புனித வெள்ளி
கிறிஸ்துவ மறை நெறியில் தவக்காலம் மற்றும் புனித வாரம் சேர்த்து 46 நாட்கள் மிகவும் முக்கியமான காலம். இயேசுநாதருடைய தியாகம், பிறருக்காக வாழ்தல் போன்ற நற்பண்புகளை அனைவரும் கடைபிடிக்கவும், ஒவ்வொரு கிறிஸ்துவரும் தன்னுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தனிமனித சுயபரிசோதனை செய்து கொள்ளவும், நிதானமான ஆன்மீகச் சிந்தனை மற்றும் அதற்கான செயல்வடிவம் கொடுக்கவும் உகந்த நாட்களாக இந்தத் தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது.
சாம்பல் புதன் அல்லது விபூதி புதன் (Ash Wednesday)
தவக்காலத்தை விபூதி புதன் அன்று கிறிஸ்தவர்கள் அனைவரும் விரதம் ஏற்றுத் தொடங்குவார்கள். விபூதித் திருநாளுக்கு முன்தினம் அனைவரும் வீட்டில் இருக்கும் கடந்த வருடம் ஆலயத்தில் குருத்து ஞாயிறு அன்று கொடுக்கப்பட்ட தென்னைக் குருத்துகளைச் சேகரித்து ஆலயத்தில் கொண்டு கொடுப்பார்கள். ஆலயத்தில் அவை அனைத்தையும் சேர்த்துப் பக்குவமாக எரித்துச் சாம்பல் ஆக்குவார்கள். இயேசுவின் காலத்தில் பனை ஒலைகளின் குருத்துகளே பயன்படுத்தினர், எல்லா நாடுகளிலும் பனை ஓலை கிடைப்பது கடினம் என்பதால் அதற்கு பதிலாக தென்னை மரத்தின் குருத்துகள் பயன்படுத்தப் படுகின்றன.
மிக முக்கியமாக இந்தத் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பாவ காரியங்களுக்காகவும், மற்றவர்களுக்கும் இறைவனுக்கும் எதிராகச் செயல்பட்ட தீயகாரியங்களுக்காகவும் மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதோடு, பாவ காரியங்களை விட்டொழிக்க உறுதி எடுப்பார்கள். அதற்கு அடையாளமாக “நீங்கள் தூசு போன்றவர்கள், அதனை மனதில் இருத்தித் தீய செயல்களை விடுத்து மனம் திருந்துங்கள்” என்று சாம்பலை எடுத்துத் திருத்தந்தையர்கள் ஒவ்வொருவருடைய நெற்றியிலும் திருச்சிலுவை அடையாளம் இடுவர்.
விபூதி புதன் தொடங்கி இயேசு உயிர்த்தெழும் நாள் வரையிலான 46 நாட்களில் ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த 40 நாட்கள் கிறிஸ்துவர்கள் விரதம் இருப்பார்கள். இந்தத் தவக்காலத்தில் விரதத்தோடு சேர்த்து, ஒருத்தல் எனப்படும் தனக்கு பிடித்தமான உணவுகளையோ, செயல்களையோ தியாகம் செய்து, பிறருக்கு உதவி செய்யும் செயல் அனைத்துக் கிறிஸ்தவர்களால் மிகவும் விரும்பிச் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இயேசுநாதர் கிறிஸ்துவ பிறரன்பு மறைப் பணியைத் துவங்குவதற்கு முன் ஒரு துளி நீர் கூட அருந்தாமல் 40 நாட்கள் பாலைவனத்தில் கடுமையான தவமிருந்து தன்னைத் தயார்படுத்தியதை நினைவு கூர்வதற்காகக் கிறிஸ்துவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பது வழக்கம்.
இந்தத் தவக்காலத்தில், புனித வெள்ளி அன்று பிறருடைய பாவங்களுக்காக இயேசுநாதருக்கு நிகழ்ந்த பாடுகளை நினைவுகூறும் விதமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயத்தில் நடைபெறும் திருச்சிலுவைப்பாதை வழிபாட்டில் அனைத்துக் கிறிஸ்துவர்களும் தவறாது கலந்து கொண்டு மண்டியிட்டு உருக்கமாக மன்னிப்பு வேண்டி மன்றாடுவர்.
குருத்து ஞாயிறு (Palm Sunday)
ஒரு தந்தையும் மகனும் பிழைப்புத் தேடி காட்டு வழியே பயணம் செய்தனர். காட்டு வழியில் கற்களும் முட்களும் சிறுவனின் கால்களைப் பதம் பார்த்தன. கால்களில் ஏற்பட்ட வலி, அவனது வேகத்தைக் குறைத்தது. அதோடு பசியும், களைப்பும், சோர்வும் வாட்டின. தந்தை அவனைச் சிறிது நேரம் அமர வைத்தார். மகனின் வலியைச் சகிக்க முடியாத தந்தை, அவனைச் சிறிதுநேரம் தோளில் தாங்கினார். அவருக்கும் களைப்புத் தட்டவே, தன் மகனிடம் ”தம்பி நான் முதலில் நடக்கிறேன் பிறகு நீ என் பாதச்சுவடுகளை, தடங்களைப் பின்பற்றி அதிலேயே உன் கால்களையும் வைத்து நடந்த வா. அப்போது கற்களும், முட்களும் உன் கால்களைத் தீண்டாது” என்று கூறித் தந்தை முன் கிடந்த கற்களின் கடுமையையும், முட்களின் கொடுமையையும் தாங்கிக்கொண்டு மகனைப் பத்திரமாக அழைத்துச் சென்றார்.
அதுபோலத்தான் இறைநிலை கொண்ட இயேசுநாதர் ஒரு அடிமை போல, நாமெல்லாம் கஷ்டப்படாமல் விண்ணகம் சேரத் துன்ப, துயர, கரடுமுரடான வழி நடந்து நம்மை மீட்டார். அவரின் பாடுகளின் துவக்கம் தான் இந்தக் குருத்து ஞாயிறு. நமக்காகப் பாடுகள், வேதனைகள், துன்பங்கள் பட, ஏன் இறப்பதற்கும் இயேசு தயாராகிறார் என்பதை நினைவுபடுத்துகிறது இந்த நாள்.
மக்களுடைய துயர் துடைத்து, புதுமைகளைச் செய்து, நோயாளிகளை, முடவர்களைக் குணமடையச் செய்த இயேசுநாதர் தான் பாடுபடும் முன் எருசலேமுக்கு வந்த போது மக்கள் பனைக் குருத்துகளை ஏந்தி “ஓசான்னா! ஓசான்னா! இயேசு என்ற பெயரில் வருபவர் ஆசிர்வதிக்கப்பட்டவர், இவரே இஸ்ரேலியரின் ராஜா” என்று வாழ்த்துப் பாடி மக்கள் வரவேற்றதை நினைவு கூர்வதே இந்தக் குருத்து ஞாயிறுவின் நிகழ்வு.
இயேசுநாதருக்கு எருசலேமில் தனக்குப் பல பாடுகள் உண்டு என்பதும், கொன்று விடுவார்கள் என்பதும் தெரியும். இன்று குருத்தோலை ஏந்தி ஓசான்னா பாடுபவர்கள் ஓரிரு நாட்களில் இவனைச் சிலுவையில் அறையும் என்று கத்துவார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தும் துணிந்து சென்றார். இலட்சியத்தை நிறைவேற்ற, மக்கள் பாவத்திலிருந்து மீட்படைந்து விண்ணகம் சேர இயேசுநாதரிதை ஏற்றுக்கொண்டார். துன்பங்களைத் தாங்குபவர், எதிர்கொள்பவர் தான் என் சீடர் என்பதை இயேசு பலமறை உரைத்திருக்கிறார்.
அவரின் பாடுகள் நம்மீது அவர்கொண்ட பாசத்தின் வெளிப்பாடு. அவரின் பாடுகள் அவர்மீது திணிக்கப்பட்டது அல்ல. அவராக விரும்பி ஏற்றுக்கொண்டது. நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார் என்று சொல்லி மனமுவந்து பாடுகளை, இறப்பைச் சந்தித்தவர் இயேசு. துன்பங்களைத் தாங்க தூயவர் இயேசு துணிச்சலுடன் எருசலேமுக்குப் பயணித்தார் என்பதை நினைவு கூர்வதே குருத்து ஞாயிறு.
புனித வியாழன்
பிறர் அன்புப் பணியே பரகதிக்கு ஏணி என்பதற்கேற்ப, இறைநிலை கொண்ட இயேசு கிறிஸ்து தன் சீடர்களுக்கு முழந்தாளிட்டு அவர்கள் கால்களைப் புனித வியாழன் அன்று கழுவினார். பின்பு இறுதி இரவுணவின் போது சீடர்களுக்குத் தான் பாடுபட்டுக் கொல்லப்படும் முன் தன் உடல் மற்றும் இரத்தத்தின் நினைவாக கோதுமை அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் பகிர்ந்தளித்தார்.
இதை நினைவுகூரும்வண்ணம் தேவாலயத்தில் புனித வியாழன் அன்று திருத்தந்தையர்கள் 12 நபர்களுக்கு முழந்தாளிட்டுக் கால்களைக் கழுவிடும் நிகழ்வு அனைத்துக் கிறிஸ்துவர்கள் முன்னிலையில் நடைபெறும். அனைவரும் உணரும் வண்ணம் கிறிஸ்துவ மக்களும் தனது கால்களைக் கழுவியது போல மற்றவருக்குக் கால்களைக் கழுவுவர். அனைவருக்கும் பணிவை உணர்த்தும் வண்ணம் இந்த நிகழ்வு அமைதியாக நீண்ட நேரம் நடைபெறும். இரவுணவை உண்டவுடன் சீடர்களோடு கெத்சமனித் தோட்டத்தில் தியானம் செய்ய செல்வார்.
புனித வெள்ளி (Good Friday)
இயேசு கிறிஸ்துவின் மகிமை மக்களிடம் பரவிவருவதைக் கண்டு ஆத்திரமுற்று எருசலேமில் உள்ள சதிகாரர்களான பரிசேயர்களும் மூப்பர்களும் பொய்யான சாட்சிகளைக் கொண்டு இயேசுநாதரை கெத்சமனித் தோட்டத்தில் தியானம் செய்துகொண்டு இருந்தபோது பிடித்து, பிலாத்து என்ற மன்னனிடம் கையளித்தனர். பிலாத்துவால் இயேசுநாதரிடம் எந்தக் குறையும், குற்றமும் காணமுடியவில்லை. இருந்தும் பரிசேயர்களின், மூப்பர்களின் வற்புறுத்தலால் அவர்களிடமே இயேசுநாதரைக் கையளித்தார்.
அவர்கள் இயேசுநாதருக்கு முள்கிரீடம் இட்டு, அடித்துத் துன்புறுத்திச் சிலுவை என்ற பளுவான மரவடிவத்தைச் சுமக்கச் செய்து கொல்கொதா (Golgotha) என்ற இடத்தில் உள்ள கல்வாரி (Calvary) மலையில் சிலுவையில் மூன்று ஆணிகள் கொண்டு அறைந்தனர்.
உலக மக்களுக்காகச் சுவாசித்த, போதித்த அன்பின் வடிவம் கருணையின் நாயகர், உலக ரட்சகர் இயேசு கிறிஸ்துவின் உயிர் சிலுவையில் சிறைப்பட்டுப் போன நாள் புனித வெள்ளி!. இந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் புனித நாளாக அனுசரிக்கப்படுகிறது. சிலுவை அடையாளம் பாடுகளின் அடையாளமாக, திருச்சிலுவையாக அனைவராலும் ஏற்கப்பட்டது. இப்பொழுதும் புனித வெள்ளிக்கிழமை அன்று அனைவராலும் திருச்சிலுவை முன்பு மண்டியிட்டு திருச்சிலுவை முக்தி செய்தல் நிகழ்வு முக்கியமானது.
இயேசு கிறிஸ்துவின் உடல் மற்றும் இரத்தத்தின் நினைவாகக் கோதுமை அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் ஆலயத்தின் நடுவில் வைக்கப்பட்டு முழுநேர ஆராதனை நடைபெறும். ஆலயத்திலும் கிறிஸ்துவர்களுடைய இல்லத்திலும் சோகமே உருவாக மக்கள் உணவுகளைத் துறந்து செபத்தில் இருப்பார்கள். மேலும் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட காட்சி நடித்துக் காட்டப்படும். தமிழகம் முழுவதும் இன்று புனித வெள்ளி சிறப்புப் பிரார்த்தனைகளுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இயேசுநாதர் கி.பி. 33ம் ஆண்டில் சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஈஸ்டர் – இயேசு கிறிஸ்து உயிர்ப்புநாள் (Easter Sunday)
மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று இயேசுநாதர் உயிர்த்தெழுந்தார். இதை நினைவுகூர்ந்து ஞாயிறு துவங்கும் மணிப்பொழுது, நடு இரவில் ஆலயத்தில் ஒன்றுகூடி இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை வெகுவிமரிசையாக நீண்ட திருப்பலியுடன் கொண்டாடுவர்.
ஈஸ்டர் – உலகை அன்பால் நிறைக்க இயேசு உயிர்ந்தெழுந்த பெருநாள்
உலகின் மாபெரும் அவதார புருஷன் நம் இறைமகன் இயேசு பிரான். அன்பை, அதன் உண்மையான பரிமாணத்தை உலகுக்கு உணர்த்தவே பிறந்து, கொடிய துன்பங்கள் தாங்கி, உயிர்த்தெழுந்தார் இறைமகன். இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்த்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது.
உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள். உயிர்த்தெழவும், மறுபடைப்புக்குத் தயாராகவும் அதில் பங்குபெறவும் மானுடருக்குக் கிடைத்த பரிசு. எந்தக் குற்றமும் செய்யாத நிலையிலும் கல்வாரி மலையில் இயேசு பிரானைச் சிலுவையில் அறைந்தனர். அந்த நிலையிலும் தனக்குத் தண்டனை அளித்தவர்களை மன்னிக்க வேண்டி இறைவனிடம் மன்றாடினார் இயேசுநாதர். இந்த இறைகுணம் மனிதனுக்கும் வரவேண்டும் என்பது இயேசுநாதரின் சித்தம். மனிதனுக்குள் இருக்கும் இறைவனை வெளிப்படுத்துதல் அது.
விரதத்தின் மகிமை சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள். அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதல் அது. அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் அது. இந்த நாளை அனைவருமே கொண்டாடலாம். ஈஸ்டர் மாதத்தில் விரதம் இருக்கும் கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றனர். இதனால் அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது. இந்த நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுத்தார் என்று மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்கின்றனர்.
தன் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து இயேசு அநீதியைத் தட்டிக் கேட்கத் தயங்கவில்லை. நான் பேசியது தவறு என்றால் தவறைச் சுட்டிக் காட்டுங்கள், ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டாலும் தந்தையின் விருப்பத்திற்குத் தாழ்ச்சியுடன் தன்னைக் கையளித்தார். சமுதாய நலன்களுக்காகப் பாடுபடும் உள்ளங்களுக்குத் துன்பங்கள் கொஞ்சம் அதிகமாகவே வரும். துன்பங்களை கண்டு விலகிவிடக் கூடாது. மாறாக இயேசுவைப் போல் வெற்றி பெறும் வரை, இறுதிவரை போராடிக் கொண்டேயிருக்க வேண்டும். மக்களின் நலனுக்காக இயேசுவைப் போல் நாமும் தாழ்ந்து போக வேண்டும்.
நம் எதிரிகளை மன்னிக்க வேண்டும். குறிப்பாக நாம் இறக்கும் போது நமக்கென எதிரிகள் யாரும் இருக்க கூடாது. இயேசு இறக்கும் தருவாயில் கூட தந்தையே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் இவர்களை மன்னியும் என்று தன் பகைவர்களை மன்னிக்கிறார். ஏழைகளுக்கு இரங்கினார். பசித்தோருக்கு உணவளித்தார். இறுதியாக நமது பாவங்களுக்காக, நம்மை மீட்க சிலுவைச்சாவை ஏற்கிறார். இதற்காக அவர் சந்தித்த துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள், சோதனைகள் ஏராளம். அவரது வாழ்க்கையில் உண்மையிருந்தது, அன்பிருந்தது, அவரது செயல்களில் நீதி இருந்தது, சமாதானம் இருந்தது, அவரிலே தியாகம் இருந்தது. அதனால்தான் இயேசுவில் இறைவனும் இறைவனில் இயேசுவும் வாழ்ந்தார்கள்.
ஈஸ்டர் முட்டை
ஈஸ்டர் பண்டிகை ஒரு வசந்த காலத் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் ஈஸ்டர் மணிகள் என்ற மலர்கள் பல நிறங்களில் பூத்து மகிழ்விக்கும். இந்த பண்டிகையின் முக்கிய அம்சம் அலங்கரிக்கப்பட்ட முட்டைகள். பண்டைய காலங்களில் வர்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்குச் சாக்லேட் போன்ற உண்ணக்கூடிய பொருட்களால் ஈஸ்டர் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகளைத் தேடிக்கண்டு பிடிக்கச் செய்வர். அதிக முட்டைகளைக் கண்டு பிடிக்கும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. புதிய வாழ்க்கையின் தொடக்கம் இயோஸ்டன் என்ற வசந்த காலத் தேவதையின் விலங்கு முயல். வசந்த காலத்தில் மீண்டும் பிறப்பதை முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது. முட்டையானது புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. முட்டை அடை காக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது புதிய வாழ்வின் குறியீடாகக் கருதப்படுகிறது. மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது. பாரம்பரியமாக, ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது, அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது, அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது, மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது. முட்டையானது, கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. சிலுவையில் அறையப்பட்டு தியாகம் செய்து உலகம் மற்றும் மனித இனத்தின் மீட்புக்காக இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது. முட்டையானது மறுபிறப்பின் குறியீடாகும் செயலற்று முடங்கியுள்ள அதில் புதிய வாழ்வு வைக்கப்பட்டிருக்கிறது.
அன்பிற்குரியவர்களே, எல்லாவற்றிற்கும் ஆதிகாரணமுமாய், அந்தமுமாய், ஊனாய் உயிராய் உண்மையாய் ஒளியாயிருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு தினந்தோறும் அர்த்தமுள்ளதாக நம்மில் நிகழ வாழ்த்துகள். நமக்குள் இயேசுவின் உயிர்ப்பு நிகழ நாம் அனைவரும் இயேசுவுக்காக வாழுவோம், அர்த்தமுள்ள வகையில் நாம் அனைவரையும் மன்னிப்போம், ஏற்றுக்கொள்வோம்.
அனைவருக்கும் ஈஸ்டர் பெருநாள் நல்வாழ்த்துகள்!
ம. பெஞ்சமின் ஹனிபால்
மினியாபோலிஸ். அமெரிக்கா
What a wonderful way of explaining each event of Lent and Easter.
Good Job Hanibal !!!
மிக அருமையான கட்டுரை…எளிய, இனிய நடையில் வாசிப்பதற்கு ‘இதமாக’ அமைந்துள்ளது….வாழ்த்துக்கள் !!!