உலகப் பொதுமறை உரைத்தொரு சாதனை
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை !
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்!
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் !
அந்த தமிழ் மறையை, வெறும் மூன்று மணி ஐம்பத்தி இரண்டு மணித்துளிகளில் ஒரே மூச்சாக மழை போல் பொழிய முடியும் என்று நிரூபித்தார் திருமதி பிரசன்னா சச்சிதானந்தன்.
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி ஜனவரி 24 அன்று மதியம் 12.05 தொடங்கியது. இடைவிடாத உரையாக 1330 குறள்களையும் , பொருளுடன் உரைத்தார்.
ஒவ்வொரு குறளையும் , பொருளையும் சரியான அழுத்தமான உச்சரிப்புடன், சீரான வேகத்துடன் அவர் உரைத்த விதம் ரசிக்கும்படி இருந்தது. ஒவ்வொரு 17 நிமிடங்களுக்கும் 100 திருக்குறள்களை முடித்தபடி அவர் சென்ற வேகம் சிறப்பு!!
முழுக்க முழுக்க நின்றபடியே உடலிலோ, குரலிலோ தொய்வின்றி உரைத்தார். கையில் குறிப்பு ஏதுமின்றி நினைவில் இருந்தே ஒவ்வொரு குறளையும் விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 மணி துளிகளில் 1000 திருக்குறள்களை உரைத்து முடித்த பொழுது, கூடி இருந்து ரசித்தவர்கள் அடைந்த உவகையை, அவர்கள் எழுந்து நின்று கைதட்டிய விதமே உணர்த்தியது.
நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொள்ள முடிந்தவர்களுக்கு, ஒரு பெரிய சாதனையில் பங்கேற்றது போன்ற திருப்தியும், ஒரு பகுதி மட்டுமே கலந்து கொள்ள முடிந்தவர்களுக்கு இன்னும் அதிக நேரம் இருந்திருக்கலாமோ? என்ற சிந்தனையும் அளித்ததன் முழுப் பெருமை பிரசன்னாவையே சாரும் .
நிகழ்ச்சி முடிந்த பின்பு அவரை பாராட்டி பேசியோருக்கு, “எத்தனை உழைப்பு இதற்கு பின் இருந்திருக்கும்?” என்ற வியப்பு மிக அதிகம் இருந்தது. அதற்கு, “தினமும் காலை 4 மணி முதல் 8 மணி வரை பயிற்சி எடுத்தேன், வரிசை மாறாமல், நேரத்தில் உரைப்பதற்கு இந்த பயிற்சி தேவையாய் இருந்தது. ஐந்து மணித்துளிகளே நூலகம் திறந்திருக்கும் என்பதால் முடிந்த அளவிற்கு விரைவாகச் சொல்ல முயன்றேன்” என்று அடக்கமாக பதில் உரைத்தார்..
“எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.”
என்ற திருக்குறளிற்கு உதாரணமாகவே அவர் செயல்பட்டிருந்தார்.
அந்த பொய்யா மொழி புலவரின் வாக்கு பொய்க்காமல் சிறக்கும்படி, பிரசன்னா மென் மேலும் வெற்றிகள் குவித்திட வாழ்த்துக்கள்.
லக்ஷ்மி.
The author has well said about the event and the success for the event. Very proud of you Ms. Prasanna for this great achievement. You have been a role model for your daughters!
Grt Job!