண்ட் முப்பதாயிரம் டாலருக்கு மேல தேவப்படும்.. எங்க போறது அதுக்கு நானு?’

‘இதான் மாமா.. இப்படி எதையாச்சும் சொல்லி என் வாயை அடைச்சிடறது.. அப்ப இங்க வீடு வாங்கியிருக்கவங்கல்லாம் பேங்க்கையா கொள்ளையடிச்சுகிட்டு வந்தாங்க..’

‘நுப்பதாயிரம் டாலர்னா, நம்மூரு கணக்குக்கு இன்னா வரும்?’

‘கிட்டத்தட்ட இருவது லட்ச ரூபா சித்தப்பா. முள்ளங்கிப் பத்தையாட்டம் எடுத்து வெக்கணும். இவளும் ஏதாவது ஒரு வேலைக்குப் போனா அப்படி இப்படி ஈடுகட்டலாம்..’

‘அதுஞ் சர்த்தான் ..  ஒண்டிக்காரன் பொழப்பும் வண்டிக்காரன் பொழப்பும்னுவாங்க ஊர்ல .. அதுவும் வேல கெடச்சா போமாட்டேன்னு சொல்லலியே .. ஒன்னியும் குதுர மாட்டேன்து போலக்கிது.. ரெகமண்டேசன் எதுனா பண்றது தானே நீ.’

‘அதெல்லாம் இங்க இல்ல சித்தப்பா ..’

‘அப்போ நீ தான் கொஞ்சம் இயுத்து புடிச்சி சுகுரா ஓட்டணும் வண்டிய.. துட்டு செலவாவுதேன்னு பாத்துகினுருந்தா காலம் அப்டியே ஓடிபூடும்.. நான் மொத ஊட்ட இன்னா வெலைக்கு வாங்கினேன் தெர்மா .. இரண்டாயிரத்து நானூற் ரூபாய்க்கு .. இப்ப அந்த வூட்டுக்கு வெலைய கேட்டா தல கிரிகல் உட்ரும் உனுக்கு .. முழுசா ஒண்ணே முக்கால் ரூபாய்க்கு கேட்னுகிறானுங்கோ.. அந்த மாரி.. ஊட்ட வாங்கிப் போடறது என்னிக்குமே சோரம் போவாது’

ஃபுல் டாஸ் பாலாக சித்தப்பா போட்டுக் கொடுக்க, கொடுக்க விட்டு விளாசினாள் மகா.

துலூத், சிகாகோ, விஸ்கான்ஸின் டெல்ஸ், மால் ஆஃப் அமெரிக்கா, வேலி பேர், மினஹாஹா பால்ஸ், ஹிந்து மந்திர், கேஸினோ என்று வழக்கமாக மினசோட்டா வரும் பெற்றோர்கள் பார்க்கும் அத்தனை இடங்களுக்கும் அழைத்துச் சென்று வந்தான் சேகர். நாலு மாதங்கள் ஓடியதே தெரியவில்லை. அவர்கள் ஊருக்குத் திரும்பும் நாளும் வந்தது.

ரண்டு நாளாகவே சுரத்து இறங்கியிருந்தது மகாவிடம். சேகருக்கும் வருத்தமாகத் தான் இருந்தது. இருந்தாலும் கெத்தை விட்டுக் கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்தான்.

இருபத்தி மூன்றாம் முறையாக வயிற்றுக்கு மேல் போட்டிருந்த பேண்டில் கட்டியிருந்த ஹிப் பவுச்சிலிருந்த பாஸ்போர்ட், டிக்கட் எல்லாவற்றையும் செக் செய்துக் கொண்டார் சித்தப்பா.

‘நாளு ஓட்னதே தெர்ல சேகரு.. ஹாப்பியா இர்ந்தோம்.. திடுதிப்புன்னு கெளம்பியாந்தோம்.. நீயுமாவட்டும், மகாவுமாவட்டும்.. பால்மாறாம பாத்துகினிங்க; கல்மிஷம் இல்லாம பழகிக்கினிங்க.. ரொம்ப டாங்க்ஸ்’

‘என்ன சித்தப்பா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க … நீங்க வந்தது எங்களுக்கு சந்தோஷமா இருந்துது .. நீங்க இவ்வளவு சீக்கிரம் கிளம்பிப் போறது தான் கஷ்டமாயிருக்கு’

‘ஆமா கலகலன்னு இருந்துது மாமா .. நீங்க இருந்தது’

‘இதுக்குப் போயி ஏம்மா பீலாயிகினு .. எங்க போப்போறோம்.  துட்ட தூக்கி கடாசினா வந்துட்டு போறோம்.. அதுக்குள்ள நீ ஒரு ஆம்பளப் புள்ளய பெத்துக்கோ .’

‘அய்யே.. அதுவே கஷ்டப்பட்டுகினுகிது.. அத்தப் போயி சத்தாய்ச்சிகினு.. மறக்காம இருக்க சொல்லோவே குடுத்துடுங்க’ என்று சொன்னார் சித்தி.

‘மறண்டேண் பத்தியா .. இந்தா சேகரு ..’ பாக்கட்டில் கை விட்டு எதையோ எடுத்தார் .. ‘இதுல இருவத்தியஞ்சு லட்ச ரூபாய்க்கு செக்கு எய்திகிறேன் .. அந்த வூடு ஒன்னு சொல்லிகினுருந்தியே நீ .. அதுக்கு அட்வான்ஸு  குடுக்க வெச்சிக்கோ .. அட்த்த தபா நாங்க வர சொல்லோ நீங்க சொந்த வூட்ல இருக்கணும்’

‘சித்தப்பா ..’

‘ஒன்யும் ரோசிக்காத சேகரு.. நாளைக்கே நூறாவது வூட்ட வாங்கி நான் இன்னாத்த சாதிக்கப் போறேன்.. மொள்ள வாங்கிகினா போது.. ஒட்னே போயி நீ பாத்த வூட்டுக்கு அட்வான்ஸ குடு .. மகாவை சந்தோசமா வெச்சிக்கோ..  நீ ஒன்யும் வொரி பண்ணிக்காதம்மா மகா..சேகராண்ட அல்லாம் சொல்லிகிறேன்.. அரவண்ச்சி போ நீயும் .. சேகரு கொணம் சுளுவா ஆருக்கும் வராது .. ஒறவு பொறவு பாக்காம அத்தினி பேரும் வோணும்னு நெனைக்கிற கொணம்.. அத்தினி பேரும் தொணை இருப்பாங்க, கட்ஸி வரிக்கும்..அதான் வோணும்.. தொன்னுத்தியொம்போது வூடு வெச்சினுகிறேன் .. போம்போது இன்னாத்த தூக்கினு போப்போறேன் சொல்லு .. அத்தொட்டு தான்சொல்றன் .. இன்னாடா இவன் போவசொல்லோ நொர தள்ள பெனாத்திகினுகிறான்னு நெனைக்காத.. உனுக்கும் நல்ல கொணம் தான்.. இத்தினி நாளா ஒரு கொற வெச்சியா எங்குளுக்கு .. இல்லையே .. அல்லாம் நல்ல மன்சு தான் உனுக்கு .. இன்னா ஒண்ணு கொஞ்சம் அட்ஜீஸ்ட் பண்ணிக்கணும்.. இன்னா புர்தா .. உனுக்கும் தான் .. புர்தா சேகரு .. நல்லாருங்கோ ரெண்டு பேரும். அம்லாவாண்ட சொல்லிடுங்கோ.. ஊருக்கு போனதும் மொத வேலையா பாப்பாவோட துணிங்கள பார்சல்ல அனுப்பி வக்கிறோம்.. உன் மஞ்ச கலர் பொடவையும் அனுப்பி வக்கிறோம்மா..பொறப்படறோம் அப்போ’

டமாலேன மாமா, அத்தை காலில் விழுந்த மகாவின் உடம்பு குலுங்கிக் கொண்டிருந்தது. அழுகையா சிரிப்பா? புரியவில்லை சேகருக்கு.

–     மர்மயோகி

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Meenakshi says:

    Liked the language style.. 🙂 Madras lang has been captured nicely

  2. அடுத்த முறை சித்தப்பா வந்தா, எங்க வீட்டாண்ட வர சொல்லுங்க!!!! 🙂

    கதையில் சொல்லாடல், நகைச்சுவை, தகவல்கள், உணர்வுபூர்வம் – அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad