எசப்பாட்டு – வெள்ளம்
தாகத்தோட அலைஞ்சோம் நாங்க
தரையத் துளைச்சாலும்
தாளாது இறைச்சாலும் வர்ல
தருக்கன் சொல்கேட்டு
தார்ப்பர்யம் மறந்து விட்டு
தங்கத்தால் செஞ்சுவச்ச
தாலியைக் கழுதைக்குக் கட்டினோம்
தரும மழைராசா
தாரை தாரையாய் மழைபொழிய
தரையெல்லாம் மறைஞ்சுபோயி
தாழ்வெல்லாம் வெள்ளமாச்சு
தவறாகக் கழுதைக்குத்
தாலியைக் கட்டி வச்சோமோ?
தனியாத்தான் போயி அந்தத்
தாலிய அவுத்து வந்தா
தண்ணீர் சூழ்ந்து நிக்கும்
தார் ரோடும் சரியாகுமோ?
தப்பான நம்பிக்கை விட்டு
தானாகத் தீர்வு காண்போம்.
- வெ. மதுசூதனன் –
கிணறுகுளம் நிரம்ப
காசுபோட்டு பவுனு வாங்கி
கழுதைக்கு தாலிகட்டி
காத்திருந்த கனவான் நீங்க
கார்மேகம் மழையாகி
காட்டாற்று வெள்ளம் வந்தா
கிணறுகுளம் காணோம்
கால்வாய் அணையும் காணோம்
கான்க்ரீட் கட்டிடங்க
கிடக்குது என்வழி நெடுக
குப்பைகூலம் நெகிழி
குவிஞ்சி என்வழி அடைக்க
குழியெலாம் குளமாச்சி
குட்டை யெல்லாம் நீராச்சி
காப்பாய் இயற்கையை
கண்ணீர் அவள் துடைப்பாள்
கழுதைக்கு கட்டுன தாலியை
கழட்டித் தூர வீசிபுட்டா
கடுமழை சடுதியில் ஓயுமோன்னு
கேள்வி ஒன்ன கேட்டுப்புட்ட.
அடுத்த வரியைப் படிக்காம
அலஞ்சுத் திரிஞ்சு கழுதையை
அமங்கலமாக்கித் தீரவே கறுவி
அலையுதொரு அற்ப கூட்டம்!
கன்னிப் பொண்ணு அம்மணமா
கிராமத்தைச் சுத்தி வந்தா
கொட்டுமழை நிக்குமென்ற கற்கால
கற்பனைக்கு கழுதையே பரவால்ல.
எதிர்நீச்சலே வாழ்க்கையென சபிக்கப்பட்ட
எங்கூரு மக்களுக்கும் மாக்களுக்கும்
எட்டடி வெள்ளத்தில் நீந்துவது
எள்ளுருண்டை திங்கறது போல.
ஏரோட்டும் உழவன் தான்இனி
ஏழெட்டு வருசத்துக்கும் கையூணி
எந்திரிக்க ஏலாது.. ஆனாலுமென்ன
எலிமருந்து இருக்கவேயிருக்கு.. சமாளிச்சிருவான்..
ரவிக்குமார்
வடியாத வெள்ளம்
வருத்தியிப் போகம் பொய்த்தாலும்
வரப்புவெட்டி சேடகூட்ட
வரிந்துகட்டி புறப்படுவான் உழுபவனும்
எலிவிடம் எனக்கில்லை
அடுக்கியே வீடுகட்ட முப்பாட்டன்
எம்பாட்டன் வெட்டிவச்ச
ஏரிகுளம் துத்தாச்சி என்செய்வேன்
பட்டதுபெருசா என்னமோ
பட்டினன்னு தான்பேச்சு எங்கும்
பாத்துநேத்து போட்டாங்க
பல்லிளிக்குது சாலை எல்லாம்
பல்லளவு தண்ணியில
பணியும்பயிற்சி மந்திரிங்க எடுக்காங்க
புரியாமல் ஓடுதயே
புரட்சிக்கு நேரமிது விழித்திடுக!