பேச்சே எங்கள் மூச்சு
உலகத்தில் ஏறத்தாள 77 மில்லியன் மக்களால் பல வட்டார வடிவங்களில் தமிழ் பேசப்படுகின்றது. காலம், புவியியல், மதம், சாதி போன்ற பல்வேறு காரணிகளினால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தமிழ் பல்வேறு முறைகளில் உச்சரிப்பு மாற்றத்துக்கு உள்ளாவதை வட்டார வழக்கு என்கிறோம். எங்கள் தமிழ் மொழிக்கென்று மிகச் சிறந்த இலக்கண நூல்கள் உள்ளன. தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கத்தினை அவை எமக்குத் தருகின்றன. தமிழை எப்படிச் சரியாக எழுதுவது? எப்படிச் சரியாகப் பேசுவது? என்ற அக்கறை தமிழர்களாகிய எமக்கு வர வேண்டும்.
தமிழைப் படிப்பவர்களை விட கேட்பவர்கள் தான் அதிகம். இன்றைய வானொலி,தொலைக்காட்சி, திரைப்படம் என அனைத்துத் துறைகளிலும் பிழை நிறைந்த உச்சரிப்புக்களைக் காண்கிறோம். பலர் தெரியாமலும் சிலர் நாகரிகம் என்ற போர்வையிலும் தமிழைக் கொலை செய்து கொண்டிருப்பதை நாளும் காண்கிறோம். “தமிழ்” என்பதைக் கூட சரியாக உச்சரிக்கத் தவறும் சிலர் “தமில்” என்று உச்சரிக்கின்றனர். “ழகரம்” தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து. தமிழின் அழகே அதன் உச்சரிப்பில்தான் உள்ளது. பலர் நினைப்பது போல தமிழ் உச்சரிப்பு ஒன்றும் சிக்கலான விடயமல்ல. ஆங்கிலத்தில் சில எழுத்துக்கள் பல உச்சரிப்பைக் கொண்டிருப்பினும் தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் தனித்துவமான உச்சரிப்பைக் கொண்டிருப்பதே நம் மொழியின் தனிச் சிறப்பாகும்.
“வெண்ணிலா – வென்னிலா” “பரபரப்பு – பறபறப்பு” “ மறத் தமிழன் – மரத் தமிழன்” “மறப்பேனா – மரப்பேனா” போன்ற எண்ணற்ற சொற்களுக்கு இடையிலான உச்சரிப்பு வேறுபாட்டை முதலில் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழ் உச்சரிப்பில் எழுத்துகளின் பிறப்பிடம் அவசியமானது.
“உந்தி முதலா முந்து வளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயலத்
திறப்படத் தெரியும் காட்சியான.”
(தொல். பிறப். 1)
என்று தமிழ் எழுத்துகளின் பிறப்புப் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இதன் படி தலை, கழுத்து, நெஞ்சு என்பவற்றை கற்று நிலைபெறும் இடமாகவும் பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் என்பவற்றை எழுத்துப் பிறக்கும் முயற்சியில் துணை நிற்கும் இடங்களாகவும் வகைப்படுத்துகின்றார். அண்ணம் என்பது வாயின் மேற்பகுதியைக் குறிக்கின்றது. இதனை நுனி நாக்கினால் வருடும்போது லேசான கூச்சம் ஏற்படும்.
உயிர் எழுத்துகளின் உச்சரிப்புப் பற்றி அதிகம் இங்கு பேசவேண்டிய தேவை இல்லை. அதன் உச்சரிப்பில் தவறிழைப்பவர்கள் மிக அரிது. மெய் எழுத்துகளே இங்கு வாதத்துக்கு உரியவை. குறிப்பாக ல,ள, ழ, ர, ற, ன, ந, ண ஆகிய எழுத்துகளுக்கு இடையிலான உச்சரிப்பு வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ல – நாக்கின் நுனியால் மேற்பல்லினை அழுத்த வேண்டும்.
ள – நாக்கின் விளிம்புப்பகுதி அண்ணத்தினை அழுத்த வேண்டும்.
ழ – நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தைத் தடவவேண்டும்.
ர – நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தைத் தடவவேண்டும்.
ற – நாக்கின் நுனிப்பகுதி மேல் அன்னத்தை அழுத்த வேண்டும்.
ன – நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தின் முன் பகுதியை மெதுவாகத் தொடவேண்டும்.
ந – மேல் பல்லின் அடிப்பாகத்தை நாக்கின் நுனிப்பகுதி தொட வேண்டும்.
ண – நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தின் அடிப் பகுதியை அழுத்த வேண்டும்.
இது போன்ற குழப்பம் தரும் எழுத்துக்களுக்குச் சிறப்புப் பயிற்சி அவசியமானது. இவ்வாறு தொடர்ச்சியாக மேற்கொள்ளும் உச்சரிப்புப் பயிற்சியின் மூலம் தமிழ் உச்சரிப்பு பிழைகள் இல்லாமல் பார்ப்பது நம் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் தமிழ் எழுத்துப் பிழைகளும் அதற்கான தீர்வுகளும் பற்றிப் பார்க்கலாம் என்ற நம்பிக்கையுடன்…
-தியா-
Super!