\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சுய மரியாதை

Filed in இலக்கியம், கதை by on October 25, 2015 6 Comments

suyamariyaathai_620x620மதியம் மூன்று மணியாகிக் கொண்டிருந்தது. காலையில் இருந்து ஏதோ பர பர வென்று இருந்தது உதயாவிற்கு. பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரம் ஆகி விட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் அவர்களைச் சென்று அழைத்து வர வேண்டும். அவளது கணவன் பரத் அன்று சீக்கிரம் வருவதாகச் சொல்லி இருந்தான்.

வீட்டின் வேலைகாரம்மா அன்பு அன்று நேரம் கழித்து வந்து அப்பொழுதுதான் வீட்டை சுத்தம் செய்து துடைத்துக் கொண்டு  இருந்தாள். தன்னுடைய அலமாரியில் புடவைகளை அடுக்கி வைத்தபடி உதயா மாலை வரவேற்புக்கு என்ன புடவை கட்டுவது என்று யோசித்தபடி நின்றாள் .அலை பேசியில் மெசேஜ் ஒன்று “கௌங்க் , கௌங்க்” என்று அடித்தது. கையில் இருந்த புடவையை அப்படியே வைத்து விட்டு ஃபோனில் யார் என்று பார்த்தாள்.

Whatsapp ஆல் ஆன புண்ணியம் அத்தனை நண்பர்களையும் ஒரு சேர ஒரு குரூப் ஒன்று. அதில் கூட படித்த ஒரு சக மாணவி “can’t wait to meet you all in few hours after so many years”. என்று ஒரு வரியை அடித்திருந்தாள் .

ஒரு நிமிடம் நிதானித்துப் பின் மீண்டும் உதயா புடவைத் தேர்வுக்கு வந்து நின்றாள் . கைகள் துணிகளைக்  கலைத்தபடி இருந்தது. மனம் மட்டும் கல்லூரி நாட்களுக்குப் பறந்து சென்றது.

                          ***

அன்று கல்லூரியின் இறுதி நாள். அனைவரும் அவர்கள் எதிர் காலத் திட்டம் பற்றிய கனவுகளை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு இருந்தார்கள்.

உதயாவின் தோழிகள் கூட்டம் அந்த வேப்ப மரத்தின் கீழே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“உன்னோட மேல் படிப்பு விண்ணப்பம் என்ன ஆச்சு சசி ?” இது உதயா.

“வீட்டில கொஞ்சம் கஷ்டம் இப்போ. முதல்ல கிடைச்ச வேலையில சேர்ந்து அப்புறம் ஒரு வருஷம் கழிச்சு பார்ட் டைம் படிக்கலாம்னு இருக்கேன். நீ என்ன பண்ற ஐடியா உதயா?”.

“ரீஸர்ச்’க்கு விண்ணப்பம் குடுத்திருக்கேன். அது ரெண்டு வருஷம் அப்புறம் Phd. கண்டின்யூ பண்ணணும் நான் இன்னும் ஒரு பத்து வருஷம் இந்தக் கல்லூரிக்குத் தான் வருவேன். சிரித்தபடி பதிலுரைத்தாள் உதயா.

சசி , உதயா இருவரோடு இணைந்து சிரித்த கயல், “நான் அடுத்த மாசம் வெளி நாட்டுக்குப் பறந்துடுவேன் . அங்க தான் படிப்பு வாழ்க்கை எல்லாமே. அதனால என்ன இப்போவே நல்லாப் பாத்துக்கோங்க”

தோழிகள் மூவரும் ஒருவரை ஒருவர் கேலி செய்தபடி அந்த மாலைப்  பொழுதைக் கழித்துப் பிரியா விடை பெற்றனர். கை எழுதிட்டு , ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து, அடிக்கடி பேசுவதாக வாக்களித்து விட்டுப் பிரிந்தனர்.

                    ***

இதோ ஆயிற்று பத்து வருடம்.  பழைய சிந்தனையில் இருந்த உதயா சேலைகளைக் கண்டபடி கலைத்துக் கொண்டிருப்பதை உணர வில்லை. திடீரென்று மேலே அடுக்கிய சேலைகள் கீழே விழத் தொடங்கின. அந்த அறையின் தரையை துடைத்தபடி வந்த அன்பு,

“உதயாம்மா சேலை விழுது.”. என்று எடுத்து வைக்க வர

ஏதோ சிந்தனையில் இருந்த உதயா கண்கள் கலங்கியதைப் பார்த்து விட்டாள் அன்பு.

“என்னம்மா உடம்பு நோவா? தலைவலியா இன்னிக்கு எங்கயோ கல்யாணம், போகப் போறேன்னு சொன்னீங்களே?”

சட்டென்றுத் தன்னைச் சமாளித்துக் கொண்டாள் உதயா.

“ஏதோ தூசி விழுந்தது. வேற ஒண்ணும் இல்ல”

“யாருக்கு கல்யாணம் உதயாம்மா ?”.

“கூடப் படிச்சா சிநேகிதிக்கு. கல்லூரி சிநேகிதிக்கு “

“அப்போ உங்க கூட படிச்சவங்க எல்லாம் வருவாங்களா?”

“ஆமாம் ஆமாம். சரி .நான் மடிச்சு வெச்சுக்கறேன் நீ போய் வேலையை பாரு.” அவளைத் திசை திருப்பி விட்டு, ஒரு பட்டுச் சீலையை எடுத்து வைத்து வரவேற்பிற்குத் தயார் ஆகத் தொடங்கினாள்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் பரத் குழந்தைகளுடன் கிளம்பி அந்தத் திருமண வரவேற்புச் சத்திரம் வந்து சேர்ந்தாள்.

பத்து வருடம் கழித்து அனைவரையும் பார்க்கும் சந்தோஷம் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் ஒரு பயமும் பிடுங்கித் தின்றது உதயாவிற்கு

அனைவரும் வரத் தொடங்கி இருந்தனர். கல்லூரித் தோழிகளில் இவள் தான் கடைசியாகத் திருமணம் செய்வதால், எல்லோரையும் வருமாறு பணித்திருந்தாள். பத்து வருடம் கழித்த ஒரு சந்திப்புப் போலவும் ஏற்பாடு செய்திருந்தாள் அவள்.

அனைவரையும் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒவ்வொருவரும் குடும்பம், வேலை என்று ஏதேதோ செய்து கொண்டு இருந்தனர்.

சசியும் கயலும் வந்து சேர்ந்த பின்னர் உதயாவிற்கு அந்தக் கல்லூரி நாட்களுக்கே போனது போல ஆகி விட்டது. கயல் விடுமுறைக்காக இந்தியா வந்து இருந்தாள். அவள் அயல் நாட்டின் வாழ்க்கையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருந்தாள்.

“அங்கெல்லாம் எத்தனை சுத்தம் தெரியுமா? என்னோட வேலை பெரிய கம்பெனில. I design the clothing line for fall collection..”என்று புரியாத விஷயங்களை அடுக்கிக் கொண்டே போனாள் கயல்.

“உனக்குக் குழந்தைகள் இருக்காங்களா?. உங்க வீட்ல உள்ளவங்க எல்லாம் அங்க தான் இருக்காங்களா?” என்று மெதுவாக உதயா வினவ,

“இல்லை உதயா , My job is very stressful. I don’t have time to take care of kids/elders”. ஒரு லீட் டிஸைனர் நான், இன் அ ஃபேஷன் ஸ்டோர் . இப்போ கிட்ஸ் எல்லாம் பிளான் பண்ணல . அப்புறம் பாக்கலாம். நீ என்ன பண்ற சசி ?”

நான் படிச்சு முடிச்சவுடனே வீட்டு நிலைமை காரணமா வேலைக்குப் போனேன் ஞாபகம் இருக்கா, அப்புறம் கொஞ்சம் நிலைமை சரி ஆச்சு. வேலை பாத்துகிட்டே மேல் படிப்புப் படித்தேன் . இப்போ கல்யாணம் ஆச்சு. ஒரு பெண் . அதோ அந்த மஞ்சள் காக்ரா சோளி போட்டு இருக்கற வாண்டுதான்

ரொம்ப நேரமாக எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த உதயாவை நோக்கி ஒரு அர்த்தத்துடன் வினவினாள் சசி.

“உன் பசங்க யாரு உதயா ?”

“ரெண்டு பேரு சசி. அதோ அங்கே” என்று ஒரு பையனையும் பெண்ணையும் கை காட்டினாள்.

“ஹே உன் பையனுக்கு ஒரு 8 இல்ல 9 வயசு இருக்கும்ல. அப்போ காலேஜ் முடிச்சவுடனே கல்யாணம் பண்ணிகிட்டியா ? என்ன அச்சு உன் Ph.D. கனவு?” என்று கயல் வினவ,

“இல்ல அப்புறம் படிக்க முடியல. காலேஜ்க்கப்புறம் கல்யாணம் ஆயிடுத்து. ரெண்டு பசங்க, அவங்கள பாத்துகிட்டு ..” என்று உதயா மெதுவாக இழுக்க ,

“அப்போ வெறும் குக்கிங், கிளீனிங் அதுதான் பண்றியா?  . See this is what happens to an Indian women dream.  நான் அதனால தான் உடனே வெளி நாடு போயிட்டேன். அங்க எல்லாம் நம்ம வாழ்க்கை நமக்காகத்தான். அடுத்தவங்களுக்காக அப்படிங்கிற செண்டிமெண்ட் கிடையாது.  ஐ லைக் தட் என்று வேகமாக அடுக்கிக் கொண்டே போனாள்.

உதயா பயந்தது போலவே ஆகிப் போனது. கயல் கேலி செய்தது எல்லாம் உண்மைதானே, தான் ஒன்றும் சாதிக்க வில்லை தானே. வெறும் குண்டு சட்டியில் குதிரை ஒட்டிக் கொண்டிருப்பது உண்மைதானே.

மனதில் காலையில் இருந்து அரித்து வந்த பதட்டம் அவளை முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டது.

நடுவில் வேறு ஒருவர் வந்து பேச இவர்கள் பேச்சுத் தடைபட்டுப் போனது.

உதயாவின் மனம் மட்டும் கூனிக் குறுகிக் கொண்டு இருந்தது. வெளியில் முடிந்த வரை சிரித்தபடி இருந்தாள் . வந்திருந்த தோழியர் அனைவரும் ஏதோ வேலை செய்துகொண்டு இருந்தனர். சிலர் பெரிய நிறுவனங்களில் பெரிய பதவியில் இருந்தனர்.

திருமண வரவேற்பு முடிந்த பின்னர் கணவர் பத்ரி அருகில் வந்து,

“என்ன முகமே ஒரு மாதிரியா இருக்கு, வீட்டுக்குப் போகலாமா” என்று கேட்க,

“சாப்டுட்டு போகலாம்” என்று பதிலுரைத்தாள். அந்த கூட்டத்தில் தான் தொலைந்து மிகவும் சிறியவளாய் ஆகிப் போனதாக உணர்ந்த பொழுது பத்ரியின் கரிசனம் மிகவும் இதமாக இருந்தது.

சாப்பிடும் பொழுது, முடிந்தவரை கயலின் அருகில் செல்லாமல் தவிர்த்தாள்.

“ஏன் உதயா ஓடி ஒளியர ” இதமான குரல்களுடன் சசி அவளருகில் வந்து கேட்டாள்.

“அதெல்லாம் இல்ல சசி. பசங்க நாளைக்கு ஸ்கூல் போகணும். அதான் சீக்கிரம் கிளம்பறதுக்காகச் சாப்பிட வந்தேன்.”

“எனக்கு உன் மனசு தெரியும் உதயா”, மெல்ல அவள் கண்கள் பார்த்துப் பேசினாள் சசி. “சொல்லு”

அவள் குரலோ கேள்வியோ ஏதோவொன்று மனதை உருக்கியது உதயாவிற்கு.

“காலேஜ் முடிச்ச அப்புறம் மேற்படிப்பு விண்ணப்பம் குடுத்தப்போ அம்மாவிற்குக் கோபம் வந்திட்டது சசி. நீ Ph.D. படிச்சா அப்புறம் நான் அதுக்கும் மேல படிச்ச மாப்பிள்ளை பாக்கணும் அப்படின்னு ஒரே கத்தல். இப்போ படிச்சதே போதும். அப்போ தான் கல்யாணம் பண்ண வசதியா இருக்கும்னு சொல்லி நிறுத்திட்டாங்க. உடனே ரெண்டு மாசத்தில ஒரு வரன் அமைஞ்சது .

இவர் ரொம்ப நல்ல மாதிரி.

என்ன மேல படிக்க அனுமதிச்சார். ஆனா நான் சேர நினைக்கும் பொழுது இவர் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போய்டுத்து. அவங்கள கவனிக்க வேற ஆள் எல்லாம் வெக்க வேண்டாம் நானே பாத்துக்கறேன்னு, அப்புறம் ரெண்டு பசங்குன்னு என்னோட படிப்பு வேலை கனவு தொலைஞ்சே போச்சு.

எனக்கு இன்னிக்கு இங்க வரவே பயமா இருந்தது. எல்லாரும் பெரிய வேலை பாக்கறீங்க. ரொம்ப  நல்லா இருக்கு. ஆனா நான் ஒண்ணுமே சாதிக்கல சசி. என் வாழக்கை கயல் சொல்ற மாதிரி வீண் தானே.

குரல் கம்மியபடி பேசிய உதயாவின் கரங்களைப் பற்றினாள் சசி

“முதல்ல கயல் சொன்ன விஷயம் எல்லாம் மறந்திடு உதயா.  அவளோட வாழ்க்கை முழுக்க உனக்குத் தெரியாது. நான் அவளைக் குறை சொல்றதுக்காக இதைச் சொல்லல, ஆனா வேலை, கரியர் (Career) அப்படின்னு அவ நிறையத் தொலைச்சுட்டா. ஆனா அவ புத்திசாலித்தனமாத் தான் சாதிச்சத மட்டும் பேசறா. இப்போ அவ விடுமுறைக்கு மட்டும் வரல. ரெண்டு மாசம் முன்னாடி அவங்க அம்மாவிற்கு ரொம்ப உடம்பு முடியாம போய்டிச்சு . ஆனா இவளுக்கு வேலைப் பளு இருந்ததால வர முடியல. அவங்களை ஒரு ஹோம்ல சேர்த்து விடச் சொல்லி என்னக் கேட்டுக்கிட்டா. ரெண்டு மாசம் கழிச்சு இப்போ அவங்களைப் பாக்க வந்திருக்கா அவங்களை கூட்டிட்டுப் போனா அந்த ஊரில இன்சூரன்ஸ் பிரச்சனை அதனால இங்கயே இருக்கட்டும். இப்போ நான் கரியர் ஃபோகஸ் பண்ணனும்னு சொல்லி அவங்க கிட்ட கொஞ்சம் பணம் குடுத்திட்டுக் கிளம்பறா. வேலைக் கனவு இப்படி விடாம இருக்கறது தப்பில்ல ஆனா கருணையும் தேவை. நம்ம சுற்றம் பாத்துக்கற கடமையும் தேவை. ஏதோ அவ சாதிச்சா மாதிரியும் நீ ஒண்ணும் செய்யாத மாதிரியும் நினைக்காதே உதயா.

அவங்க வாழ்க்கைக்குத் தேவையான முடிவை ஒவ்வொருத்தரும் எடுக்கும் பொழுது ஏதோ ஒன்றைக் கட்டாயம் இழக்கறாங்க. சில பேர் வேலையை, சில பேர் சொந்தங்களை ஆனா அந்த முடிவு தவறுன்னு சொல்ற உரிமை யாருக்கும் கிடையாது.

அதனால உன் முடிவு பற்றி நீ மொதல்ல தெளிவா இரு. உன்ன நீயே இழிவா நினைக்காதே”.

“இல்ல கயல் சொன்னது உண்மை தானே சசி நான் கிணற்றுத் தவளை தானே”.

“அவ உன்னைச் சொன்னது இல்ல, உன் மனசில உன்னைப் பத்தி நீ அப்படி நினைச்சிருக்க.

எலனார் ரோஸவெல்டோட (Eleanor Roosevelt) ஒரு பிரபலமான வாக்கியம் ஒண்ணு உண்டுNo one can make you feel inferior without your consent”

உன்னை நீயே தாழ்வா நினைக்காதே. உன்னோட வாழ்க்கைக்கு வேணும்கறத நீ முடிவு செஞ்சு இருக்க. உன்னைப்பத்தி நீ முதல்ல மரியாதையா நினை. சுய மரியாதைங்கறது நம்ம மத்தவங்ககிட்ட எதிர்பாக்கறது மட்டும் இல்ல நாம  நமக்கு “சுயமா” குடுக்கறது .

ஏனோ காலையில் இருந்து குழம்பிய மனம் தெளிந்தது போல உணர்ந்தாள் உதயா

  • லக்‌ஷ்மி சுப்பு

Comments (6)

Trackback URL | Comments RSS Feed

  1. Amutha says:

    Well written story, sure story helps an effect in us, make us pause and think.

  2. Sridevi says:

    Very touching story. Very beautifully conveyed. Do start short films.

  3. Sridevi says:

    Udaya drawing is also very good. Could see the feelings in the drawing

    • யோகி says:

      வணக்கம் சிறீதேவி, உங்கள் அருமையான கருத்துக்களுக்கு எமது மனதார்ந்த நன்றிகள். கதையெழுத்தாளர் இலட்சுமியின் கதை சொல்லும் விதம் எம்மையே பிரமிக்க வைக்கும் அருமையான விடயம். உதயாவின் படமானது நாம் கடைசித்தருணத்தில் படைக்கவேண்டியிருந்தது எனினும் கதைக்கேற்ப அவள் உணர்ச்சியைப் படமாகவும் தர முனைந்தோம். உங்கள் உறுதிப்படுத்தல் எமக்குக் கிடைக்கும் சன்மானம். தொடர்ந்தும் வாருங்கள் வந்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.

  4. சச்சிதானந்தன் வெ says:

    Great Writing Lakshmi..Best Wishes.

  5. P.Subramanian says:

    “உன்னை நீயே தாழ்வா நினைக்காதே. உன்னோட வாழ்க்கைக்கு வேணும்கறத நீ முடிவு செஞ்சு இருக்க. உன்னைப்பத்தி நீ முதல்ல மரியாதையா நினை. சுய மரியாதைங்கறது நம்ம மத்தவங்ககிட்ட எதிர்பாக்கறது மட்டும் இல்ல நாம நமக்கு “சுயமா” குடுக்கறது .” என்ற வார்த்தைகள் அருமை யதார்த்தமான எளிய நடை எழுத்தாளருக்கு பாராட்டுக்கள். இணையதள ஆசிரியருக்கு நன்றி.

    பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad