தனித் தீவு
அதி காலை மணி 5. யாரோ தலையில் தட்டியது போல எழுந்தாள் வாணி. சிறிது நேரம் தூக்கம் கலையும் வரை அப்படியே படுத்திருந்தாள். அருகில் படுத்திருந்த குரு புரண்டு படுத்தான். இவள் முழித்து இருந்ததைப்பார்த்து, பக்கத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான்.
“மணி 5 தானே ஆகுது, ஞாயித்திக்கிழமை தானே? தூங்கு”.
“தூக்கம் வரல. வழக்கமா எழுந்துக்கிற நேரம் அதான். நான் கீழே போறேன்.”
ஏனோ வாணிக்கு இந்தச் சனி ஞாயிறு சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் பிடித்தமான ஒரு விஷயம். எல்லோரும் தாமதமாக எழுந்திருக்கும் பொழுது தான் மாத்திரம் எழுந்து கீழே வந்துஅமைதியாக இருக்க விழைவாள்.
காலைக் கடன்களை முடித்து விட்டு, முகம் துடைத்து அங்கு இருந்த சிறிய சாந்துக் குழாயில் இருந்து ஒரு சிறு பொட்டை நடு நெற்றியில் வைத்து முகம் பார்த்தாள்.
மெல்லிய நடையுடன் யாரையும் எழுப்பாமல் பக்கத்து அறையை மெதுவாகத் திறந்தாள். மெத்தை காலியாக இருந்தது. சிரித்தபடி கடைசி அறையை மெல்ல திறந்தாள். நடுவில் இருந்த மெத்தையில் 9 வயது கவியும், 6வயது பிரவீனும் நிம்மதியான உறக்கத்தில் இருந்தனர்.
பாதித் தூக்கத்தில் பயம் வந்து இப்படி அறை மாறி வந்து படுப்பார்கள் போல என்று நினைத்துச் சிரித்தபடி அவர்களை எழுப்பாத வகையில் இருவர் நெற்றியிலும் ஒரு அழுத்தமான முத்தம் பதித்து விட்டு வீட்டின் கீழ்பகுதிக்கு இறங்கி வந்தாள்.
ஜன்னல் வெளியில் முழு இருட்டு கப்பி இருந்தது. இயற்கை கூடத் தூங்கிக் கொண்டு இருக்கிறதோ என்னவோ. அத்தனை அமைதி கீழே. சூரியன் பனி காலத்தில் விடுமுறை எடுத்து கொள்வான் போல.
பழக்கமான கைகள் காபி குவளையை நிரப்பிச் சூடு பண்ணி கலந்தது. அந்தக் குவளையைக் கையில் பிடித்தபடி அந்தச் சன் ரூம் நடுவில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.
வாணிக்கு அந்த வீட்டின் மிகப் பிடித்தமான பகுதி அது. ஊஞ்சலில் அமர்ந்தபடி அந்த அறையின் விட்டத்தைப் பார்த்தாள். வெளியில் இருக்கும் பனிக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பது போல மேலே படர் ந்திருந்த கொடி அந்த விட்டத்தைப் பச்சை பசேலென்று காட்டியது. சுற்றி கண்ணை ஓட விட்டபடி காபியை அருந்தினாள். அந்தச் சிறிய அறையின் நடுவில் ஒருவர் அமரும் படியான ஊஞ்சல் தொங்கிக் கொண்டு இருந்தது. சுற்றி எல்லா இடங்களிலும் செடிகள். மல்லிகை புதிதாக மொட்டு விட்டு இருந்தது. நேற்று பூத்து கீழே விழுந்திருந்த பவழ மல்லிகை மணம் கூட்டியது. கீழே இருந்து நான்கு புறமும் மணி பிளான்ட் கொடி போல் மேல்வரை தழைத்து, அந்த மொத்த அறையையும் கிரீன்ஹவுஸ் ஆக்கியது.
கருவேப்பிலை இலைகள் உதிர்ந்து மீண்டும் துளிர்க்கத் தொடங்கி இருந்தது.
மேலே இருந்து தொங்கிய சட்டியில் பூ கூடை போலப் பூக்கள் மலர்ந்து அழகு கொடுத்தது. மணம் இல்லாவிட்டாலும் மன நிறைவு தரும் மலர்கள். அறையின் ஒரு பக்கம் செம்பங்கி, கனகாம்பரம், இப்படிப் பூக்கள்செடிகளில் வரிசையாக, இன்னொரு பக்கம் கொத்தமல்லி, பேசில், கத்திரிக்காய், போன்று உபயோகத்திற்கான செடிகள்.அறை முழுவதும் இப்படி இருந்த ஒவ்வொரு செடியையும் ரசித்தபடி ஊஞ்சலின் சின்னஆட்டத்துடன் கண் மூடினாள்வாணி .
***
கூ கூ பறவை இன்று சீக்கிரம் எழுந்து விட்டது. அதன் ஓசை அந்த அதி காலை அமைதிக்கு அழகு கூட்டியது. வாணி யின் துரு துரு கண்கள் அந்தப் பறவையைத் தேடியபடி எழுந்தது.
பக்கத்தில் அப்பா “ஷ் வாணி அப்படியே படு”
மொட்டை மாடியில் வெற்றுத் தரையில் ஒரு சிறிய பாய் விரித்து அனைவரும் படுத்து இருந்தனர். வாணியின் தங்கைகள் இருவரும் ஆழ்ந்த தூக்கத்தில். பத்து வயது வாணிக்கு குருவியைத் தேடிப் பார்க்க வேண்டும்என்ற ஆசையால் படுக்க முடியவில்லை.
பக்கத்தில் இருந்த அப்பா மெல்லிய குரலில்,
“வாணி அப்படியே படுத்தபடி மேலே வானத்தைப் பாரு. காலை நேரம் தான் இயற்கையை அதிகமாக உணர முடியும். அந்தக் கருப்பும் இல்லாத வெளுப்பும் இல்லாத அந்த வானத்தைப் பாரு. நக்ஷத்திரங்கள் இன்னமும்கொஞ்சம் வெளிச்சம் தருவது போலவும் இருக்கு, ஆனா சூரியன் வருவதனால விடை சொல்வது போலவும் இருக்கு. இரவும் காலையும் கூடும் இந்த நேரம் எவ்ளோ பிரசாந்தம்”.
அப்பாவின் குரலில் இருந்த அந்தக் கம்பீரம் எப்பொழுதுமே வாணியை அவர் சொல் பேச்சு கேட்க வைக்கும். அவருடன் அமைதியாகப் படுத்தபடி வானத்தை வெறித்தாள்.
அப்பா அப்படித்தான். எதிலயுமே ஒரு கவித்துவம் தேடுபவர். அதனால் தான் வீடு கூட அப்படிக் கவித்துவமாகக் கட்டினார். அவர்கள் வீட்டைச் சுற்றி நிறைய மரங்களை நட்டார்.
அந்த மரங்களில் சிலது அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் நிழல் பரப்பிக் கோடையிலும் குளுமை அளிக்கும். வெயில் காலம், பள்ளி விடுமுறை ஒவ்வொரு நாளும் அந்த மொட்டை மாடியில் , கதை பேசி, இரவுஉணவு நிலா சோறாகத் தின்று, அங்கேயே படுத்து உறங்குவார்கள்.
அத்தனை அழகான குடும்பம் அவர்களுடையது.
மூணு பெண்களையும் நயத்தோடு வளர்த்தார் அப்பா. வாணியைத் தேடி தேடி வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணி குடுத்தார். குரு குணத்தில் தங்கம் தான். ஆனால் அதிகம் பேச மாட்டான். அவனைப் பொறுத்தவரைகவித்துவம், கதை பேசுதல் எல்லாம் ஏதோ நேர வினயம்.
முதலில் வாணி அதிர்ந்து போனாள்.
“வாணி ஒவ்வொருவருக்கும் ரசனை ஒரு மாதிரி இருக்கும். உன்னை மாதிரியே இருந்திருந்தா நல்லா இருக்கும் ன்னு யோசிக்கறத விட்டுட்டு அவருக்குப் பிடிச்சதையும் கத்துக்கோ. அப்போ உன்னோட ரசனை இன்னும்விரிவடையும். காலம் போகப் போக, குழந்தை பொறந்தா பேசி விளையாடணும், அப்போ தான் அவங்க ஒரு ஒட்டுதலா இருப்பாங்கனு புரிஞ்சிப்பார்.” அப்பா சமாதானம் சொன்ன போது ஏற்றுக் கொண்டாள்.
ஆயிற்று.. திருமணம் ஆகி 11 வருடம் ஆகிப் போனது. இரண்டாம் வருடமே குரு வேலை நிமித்தம் காரணமாக அமெரிக்கா வந்து சேர, இவளும் தன்னுடைய விருப்பு வெறுப்பை மாற்றிக் கொண்டாள்.
குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்கள் பள்ளியிலேயே ஒரு ஆசிரியை வேலை கிடைத்தது. தனக்குக் கிடைத்த அந்த அருமையான மாணவப் பருவம் அவர்களுக்கும் கிடைக்கும் வகையில் நிறையப் பேசினாள்.
“குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே”. கவி பிரவீன் இருவருக்கும் வாணியிடம் ஒட்டுதல் அதிகம்.
“என்ன காலையிலேயே பகல் கனவா?”
திடுமென்ற குருவின் குரல் அவள் சிந்தனையைக் கலைத்தது.
“பகல் கனவு இல்ல பழைய நினைவு”.
“அப்பா, மொட்ட மாடி, குருவி கூடு, மரம் செடி இதானே”. என்றான் கேலியான குரலில் குரு.
சின்னப் புன்னகை ஒன்றை ஆமோதிப்பாக அளித்தாள் வாணி.
அதான் மொட்டை மாடிக்குப் பதிலா சன் ரூம், செடிங்க எல்லாம் சுத்தி, இன்னும் குருவி தான் பாக்கி. வீட்டுக்குள்ள அத வெச்சுக்க முடியாது”, ஒரு கண்ணை whats app இல் வைத்தபடி அவளைக் கேலி செய்து கொண்டுஇருந்தான்.
எந்தப் பதிலும் உரைக்காமல் அவனுக்குக் காபி கலந்தாள் வாணி.
சிறிது மௌனத்திற்குப் பிறகு “இன்னிக்கு என்ன பிளான் ? எங்க போலாம்.”. இன்னும் ஒரு கண்களில் அவனுடைய போனில் வைத்தபடி பேசினான்.
“இன்னிக்கு வெளில போகாம வீட்டிலேயே விளையாடிப் பேசினா என்ன?”.
“Oh come on வாணி, பனிக்காலம். வீட்டில இருந்து போர் அடிக்கும். கவி, பிரவீனை எங்கயாவது கூட்டிட்டுப் போகலாம். சினிமா பாக்க போகலாம்”.
“ஒவ்வொரு வீக் எண்டும் இப்படி எங்கயாவது கிளம்பிப் போறோம். வார நாட்கள்ல நீங்க ரொம்ப லேட்டா தான் வீட்டுக்கு வரீங்க. வந்த அப்புறமும் கம்ப்யூட்டர்ல ஒரு கண், எங்க பேர்ல ஒரு கண். கம்ப்யூட்டர் இல்லனா டி.வி , இல்லனா போன். பாதி நேரம் முகம் பார்த்துக் கூடப் பேசறது இல்ல. வீட்டுக்குள்ள. குழந்தைகளுக்கு என்ன பிடிக்கும்ன்ற விருப்பு வெறுப்பு கூட உங்களுக்குத் தெரியல நாங்க எல்லாம் ஒரு தீவு போல நீங்க வேற தீவுபோல இருக்கு.
“சும்மா ஞாயிற்றிகிழமை எங்கயாவது வெளில போலாம்னு கேட்டா சும்மா எப்ப பாரு தீவு, அது இது ன்னு “, குரலில் சலிப்பு, கோபம், எரிச்சல் காட்டினான் குரு.
“இல்ல குரு. நான் எப்போ தான் பேசறது? ”
“என்ன எப்போ தான் பேசறது? குழந்தைங்க பத்தி எனக்கு என்ன தெரியாம? அவங்க எழுந்து வந்ததும் நான் இப்போ கேக்கறேன் பாரு சினிமா போலாமான்னு? ரொம்ப ஜாலியா சரின்னு சொல்வாங்க”.
“சினிமா தவிர, வெளில சுத்தறத தவிர வேற என்ன அவங்கள பத்தி உங்களுக்குத் தெரியும். அவங்களுக்குப் பிடிச்ச பாடம் என்ன தெரியுமா? அவங்க பிரெண்ட்ஸ் பேரு தெரியுமா? அவங்களோட முகம் குடுத்து பேசிவிளையாடி இருக்கீங்களா? அவங்க ரெண்டு பேரோட ரசனை , விருப்பம் பத்தி எதாவது தெரியுமா?”
“ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வொரு விதமான விஷயங்கள் பிடிக்கும் வாணி. எனக்கு அவங்களை வெளில கூட்டிட்டுப் போறது புடிக்கும். அவங்களுக்கும் அது பிடிச்சிருக்கு”
“உங்கள வெளில கூட்டிட்டு போக வேண்டாம்னு சொல்லல குரு. ஆனா parenting பத்தி ஒரு பழ மொழி சொல்வாங்க,” Children crave for connection, but they settle for attention”. உங்க கிட்ட அவங்க ரெண்டு பெரும் ரொம்ப அன்புஎதிர் பாத்து ஏங்கறாங்க. நீங்க அத புரிஞ்சிட்டா சரி”.
அன்பா இருக்காம நான் என்ன உங்கள எல்லாம் கொடுமை படுத்தியா வெச்சிருக்கேன்? சுறு சுறு வென்று கோபம் கொப்பளிக்கக் கேட்டான் குரு.
இடையில் கவி,பிரவீன் எழுந்து வர பேச்சு தடைபட்டுப் போனது. குரு தன்னுடைய சினிமா பிளான் பற்றிச் சொல்ல சின்னப் பிள்ளைகள் மிகச் சந்தோஷமாகக் குதித்தன.
இப்போ பாரு எப்படி என் குழந்தைகளைப் பற்றி எனக்கு நல்லா தெரியாமலா என்று பெருமிதத்துடன் பார்த்தான் குரு. ஒரு பெருமூச்சுடன் அமைதியானாள் வாணி.
***
“நாளைக்கு மதியம் 2 மணிக்கு கிளம்பணு ம். – இது குரு.
“எப்போ திரும்பி வர்றீங்க?”
“நாலு நாளைக்கு அப்புறம். வெளியில பனி கொஞ்சம் கரையுது ஜாக்ரதையா வண்டி ஓட்டு”.
“ஹ்ம்ம் சரி”.
“இந்த ப்ராஜெக்ட் முடியற வரைக்கும் கொஞ்சம் டிராவெல் அதிகம் தான்”.
“சரி”.
“ஒரு மூணு மாசமா அடிக்கடி போயிட்டு போயிட்டு வரது என்னவோ போல இருக்கு”
குருவின் குரல் கொஞ்சம் கம்முவதை உணர்ந்தாள் வாணி.
அவள் பதில் சொல்வதற்கு முன், “நீ இத்தனை நாளா சொன்ன தீவு மாதிரி இருக்கற விஷயம் இப்போ தான் உணர்றேன். நான் ஒரு பக்கம் தனியா போயிட்டு போயிட்டு வரேன், நீங்க எல்லாம் இங்க இருக்கீங்க. பாதி நேரம் skype ல குடும்பம் நடத்தறாப்ல இருக்கு.
“ப்ராஜெக்ட் இன்னும் ஒரு மாசம் தானே குரு. சிக்கிரமா ஓடிடும். என்று சமாதானம் சொன்னாள்.
கவியும் பிரவீ னும் அப்பா கிளம்புவதைப் பார்த்தவுடன், “ஹாய் அப்பா ஊருக்கு
போறீங்களா. வீக் எண்டு வந்துருவீங்க தானே. ஏதாவது சினிமா போகலாம்” என்று ரொம்ப ஜாலியாக வழி அனுப்பவும், ஏற்கனவே மனம் உடைந்து இருந்த குரு அதிர்ந்து, “அப்பா ஊருக்கு போறேன்னு வருத்தமா இல்லையா?”.
பெரியவள் கவி ரொம்ப நிதானமாக , “இல்லப்பா. நீங்க இங்க இருந்தா எப்போ பாரு ஒரு பக்கம் போன் பார்த்துட்டே பேசுவீங்க இல்ல கம்ப்யூட்டர் பார்த்திட்டே பேசுவீங்க . வீட்டை விட்டு வெளியில போனா தான் எங்களைப் பிரிஞ்சு இருக்கிற வருத்தத்துல, ஒழுங்கா முகம் பார்த்துப் பேசறீங்க. முகம் பார்த்து எங்க கூட நல்ல பேசற அப்பா தான் எங்கள நல்லா புரிஞ்சிருக்கார் . அவர தான் எங்களுக்கு ரொம்பப் புடிச்சும் இருக்கு. பக்கத்திலேயே இருக்கும் போது ஒழுங்க பேசாம இருக்கறதுக்கு எங்கயாவது போனா நல்லா புரிஞ்சிப் பேசறீங்க. அது பரவாயில்லை. அதனால நீங்க கிளம்புங்க. Bye.
வாணி மூன்று மாதம் முன் உரைத்த வார்த்தைகள் காதில் ரீங்காரம் இட்டது. “Children crave for connection, but they settle for attention”.
ஒரே கூரையில் தனித் தீவாக இருந்த தவறு தெரியத் தொடங்கியது.
– லக்ஶ்மி
Its a nice feel and gud message lakshmi. Hw the parents should get mingled with their all activities. And ofcourse with wife too…I loved it. All the best fr ur future stories…u will get more awards I’m sure..
Excellent lakshmi . Just explained what is happening at most of our homes. Thought provoking .