\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நிஜம் நிழலாகும்

Filed in இலக்கியம், கதை by on April 25, 2016 3 Comments

nizhala-nijama_620x824

பெட்டி எல்லாம் எடுத்து வெச்சாச்சா ? கேள்வி கேட்டபடி நடந்து வந்தான் ராஜு . சந்த்யா ஆமோதிக்கும் விதம் தலையை அசைத்தாள் .

அவனுடைய அடுத்த கேள்வி என்ன என்று அவளுக்குத் தெரியும். கேட்காமல் இருந்தால் நல்லது என்று மனதிற்குள் நினைத்தாள்.

கேமரா எடுத்து வெச்சாச்சா?. சார்ஜ் போட்டாச்சா?

பதில் சொல்லாமல் மழுப்ப நினைத்தாள் சந்த்யா . ஆனால் அவள் மௌனமே ராஜுவிற்கு இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது.

கேமரா எடுத்து வெச்சாச்சா? புதிசா வாங்கின DSLR சார்ஜ் போடு. அப்புறம் நம்ம வீடியோ கேமராவையும் எடுத்து வை. Tripod எடுத்துப்போமா? கையில போன் இருக்கு. Flightukku அது போதும். Selfie எடுக்க அது தான் எளிமையா இருக்கும். அப்படியே fb ல போட்டுடலாம்.

ராஜுவின் இந்த புகைப்படத் திட்டத்திற்கு எந்த பதிலும் உரைக்காமல் உடைகளை மட்டும் எடுத்து வைத்தாள்

ரெண்டு பெட்டி போதுமா? ஒரு சின்ன பெட்டி எடுத்துக்கோ. நம்ம இடையில மூணு நாள் பஸ்ல மட்டும்

தான் இருப்போம். அந்த டூர் பஸ்ல சின்ன பெட்டி தேவை. பெரிய பெட்டி ஏத்தி இறக்க கஷ்டமா இருக்கும்.

நான் கேமரா பையை எடுத்துக்கறேன்.

ராஜு, இந்த முறை கேமரா இல்லாமல் ஒரு vacation போலாமா? எப்போ பாரு எங்க போனாலும் நீங்க கேமரா வழியாவே பாக்கற மாதிரி இருக்கு. நம்ம சுதிர்க்கும் அங்க நின்னு போஸ் குடு, இங்க நின்னு போஸ் குடு ன்னு நீங்க பிடுங்கறது கோபம் வருது.

என்ன சந்தியா அவன் தான் சின்ன பையன். விவரம் புரியாமப் பேசறான். இந்த புகைப்படம் எல்லாம் எத்தனை நினைவுகள். நம்ம சின்ன குழந்தையா இருந்தப்போ இத்தனை கேமரா இல்லாம போச்சு. அவன் பெரியவனா ஆன பிறகு அவன் பாக்கறதுக்கு நிறைய நினைவுகள் இருக்கும்.

நீங்க சொல்ற கோணம் சரி தான் ராஜு ஆனால் நினைவுகள் பத்தி மட்டும் யோசிச்சுட்டு நிஜத்தைத் தொலைக்கற மாதிரி இருக்கு. பாதி நேரம் ஒரு சுற்றுலான்னு போற போதெல்லாம் இப்படி போட்டோவிற்கு ஃபோஸ் குடுத்தே போகுது. ஒரு முறையாவது நம்ம அந்த இடத்தை ஒழுங்கா பாக்கறோமா? பாதி நேரம் கேமராக்கு ஃபோஸ் தான் குடுக்கறோம். இங்க நில்லு. அப்படி பாருன்னு. சுதிர்க்கு இப்போ 8 வயசு. அவனோட பிறந்ததிலிருந்து எடுத்த போட்டோ ஒரு இருவது ஆயிரம் இருக்கு. இதைப் பார்க்க யாருக்கு நேரம் இருக்கு. வாழ்க்கை ஓட்டமாவே இருக்கு. அதனால நினைவுகள் மனசில இருந்து, அதை நினைவுபடுத்தற ஒண்ணு ரெண்டு போட்டோ இருந்தா போதாதா?

இல்ல சந்தியா உனக்கு புரியவே இல்லை. இப்போ பாரு ஒரு ஆறு வருஷம் முன்னாடி எடுத்த நம்ம சுதிர் போட்டோ என்னோட fb ல இருக்கு. அதை திருப்பி பார்த்தா எத்தனை குட்டியா இருக்கான்..

ஆறு வருஷம் முன்னாடி சுதீர் வீட்ல குட்டியா இருந்தப்போ அவன் கை குழந்தையா இருந்த போட்டோவப் பார்த்தே சிரிச்சிட்டு இருந்தீங்க. கண்ணு முன்னாடி இருக்கிற நிஜத்தை ரசிங்க ராஜு. வெறும் நினைவுகளைத் தேடி ஓடாதீங்க. இந்த முறை நியூ ஜெர்சி, நயாகராவை சுதிர் முதல் தடவை பார்க்கறான். அவனோடப் பேசி சிரித்து நினைவுகள் உருவாக்குங்க , வெறும் கேமரா கிளிக்ல இல்ல நினைவுகள். அதுவும் மூணு நாள் பஸ்ல போற மாதிரி நேர நேரம் கிடைக்கும். பேசி விளையாடிகிட்டுப் போலாம். தயவு செய்து கேமராவ வெச்சுட்டு வாங்க

அவனுக்குப் புரியவில்லை என்பது நன்றாக தெரிந்தது சந்தியாவிற்கு.

உனக்கு ஒரு காலத்தில மீண்டும் இந்தப் படங்களைப் பார்க்கற போது தான் அருமை தெரியும், என்று பதில் சொல்லி விட்டு நகர்ந்தான்.

***

மறுநாளே நியூயார்க் கிளம்பினார்கள். அங்கு சுதந்திர தேவி சிலைக்கு முன்பு ஒரு இரு நூறு புகைப்படமாவது எடுத்திருப்பான் ராஜு. அப்புறம் அதன் மேலே சென்று ஒரு நூறு படம் எடுத்தான் . சுதிர்க்கு அப்பா தன்னுடன் பேசவில்லை, விளையாடவில்லை என்ற வருத்தம் அதிகமாக பொங்க , அவனைச் சிரிக்கச் சொல்ல முயற்சித்த போதெல்லாம் கோவமாக முறைத்தான்.

இருவருக்கும் இடையே மத்தளம் போல மாட்டிக் கொண்டாள் சந்தியா.

இப்படி ஒரு விடுமுறை தேவையா என்று இருந்தது. நயாகரா போகும் வழியில் முழுக்க இப்படி கேமரா கையோடு இருந்தால் கெட்டுது குடி என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

பஸ்சில் ஏறும் நேரம் சிறு பெட்டியோடு கேமெராவை மறக்காமல் எடுத்து வைத்துக் கொண்டான் ராஜு.

இவர்கள் இருக்கைக்கு வலது பக்கத்தில் ஒரு கணவன் மனைவி அமர்ந்து இருந்தனர்.

ஒரு 50 வயது மதிப்பிடக் கூடிய அளவு இருவருக்கும். பார்க்கும் பொழுதே தமிழாக இருப்பார்களோ என்று மெல்லச் சிரித்த சந்தியா அவர்களைப் பார்த்து தமிழா? என்றாள்.

ஆமாம் என்றாள் அந்தப் பெண்மணி.

கூடவே சேர்த்து, என் பேர் அம்புஜா, இவர் என்னை அம்பு ன்னு கூப்பிடுவார். இவர் பெயர் கணேஷன். நாங்க ரெண்டு பெரும் சிகாகோலேந்து வரோம். கலகலவென அம்பு பேசத் தொடங்க, நீ என்னை அத்தைன்னு கூப்பிடு மூணு நாள் பேசி ஜாலியா போகலாம் என்று உரிமையாக வாஞ்சையாகச் சொன்னாள் .

சந்தியா, சுதிர் ராஜு மூவரும் அறிமுகம் ஆகி நல்ல சிநேகிதம் ஆனார்கள்.

அம்பு கணேஷன் தம்பதியின் பிள்ளைகள் கல்லூரி சேர்ந்து விட்டார்கள் இவர்கள் தனியாக முதல் முறையாக விடுமுறை வந்து இருக்கிறார்கள் .

மூத்த பையன் இப்போ டாக்டர்க்கு படிக்கறான். ரெண்டாவது பையன் இப்போ தான் முதல் வருடம் டிகிரி சேர்ந்து இருக்கான். முப்பது வருடம் முந்தி கல்யாணம் ஆன போது எங்கேயும் நாங்க ரெண்டு பெரும் தனியா போனதே இல்ல.

பசங்க பொறந்த பிறகு எல்லா இடத்துக்கும் அவங்களோட தான் போனோம். இப்போ தான் தனியா வரோம்”

கடகடவென்று பேசியபடி இருந்தார் அம்பு.

பஸ் கிளம்பும் பொழுது வழக்கம் போல ராஜு செல்ஃபி எடுத்தான். ரெண்டு நாளாக இருந்த கோபம் எல்லாம் சேர்ந்து சுதீர் மொத்தமாக அழுகையுடன் முறைத்தான்.

எப்போ பாரு ஃபோட்டோ ஃபோட்டோ ன்னு, இந்த தாத்தா பாட்டி மாதிரி பேசி சிரிச்சிட்டு போகாம ஈன்னு ஃபோட்டோக்குச் சிரிக்கப் பிடிக்கல . கோவமாக அவன் கத்த , அவனைச் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள் சந்தியா.

அவன் அழுகை வேடிக்கை போல இருந்தது ராஜுவிற்கு. அதையும் ஃபோட்டோ எடுத்தான். நயாகரா கிளம்பும் போதே அழுகை என்று சொல்லி கேலி செய்தபடி சின்ன வீடியோ எடுத்துக் கொண்டான்.

நல்லவேளை ஒரு பெரிய சண்டை வரும் முன் பஸ் டிரைவர் ஏதோ ஒலிபெருக்கியில் சொல்ல, இவர்கள் பேச்சு

நின்று போனது. அவர்கள் பஸ். சிறு சிறு இடைவெளியுடன் கடைசியில் நயாகரா சென்றடையும் திட்டம்

குறித்து விவரித்தார் அவர்.

ஒரு மூன்று நான்கு மணி நேரம் கழித்து ஏதோ ஒரு ஓய்வுக்கு நிறுத்தினார். அங்கு அனைவரும் இறங்க,

சிறிது நேரம் கழித்து மீண்டும் பயணம் தொடங்கியது.

அம்பு, கணேஷன் தம்பதியுடன் பேசியபடி அவர்கள் மூவர் பயணம் மிக அருமையாகச் சென்றது. சந்தியா மீண்டும் கேமெராவை பஸ்சிற்குள் எடுக்க வேண்டாம். சுதிர் அப்புறம் அழுது கத்தி மானத்தை வாங்குவான் என்று ராஜூவை ரொம்ப கெஞ்சி அடக்கி வைத்து இருந்தாள் .

நயாகரா இறங்கியவுடன் முதலில் அருவி பக்கத்தில் ஒரு புகைப்படம் எடுக்க பையைத் தேடிய பொழுது தான் பை தொலைந்தது தெரிந்தது.

அவ்வளவு தான் உயிரே போனது போல உணர்ந்தான் ராஜு. சந்தியாவிற்கும், சுதீர்க்கும் அப்பாடி என்று இருந்தது.

அன்றைய நாள் முழுக்க உம்மென்று இருந்தான் ராஜு. அருவியை ரசிக்கவில்லை மனம் செல்லவில்லை. சுதீரின் குஷியான முகம் கண் முன் தெரிய, அதைப் புகைப்படம் எடுக்கவில்லையே என்று கோபம் வந்தது. முதலில் நிறுத்திய ரெஸ்ட் ஏரியாவில் விட்டு இருப்போம். திரும்பவும் போகும் வழியில், அங்கயே தான் நிறுத்துவோம். அப்போது எடுத்துக் கொள்ளலாம் என்று பஸ் டிரைவர் உரைத்த சமாதானம் இன்னும் கோபத்தைக் கூட்டியது.

எவ்வளவு தான் கோபம் இருந்தாலும், கொஞ்ச நேரம் கழித்து சுதீருடன் அவனை அறியாமல் குஷியாக அருவியை ரசித்து விளையாடத் தொடங்கினான். இவர்கள் மிகவும் மகிழ்ந்து இருந்த ஓரிரு தருணங்களை அம்பு கணேஷன் தம்பதியர் புகைப்படம் எடுத்தார்கள்.

இரண்டு நாட்கள் சுவர்க்கம் போல இருந்தது. திரும்பி வரும் பொழுது, அதே இடத்தில் கேமரா கிடைக்கவில்லை.

அவ்வளவு தான். தொலைந்தது, தொலைந்தது தான் விடுங்கள் வேறு வாங்கிக் கொள்ளலாம் என்று சந்தியா சமாதானம் சொன்னாள்.

பஸ் திரும்பவும் இவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கு வர, அம்புவிடமும் கணேஷனிடமும் விடைபெற்று கொண்ட பொழுது, அவர்கள் ராஜுவின் கையில் அவனது கேமராப் பையைக் கொடுத்தார்கள்.

அதிர்ச்சியும், கோபமும் சேர்ந்து அவர்களைக் கோபமாய்ப் பார்த்த ராஜு பேசத் தொடங்குமுன், அம்பு குழந்தைகள் நம்ம வாழ்க்கையில கடந்து போகும் மேகம் போல, அவர்களோட நமக்கு கிடைக்கிற நினைவுகளைச் சேகரிக்கறது முக்கியம் தான். ஆனால் நிழலை நிஜமாக நினைச்சு வாழ ஆரம்பிச்சா அப்புறம் நிஜம் நிழலாகிப் போகும்.யோசிச்சுப் புரிஞ்சுக்கோ. நாங்க உங்கள எடுத்த சில ஃபோட்டோக்கள் இதில மாத்தி காபி பண்ணிட்டோம்.

சொல்லி விட்டு அவர்கள் இருவரும் நடந்து சென்று விட்டார்கள்.

அந்த விடுமுறையில் உண்மையில் கிடைத்த சந்தோஷமோ, இல்லை அம்புவின் அறிவுரையோ ஏனோ நிஜம் உண்மையில் ராஜுவிற்கு உறைத்தது .

– லக்ஷ்மி சுப்பு

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. Amutha says:

    அருமையான கதை! பொருத்தமான தலைப்பு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது!

  2. Mahadevan says:

    Very true and nice one

  3. Sridevi says:

    Very nice story on limited usage of devices. Very nice drawing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad