எசப்பாட்டு – வளர்ச்சியோ வீழ்ச்சியோ?
நாலாறு பொருள்வாங்க
நான்நடந்து போனதினம்
நாபகமா வந்துருச்சு….
நாகரிகம் வளந்துதுன்னு
நாட்டுப் புறத்திலயும்
நாம்பாத்து நடக்கையிலே
நாலஞ்சு லைன்கடைங்க…
பொழப்பு நடத்திவந்த
பொறுமையான அண்ணாச்சி
பொட்டலமாப் போட்டுத்தந்த
பொதுவான பலசரக்கு
பொலம்பித் தீத்தாலும்
பொறுமையாத் தான்நின்னு
பொட்டியில வைக்கச்செய்யும்
பொழப்புத்தான் பெருங்கடையில்……
கையிலே காசில்லன்னு
கடனாச் சொன்னாலும்
கரிசனம் பாத்தவரும்
கணக்காத்தான் கொடுப்பாரு..
கவுண்டருல கொடுப்பதற்கு
கிரடிட்கார்டோ காசதுவோ
கையில இல்லயின்னா
காவலாளி தொரத்திடுவான்…
நாடெல்லாம் வளந்ததுன்னு
நாகரிகம் பேசயில
நாளைய பொழுததனை
நானடத்துவது எப்படியோ…
.
வெ. மதுசூதனன்.
சின்ன அண்ணாச்சி கடையிலே
சுத்தம் ஏதுமில்லைன்னு ஒழிச்சிட்டோம்!
சர்வதேசச் சந்தை அலையிலே
சுளுவாத் தான் சேந்துட்டோம்!
சூப்பர் மார்க்கெட் கடைங்களைச்
சொதந்திரமாத் தான் தொறந்துட்டோம்!
சந்தடியில் தரகர்கள் கொழிச்சாலும்
சொகமா அதையும் ஏத்துகிட்டோம்!
உள்ளூரில் வெளஞ்ச கீரையைக்கூட
உழவர் சந்தையில வாங்கமாட்டோம்!
உப்பு மிளகு வேணுமின்னாலும்
ஊடகத்தில விளம்பரத்தைத் தேடுவோம்!
அவசரத்துக்கு அடகுக்கடை போனாலும்
ஆடம்பர ஏ.டி.எம்.க்கும் போய்வரோம்!
அயல்நாட்டு வங்கியில் கடன்வாங்க
ஆல்மார்க் தங்கத்தையே சேக்கிறோம்!
கந்துவட்டிக்கு கடனை வாங்கியாவது
கச்சிதமாக் கைப்பேசி வாங்கிடுவோம்!
கதையடிக்கக் காசும் இல்லைன்னா
கணக்கா மிஸ்டுகால் தட்டிடுவோம்!
விக்கித் தவிக்கும் அவசரத்துக்கும்
வெலகொடுத்துத் தண்ணி வாங்குவோம்!
வெப்பம் தணிய தாகத்துக்கு
வெளிநாட்டுப் பானத்தையே குடிச்சிடுவோம்
விளை நிலத்தை வித்தாவது
வீட்டை அழகாய் கட்டுவோம்!
வீதியில் இருப்பவரைத் தெரியாம
விரல்நுனியில் உலகத்தயே அளந்திடுவோம்!
வருமானம் கடந்து செலவழிச்சு
வையத்து வர்த்தகம் வளக்கிறோம்!
வீழ்ச்சி எங்கே கண்டீரு,
வளர்ந்து தானே நிக்கிறோம்!
– ரவிக்குமார்