\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினஹஹா நீர்வீழ்ச்சி  (Minnehaha falls)

மின்னியாபொலிஸில் வாரயிறுதியில் குடும்பத்துடன் எங்குச் செல்வது என்று ரொம்பவும் குழம்ப வேண்டியதில்லை. மதிய உணவு தயார் செய்து கொண்டு எங்காவது ஒரு ஏரிக்கரையோரம் தஞ்சம் புகுந்து விடலாம். உட்கார்ந்து சாப்பிடுவதற்குத் தயார் நிலையில் மேஜை நாற்காலி, குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுக் கருவிகள், பெரியவர்கள் நடமாட நடை பாதை எனச் சகல அம்சங்களும் இருக்கும்.

மினஹஹா நீர்வீழ்ச்சியும், அது அமைந்திருக்கும்  மினஹஹா பூங்காவும் அருமையான  நல்ல வாரயிறுதிப் புகலிடங்கள். மினியாபொலிஸ் நகருக்குள்ளேயே இருக்கும் சிறு நீர்வீழ்ச்சி இது. மினடோங்கா ஏரியில் (Lake Minnetonka) தொடங்கும் மினஹஹா சிற்றோடை, நகரில் இருக்கும் பிற ஏரிகளைக் கடந்து, இங்கு நீர்வீழ்ச்சியாக விழுந்து, பிறகு அருகில் இருக்கும் மிஸ்ஸிசிப்பி ஆற்றில் சேர்கிறது.

பிரமாண்டமான நயகரா நீர்வீழ்ச்சி இருப்பதும் அமெரிக்கா தான் என்றாலும், அமெரிக்காவில் நீர்வீழ்ச்சி என்றால் கொஞ்சம் எதிர்பார்பைக் குறைத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். எப்படி நமது நாயகிகள் அனைவருமே நயன்தாராவாக இருப்பதில்லையோ, அதுபோல் இங்கிருக்கும் நீர்வீழ்ச்சிகள் அனைத்துமே நயகராவாக இருப்பதில்லை!!

தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்தாலும் சரி, பெருக்கெடுத்துப் பொங்கி விழுந்தாலும் சரி, ஆங்கிலத்தில் அதன் பெயர் ஃபால்ஸ் (falls) தான். அதனால் எந்த நீர்வீழ்ச்சி என்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் செல்வது நன்மை பயக்கும் என்பது நம் அனுபவம்.

இவ்வளவு பீடிகை போடுவதால், மினஹஹா நீர்வீழ்ச்சி ரொம்பவும் சிறியதாக இருக்குமோ என்று எண்ணி விட வேண்டாம். இது ஒரு நடுத்தர வகை நீர்வீழ்ச்சி. புகைப்படங்கள் எடுப்பதற்கு அருமையான இடம். நிச்சயதார்த்தம், கல்யாணம் என்றால் விசேஷ உடைகளுடன் புகைப்படம் எடுக்க உள்ளூர்வாசிகள் கேமராவும் கையுமாக வந்து விடுவார்கள். அதன் பிறகு, பிள்ளை குட்டிகளோடு சில வருடங்களுக்கு வருவார்கள்.

இந்தப் பூங்காவின் இன்னொரு சிறப்பம்சம், இங்கு வாடகைக்குக் கிடைக்கும் சைக்கிள்கள். பேருதான் சைக்கிள். ஆனால், நம்மூர் ரிக்ஷா மாதிரி இருக்கும். ஒன்றிரண்டு குடும்பங்கள் சேர்ந்துச் செல்லலாம். அனைவரும் அழுத்துவதற்குப் பெடல்கள் இருக்கும். அனைவரும் அழுத்தினால், வண்டி வண்டிக்கான வேகத்தில் செல்லும். ஒருவர் அழுத்த, மற்றவர்கள் எல்லாம் அழுத்துவது போல் நடித்தால், பாதசாரிகளைக் கடந்து செல்வதே பெரும்பாடாகி விடும். எப்படி இருந்தாலும், உடற்பயிற்சியுடன் கூடிய நல்லதொரு வேடிக்கை விளையாட்டு.

இவை தவிர, லாங்ஃபெல்லோ பூங்கா (Longfellow park), பெர்கோலா பூங்கா (Pergola park) எனப் பிற பூங்காகளும் இந்த வளாகத்தில் உள்ளன. மின்னியாபொலிஸை சிகாகோவுடன் இணைக்கும் இருப்புப்பாதை தொடங்கப்பட்ட சமயத்தில் இருந்த இரயில் நிலையமும், வரலாற்றுச் சாட்சியாக இங்கு இன்னமும் பாதுகாக்கப்படுகிறது.

Minnehaha Falls

இது 1889 ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டேட் பார்க். அந்தச் சமயத்தில், நியூயார்க்கில் மட்டும் தான், ஸ்டேட் பார்க் இருந்தது. பாஸ்டன், சிகாகோ மற்றும் பல வட அமெரிக்க மாகாணங்களில், பல பூங்காக்களை அமைத்துக் கொடுத்த, புகழ் பெற்ற நிலப்பரப்பு வடிவமைப்பு வல்லுனரான கிளீவ்லாண்ட்(Cleveland) வசம் இந்தப் பூங்காவை உருவாக்கும் பணி தரப்பட்டது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் பெரும் அக்கறை கொண்ட கீளிவ்லாண்ட், இதன் இயற்கை அம்சம் குறையாமல் இந்தப் பூங்காவை அமைத்துக் கொடுத்தார். மினியாபொலிஸின் மத்தியப் பகுதியில், மிஸ்ஸிசிப்பி ஆற்றைச் சுற்றி அமைந்திருக்கும் ஏரிகளை இணைக்கும் பாதையைப் போட்டுக் கொடுத்தவரும் இவரே.

இதற்கான திட்டமிடல் நடக்கும் சமயத்தில், ஒரு திருவாளர் அருவியின் கீழ்புறத்தில் புகைப்படம் எடுக்க ஒரு மேடை அமைத்துக் கொடுக்கலாம் என்றாராம். கிளீவ்லாண்ட், தேவையில்லாமல் எந்தவிதக் கட்டுமானமும் தேவையில்லை என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டாராம்.

அப்படிப்பட்ட ஒரு நல்ல மனுஷன் உருவாக்கிக் கொடுத்த பூங்கா இது. பார்க்காதவர்கள், ஒரு எட்டு போய்ப் பார்த்துட்டு வாங்க!!

  • சரவணகுமரன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad