தீபாவளித் திருநாள்
ஹிந்துக்கள் கொண்டாடும் பல பண்டிகைகளில் மிகப் பிரசத்தி பெற்றது தீபாவளிப் பண்டிகையாகும். கொண்டாடப்படும் எல்லாப் பண்டிகைகளுக்கும் ஒர் அர்த்தம் உண்டு. அதைப் புரிந்து கொண்டாடுவதே நலம். ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகள் வாழையடி வாழையாகத் தலைமுறை தலைமுறையாகக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. இன்றைய காலக்கட்டதில் தாய், தந்தை இருவரும் வேலைக்குச் சென்று வருவதால், கற்றுக் கொடுக்க நேரம் கிடைப்பதில்லை. இந்தப் பண்டிகையின் சிறப்பை ஒரு கட்டுரையில் கூற முடியாவிட்டாலும், அதன் விளக்கத்தை மேலெழுந்த அளவில் தொடங்கி வைப்போம்.
ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், நல்ல சக்தி தீய சக்தியை அழித்த நாள் தான் தீபாவளி. அனால், எது நல்லது, எது தீயது? இதை நிர்ணயிப்பவர் யார்? இப்படிப் பல கேள்விகள் எழலாம். ஹிந்துக்கள் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள். இதன்படி எந்த தர்மம் நம் வாழ்க்கைப் பாதையைச் சீராகக் கொண்டு செல்லுமோ, அதைப் பல யுகங்களாகக் கடைபிடித்துச் செல்லவேண்டும். உழைக்க இயலாதவருக்குப் பணம் கொடுத்து உதவலாம். உழைக்க மனம் இல்லாதவருக்குப் பணம் கொடுத்து உதவலாம். இரண்டுமே கொடைத்தன்மையைக் காட்டுகிறது. அனால், உழைக்க மனம் இல்லாதவருக்குப் பணம் கொடுப்பது தருமமா? இல்லை.
இதை வேதங்களும், இதிகாசங்களும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிக் கொடுத்தன. அகிலத்தில் உள்ள எல்லா ஜீவராசிகள் மற்றும் ஜடங்களுக்கு ஒரு தர்மம் உண்டு. அதை மீறி நடந்தால், அதற்கேற்ற பலன்களை அனுபவிப்பார்கள். நெருப்பின் தருமம் எரிப்பது. கனியின் தருமம் சுவையாக இருப்பது. நெருப்பு எறியாவிட்டால் என்ன நிலைமை என்று எண்ணிப் பாருங்கள். உணவு சமைக்க முடியுமா? நாம் ஓட்டும் வண்டி தான் நகருமா? அதே மாதிரி மனிதர்களுக்கும் தருமம் உண்டு. இந்தக் காலத்திலும், அந்தக் காலத்திலும் பல ராக்ஷசர்கள் அதை மீறி இருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் அகிலங்களை ஆளும் நாயகன் ஸ்ரீ நாராயண பகவான் உருவெடுத்து மனித இனத்தைக் காத்துள்ளார்.
நாராயணனின் வராஹ அவதாரத்தில் பூமாதேவியைக் காப்பாற்றினார். பூமாதேவி தன்னைக் காப்பாற்றிய வராஹரின் மேல் ஆசை கொண்டு அசுரன் நரகாசுரனை ஈன்றார். நரகாசுரன் அசுர குணத்தால் பெண்களைத் துன்புறுத்த ஆரம்பித்தான். தேவரின் தாய் அதித்தி உட்படப் பலரைத் துன்புறுத்தலானான். அதித்தியின் தோழியர்கள் ஆயிரக்கணக்கான பேரைச் சிறை பிடித்தான். தேவர்கள் மானுடர்கள் எல்லோரும் இந்த இன்னலிலிருந்து தங்களைக் காப்பாற்ற நாராயணனை வேண்டி நின்றனர்.
இந்த அகிலமே இறைவனின் பிம்பம். நமக்கு வலது கையில் ஒரு முள் குத்தினால் இடது கை தயக்கம் இன்றி வந்து காப்பது போல இறைவனின் பிரதிபலிப்பான இந்தப் புவியில் யாருக்குத் துன்பம் நேர்ந்தாலும் நம்மைக் காக்க இறைவன் வருவார். நாம் முன்பு கூறியது போல, நரகாசுரன் நாராயண அவதாரமான வராஹத்திற்குப் பிறந்தவர். இருப்பினும் மனதில் இருள் சூழ்ந்ததால் தவறான பாதையைப் பின்பற்றினார். தன் மகனே ஆனாலும் தர்மத்தை நிலைநாட்டக் கிருஷ்ண பரமாத்மா, சத்திய பாமாவுடன் போருக்குச் சென்று நரகாசுரனை வதம் செய்தார். இந்த உலகில் இருள் நீங்கி ஒளி பிறந்தது.
இந்த நாளைத்தான் நாம் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடுகின்றோம். தீபத்தின் ஒளி எப்படி இருளை நீக்குகிறதோ அதே போல, கிருஷ்ண பரமாத்மா இந்த உலகைக் கொடுமைப் படுத்திய இருளை நீக்கினார். இன்றைய காலத்தில் நாம் தீபாவளி கொண்டாடும் பொழுது நம் தர்மத்தை நினைத்து அதைக் காக்க, நம் மனதில் தோன்றும் இருளை அகற்ற உறுதி கொள்வோமாக. பனிப்பூக்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
- பிரபு ராவ்.
Superb explanation.