\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வீட்டுக்கொரு ஜீனோ

Filed in இலக்கியம், கட்டுரை by on January 29, 2017 0 Comments

எழுத்தாளர் சுஜாதாவின் ‘என் இனிய இயந்திரா’, ‘மீண்டும் ஜீனோ’ ஆகிய கதைகளின் ரசிகர் என்றால், இன்னமும் ஜீனோ என்ற பொம்மை நாய்க்குட்டியை மறந்திருக்க மாட்டீர்கள். நாயகியுடன் எப்போதும் இருக்கும் நாய்க்குட்டி, புத்தகங்களை வாசித்துக் கொண்டு நாயகிக்குப் பல தகவல்களையும், அறிவுரைகளையும் அள்ளிக் கொடுத்துக் கொண்டு வரும்.

வரும் நாட்களில், நம் வீட்டிலும் இது போன்ற ஒரு ஜீனோ வரலாம்.

முன்பெல்லாம் ராஜா, ரவி, ரமேஷ் என்ற பெயரில் வீட்டுக்கு ஒருவர் இருப்பார். வருங்காலத்தில், இதே போல் வீட்டுக்கு ஒரு அலெக்ஸா, ஜார்விஸ் இருப்பார்கள். இதெல்லாம் யார் என்று கேட்டீர்களானால், உங்களுக்கான கட்டுரை தான் இது.

இவர்களெல்லாம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் எனப்படும் ஏ.ஐ. டெக்னாலஜியின் குழந்தைகள். மேலும் தொடர்வதற்கு முன்பு ஏ.ஐ. பற்றிப் பார்த்து விடலாம்.

செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம் ஒன்றும் சமீபத்திய வரவல்ல. இது பல ஆண்டுகளாக உள்ளது தான். ஏற்கனவே, இதன் வளர்ச்சியின் பலன்களை நாம் அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதைப் பின்புலமாகக் கொண்டு சமீப காலமாக, மார்க்கெட்டில் களமிறக்கி விடப்பட்டுள்ள மற்றும் வரப் போகும் சாதனங்களைப் பற்றியதே இக்கட்டுரை.

செயற்கை நுண்ணறிவு என்பது மனிதனைப் போல், ஒரு சாதனத்தைச் சிந்திக்க வைப்பது. மனிதன் எப்படிச் சிந்திக்கிறான்? தன்னிடம் உள்ள தகவல்களைக் கொண்டு. தான் பெற்ற அனுபவங்கள் கொண்டு. அது போலவே, ஒரு சாதனத்தையும் தகவல்களைத் திரட்டி, அதை முன்மாதிரியாகக் கொண்டு முடிவெடுக்க வைப்பதே செயற்கை நுண்ணறிவு விஞ்ஞானிகளின் தொடர் வேலையாக உள்ளது.

இதோ, இந்தக் கட்டுரையை அலை பேசியில் உள்ள தமிழ் விசைப் பலகை மூலமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் தமிழை எப்படிக் கோணல் மாணலாக எழுதினாலும், அதற்குரிய தமிழ் எழுத்துகளை எடுத்துக் கொண்டு கட்டுரையை உருவாக்கி விடுகிறது. முதலில் அதற்குச் சரியாகப் புரியாத எழுத்துகளை, போகப் போக நான் சரி செய்வதை வைத்து, நாளடைவில் அதுவே சரி செய்து விடுகிறது. நான் தவறுகளைத் திருத்துவதைக் கொண்டு, அதற்கு எது சரி, எது தவறு என்று தெரியப் போய், பிறகு அதுவே என் எழுத்துகளைத் திருத்தி விடும். இதைத் தான் செயற்கை நுண்ணறிவு என்கிறார்கள்.

நமது அலைபேசியில் இருக்கும் பாடல் கேட்க உதவும் செயலியில், நீங்கள் இதைக் கவனித்திருக்கிறீர்களா? பாடல்களை உணர்வுகளின் வழியே, வகைப் பிரிக்கும் நிரல் இருக்கும். Happy தேர்வு செய்தோமானால், சந்தோஷமான குத்துப் பாடல்களும், Sad என்றால் சோக கீதங்களும் இசைக்கும். இனி அடுத்த கட்டமாக, நாம் தேர்வு செய்யத் தேவையில்லாமல், அதுவே நமது உணர்வுகளைப் புரிந்து கொண்டு பாடும்.

இப்போது, செயற்கை நுண்ணறிவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இயற்கையாக அமைந்திருக்கும் மனிதனின் சிந்திக்கும் திறனை, எந்நாளும்

செயற்கை நுண்ணறிவால் மிஞ்சவோ, தொடவோ முடியாது என்பது என் எண்ணம். எந்தளவுக்கு அதை நெருங்குகிறோம் என்பதில் தான் இதன் வளர்ச்சி இருக்கப் போகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கு எண்ணிலடங்கா வழிகளில் இருப்பதால், செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் தொடர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

சரி, இப்போது நாம் எங்கு இருக்கிறோம்? சென்ஸர் (sensor), கேமரா (camera), வாய்ஸ் ரெகக்னிஷன் (voice recognition) போன்றவற்றில் இருக்கும் வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவுக்கு மேலும் உதவுகிறது. எப்படி நமது கண், காது போன்ற உறுப்புகள், நமது சிந்தனைக்கு உதவுகிறதோ, அது போல் இந்த நுண் வன்பொருட்கள், செயற்கை சிந்தனைக்கு உதவுகின்றன.

கடந்த சில வருடங்களாக, நிறைய மின்னணு உதவியாளர்கள், மனிதனுக்கு உதவியாகச் சில வேலைகளைச் செய்ய உருவாகி வருகிறார்கள். ஒவ்வொருவராய் பார்க்கலாம்.

அலெக்ஸா என்பது அமேசானின் கணினிக் குரல் சேவை. இந்தச் சேவையை எந்தச் சாதனத்துடனும் இணைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கியுள்ளனர். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு, அமேசான் எக்கோ ஸ்பீக்கர் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம். இந்த ஸ்பீக்கர், ஒரு அசிஸ்டென்ட் போல, நாம் கேட்கும் தகவலைக் கொடுக்கும். நமது ஆணைக்காக எப்போதும் இதிலிருக்கும் மைக் காத்திருக்கும். உதாரணத்திற்கு, நேரம் கேட்டால் சொல்லும். தட்பவெப்பம் கேட்டால் சொல்லும். ஏதாவது பாட்டைக் கேட்டால் பாடும். காலையில் எழுப்பி விடச் சொன்னால், எழுப்பி விடும். ஆனால், இதற்கு எப்போதும் இணையம் இருக்க வேண்டும். இந்தக் குரல் சேவை, அதற்கான தகவல்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து தருவிக்கப்பட்டு, ஸ்பீக்கர் மூலமாகப் பேசப்படுகிறது.

இப்போதைக்கு ஸ்பீக்கர் போல் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. போகப் போக, பல்வேறு டிசைன்கள் வரலாம். ஜீனோ வடிவில், ஒரு நாள் தமிழிலும் பேசும். அமேசான் ஆரம்பித்து வைத்த இந்த விளையாட்டில், தற்சமயம் கூகிளும் சேர்ந்துள்ளது. ஹோம் என்ற பெயரில் கூகிள் வெளியிட்டுள்ள ஒலிப்பானுக்குக் கூகிளாண்டவரின் நேரடி அருள் இருப்பதால், இது மேலும் ஃபிலிம் காட்டும்.

இணையத்தில் டைப் செய்து தேடுவதற்குப் பதில், குரல் வழியே கேள்விகளை அனுப்புகிறோம், அவ்வளவுதானே? என்று கேட்கலாம். இது வெறும் குரல் வழித் தேடல் மட்டும் அல்ல. அடுத்தடுத்து நாம் கேட்கும் கேள்விகளைப் புரிந்து கொண்டு, அதனிடையே இருக்கும் தொடர்பைப் புரிந்துக் கொண்டு பதிலளிக்கும். எளிய உதாரணத்திற்கு, “இன்னைக்கு எவ்ளோ வெயிலடிக்கும்?” என்று கேட்டால், அன்றைய தினத்தின் தட்பவெப்பத்தைச் சொல்லும். “நாளைக்கு?” என்று கேட்டால் போதும். அடுத்தத் தினத்தின் நிலவரத்தைக் கூறும் . “நாளைக்கு எவ்ளோ வெயிலடிக்கும்?” என்று நீட்டி முழக்க தேவையில்லை. கேள்விக்கு முன்பு, ‘அலெக்ஸா’ என்றோ, ‘ ஹாய் கூகிள்’ என்றோ மட்டும் குறிப்பிட வேண்டும். அப்போது தான் அதற்குக் கேள்வி கேட்பது தம்மிடம் என்று புரியும்.

இதை ஒரு உதவியாளர் போலப் பயன்படுத்தலாம். நம்முடைய தினசரி அப்பாயிண்மெண்ட் என்ன, அலுவலகத்திற்குச் செல்ல எவ்வளவு நேரம் எடுக்கும், ஒரு பாட்டு பாடுறீ என்று தகவலும் கேட்கலாம், பொழுது போகாமல் மொக்கையும் போடலாம். இதற்கு மேல், இவற்றை நம் வீட்டில் இருக்கும் மற்ற சாதனங்களை இயக்கவும் பயன்படுத்தலாம். கேட்க மேஜிக் போல இருக்கிறதல்லவா? அதுவும் சாத்தியம். ஸ்மார்ட் ஹோம் டெக்னாலஜி பற்றி இன்னொரு கட்டுரையில் காணலாம்.

இப்படி அமேசானும், கூகிளும் ஹோம் அசிஸ்டெண்ட் டெக்னாலஜியில் கலக்கிக் கொண்டிருக்க, ஃபேஸ்புக்கும் ஜார்விஸ் என்ற பெயரில் களம் இறங்க போகிறது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், தனது 2016 ஆண்டின் குறிக்கோள் என்று ஜார்விஸ் என்னும் ஏ.ஐ. உதவியாளனை உருவாக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார். இது மார்கன் ஃப்ரீமேன் குரலில் நமது கட்டளைக்குக் கட்டுப்படுமாம். வந்திருப்பவர் முகத்தைப் பார்த்தே கதவைத் திறந்து விடுவது, குழந்தைக்குப் பாட்டு பாடியே தூங்க வைப்பது, பசிக்கிறது என்றால் ப்ரெட் சுட்டுத் தருவது, டி-சர்ட் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது (இது எதுக்கு மார்க்குக்கு? எப்படியும் ஒரே கலர்ல தான் டி.சர்ட் போடுவாரு!!) எனப் பல வேலைகளைச் செய்யும் என்று மார்க் சொல்லுகிறார். நமது சுற்றம் அனைத்தும் ஃபேஸ்புக்கில் கிடப்பதால், அவர்கள் வீட்டு லைட்டையும் நாமே அணைக்கும் நிலை வருவதற்கு அதிக நாட்கள் எடுக்காது.

இவை அனைத்தும் பில் கேட்ஸ்க்கும், அம்பானிக்குமான டெக்னாலஜியாக மட்டும் இருக்கப் போவதில்லை. சாமானியருக்கும் இவ்வசதிகள் கிடைக்கும் என நம்பலாம். சாமானியர்க்கும் பயன்படும் விதத்தில் இருக்கும் போது தான், விஞ்ஞானத்தின் பலன், மானுட குலத்திற்குப் பயன்படுகிறது என்று எடுத்துக் கொள்ள முடியும். இது போன்ற சாதனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கும், வயதானவர்களுக்கும் அளிக்கக்கூடும் பலன்களை நினைத்துப் பாருங்கள்.

அதே சமயம், இவை வெறும் கேளிக்கைச் சாதனங்களாகவும், சோம்பேறித்தனத்தை ஊக்குவிக்கும் இடியட் இயந்திரங்களாகவும் மட்டும் நின்று விடக் கூடாது. மனிதனின் அன்றாட வேலைகளைச் சுலபமாக்கி, அவன் தனது கவனத்தை மேலும் பல முக்கியச் சமூகத்திற்குத் தேவையான சிந்தனைகளில், செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள உதவ வேண்டும். அவ்வாறு உதவுமானால், இச்சாதனங்களை இரு கை கூப்பி வரவேற்பதில் தவறேதும் இல்லை.

– சரவணகுமரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad