\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அப்பா…

Filed in இலக்கியம், கதை by on June 18, 2016 1 Comment

Appa_620x496வுண்ட் ரோட் தேனாம்பேட்டை சிக்னல் அருகே உள்ள அப்பல்லோ மருத்துவமனை…. முப்பது மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு, நேரடியாக ஏர்போர்ட்டிலிருந்து ஹாஸ்பிடல் வந்திருந்த கணேஷ் கண்ணீர் விழிகளும், களைப்புத் தேகமுமாய் ஐ.சி.யூ. வாசலில் ட்யூட்டி டாக்டரின் வருகைக்காகக் காத்திருந்தான்… ஐ.சி.யூ.வின் உள்ளே அப்பா உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார், வெண்டிலேட்டரின் தயவில் சுவாசம் நடந்து கொண்டிருக்கிறது….. ஐ.சி.யூ கதவிலிருந்த வட்டமான சிறு கண்ணாடி வழியே உள்ளே பார்க்க, சுயநினைவில்லாமல் மருத்துவ உபகரணங்களுக்கும், குழாய்களுக்கும் நடுவே ஒரு திடப்பொருளாய்ப் படுத்திருந்த அப்பாவைப் பார்க்கிறான்… எவ்வளவு கம்பீரமான மனிதர்? ஊரே மரியாதை தரும் ஒரு உருவம், ஆளுமை… கணேஷின் மனம் பின்னோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது…….

மக்குன்னு இருக்குற ஒரே சொத்து, நம்ம தன்னம்பிக்கை தான்… அத நீ எந்த சந்தர்ப்பத்துலயும் விட்டுடக்கூடாது……” நம்பிக்கை மிகுந்த கோவிந்தராஜய்யர் தம் பிள்ளை கணேஷுக்குச் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான்.

அவர் ஒரு நல்ல, நேர்மையான ஆசிரியர். கிராமத்தில் இருந்த ஒரே உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியர். ஆங்கிலப் பாடத்தைத் தமிழில் நடத்தினால் மட்டுமே புரிந்து கொள்ளும் நிலையில் பல மாணவர்கள் இருந்ததால், அவ்வாறே நடத்தி அனைவருக்கும் கடினமான ஆங்கில இலக்கணத்தையும் புரிய வைக்க முயல்வார். அதுதவிர, மாணவர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்கக் கற்றுத்தருவது ஆசிரியரின் கடமை என்று முழுமையாக நம்பிய காலகட்டத்தில் ஆசிரியராக இருந்ததால், அனைத்து மாணவர்களின் பொதுவான பழக்க வழக்கங்களையும் கண்காணித்து அவர்களுக்கு நல்லது, கெட்டதுகளை அறிவுறுத்துவார். மாணவர்களுக்கு அவர்மீது பெரிய அளவில் மரியாதை இருந்தது. தமது கிராமத்தில் எந்தத் தெருவில் நடந்து வந்தாலும் எதிரில் வருபவர்களின் மரியாதையான வணக்கங்கள் கிடைத்த வண்ணம் இருப்பவர். நாற்பது, ஐம்பதுகளில் இருப்பவர்கள்கூட புகை பிடித்துக் கொண்டு வருகையில் தூரத்தில் ஐயரின் வெண்ணிறத்தலை தெரிய ஆரம்பித்தால், சிகரெட்டை அவசர அவசரமாகக் கீழே போட்டு மிதித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல அவருக்கு வணக்கம் வைக்கத் தயாராகிக் கொள்வர். அவரும் எதனையும் பார்த்திராதது போல வணக்கம் வைத்து விட்டு மேலே நடந்து சென்று விடுவார்.

“கணேசா, நான் நோக்கு பணங்காசு எதுவும் சேத்து வைக்கலை…. ஆனா, நெறயா மனுஷாளச் சேத்திருக்கேன்… நேக்குச் சரின்னு பட்றதப் பண்ணிருக்கேன், நாலு பேர சந்தோஷப்படுத்தற மாதிரி வாழ்ந்திருக்கேன்…. நோக்குச் சொல்றதெல்லாம் அது ஒண்ணுதாண்டா… படிப்பு, சம்பாத்யம் எல்லாம் கூட ரெண்டாம் பட்சந்தான்… யாரண்டயும் கெட்டவன்னு மாத்திரம் பேரெடுத்துடாதே.. மத்தவா பாவம் ரொம்பப் பொல்லாதது, நிர்மூலமாக்கிடும்”

சொல்லிக் கொண்டே, எதற்கும் திருவள்ளுவனைத் துணைக்குக் கூப்பிடும் அவர்,

”தீயவை செய்தார்க் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அஇஉறைந் தற்று.”

என்ற குறளையும் மேற்கோள் காட்டுவார். ஒரு மனிதன் நடந்து செல்கையில் அவனது நிழல் எப்படி விடாமல் தொடருகிறதோ, அதே போல் அவன் செய்த தீவினைப் பயன்களும் அவனைத் தொடரும் என்று விளக்கமும் கொடுப்பார்.

வாழ்க்கையில் எந்த நிலையிலும் அவர் கூறும் அறிவுரைகள் இந்த ஓரிரு விஷயங்களில் அடங்கி விடும். தீயன செய்யாதே, நம்பிக்கையுடன் இரு இவையே அந்தப் பொதுவான அறிவுரைகள்.

“அப்பா, நான் நன்னாத்தான் படிச்சேன், நன்னாவும் பரீட்சை எழுதினேன், ஆனால் நான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர முடியலப்பா….” பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்த போது கணேஷ் அவன் அப்பாவிடம் அழுதான்.. அவரும் வழக்கம் போல, “நோக்குன்னு இருக்குறத யாராலயும் அபகரிக்க முடியாது… நல்லதையே நெனச்சுக்கோ, நல்லதையே செய்… எல்லாம் நன்னா நடக்கும், நம்பிக்கையைக் கை விடாதே…” பதினைந்து வயதே நிரம்பியிருந்த கணேஷுக்கு அவரின் அறிவுரையின் ஆழம் விளங்கவில்லை. தன் மனக் கிலேசத்தைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறாரே என்று அவர்மீது கோபம் மட்டும் வந்தது…..

“அப்பா, நான் நன்னாக் கஷ்டப்பட்டுப் படிச்சேன்…. ராப்பகலா தூக்கம் முழிச்சுப் படிச்சேன்… தொண்ணூத்திரண்டு பர்ஸெண்ட் தாம்பா…. ஃபார்வர்ட் கம்யூனிட்டி… இஞ்சியரிங்க்கு போறாது…. நான் ஆர்ட்ஸ் படிக்க மாட்டேம்பா……” கணேஷின் அழுகை பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின்போதும் தொடர்ந்தது. அப்பாவின் “நோக்குன்னு இருக்கறத யாராலயும் பறிக்க முடியாது, நம்பிக்கையை மட்டும் கைவிட்டுடாதே…..” அறிவுரையும் தொடர்ந்தது. இதனோடு கூட,

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.”

என்ற குறளையும் உடன் சொன்னார். ”மத்தவாளுக்கு நல்லது பண்ணனும்னு நெனக்கறவாளுக்கு தெய்வம் வரிஞ்சு கட்டிண்டு வந்து ஹெல்ப் பண்ணுமாம், வள்ளுவரே சொல்லியிருக்கார்” என்று விளக்கமும் அளித்தார். வழக்கம் போல், நம் அப்பா பத்தாம் பசலி, நிகழ் காலத் தேவைகளை நிவர்த்தி செய்யத் தெரியாது, பழம்பெருமை பேசும் சாமர்த்தியமற்றவர், நமது உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் இயலாதவர் என்று நினைத்து, வருந்தினான் கணேஷ்.

பல வருடங்களுக்கு இது தொடர்ந்தது. ’நல்ல காலேஜ்ல இஞ்சினியரிங்க் கிடைக்கல, நல்ல வேலை கிடைக்கல, வெளிநாடு போற சந்தர்ப்பம் கிடைக்கல’ என கணேஷின் புலம்பல்கள் தொடர, புதுப்புதுத் திருக்குறளாக அப்பாவும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். “நம்பிக்கையை விட்டுடாதே..” பாடலும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

எப்படியோ வெளிநாட்டு வேலை கிடைத்து, ஊரை விட்டுக் கிளம்பும் சந்தர்ப்பத்திலும், அவரின் பாடலின் தொனி மாறவில்லை. ”கைநிறையச் சம்பாதிக்கிறது பெரிய விஷயமில்லை, தப்புத் தண்டா பண்ணாம இருக்கணும், முடிஞ்ச வரைக்கும் மத்தவாளுக்கு நல்லது பண்ணப் பாரு, இல்லாட்டிக் கூட, உன்னையும் அறியாமக் கூடக் கெடுதல் நடந்துடாம பாத்துக்கோ என்று கூறி விட்டு,

“ஆவியொடு காயம் அழிந்திடினும், மேதினியில்

பாவியென்ற நாமம் படையாதே..”

என்று பட்டினத்தாரையும் துணைக்கழைத்துக் கொண்டார்.

வெளிநாட்டு வாழ்வில் வந்த பல மனக்கிலேசங்களிலும் அவர் தொலைபேசியில் சொன்ன ஒரே அறிவுரை “எந்தக் காரணத்துக்காகவும் நம்பிக்கையைத் தளர விட்டுடாதே… தைரியம் புருஷ லக்‌ஷணம்” என்பதே…..

ர் யூ மிஸ்டர் கணேஷ்?”

டியூட்டி டாக்டரின் கேள்வி கணேஷை உலுக்கி, எழுப்பியது. எத்தனை நேரமாக ஃப்ளாஷ் பேக் ஓடிக் கொண்டிருந்தது என்று அவனுக்கே தெரியாது. உடனடியாகச் சுதாரித்துக் கொண்டு, அவசர அவசரமாக டாக்டரிடம் சம்பிரதாயமாகக் கை குலுக்கிக் கொண்டே, “யெஸ் டாக்டர், ஐ அம் கணேஷ், ஹேவ் பீன் வெய்ட்டிங்க் டூ சீ யூ” எனச் சரளமான ஆங்கிலத்தில் பேசி முடித்தான். அறுபதுகளைத் தொட்டு விட்டு, பல மரணங்களைச் சாவதானமாகப் பார்த்துப் பார்த்துப் பழகியதால், “இது மற்றுமொரு கேஸ்” என மனதில் நினைப்பது அப்பட்டமாகத் தெரியுமளவுக்கு அலட்சியமான முகத்தை வைத்துக் கொண்டிருந்த டாக்டர் சுப்பிரமோனி (கேரளாவைச் சேர்ந்த தமிழர் என்பதாலோ என்னவோ, அவரின் பெயர்ப் பலகை அவரின் பெயரை அப்படித்தான் குறிப்பிட்டது) கணேஷைப் பார்த்துப் பேசலானார்.

“இத பாருங்கோ மிஸ்டர் கணேஷ்…. வாட் ஐ அம் அபவுட் டூ சே… உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியா கூட இருக்கலாம்…. சத்த மனச திடப்படுத்திக்கிங்கோ…”

டாக்டரிடம் பல கேள்விகளைக் கேட்க வேண்டும், எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, அப்பாவை மட்டும் காப்பாற்றி விடுங்கள் என்று மன்றாட வேண்டுமென்றெல்லாம் நினைத்திருந்த கணேஷுக்கு, அவரின் பீடிகை மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. “சொல்லுங்கோ டாக்டர்… அப்பாவுக்கு ஒண்ணும் சீரியஸ் இல்லையே” என எதையும் அறியாத குழந்தை போலக் கேட்கலானான் கணேஷ்.

அவன் கேள்வியைக் கிட்டத்தட்ட முழுவதுமாகவே ஒதுக்கிவிட்டு, டாக்டர், “ஸீ மிஸ்டர் கணேஷ்… உங்க அப்பா இப்போ ஆர்ட்டிஃபிஷியல் ரெஸ்பிரேடரி சிஸ்டம்லதான் மூச்சு விட்டுண்டு இருக்கார்… மோர் தேன் ஃபார்ட்டி எய்ட் அவர்ஸ்… நாப்பத்தெட்டு மணி நேரமா வெண்டிலேட்டர் ஆக்ஸிஜன் பம்ப் பண்ணிண்டு இருக்கு… அப்சலூட்லி நோ இம்ப்ரூவ்மெண்ட்… வி, டாக்டர்ஸ், கால் இட் அ க்ளினிகல் டெத்… ஐம் சாரி டு சே தட் வி காண்ட் ப்ரிங்க் ஹிம் பேக் எனிமோர்….”

பேயறைந்ததைப் போல் முகத்தில் எந்த அசைவுமில்லாமல் டாக்டர் பேசுவதையே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கணேஷின் கண்களிலிருந்து, அவனையறியாமல் கண்ணீர் தாரை தாரையாய் வழிய ஆரம்பித்திருந்தது. “டாக்டர், நீங்கள்லாம் வெறும் டாக்டர்ஸ், நமக்கும் மேல கடவுள்னு ஒருத்தர் இருக்காரே… அவர் அப்பாவப் பொழைக்க வைக்க மாட்டாரா…. லெட்ஸ் ப்ளீஸ் கிவ் இட் அவர் பெஸ்ட்……” விம்மல்களுக்கிடையே அரைகுறை வார்த்தைகளாய்த் தனது இயலாமையை வெளியிட்டுக் கொண்டிருந்தான் கணேஷ்.

“பேசிகலி… ஏஸ் அ லீகல் ஹெய்ர், நீங்க அப்ரூவ் பண்ணினாதான் நாங்க அந்த வெண்டிலேட்டரை ரிமூவ் பண்ண முடியும்… நீங்க வந்தாதான் முடியும்னு இங்க இருந்தவா எல்லாம் சொல்லிட்டா… வீ வேர் ஜஸ்ட் வெய்ட்டிங்க் ஃபார் யூ”…. தனது முப்பது மணி நேரப் பயணம் நரகமாய் மாறிவிட வேண்டாமென்ற நல்ல எண்ணத்தில் தனக்கு அந்த விபரங்கள் முன்பே சொல்லப்படவில்லை என்பதை உணர்ந்தான் கணேஷ்.

“டாக்டர், வேற ஆப்ஷனே இல்லையா….”

பதிலேதும் சொல்லாமல், இல்லை என்ற ரீதியில் தலையசைத்தார் டாக்டர். “அப்பா இஸ் நவ் அலைவ், ரைட்? நான் இப்ப ஒ.கே. சொல்லி நீங்க வெண்டிலேட்டர் எடுத்தாதானே அப்பா…… இல்லன்னா, ஹீ வில் பி அலைவ், ரைட்?” உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனித மனம் இந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தது. “டெக்னிகலி, யெஸ் கணேஷ்… பட்.. ஹி கேன் பி அலைவ் ஏஸ் லாங்க் ஏஸ் வி கீப் த வெண்டிலேட்டர்….. அந்த மாதிரிப் பண்றதுனால எந்த பிரயோஜனமும் இல்ல, ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டேண்ட்”…..

கணேஷின் மனம் சரி என்று சொல்ல ஒப்பவேயில்லை. அவனைப் பொறுத்த வரை அப்படி ஒரு முடிவு எடுப்பது தந்தையைக் கொலை செய்வதற்குச் சமானம் என்பது அவனது உணர்வு பூர்வமான முடிவு. டாக்டர் அவரால் முடிந்த அளவு டிப்ளமேடிக்காக அறிவுரை வழங்குகிறார். அவர் சொல்வதன் உள்ளர்த்தம் “இப்பொழுதே வெண்டிலேட்டரை ரிமூவ் செய்யச் சொல்லிக் கையொப்பமிடு” என்பதே…..

கணேஷுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. டாக்டரின் அனுமதியுடன் ஐ.சி.யூ கதவைத் திறந்து கொண்டு தந்தையின் கால்மாட்டருகே வந்து நிற்கிறான். நான்கில் ஒரு பங்காகச் சுருங்கிய தேகத்துடன், கிட்டத்தட்ட யாரென்றே அடையாளம் கண்டு பிடிக்க இயலாத நிலையில் படுத்திருந்த அப்பாவைப் பார்க்கிறான். அருகிலிருந்த நர்ஸ் அப்பாவின் முகத்தை மெதுவாய்த் திருப்ப, அப்பா கணேஷைப் பார்க்கிறார் – பார்ப்பதாகக் கணேஷுக்குத் தோன்றுகிறது. அப்பாவின் கண்களின் பக்கவாட்டில் கண்ணீர் வழிகிறது, கணேஷின் உள்மனதில் அப்பாவின் குரல் ரீங்காரமிடுகிறது “எந்த சந்தர்ப்பத்திலயும் நம்பிக்கையை மட்டும் கைவிட்டுடாத… நல்லதையே செய்”

”டாக்டர், ப்ளீஸ் ரிமூவ் த வெண்டிலேட்டர்….. “ என்று உறுதியாகச் சொல்கிறான் கணேஷ். உடனடியாக இதை எதிர்பார்த்திராத டாக்டர், சற்று சுதாரித்துக் கொண்டு, அதிர்ச்சியை முகத்தில் காட்டாது, “ஒ.கே. கணேஷ், நீங்க கொஞ்சம் வெளியே வெய்ட் பண்ணுங்க…” என்று சொல்லி முடிக்குமுன், “டாக்டர், ப்ளீஸ் ஐ வாண்ட் டு பி ஹியர்…. ஐ வாண்ட் டூ வாட்ச் அண்ட் அப்சார்ப் ஹிஸ் லாஸ்ட் ப்ரெத்… “ அடக்க முடியாத அழுகைக்கு மத்தியில் சொல்லி முடிக்க, அப்பாவின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சிப் பெருக்கை முழுவதுமாய் உணரும் அளவு ஞானத்தை அன்று கணேஷ் பெற்றிருக்கவில்லை.

  • வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. vince says:

    heartfelt … Experienced similar incidents n my dads life too ( cant forget that 2nd floor ICU in appollo) … but not like Ganesh … we force my Dad to go for another formality and that made him immobilize for rest of his life ( intake through pipes …etc) … he did mention that a day he left us …
    thanks for the story …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad