புத்தக மூட்டை
” அம்மா வலிக்குதே …”
பச்சிளம் குழந்தையாக இருந்தேன்
பார்த்துப் பார்த்து வளர்த்தாய்
மூன்று வயது ஆனேன் என்
முதுகில் சுமையை ஏற்றி வைத்தாய்
பள்ளிப் பாடங்கள், புத்தகங்கள் என்றாய்
பளுவை ஏற்றிக்கொண்டே போனாய்
வலிக்குதே அம்மா என்றேன் வழியெல்லாம்
பழகி விடு என்று ஏற்றாய் என் பழியெல்லாம்
துவக்கப் பள்ளி வந்தேன் நான்
தூக்குவது குறையுமா என்றேன்
தூக்குத் தூக்கு சோற்றையும் சேர்த்து
தூக்கு த் தூக்கி விட்டாய்
படிப்புச் சுமையில்லை அது சுவை
படிக்கச் சுமக்கும் சுமை அது சுமை
அடித்து இது தவறு எனச் சொல்ல
அடுத்த காலத்தில் யாருமே இல்லையே
அம்மா வலிக்குதே அப்பா வலிக்குதே
முதுகு வலிக்குதே கழுத்து வலிக்குதே
படிப்பு எனக்கு இஷ்டம் தான் அம்மா
பளு தூக்கச் சொன்னால் கஷ்டம் அம்மா
அமெரிக்கப் பள்ளியைப் பாரம்மா
ஆறு வயதுவரை புத்தகம் இல்லை அம்மா
அவர்களெல்லாம் ஆடிப் பாடிக் கதை படிக்க
அல்லல் படும் சுமை படிப்பு எனக்கு ஏனம்மா?
பள்ளியில் சொல்லம்மா தில்லியில் சொல்லம்மா
கற்றவரிடம் சொல்லம்மா உற்றவரிடம் சொல்லம்மா
ஆள்பவரிடம் சொல்லம்மா ஆண்டவனிடம் சொல்லம்மா
ஊரெல்லாம் சொல்லம்மா ஊடகத்திலும் சொல்லம்மா
அக்கறை உள்ளவரிடம் சொல்லம்மா
அக்கரையில் உள்ளவரிடமும் சொல்லம்மா
சுமையை உடனே குறைக்கச் சொல்லம்மா
ஆமை போல் இல்லாமல் கூன் விழுமுன் செய்யம்மா
ராமகிருஷ்ணன்
Beautiful poem 🙂
கருத்துள்ள கவிதை. சுமை குறைந்தால் நல்லது.
Nice poem. But I believe this is a problem worldwide not limited to just India.
புத்தக மூட்டை கவிதையானது முதுகில் மட்டுமல்ல எல்லாருடைய மனங்களிலும் ஏற்றப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
பூ. சுப்ரமணியன், பள்ளிகரணை, சென்னை