\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காதலாகிக் கசிந்துருகி…..

Filed in இலக்கியம், கதை by on February 28, 2016 3 Comments

kaathalakik-kasithuruki_620x436

மங்களம், சமையல் ஆயிடுத்தா… டைம் ஆறதுடி….” சாம்பு மாமா அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்.

”ஆயிண்டே இருக்குன்னா.. என்னத்துக்கு இப்டி வெந்நீரக் கொட்டிண்ட மாதிரி பதற்றேள்” – இது மங்களம் மாமி.

“இல்லடி, நம்ம தியேட்டர்ல முதல் மரியாதை படம் போட்ருக்காண்டி, ரெண்டாவது ஆட்டம் போலாமேனுட்டு…”

ஐம்பதுகளின் தொடக்கத்தில் இருந்த சாம்பு மாமாவுக்கும் நாற்பதுகளின் இறுதியிலிருந்த மங்களம் மாமிக்கும் அப்படி ஒரு அன்னியோன்யம். குழந்தைகள் இல்லை, ஆனால் அது பற்றிய கவலையை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் அந்தக் கவலை அவர்கள் இருவரையும் வாட்டியெடுத்தது. போய் வராத கோயில் குளங்கள் இல்லை, செய்யாத பூஜை புனஸ்காரங்கள் இல்லை, பார்க்காத ஜோஸ்யர்கள் இல்லை. மூலிகை மருந்து தரும் சூசை வைத்தியரிடம் தொடங்கி பக்கத்து டவுன் டாக்டர் வரைத் தங்கள் சக்திக்கெட்டிய அனைத்து வைத்தியர்களிடமும் சென்று பார்த்தாகி விட்டது. ஒன்றும் பலன் தரவில்லை.

“நமக்கு வாச்சது இவ்வளவு தாண்டி, நோக்கு நானும் நேக்கு நீயும் தான் புள்ளேள்” என்ற முடிவுக்கு வந்துவிட்டிருந்தனர். அதன் பின்னர் மனம் லேசாகி விட்டிருந்தது. அதுபோலவே ஒருவர் மீதொருவர் அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்து வாழ்ந்து வந்தனர்.

சாம்பு மாமா பக்கத்திலிருந்த பெருமாள் கோவிலில் சுயம்பாகமாக வேலை செய்பவர். அதாவது சமையல்காரர். பெரிய அளவு வருமானம் இல்லாவிட்டாலும், கோயில் அக்கிரகாரத்தில் தங்குவதற்கு வீடு வாடகையின்றிக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு சில திருமணங்களுக்குச் சமையல் குழுவுடன் சென்று வருவதில் ஓரளவு வரவு இருந்தது. மாமியும் வடகம், அப்பளம், வத்தல் என்று வீட்டிலியே போட்டு, தெரிந்தவர்களுக்கு விற்பதன் மூலம் சற்றுப் பணம் சம்பாதித்தார். குழந்தைகள் இல்லாத, இருவர் மட்டுமே இருந்த அந்தக் குடும்பத்திற்கு அந்த வருமானம் போதுமானதாகவே இருந்தது. வாரம் சனிக்கிழமை இரவு வந்துவிட்டால் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போய்விடுவது அவர்களின் வழக்கம். ஊரிலிருந்த ஒரே டூரிங்க் டாக்கீஸான சித்ரா திரையரங்கில் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை படத்தை மாற்றிப் போடுவது அவர்களுக்கு வசதியாக இருந்தது.

”ஏண்டி மங்களம்.… ரொம்ப நாளா கேக்கணும்னு நெனச்சிண்ட்ருந்தேன்…… திடீர்னு ஒரு நாள் நான் போய்ட்டேன்னா ஒன்ன யாருடி பாத்துப்பா” முதல் மரியாதை திரைப்படத்தில் தொண்டைக் குழிக்குள் கிடந்துழன்ற சிவாஜி கணேசனின் உயிர்ப்போராட்டத்தைத் திரையில் பார்த்த கணம் தோன்றிய உணர்வை, திரைப்படம் முடிந்து வீட்டிற்கு நடந்து வரும் வழியில் வினவினார் மாமா.

”ஏன்னா.. சத்த சும்மா இருக்கேளா.. என்னமோ பெரிய பீஷ்மாச்சாரியார்னு மனசுல நெனப்பு… நெனச்ச மாத்திரத்திரத்துல எமன் வந்து அழைச்சுண்டு போப்போறான்..” கண்ணோரம் கசிந்த கண்ணீரை அவருக்குத் தெரியாமல் நாசூக்காய்ப் புடவைத் தலைப்பில் துடைத்துக் கொண்டே நடையைத் தொடர்ந்தாள் மங்களம்.

அவள் மெலிதாக அழுகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட மாமா, “இல்லடி, ஒன்னக் கஷ்டப்படுத்தணும்னு சொல்லல…. நெருப்புன்னா வாய் வெந்துடப்போறதா என்ன.. என்னிக்கி இருந்தாலும் ஒரு நாள் போய்த்தானடி ஆகணும்….” என்று இழுக்க,

“சரி போறும் நிறுத்துங்கோ.. ஏதோ ஜாலியா சினிமா பாத்தமா வந்தமான்னு இல்லாம, சினிமால நடக்குறதெல்லாம் நமக்கும் நடக்கும்னு எதையாவது நெனச்சுத் தன்னையும் வருத்திண்டு மத்தவாளையும் அழ வச்சிண்டு……” என்ற மங்களத்தை இடைமறித்து…

“நெஜத்த சொல்றேண்டி, நேக்கு முன்னால நீ போயிடணுண்டி.. நான் இல்லாம நீ கஷ்டப்பட்றத என்னால நெனச்சுக்கூடப் பாக்க முடியலடி……”

நடந்து கொண்டிருந்த மங்களம் சட்டென நின்று திரும்பித் தன் கணவனின் முகத்தைப் பார்க்கிறாள். அந்த நடுநிசி நிலவொளியில் அவர் கண்களில் உருண்டோடிய சன்னமான நீர்த்துளியை மாமியால் பார்க்க இயல்கிறது. சினிமாவில் காட்டுவது போல் தெருவிலேயே கட்டிப் பிடித்துக் கொண்டு அழாவிட்டாலும், அந்தப் பார்வையிலே காதலாகிக் கசிந்து உருகினர் இருவரும்.

அதே நினைப்புடன் வீட்டுக்கு வந்து, எதுவும் பெரிதாகப் பேசிக் கொள்ளாமல் எதையெதையோ நினைத்துக் கொண்டே இருவரும் தூங்கப் போய்விட்டனர்.

றுநாள் காலை சுமார் ஆறுமணி. வழக்கம் போல் மாமி எழுந்து கொள்ள, சுற்றும் முற்றும் பார்த்தால் மாமா படுக்கும் பாய் காலியாக இருக்கிறது. ”இந்தக் கார்த்தால நேரத்துல எங்க போயிருப்பார்” நினைத்துக் கொண்டே மாமி கொல்லைப்புறம் சென்று காலைக்கடன்களை முடித்துப் பல்துலக்கி வீட்டிற்குள் வந்து காப்பி போட்டு விட்டு மீண்டும் மாமாவைத் தேட, அவரைக் காணவில்லை. “இந்த மனுஷன் இத்தனை வருஷத்துல காப்பி குடிக்காம காலங்காத்தால எங்கயும் போனதா எனக்கு நெனவில்லயே…. அவாப்பாம்மா தவசத்தன்னக்குக் கூட காப்பி குடிக்காம இருக்க மாட்டாரே, எங்க போய்ட்டார், அதுவும் சொல்லாம” என்று தனக்குள்ளே பேசிக் கொண்டே குளிக்கச் சென்றார் மாமி. குளித்து முடித்து, சமையல் முடித்து தனது வேலைகள் அனைத்தையும் முடிக்கையில் கிட்டத்தட்ட ஒன்பதரை மணியாகிவிட்டிருந்தது இன்னும் மாமாவின் சுவடே காணவில்லை. இன்று ஞாயிற்றுக் கிழமையானதால் கோயிலுக்குச் சற்றுத் தாமதமாகச் செல்லலாம் என்றாலும் கிட்டத்தட்ட அங்கும் உலை வைத்துச் சமையலைத் தொடங்கும் நேரம் வந்துவிடும் போலிருக்கிறது இன்னும் மாமாவைக் காணவில்லை. மாமிக்குக் கவலை அதிகரிக்க ஆரம்பித்தது. ”நேத்து ராத்திரி ஏதோ அச்சுபிச்சுன்னு பேசிண்ட்ருந்தாரே” மெதுவாக மனதில் அந்த சம்பாஷணை எட்டிப் பார்க்க, கவலையின் அளவு மிகவும் அதிகரித்தது மாமிக்கு.

வீட்டைப் பூட்டிக் கொண்டு தானே தேடப்புறப்பட்டு விட்டார். வழியில் வரும் ராஜு ஐயரைப் பார்த்து, “மாமா, இவரைப் பாத்தேளா?” என்று வினவ, “இல்லையேம்மா, என்ன சமாஜாரம்” என்று அவர் பதிலுக்குக் கேட்டார். “ஒண்ணுமில்லே மாமா” சொல்லிக் கொண்டே விரைவாக நடையைத் தொடர்ந்தாள். அவர் வழக்கமாகப் போகும் இடங்களுக்கெல்லாம் சென்று பார்த்து விடுவது என்று முடிவு செய்தாள்.

வெயிலைப் பொருட்படுத்தாது, காலில் செருப்பும் இல்லாமல் முந்தானையைத் தலையைச் சுற்றிப் போட்டுக் கொண்டே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தார் மங்களம் மாமி. எதிரே வரும் தெரிந்தவர்கள் அனைவரிடமும் அவரைப்பற்றிய விசாரணை. இவ்வளவு நேரமாகியிருந்த படியால் அழுகையும் தொற்றிக் கொண்டது. என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு சுற்று முடிந்து மறுபடியும் வீடு இருக்கும் அக்ரகாரம் நோக்கியே வந்து சேர்ந்தார் மாமி.

வீட்டை நெருங்குகையில் வீட்டுத் திண்ணையில் யாரோ அமர்ந்திருப்பது தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாகப் பக்கம் நெருங்குகையில், அங்கே உட்கார்ந்திருப்பது சாம்பு மாமாதான் என்பதைக் கண்டு கொண்ட மாமியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. வறண்ட நாக்கு, ஒழுகும் வியர்வை அனைத்தையும் மறந்து மாமா அமர்ந்திருக்கும் திண்ணையை விரைவில் அடைந்தார், அப்பொழுதுதான் கவனிக்கிறார், மாமாவுக்கு அருகில் சட்டையெதுவும் அணிந்திடாமல் எண்ணெய் பார்க்காத பரட்டைத் தலையுடன் சற்று பயம் கலந்த முகத்துடன், மெலிதாக அழுதுகொண்டே நின்று கொண்டிருந்த அந்த இரண்டு வயதுச் சிறுவனை.

“ஏன்னா…… எங்க போய்ட்டேள்… காத்தால இருந்து நான் படாதபாடு பட்டுப் போய்ட்டேன் தெரியுமா” அழுகையுடன் மூக்குறிஞ்சிக் கொண்டே கேட்டார் மாமி.

“மன்னிச்சுக்கோடி மங்களம், உன்னண்ட சொல்லிட்டுப் போணும்னுதான் பாத்தேன், நீ அசந்து தூங்கிண்டிருந்த.. எழுப்ப வேண்டாமேனுட்டு”

“போங்கன்னா…. நேக்கு பிராணனே போயிடுத்து………… இதாரு… இந்தக் கொழந்த…” என இழுக்க….

“நேத்து ராத்திரிப் பேசினது நெனவிருக்கா மங்களம், அதுக்கப்புறம் ராத்திரி முழுக்க நன்னா யோஜனை பண்ணிப் பாத்தேன்…. தூக்கமே வர்ல…. இதுதான் சரின்னு பட்டுது… நீயும் ஒத்துப்பேன்னு நம்பி… நம்ம புதூர்ல இருக்கே அனாதை ஆசிரமம், அங்கே போயிருந்தேண்டி…. இந்தப் புள்ளயாண்டான் இனிமே நம்ம புள்ள, இவனுக்கு அப்பா அம்மா யாருன்னு தெரியாது, என்ன ஜாதி, குலம் கோத்ரம் ஒண்ணும் தெரியாது.. தெரியவும் வேண்டாம்… இனிமே இவன் நம்ம புள்ள.. நமக்கு கொள்ளி வச்சு, சிரார்த்தம் பண்ணுவாண்டி, அவன் புள்ளேள் நமக்கு நெய்ப்பந்தம் புடிப்பா…….. “ சொல்லிக் கொண்டே சென்ற சாம்பு மாமாவின் கண்களில் கண்ணீர் புரண்டோடியது.

கேட்ட மாத்திரத்தில் எதுவும் சொல்லத் தோன்றவில்லை மாமிக்கு. உடனே பாய்ந்து சென்று அந்தச் சிறுவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கலானார் அந்தத் தாய். பிள்ளையின் அழுகையும், அன்னையின் அழுகையும் நின்றதைக் கவனித்த சாம்பு மாமாவின் கண்ணீர் மட்டும் சற்றுத் தொடர்ந்து கொண்டிருந்தது…..

  • வெ. மதுசூதனன்.

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. vijay says:

    குழந்தையில்லாத ஓர் தம்பதி, ஒரு குழந்தைய தத்து எடுத்துக்குறாங்க. அவ்ளோதான் ! இந்த ஒரு வறிய ஒரு பக்க கதையாகச் சொல்லும் நீர் இயக்குனரே 🙂

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      அந்தக் குடும்பத்தின் உணர்வுகளைப் படிப்பவர் கண் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டாமா? ஒளிப்பதிவாளரான உங்களுக்கும் அந்தக் கடமை இருக்கிறது…

  2. P.Subramanian says:

    அன்புடையீர், வணக்கம். காதலாகி கசிந்துருகி என்ற சிறுகதையில் சாம்பு மாமாவை மாமியுடன் நம்மையும் தேட வைத்து விட்டார் கதாசிரியர். அருமை. கதாசிரியருக்குப் பாராட்டுக்கள். பனிப்பூக்கள் இணையதளம் ஆசிரியர்க்கு நன்றி.

    பூ. சுப்ரமணியன் , பள்ளிக்கரணை, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad