\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இராமரின் இரு முகங்கள்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2015 2 Comments

ramar_aditi_620x1085இறைவன் பூமியில் தினம் தினம் பல அவதாரங்களாக தோன்றி வாழ்த்திக்கொண்டு இருக்கிறார். தந்தையும் தாயும் நமக்கு முன்னறி தெய்வமன்றோ? விஷ்ணு பகவானும் இப்பூவுலகில் பல அவதாரம் எடுத்திருக்கிறார். அதில் சிறந்ததாகப் பத்து அவதாரத்தைச் சொல்லுவர்.

அந்தப் பத்து அவதாரத்தில் மிகச் சிறப்பு வாய்ந்தது இராமர் மற்றும் கிருஷ்ணர் அவதாரங்கள். இவ்விரு அவதாரங்களைப் பூரண அவதாரம் என்று சொல்லுவர். மற்ற அவதாரங்களைப் போல் இல்லாமல், தாயின் வயிற்றில் தோன்றி, பிள்ளைப் பருவம் தொடங்கி இறப்பு வரை இருந்தபடியால் அவ்வாறு சொல்கின்றனர். இக்கட்டுரையில் இராமர் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் எப்படி காட்சியளித்தார் என பார்ப்போம்.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என சொல்வார்கள். அதில் மிகப்பெரிய நன்மை இராமரை நமக்கு அளித்தது. அவர் அவதரித்த காலத்தில் இப்பூமியில் முனிவர்களும், அரக்கர்களும் இருந்தனர். இந்தியாவின் பெரிய பரப்பளவு காடாகவே இருந்தது. இராமருடைய அவதாரக் குறிக்கோள்களுள் சாதுக்களைக் காப்பாற்றி அரக்கர்களை அழிப்பதுவும் ஒன்று. அனால் அவர் பிறந்ததோ அயோத்தியா எனும் நாட்டில். அயோத்தியா என்றால் யுத்தம் இல்லாத இடம் என்று பொருள். இந்த ஊரில் இருந்தபடி எப்படி இவரால் அரக்கர்களை அழிக்க முடியும்? அதனால் தான் காட்டுக்கு பதினான்காண்டுகள் சென்றார் போலும்.

சிறு பாலகனாக இருக்கும் பொழுதே விசுவாமித்திர முனியுடன் காட்டிற்குச் சென்றார் இராமர். காட்டில் உள்ள மரங்கள் வாடி, அங்குள்ள விலங்கினங்கள் உணவில்லாமல் இறந்து கிடந்தன. இதற்கு காரணம் அங்கு வாழ்ந்து வந்த  திராடகை என்னும் கொடிய அரக்கி. இராமர் சிறு வயதிலே விசுவாமித்திர முனிவரின் உத்தரவுப்படி அவளுடன் போரிட்டு அவளைக் கொன்றார். அவள் இறந்தவுடன் அக்காடு செழிக்க ஆரம்பித்து. விசுவாமித்திர முனியின் தவத்தைக் கலைக்க வந்த அரக்கர்கள் மாரிச்சன், சுபாஹுவுடன் போரிட்டு வென்றார். சுபாஹுவை கொன்று மாரிச்சனைப் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் எறிந்தார்.

சிறுவயதிலேயே வீரத்தை வெளிப்படுத்திய இராம பகவான், தம்பி இலட்சுமணன், மனைவி சீதா தேவியுடன் காட்டிற்குச் செல்லும் பொழுது கபந்தா எனும் கொடூரமான அரக்கனைக் கொன்றார். சூர்ப்பனகையின் சகோதர்கள் கரா மற்றும் தூஷனாவை வீரமாக போரிட்டு வென்றார். அவர் காட்டில் இருந்த பதினான்கு ஆண்டுகளும் தண்டகை காட்டில் பல இடங்களுக்குச் சென்று பல அரக்கர்களைக் கொன்றுள்ளார். இதனால் அங்கு வசித்த முனிவர்களுக்கு அமைதி கிடைத்தது. கடைசியாக அரக்கர்களின் தலைவன் இராவணனைத் தன் படை வீரர்களுடன் சென்று போரிட்டு வென்றார். கீதையில் சொல்லியது போல் அவதாரத்தின் ஒரு நோக்கம் “பரித்ரானாய சாதுனாம்” – அதாவது சாதுக்களை இரட்சிப்பதை பூர்த்தி செய்தார்.

கொடியவர்களுக்குச் சிம்மச் சொப்பனமாக இருந்த இராமர், நல்லவர்களிடம் எப்படி இருந்தார் என பார்ப்போம். விளையாட்டு வயதில் விசுவாமித்திர முனி கூப்பிட்டவுடன் காட்டிற்குச் செல்ல தயாரானார். தன் தந்தையின் வார்த்தை படி பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குத் தயக்கில்லாமல் சென்றார். பல ஆண்டுகளாக சாபத்தால் கல்லாக இருந்த அகலிகை இராமர் பாதம் பட்டதும் சாபம் நீங்கி உயிர்த்தெழும்பினார். அவர் பாதம் பட்டாலே நன்மை உண்டாகும் என்றால், வட இந்தியாவில் இருந்து தெற்கு வரை அவர் நடந்த இந்தியா புண்ணிய பூமி அல்லவோ?

பல சாதுக்கள் வாழும் காட்டில் இராமருடைய பயணம் அவர்களின் தவப்பயனாகவே கருதப்பட்டது. இராமர் காட்டில் பயணிக்கும் பொழுது சரபங்கா முனிவரைச் சந்தித்தார். முனிவர், இவரைக் கண்டதும் தான்  பிறவிப்பயன் அடைந்ததை உணர்ந்து வேள்வி நெருப்பில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அதேபோல் முனிவர் சுதிக்க்ஷனாவும் இராமரைக் கண்டதும் தவப்பயனை அடைந்து விட்டதை உணர்ந்து  தன் உயிரை நீத்தார்.

சபரி என்னும் சன்யாசினி பல ஆண்டுகளாக இராமர் வரவுக்காக காத்திருந்தார். தினமும் பழங்களைப் பறித்து நல்ல பழத்தையும் புளிப்பான பழத்தையும் பிரிக்க அதைச் சுவைத்து பார்ப்பார். இராமர் அவரது இல்லம் வந்ததும் தான் சுவைத்த பழத்தை அன்பாக அளித்தார். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அதை ஏற்று உண்டார் இராமர். இராம பகவான் பக்தர்கள் அன்பாக அளிப்பதை எப்பொழுதும் ஏற்பார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இராமர் அரக்கர்களுக்கு எமனாகவும் பக்தர்களுக்குப் பக்தியின் பலனாகவும் இருக்கிறார். நமது மனமும் தண்டகை காட்டைப் போலத்தான். அதில் சாதுவான எண்ணங்களும், அரக்கத்தனமான எண்ணங்களும் தோன்றிய வண்ணம் இருக்கும். இந்த மாதம் நாம் அவர் பிறந்தநாளைக் கொண்டாடும் பொழுது, நம் எண்ணக் காட்டில் இருக்கும் அரக்கனை அழித்து நல்ல எண்ணங்கள் மட்டும் வாழ பிரார்த்திப்போம். அப்பொழுது இராமரே வந்து நம் மனதில் நீங்காமல் குடி கொள்ளுவார்.

-பிரபு

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. Krishnamurthy says:

    Excellent write up. Beautiful art of Lord ram by Aditi. Congratulations Aditi. Keep it up.

  2. லெட்சுமணன் says:

    நும் பணி மறுப்பனோ? என்று தானே இராமர் சொல்கிறார். அது கைகேயின் கட்டளை அன்றோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad