மழைப்பாட்டு
பெருநிலத்தின் பரந்த வெளியில் நிறைந்திருந்த
பதமழையின் வாசம்
அவனை ஏகாந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது
உழவு மாடுகள் இழுத்துச் செல்கிற
ஏர்முனை கலப்பை சலசலப்போடு நகர்ந்து
வழுக்கேறிய வண்டல் மண்ணை
பதப்படுத்தத் தொடங்குகிறது
தென்திசை வரப்பு முனை இறுதி வெளிச்சுற்றின் போது
வெறித்திருந்த மழை பொழியத் தொடங்கி
வியர்வை உமிழ்ந்திருந்த அவனுடலில் இறங்குகிறது
மழைக்குளிர்ச்சியில் மனம் கிளர்ச்சியுற்ற
அக்கணத்தில் மழைப்பாட்டைப் பெருங்குரலெடுத்து
அவன் இசைக்கத் தொடங்குகிறான்
அக்குரலில் அவனது அப்பாவின் சாயலிருப்பதை
இனங்கண்டு கொண்டு அசை போட்டவாறு
மாடுகள் குளம்புகள் அதிர நகரத் தொடங்க
திசைகள் வெறித்துப் பறக்கின்ற நீர்க் காகங்கள்
அம்மழைப்பாட்டுக்கு எசப்பாட்டை இசைத்தவாறே
அவனைக் கடந்து செல்லத் தொடங்குகின்றன.
வே. முத்துக்குமார்
அன்புடையீர்,
வணக்கம், மழைப் பாட்டுக் கவிதையில் “அக்குரலில் அவனது அப்பாவின் சாயலிருப்பதை
இனங்கண்டு கொண்டு அசை போட்டவாறு
மாடுகள் குளம்புகள் அதிர நகரத் தொடங்க.” கவிதை வரிகள் அருமை கவிஞருக்குப் பாராட்டுக்கள்.
பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை