\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

திருக்குறளும் இளஞ்சிறகுகளும்

உலகத்து மொழிகளுள் முதன்மையான செம்மொழியாம் தமிழ்மொழியின் மகுடத்தை என்றுமே அலங்கரிக்கும் அழகான சிறகு திருக்குறளாகும். திருக்குறள் வள்ளுவரால் உலக மக்களுக்காக கட்டித் தரப்பட்ட அறிவுக் களஞ்சியமாகும். விவிலியத்தைத் தொடர்ந்து அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதும் திருக்குறளே. எந்த மண்ணில், எந்தக் காலத்தில், எவர் படித்தாலும் படிப்பவருக்கும் படிக்கும் காலத்திற்கும் ஏற்புடையதாக அமைவது திருக்குறளின் பெருஞ்சிறப்பு. இத்தனைச் சிறப்புகள் வாய்ந்த திருக்குறள், வெறும் மதிப்பெண்ணிற்காக மனப்பாடம் செய்யும் வரிகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த அச்சத்தைத் தகர்க்க தமிழகத்தில் பலஅமைப்புகள், இலக்கிய கூட்டங்களையும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தி  திருக்குறளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர். வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு இந்த வாய்ப்பு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. காலம் சற்று கனிந்து பலநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களின் முயற்சியால் பல நகரங்களில் தமிழ்ச்சங்கங்கள் தொடங்கப்பட்டு, சிறப்பாக தமிழ் தொண்டாற்றி வருவதன் மூலம் இந்த வாய்ப்பு சமீபகாலத்தில் சாத்தியமாகியுள்ளது.

உறைபனியின் மத்தியில் வசித்துவரும் மினசோட்டாத் தமிழர்களை அமைப்பாக்கி, அடுத்த தலைமுறைக்கு தமிழைக் கொண்டுச் செல்ல தமிழ்ப்பள்ளி நடத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது மினசோட்டாத்  தமிழ்ச் சங்கம். இங்கு வசித்துவரும் குழந்தைகள் மத்தியில், திருக்குறள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் கற்கும் ஆர்வத்தைத் தூண்டவும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியைக் கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்தப் போட்டியில் குழந்தைகள் பொருளுடன் சொல்லும் ஒவ்வொரு குறளுக்கும் ஒரு வெள்ளி (டாலர்) பரிசாக அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான போட்டியைக் கடந்த ஜூன் 13 அன்று சிறப்பாக நடத்தி முடித்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்பே பல குழந்தைகள் அவர்கள் பெற்றோருடன் வண்ண வண்ண ஆடைகளில் வந்தமர்ந்து அரங்கை அலங்கரித்தனர். குழந்தைகள், மழலை குரலில் திருக்குறளையும், அதற்கேற்ற பொருளையும் சொல்லி அசத்தினர். அந்த பிஞ்சுகளின் முகத்தில் பயமோ அல்லது பதற்றமோ சற்றும் இல்லை. ஆர்வம், பதற்றம் மற்றும் மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளும் அங்கிருந்த பெற்றோர்களின் முகத்தில் மட்டுமே அடுத்தடுத்து வந்து மறைந்தது இரசிக்கும்படியாக  இருந்தது. இந்த நேரத்தில் பெற்றோர்களின் ஆர்வமும், குழந்தைகளைத் தயார் செய்ய அவர்கள் மேற்கொண்ட மெனக்கெடலும் பாராட்டப்படத்தக்கது.

தமிழைத் திருக்குறள் அலங்கரிப்பதுப் போல், மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தை அலங்கரித்துவரும் இளஞ்சிறகு அத்விகாவின் சாதனையே இந்தாண்டு நிகழ்ச்சியின் சிறப்புகளின் சிறப்பு ஆகும். பங்கேற்கும் பேச்சு போட்டிகளிலும், மற்ற மேடை நிகழ்வுகளிலும் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ள அத்விகா இந்தப் போட்டியில் 1330 குறள்களையும் பொருளுடன் ஒப்புவித்துப் புதிய சாதனையைப் பதிவு செய்தார். கடந்த ஆண்டுகளில் 430 குறள்களை ஒப்புவித்து ஆழமான அடித்தளம் அமைத்து, இந்தாண்டு மீதமிருந்த 900 குறள்களையும் அருமையாகச் சொல்லி அழகான கோபுரத்தைக் கட்டிமுடித்தார். பார்வையாளர்களின் ஆரவாரத்தோடு முதல் குறளைத் தொடங்கி, அடுத்தடுத்த குறள்களைத் தெளிந்த நீரோடை போன்ற தெளிவுடனும், காட்டாற்று வெள்ளம் போன்ற வேகத்துடனும் நேர்த்தியாகவும் அடுக்கினார். அதைப் பார்த்து உயராத புருவங்களும் இல்லை, ஒலிக்காத கரங்களும் இல்லை. இதுவரை பாடல்களுக்குத்தான் ஒன்ஸ்மோர் கேட்டு அறிந்திருப்போம், ஆனால் முதல்முறையாக அத்விகா சொன்ன திருக்குறளுக்கு ஒன்ஸ்மோர் கேட்டு ரசித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் விதமாகவும்,  அத்விகாவிற்கு ஒய்வு கொடுக்கவும் 300 குறளுக்கு ஒருமுறை இடைவெளிவிட முடிவு செய்யப்பட்டது. 75 நிமிடத்தில் 300 குறள்களைப் பொருளுடன் சொல்லி முடித்த வேகம் நம்மை மிரளவே செய்தது. இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சொல்லத்தொடங்கி ஒருகட்டத்தில் அனைவரின் கரவொலியோடு அனைத்துக் குறள்களையும் அடுக்கி ஒரு முழு கோபுரமாக கட்டிமுடித்த அத்விகாவின் வயது 7 தான். 3 மணி 40 நிமிடங்களில் இந்த ஆண்டு மட்டும் ஒப்புவித்த குறள்களின் எண்ணிக்கையோ 900. வட அமெரிக்காவில் இந்தச் சிறுவயதில் இதுவரை யாரும் நிகழ்த்தாத புதிய சாதனை இதுவாகும்.

இச்சாதனை மற்ற குழந்தைகளுக்கு ஊக்கத்தையும், ஆர்வம் மற்றும் நம்பிக்கையும் ஏற்படுத்தியிருப்பதின் மூலம், வரும் ஆண்டுகளில் இன்னும் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்படும் என நம்புகிறோம். சாதனைச் சிறுமி அத்விகாவையும்,  அவரின் இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த அவரின் பெற்றோர்கள் சச்சிதானந்தன் மற்றும் பிரசன்னாவை வாழ்த்தி,  இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த  மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்திற்கு, உங்கள் அனைவரின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி

விஜய் பக்கிரி

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Murthy says:

    I have started seeing “Hero-whipping” when I was 10 years. I have been seeing this for the past 40 years. But, 40 years Tamil Nadu’s credibility, Tamil Nadu people’s integrity are at bottom now compared 40 years back. I appreciate this kid. Only few kids can achieve this feat. But I am saddened to observe that Thirukural has been downgraded and reduced to use it for a memory competition!. What a powerful tool the ‘Thirukural’, 40 years back?. Each time, some orchestrated institution used Thurukural for Memory Competition, not a single person objected to it so far, that I know of!. I strongly object “Thirukural” is being used for vested and self-centric purposes! —-Murthy, Research Economist, Center for Authentic Democracy, India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad