பகுத்தறிவு – 1
இன்றைய நிலையில், தமிழ் பேசும் பலரும் பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு என்ற முடிவுக்கே வந்து விட்டனர். கோயிலில் இருக்கும் சிலை கல்லென்றும், அதனைப் பூஜிப்பது மூட நம்பிக்கையென்றும் பறை சாற்றும் ஒரு கூட்டம் தெருமுனைப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று அங்குள்ள கற்சிலைகளைச் செருப்பாலடிப்பது எப்படி புத்திசாலித்தனமென்று நம் சிற்றறிவிற்கு எட்டவில்லை. கல்லைக் கடவுளாய் நினைத்துப் பூஜிப்பது முட்டாள் தனமென்றால், கல்லை எதிரியாய் நினைத்துச் செருப்பாலடிப்பதும் முட்டாள் தனந்தானே? அண்ணாசாலையில் இருக்கும் தலைவர்களின் சிலை மட்டும் எவ்வாறு கல்லில்லாமல் போகும்? அதற்கு மாலையணிவிப்பது பெரிய முற்போக்கான சிந்தனையானது எப்படி?
இன்னும் பல கேள்விகள் நம் மனதில் தொக்கி நிற்கின்றன. அந்தக் கேள்விகளைப் பின்னுக்குத்தள்ளி, உண்மையான பகுத்தறிவு என்பது என்ன என்று அறியும் முயற்சியில் செய்யப்படும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக இதை நகர்த்திச் செல்வதே நம் நோக்கமாகும். இதில் யாரையும் தனிப்பட்ட முறையில் சாடும் நோக்கம் நமக்கில்லை. இது மிகவும் உணர்வுபூர்வமான விவாதம் என்பதையும் உணர்ந்தே இருக்கிறோம். அதே உணர்வுடன், பத்திரிகைத் துறைக்கே தேவையான முதிர்ச்சி மற்றும் பக்குவத்துடன் அணுகுவதே நமது நோக்கம் என்பதை முன்னுரையாகக் கூறிக் கொள்கிறோம்.
முதலில் பகுத்தறிவு என்ற வார்த்தையின் விளக்கத்தைப் பார்க்கலாம். இதன் முழுமையான விளக்கத்தைப் பார்ப்பதற்கு ஒரு சில தொடர்புடைய விடயங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது.
பொதுவாக, மனிதர்கள் அவரவர்களின் நம்பிக்கை அவ நம்பிக்கைகளைப் பொறுத்து மூன்று பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
முதல் பிரிவு, கேள்விப்படும் அனைத்தையும் இருக்கிறது என்று ஆணித்தரமாக நம்புவது. கடவுள் இருக்கிறார் என்றால் ஆம் என்று கண்மூடித்தனமாக ஒப்புக் கொள்வது, நம்புவது. பேய்கள் உலவுகின்றன என்றாலும் ஆம் என நம்புவது, ஒப்புக் கொள்வது. சமஸ்கிருத மொழியில், “ஆஸ்தி” என்றால் சொத்து, உடைமை, “இருக்கிறது” என்ற பொருள். ”இகம்” என்பது இஸம் (ism) என்ற ஆங்கிலப் பொருள் தரும் விகுதி. இரண்டையும் சேர்த்து ஆஸ்தி + இகம் = ஆஸ்திகம் என்ற கூட்டு வார்த்தை பிறந்தது. அது தமிழ்ப்படுத்தப்பட்டு ஆத்திகம் என்றானது. எதைச் சொன்னாலும் இருக்கிறது என்று நம்புவது ஆத்திகம் என்றானது.
இரண்டாவது பிரிவு: கேள்விப்படும் அனைத்தையும் நம்பாத தன்மை, எதைச் சொன்னாலும் இல்லையென்று கூறுவது. கடவுள் இருக்கிறார் என்றால், இல்லை என்றும், உலகத்தைப் படைத்த சக்தி ஒன்று இருக்க வேண்டுமென்றால், இல்லை இல்லை, அதுதானாக முளைத்தது என்றும் கூறுவது இரண்டாம் பிரிவு. சமஸ்கிருதத்தில் நாஸ்தி என்றால் இல்லை என்றும் அழிந்து படுவது என்றும் பொருள் படும். நாஸ்தி + இகம் = நாஸ்திகம் என்னும் வார்த்தை தமிழ்ப்படுத்தப்பட்டு நாத்திகம் என்றானது. கடவுள், அமானுஷ்யம் எனக் கண்களுக்குப் புலப்படாத எல்லா விடயங்களையும் கண்மூடித்தனமாக இல்லையென்று மறுக்கும் பிரிவு நாத்திகம் ஆகிப் போனது.
மூன்றாவது பிரிவு: இந்த இரு நிலைகளுக்கும் மத்தியில் நின்று நடுநிலைமையுடன் இருக்கிறதா, இல்லையா என ஆராய்ச்சி செய்யும் நிலை. தமிழில் பெரும்பாலான வார்த்தைகள் கூட்டு வார்த்தைகள். காரணப் பெயர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கேள்விப் படும் விடயங்களைப் பகுத்து அறிவது பகுத்தறிவு ஆகும். பகுத்து அறிந்து, மூளைக்குச் சரியெனப் பட்டதை மட்டுமே ஏற்றுக் கொள்வது பகுத்தறிவு ஆகும்.
இன்றைக்குப் பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு அரசியலும், வாழ்க்கையும் நடத்திக் கொண்டிருக்கும் பல தலைவர்களும் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் எந்தவிதமான ஆராய்ச்சி செய்து கடவுள் இல்லை, சடங்குகள் எல்லாம் மடத்தனம், மதம் – அதிலும் குறிப்பாக ஹிந்து மதம் – சொல்வது எல்லாமே மூட நம்பிக்கைகள் என்ற முடிவுக்கு வந்தனர் என்பது நாமறியாதது. அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்களென்றால் படித்துப் பார்க்க நமக்கு ஆர்வமே.
ஆனால் இன்று மூட நம்பிக்கை என்று எந்தவித ஆராய்ச்சியுமில்லாமல், கண்மூடித்தனமாக முத்திரை குத்தப்பட்ட பல சடங்குகளின் தாத்பர்யங்களையும், அவற்றிலுள்ள விஞ்ஞான நோக்கு மற்றும் தொலை நோக்குகளைக் குறித்த வியப்பான செய்திகளையும் ஒரு தொகுப்பாகத் தருவதும் நம் கடமை என்ற உணர்வினாலே தொடங்கப்படும் முயற்சி இது.
அதுமட்டுமல்லாமல், புராண காலங்களிலும், சரித்திர காலங்களிலும் அறிவியல் பூர்வமான பகுத்தறிவு பேசிய பெரியவர்கள் எண்ணற்றவர் இருந்தனர். தமிழ் பேசியவர்கள் என்று எடுத்துக் கொண்டாலே ஏராளம் பேர் இருந்தனர். இந்தப் பேச்சு ஏதோ பத்தொன்பதாம் நூற்றாண்டில், தமிழகத்தில் புரட்சிகரமாக வெடித்ததென நினைப்பவர்களுக்காகச் சொல்லப்பட்ட கருத்து இது. அந்தப் புராண காலப் பெரியவர்கள் எப்படியெல்லாம் நாத்திக தொனி ஒலிக்க, பகுத்தறிவு பேசினர் என்பதையும் அவர்களின் பகுத்தறிவு பேசியதன் உயரிய நோக்கம் என்ன என்பதையும் குறித்தும் இந்தத் தொடரில் எழுதுவதாக உள்ளோம்.
எனக்குத் தெரிந்த வட்டாரங்களில் இருக்கும் நானறிந்த நாத்திகவாதிகளில் ஒருவரும் இராமயணம் படித்து அதனைப் பழிப்பவரன்று. மகாபாரத்தைத் தொலைக்காட்சியில் கூட கண்டவர்கள் இல்லை. தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், திருப்பாவை, திருவம்பாவை ஆகிய தெவிட்டாத தெள்ளமுதான தமிழில் எழுதப்பட்ட எதனையும் படித்தவர்களன்று – பல நாத்திகம் பேசுபவர்கள் தமிழார்வம் கொண்டவர்கள், ஆனால் இவற்றைப் படித்திருக்க மாட்டார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பழைய காவியங்களோ, காப்பியங்களையோ கூட விட்டுவிடலாம், போன நூற்றாண்டில் வாழ்ந்த பாரதியைப் பற்றிப் பொதுவாக மேற்கோள் காட்டும் இவர்கள், அவரின் ஞானப்பாடல்களில் ஒன்றையேனும் படித்திருப்பர்களா, படித்திருந்தாலும் அதன் ஆழமான உட்பொருள் அறிந்து கொள்ள முயற்சித்திருப்பர்களா என்றால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. ஆனால் பொத்தாம் பொதுவாய் இவையெல்லாம் மூட நம்பிக்கைகளைப் பரப்பின என்று சொல்லத் தயங்காதவர்கள். இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இந்தக் காப்பியங்கள் மனித சமுதாயத்திற்குச் செய்த சீரழிவுகளை நாங்கள் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் சரிசெய்து, சீர்தூக்கி நிறுத்தி விட்டோம் என்பது போல் பேசுவார்கள்.
இதுபோன்ற பிரச்சாரங்களால் கிட்டத்தட்ட முழுவதுமாக மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு தலைமுறையே உருவாகி விட்டதோ என்ற எண்ணம் கூடச் சில முறை நமக்கு வந்து போவதுண்டு. ஆனால், திருடன் வால்மீகியை மாமுனிவராக்கிய, பொன்னாசை பிடித்தலைந்த பட்டிணத்தாரை முற்றும் துறந்தவராக மாற்றிய, பெண்ணாசை பிடித்தலைந்த அருணகிரிநாதரை உலகே வியக்கும் வண்ணம் பக்திப் பிரவாகமாக மாற்றிய, அந்த ஒப்பிலாக் காவியங்களும், காப்பியங்களும், தத்துவங்களும், வழி நடத்தல்களும் இந்த உண்மை சற்றும் கலக்காத ஐம்பது அறுபது ஆண்டுகாலப் பிரச்சாரங்களினால் காணாமற் போய்விடாது என்ற நம்பிக்கை நம்மை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.
பிடிவாதமாய், மாற்றுக் கருத்துக்கள் கூறும் பாடங்கள், புத்தகங்கள், காப்பியங்கள் ஆகியவற்றிற்கு அருகில் கூடச் செல்லாமல், அவை என்ன கூறுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல், ஆனால் எல்லாம் தெரிந்ததைப் போல எல்லாவற்றையும் சாடுபவர்களை ஒதுக்கிவிடலாம். ஒரு வேளை என் முன்னோர் இயற்றிய உயரிய படைப்புக்களில் மூட நம்பிக்கையின் தாக்கம்தான் அதிகம் உள்ளதோ, இல்லை அவர்கள் கூறிய கருத்துக்களில், நடத்திய பாடங்களில் ஏதேனும் உண்மையும் இருக்கக் கூடுமோ, என்று பகுத்து அறிந்து ஆராய்ந்து கடைசியில் உண்மையை ஏற்று நடக்க முயற்சிக்கும் உண்மையான பகுத்தறிவாளனுக்காக இந்தத் தொடரை எழுதலாம் என்று முடிவு செய்தோம்.
கொள்வார் பலர் வருவர் என்ற நம்பிக்கையில் இந்தக் கடையை விரிக்கிறோம். நாம் நம்பும் செயல் விளைவுத் தத்துவம் நம்மை வழி நடத்திச் செல்லும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பயணத்தைத் தொடங்குகிறோம்.
(தொடரும்)
- வெ. மதுசூதனன்.
பகுத்தறிவு என்பது வெறும் கடவுள்மறுப்பு கொள்கை மட்டும்மல்ல என்ற தங்கள சரியான புரிதலுக்கு வாழ்த்துக்கள். மதத்தின் பெயராலும், பகுத்தறிவின் பெயராலும் இரண்டு பக்கமும் அரசியல் நடத்தி பிழைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், இவற்றை ஓரம்வைத்துவிட்டு கொஞ்சம் பார்ப்போம்.
தேவை இருக்கும் இடத்தில்தான் புதிய சிந்தனைகள் தோன்றும், பகுத்தறிவு சிந்தனைகள் தோன்ற\வலுவடைய தேவை ஏன் ஏற்ப்பட்டட்து? மதத்தின் பெயராலும், மனுவின் பெயராலும் மனிதர்களை பிரித்து எதற்காக ? இவன் கருவறையில் நிற்க வேண்டும், இவன் கோவில் உள்ளே சென்று கடவுளை வணங்கலாம்,இவன் கோவில் வெளியே நின்று வணங்கலாம் , இவன் நிழலே கோவில் பக்கம் விழ கூடாது என்று ஏற்ற தாழ்வுகளை உருவாகியது எதற்காக ? இவனை தொட்டால் தீட்டு,பார்த்தல் தீட்டு என்றும் அதை போக்க தண்ணீர் தெளித்து மந்திரம் சொல்ல்வது எதற்காக ? பெண்கள் மேல்சேலை அணிய தடைவிதித்து எதற்காக ? கணவன் இறந்தவுடன் பெண்ணிற்கு மொட்டை அடித்து வீட்டின் வெளியே உட்காரவைத்து எதற்காக ?
இதுபோன்று எதற்காக ,எதற்காக ,எதற்காக என்று பல எதற்காக உள்ளது, எந்த ஒரு ஒடுக்குமுறையும் இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்து இருந்தால், பிள்ளையாரும் உடைந்து இருக்கமாட்டார், அண்ணாசாலையும் வந்து இருக்காது, அங்கு சிலையும் இருந்து இருக்காது ……
கருத்துக்களுக்கு நன்றி விஜய். உங்கள் கேள்விகளிலேயே பதிலும் உள்ளது, நீங்களும் அதையேதான் விளக்குகிறீர்கள் என்று நினைக்கிறேன். “மதத்தின் பெயராலே”, “மனுவின் பெயராலே” என்ற உங்களின் வாக்கியப் பிரயோகம் மிகவும் சரி. மதத்தைச் சொல்லி, மனுவைச் சொல்லிப் பிழைப்பு நடத்தியவர்களின் செய்கைகள் கண்டிக்கத் தக்கவை என்பதை நானும் ஆமோதிக்கிறேன். அதனால் மதமே மூடநம்பிக்கைகளின் மொத்த இருப்பிடம் என்று கூறும் அறியாமை குறித்து எழுதுவதே நோக்கம்.
தொடர்ந்து விவாதிக்கலாம். திறந்த மனதுடன் நல்லதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளில் செய்யப்படும் அனைத்து விவாதங்களும் நன்மைக்கே.
நிச்சயமாக விவாதிப்போம், நான் அறிந்தவரை அணைத்துமதங்களும் அன்பு மற்றும் மனிதநேயம் இவற்றை தான் போதிக்கின்றது, காலப்போக்கில் அதன் சாராம்சம் குறைந்து ,இன்று பெரும்பாலும் சுயநலமே மேலோங்கிநிர்கிறது, இதையும் தோல்உரித்து காட்டுவீர் என்று நம்புகிறேன். மதம்\சாதி எதிர்ப்பு என்பது அவர்களின் மதத்தில்\சாதியில் உள்ள தவறுகளை எதிர்ப்பதில் இருந்து தொடங்கவேண்டும் என்பது எனது கருத்து …..
சமூக நீதியை வலியுறுத்துவதிலும், சாதிக் கொடுமைகளையும் எதிர்ப்பதிலும் இருவேறு கருத்துக்கள் கிடையாது. ஆனால் அந்த சமூக நீதிப் போராட்டங்கள் ஏதோ பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் தொடங்கியது போலப் பேசுவது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. சீர்திருத்தக் கருத்துக்கள் எப்போது தொடங்கின, எப்படிப் பரவின என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆயிரக்கணக்கான உண்மையான ஆன்மீகவாதிகளிடமிருந்தும், ஆன்மீக நூல்களிடமிருந்தும் தொடங்க வேண்டும். புத்தரைப் போல, மகாவீரரைப் போல, ஆதி சங்கரரைப் போல, ரமண மகரிஷியைப் போல சீர்திருத்தவாதிகளையும் பகுத்தறிவு வாதிகளையும் பற்றிப் பெருமளவு நினைக்காத ஒரு தலைமுறை உருவாகிவிட்டதோ என்ற சந்தேகத்தின் வெளிப்பாடே இந்தத் தொடர். அனைத்தையும் குறித்து எழுதுவதே நோக்கம். மற்ற மதங்களிலிருந்தும் தெரிந்த விவரங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் தயக்கமில்லை. ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாறி, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளும் முயற்சியே இது. தொடர்ந்து எழுதுவேன். நன்றி.
நிச்சயமாக , அந்த வரிசையில் பட்டினத்தாரையும் சேர்த்துக்கொள்ளுங்கள், ஆனால் இந்த கருத்துக்கள் பெரும்பாலும் புத்தகத்திலும், மடங்களிலுமே, கோவில்களில் மட்டுமே பேசப்பட்டதாக\பரப்பப்பட்டதாக நம்புகிறேன், படிக்கவோ , கோவில் உள்ளே செல்லவோ வாய்ப்பில்லாத மக்களிடத்தில் எப்படி இந்த கருத்துகள் சேர்ந்து இருக்க முடியும் ? பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் பகுத்தறிவு கருத்துகள் அணைத்து இடங்களிலும் பரவலாக பேசப்பட்டதோடு இல்லாமல் அதன் பயனையும் அந்த நூற்றாண்டிலேயே பார்க்க முடிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவின் பொற்காலம் என்று கூட சொல்லலாம் ….
சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் மடங்களிலும் கோயில்களிலும் மட்டும் பேசப்பட்டதாகவும், புத்தகங்களில் மட்டுமே வந்ததாகவும் கருதுவது மிகவும் தவறான கருத்து. நூற்றுக்கணக்கான சமூக சீர்திருத்தவாதிகளும், ஆன்மீகப் பெரியவர்களும் கால்நடையாகவே நடந்து நாடுமுழுவதும் சுற்றி வந்து சாதாரண மக்களுக்காகப் பல சேவைகளையும், தொண்டுகளையும், பிரச்சாரங்களையும் செய்துள்ளனர். இவற்றைத் தெரிந்து கொள்ள ஏராளமான ஆதாரங்களும், எழுத்துக்களும் இன்றும் கிடைக்கின்றன. முயற்சி செய்தால், சரியான உண்மைகளை அறிந்து கொள்ளலாம். பட்டிணத்தாரும் அப்படியே, அருணகிரிநாதர், காளமேகப் புலவர் என உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவ்வளவு ஏன், நாம் அனைவரும் அடிக்கடி மேற்கோள் காட்டும் திருவள்ளுவரும் இதுபோல ஏராளமான பிரசங்கங்களை வீடு வீடாகச் சென்று செய்துள்ளார். இது மிகவும் ஆழமான துறை, கருத்துச் செல்வங்கள் கொட்டிக் கிடக்கின்றன. முடிந்த அளவுக்கு எழுதலாமென்ற நோக்கம்… அடுத்த இதழில் சந்திக்கிறேன்.