வீழ்வேனென்று நினைத்தாயோ!
“சாவு பயத்தக் காட்டிடாங்க பரமா!”…
அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் கரை வாழும் அனைத்து சென்னை மக்களும் சொன்ன வார்த்தைகள் இவை.
கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென ஒரேநேரத்தில் 35 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. மாநகரம் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்தது. நீர் தேங்கி மாநகருக்குள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மழைநீரில் வீடுகள் மூழ்கியதால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் தொலைத் தொடர்புச் சேவைகள், ஏடிஎம் சேவைகள் முடங்கின. மழை வெள்ளத்தால் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மீனவர்களின் படகுகள் மற்றும் தீயணைப்புத் துறையின் படகுகள் ஈடுபடுத்தப்பட்டன.
சாலையெங்கும் குடும்பம் குடும்பமாகப் பித்துப் பிடித்தது போல இங்கும் அங்குமாக மக்கள் நடந்தார்கள். பல நூறு பேருக்கு இந்தப் பெருமழை உளவியல் பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்கலாம்.
பால், பெட்ரோல் போன்றவை கிடைக்கவில்லை. சில பெட்ரோல் பங்குகள் லிட்டர் 100 ரூபாய்க்குக் கூட விற்றார்கள்.
இந்தச் சமயத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும், தன்னார்வலர்களும், தம்பதிகளும் குடும்பம் சகிதமாக நேரில் வந்து மக்கள் சேவையில் தங்களை இணைத்துக் கொண்டனர். உதவி செய்து கொண்டிருந்த ஆட்களைப் பார்த்து உதவி பெற்றவர் கேட்ட கேள்வி –
“இதெல்லாம் யாரு குடுத்து அனுப்புனாங்க?”
“ரோட்டுல,பஸ்ல, ட்ரெய்ன்ல போனையே நோண்டிக்கிட்டு இருக்கிற ஒரு குரூப்பை பாத்துருப்பீங்களே. அந்த குரூப் தான்” என்று சொல்லாமல் கடந்து சென்றார்கள் தன்னார்வலர்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 45 கி.மீ தூரம் பயணம் செய்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் நிவாரணப் பொருட்கள் வழங்கியது பலரையும் நெகிழ வைத்தது.
“நான் பூசாரி! ஆனால் அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்” – என்று உதவி பெற்ற ஒரு அந்தணர் கூறியது இன்னும் காதில் ஒலிக்கின்றது.
ஒரு குடையுடன் பெரிய அலுமினியப் பாத்திரத்தில் பால் பாக்கெட்டைச் சுமந்து கொண்டு தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அந்த வெள்ளத்திலும் ஒரு மூதாட்டி பால் போட்டுக் கொண்டிருந்தார்.
மகாராஷ்டிராவின் அகமது நகர் ஏரியா பாலியல் தொழிலாளிகள் லட்சத்தில் நிதியுதவி செய்தனர்.
இது மழை வெள்ளம் அல்ல! மனிதாபிமானத்தின் வெள்ளம்!
நம்மால் அழிக்கப்பட்ட ஒவ்வொன்றின் அவசியத்தையும் இயற்கை ஏதாவது ஒரு வழியில் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது.
வாரங்கள் மூன்றுக்கு மேல் கடந்தாயிற்று. மழை இப்போதுதான் சற்று விட்டதுபோல உள்ளது. மக்கள் முன்னே கடினமான பாதை தென்படுகின்றது. வீடுகள் இன்னும் தண்ணீர் பாதித்துக் காணப்படுகின்றன. ஆனால் மக்களின் நம்பிக்கை முன் எப்போதையும் விட வீறுடன் இருக்கின்றது.
மக்களின் பிரார்த்தனைகள் ஆண்டவனை எட்டும் முன்னேயே மனிதனுக்காக மனிதன் புனிதனான தருணம் இது. மக்களுக்காக மட்டுமல்ல மாக்களுக்காகவும் மனிதன் மனம் இரங்கினான்.
வீழ்வேனென்று நினைத்தாயோ!
சென்னை மழை மக்களுக்குப் புகட்டிய பாடங்கள் பல!
பணம் நமக்கு பாதுகாப்பு என்ற எண்ணத்தை மாற்றி எழுதி இருக்கின்றது. உயிருக்கு முன்னே மற்றதெல்லாம் தூசு.
இயற்கை சுழன்றடித்தாலும் மக்கள் நிமிர்ந்து நிற்கக் கற்றுக் கொண்டு விட்டார்கள். ஒன்றுபட்டு எந்தத் தருணத்தையும் எதிர்கொள்ளத் துணிந்துவிட்டார்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்! இளைஞர்கள் எல்லாம் உதவாக்கரையில்லை!
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சூப்பர் மேன் இருக்கின்றான்.
சமூக ஊடகங்கள் ஒன்றும் கேளிக்கைக்காக மட்டும் பிறந்தது அல்ல!
நம்பிக்கை போன நேரத்தில் நம் கதாநாயகர்கள் நம் முன்னே தோன்றினார்கள். நம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள இன்னொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
மனிதன் இயந்திரத்துடன் கை கோர்த்தான். ஊடகம் தன் பணியினைச் சிறப்பாகச் செய்தது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இலவசச் சேவை அளித்தன.
காவலர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்ய வந்த வாய்ப்பைத் தவற விடவில்லை.
நிழல் நாயகர்கள் நிஜ நாயகர்களாய் உயர்ந்து நின்றார்கள்.
உணவுக்கும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டபொழுது அண்டை மாநிலங்கள் கை கொடுத்தன. உணவுப் பொட்டலங்கள், துணிமணிகள், மருந்துகள் எத்தனை, எத்தனை!
ஒரு பேரழிவு நம்மை எல்லாம் ஓர் நேர்க்கோட்டில் நிற்க வைத்து அழகு பார்த்தது.
எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதிலாய் மனித நேயம் முன் நின்றது.
சுனாமியைவிட பன்மடங்கு மோசமான பாதிப்புக்குச் சென்னை உள்ளாகியிருக்கிறது. ஆனாலும், உழைப்பாளிகள் நிறைந்திருக்கும் நகரம் ஓரிரு வாரங்களில் தன்னைத் தானே மீட்டுக் கொள்ளும்!
சென்னை நம்மைப் பார்த்துச் சொல்கின்றது – நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!
–மதன் குமார் இராஜேந்திரன்
படத்தொகுப்பு: சந்தோஷ் சிவன் & வீனா
இவை எனது சொந்த கருத்துகள். நான் தொடர்புடைய எந்த நிறுவனத்துக்கும் இந்த கருத்துக்கும் சம்பந்தமில்லை.
Well said Madhan.
The recovery is always stronger… Nice Write up Madhan…