பதிப்புரை
மினசோட்டா அன்பர்கட்கு வணக்கம்,
உச்சத்தில் உறைபனிக்குளிர் எம்மை ஊடுருவும் தருணத்திலும் வருகிறது வசந்தகால ஆரம்பங்கள். இதை வரவேற்கின்றன நம்மாநிலத்தில் மலரும் பனிப்பூக்கள். வெண் பனியின் விரிதொடரில் வியப்பான வண்ணங்களில் வளமாக விளைகின்றன குரோக்கஸ் பூக்கள். இதே போன்று தரமான தகவல்களுடன் தங்கள் கைகளில் துளிர்கிறது தமிழ் இதழ் பனிப்பூக்கள்.
பனிப்பூக்கள் என்ற பெயர் எமது சஞ்சிகைக் குழுவால் மினசோட்டா வாழ் தமிழ் அன்பர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்டது. இக் கைமுறையும் பனிப்பூக்கள் சஞ்சிகையின் வெளியீட்டின் ஒரு பிரதான குறிக்கோளாகும். எமது படைப்பாளிகள் வாசகர் விருப்பத்தையும் உள்ளெடுத்து அதன் பொருட்டுத் தமிழாக்கங்களைத் தருவதே நம்முயற்சி.
மினசோட்டா வாசக நேயர்களும், படைப்பாளிகளில் பலரும் கடல்கடந்து வருகை தந்து வளமான மினசோட்டா மாநிலத்தில் வாழ்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமான கலாச்சாரப் பாலமாகவே உள்ளனர். எனவே பனிப்பூக்கள் சஞ்சிகையும் இச் சிறப்பினைக் கொண்டாடும் இதழாகவே அமையும்.
எங்களது படைப்பின் வெற்றி பண்பான தமிழ் வாசகர்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது. மீன்பாயும் மினசோட்டாவில் தேனூறும் தேந்தமிழில், பாடுவோம்,பரிந்துரைப்போம், பரவசமாவோம். நாடுவோம் நற்செய்திகளை நம்மவர் மத்தியில். வாழ்க தமிழ், வளர்க வையகம்.
நன்றி,
இதழின் வடிவமைப்பு நேர்த்தியாக உள்ளமைக்கு பாராட்டுக்கள். பெரும்பாலான சிற்றிதழ்கள் இது போன்று தேர்ந்த வடிவமைப்புடன் இருக்காது. சரியாக சோதனை செய்யப்படாமல் குறைபாட்டுடன் இருக்கும். அனைத்து உரலிகளும் நேர்த்தியாக சென்றடைகின்றன. சந்தோசமாக இருக்கிறது.
சஞ்சிகை என்பது ஒரு குறிப்பிட்ட காலப் பருவத்தில் வெளியாகும் இதழ். இது மாத இதழா அல்லது பனிக்காலத்தில் மட்டும் வரும் இதழா?
படைப்பாசிரியரின் பெயரை தேர்வு செய்து படிக்கும் வசதி இருந்தால் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் பெயரை தெரிவு செய்து அவரின் அனைத்து பதிவுகளையும் படிக்க வசதியாக இருக்கும்.
“பனிப்பூக்கள் மலர்ந்து திக்கெட்டும் மணம் வீசட்டும்”
நன்றி!!!.
லெட்சுமணன்,
தங்களின் பாராட்டிற்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. இதனை ஒவ்வொரு பருவத்திலும் முழு இதழாக வெளியிடுவது எங்கள் திட்டம். பருவ இதழ்களுக்கு மத்தியில், புதுப்படைப்புக்களை மட்டும் வெளியிட்டு வாசகர்களின் ஆர்வத்திற்கு தொடர்ந்து ஈடு கொடுப்பது என்ற திட்டமும் உள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
படைப்பாசிரியரின் பெயரைத் தேர்வு செய்து படிக்கும் வசதி குறித்து எங்கள் தொழில் நுட்பக்குழு ஆய்வு செய்யும்.
மறுபடியும், நன்றி பல.