மரண தண்டனை
தவறும் மானுடர்க்குத் தண்டனை சரியோ
திருந்தத் தரும் சந்தர்ப்பம் பெரிதோ….
தரணியின் இண்டு இடுக்கெலாம் இடியாய்
தகர்த்திடும் விவாதம் இஃதே இன்று……
கடவுள் தந்த உயிரைப் பறிக்க
கனம் கோர்ட்டாருக்கு உரிமை உளதோ…
களவு செய்தாலும் கலகம் செய்தாலும்
கொடுந் தீவிரத்தால் கொலைகள் புரிந்தாலும்….
நாடு விடுத்து எல்லை கடந்து
நாடிப் பலரின் நயவஞ்சகம் சேர்த்து
நாச வேலைகள் நஞ்செனப் புரிந்து
நாயெனத் திரியும் பாதகம் செய்பவர்…
தெருவில் ஆடிடும் சிறுவரைக் கொன்றாலும்
தென்றலாய்த் திரிந்திடும் பெண்டிரைக் குலைத்தாலும்
தெளிவிலாப் புரிதலால் கழுத்தறுத்து வதைத்தாலும்
தெருவோரக் கிழவனைத் தடியடியால் முடித்தாலும்
தெய்வங்கள் உறையும் புனிதங்கள் தகர்த்தாலும்
தெளிந்த நீரோடைகள் குருதியால் நிறைத்தாலும்
தெரிந்தே குற்றங்கள் தேர்ச்சியாய்ப் புரிந்தாலும்
தெள்ளத் தெளிவாய் ஆதாரங்கள் இருந்தாலும்
சட்டத்தின் காவலர்கள் உயிர்ப்பணயம் மறந்து
சமாதியால் நாடுதனை நிறைத்ததனை மறைத்து
சடுதியே வந்திந்தப் பாதகர்கள் உயிரதனைச்
சலனத்துடன் காக்கவரும் தருக்கர்கள் கூட்டம்
மனித உரிமையென மார்தட்டிப் பேசுமிவர்
மரண தண்டனையைத் தவறென ஏசுமிவர்
மதிக்கும் உயிர்கள் எப்போதும் குற்றவாளி
மறந்தும் கொலையுண்டோரை மனிதராய்க் காணாததேன்?
மனித உரிமை மனிதர்களுக்கு மட்டுமே
மற்றவர் வலியினைப் புரிந்திடா மூடரை
மனிதருள் ஒருவராய்ச் சேர்ப்பது தவிர்த்து
மரண தண்டனையால் பயந்திடச் செய்திடின்
தண்டனை தருவதும் அரசதின் கடமையே
தவறுபவன் தண்டனை இன்னொருவனுக்கு எச்சரிக்கை
தடம்மாறா வாழ்பவனுக்கு தருமந்த நம்பிக்கை
தரணியில் அனைவரும் தெளியட்டும் கூற்றிதை !!!
– வெ. மதுசூதனன்.
தவறால் மண்ணிது புண்படும் வரையே
தவறும் மனிதர்க்கு தண்டனை சரியே
மூக்கிற்க்கு மூக்கை அறுப்பதும் முறையே
தூக்கியே மாட்டி சாய்த்தலும் சரியே