\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஃபெட்னா பேரவை விழா – தயாராகும் மின்னசோட்டா

 

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெட்னாவின் (FETNA) பேரவை விழா, இந்த ஆண்டு மின்னசோட்டாவில் மினியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரில் (Minneapolis Convention Center) நடைபெறவுள்ளது. இதற்காக அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் ட்வின் சிட்டீஸிற்கு ஜூலை முதல் வாரம் (July 1st and 2nd) வருகை தர உள்ளனர்.

இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக, கயானா நாட்டின் பிரதமர் மோசசு வீரசாமி நாகமுத்து, இலினாய் மாநிலத்தின் கீழவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் டி. ராஜா, நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், ரோகிணி, கிட்டி, மிஷ்கின், எழுத்தாளர்கள் சுகிர்தராணி, சுகுமாரன், மரபிசைப் பாடகர்கள் நல்லசிவம், ஜெயமூர்த்தி, நடிகர் சின்னி ஜெயந்த், திரைத்துறைப் பாடகர் அருண்ராஜா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

“தமிழர் கலையைப் போற்றிடுவோம்!! தமிழர் மரபை மீட்டெடுப்போம்!!” என்னும் கருப்பொருளைக் கொண்டு இவ்விழா நடைபெற இருப்பதால், அது சார்ந்த தலைப்புகளில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ரோகிணி அவர்கள் “தமிழ் மரபுகள் மீட்கப்படுகின்றனவா? அழிக்கப்படுகின்றனவா?” என்னும் தலைப்பில் கருத்துக்களம் நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். கவிஞர் சுகிர்தராணி அவர்கள் “தமிழ் போற்றும் தலைமுறையும் தழைக்காதோ?” என்னும் தலைப்பில் கவியரங்கம் நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

தமிழறிஞர் வானமாமலை அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றிடும் வகையில், அவருடைய மூலக்கதையில் உருவான “மருதநாயகம்” நாடகம் பேராசிரியர் ராஜூ அவர்களின் குழுவினரால் ஃபெட்னா பேரவை விழாவில் மேடையேற்றப்படுகிறது. தமிழர்களின் பலநாள் வெள்ளித்திரை எதிர்பார்ப்பான “மருதநாயகம்”, மின்னசோட்டாவில் அரங்கேறப்போவது இந்த நிகழ்வின் சிறப்பு. இதற்கெனப் பேராசிரியர் ராஜுவுடன், இசை ஆய்வாளர் முருகவேல், ஆய்வாளர் சமணராஜா, ஆராய்ச்சியாளர் சந்தோஷ், முனைவர் பினுகுமார் ஆகியோர் இந்தியாவில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு மின்னசோட்டா வந்தனர். அவர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர்வாசிகள் இணைந்து இதற்கான நாடகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல், தமிழ் நாடகக்கலையின் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றியைம்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அவருடைய “சாரங்கதாரா” நாடகமும் இவ்விழாவில் இடம்பெறுகிறது.

விழாவின் கருப்பொருள் (Theme), சின்னம் (Logo) உருவாக்கத்தில் தொடங்கி, இந்த நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை, கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்னசோட்டா தமிழ்ச் சங்கத்தினர், ஃபெட்னா அமைப்பினருடனும், பிற தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், ஆர்வலர்களுடனும் இணைந்து செய்து கொண்டு வருகின்றனர்.

மின்னசோட்டா மாநில அரசின் நிதி உதவியுடன், இங்கிருப்போருக்குத் தமிழ்ப் பண்பாட்டு இசைக் கருவிகளான பறை, தவில், நாகசுரம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்க, நாகசுர வித்வான் மாம்பலம் ராமச்சந்திரன், தவில் வித்வான் அடையார் சிலம்பரசன், பறைக் கலைஞர் சக்தி ஆகியோர் ஏற்கனவே மினியாபொலிஸ் வந்திருந்து இங்கிருக்கும் ஆர்வமிக்க மாணவர்களுக்குக் கடந்த சில வாரங்களாகப் பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஹாப்கின்ஸ் பள்ளிகளுக்கு, இவர்கள் பயிற்சியளிக்கும் சமயம் ஒருநாள் சென்று வந்தால், நாமிருப்பது அமெரிக்காவா என்ற சந்தேகமே வந்து விடும்.

இந்த இசைக் கலைஞர்களும், இவர்களிடம் பயின்ற மாணவர்களும் இணைந்து, ஃபெட்னா பேரவை விழாவில் இசைக்கப் போகிறார்கள். விருந்தினராக வருகை தரும் மற்ற இசைக் கலைஞர்களுடன் இணைந்தும், இசை நிகழ்ச்சி வழங்கப் போகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு அடுத்த படியாகப் பறைக் குழுக்கள் அதிகம் உள்ள அமெரிக்காவில், முதல் முறையாக இவ்விழாவில் 133 அதிகாரப் பறை முழக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் 133 பறை இசைக் கலைஞர்கள் மேடையில் தோன்றி, பறை இசையில் அதிர வைக்கப் போகிறார்கள். பண்ணிசைப் பாடகரும், பேராசிரியருமான நல்லசிவம் அவர்கள் பண்ணிசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார். ‘நெருப்புடா’ புகழ் அருண்ராஜா காமராஜ், மக்களிசைக் கலைஞர் ஜெயமூர்த்தி, சின்னதிரைப் பாடகர்கள் நிரஞ்சனா, ஸ்ரதா, ராஜகணபதி ஆகியோர் இணைந்து மெல்லிசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்கள்.

மக்களிசையுடன் கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், புலியாட்டம் போன்ற மரபு ஆட்டங்களும் இடம்பெற இருக்கின்றன. இவற்றுடன் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்று தமிழர் நில ஐந்திணைகளையும் கருப்பொருளாகக் கொண்டு ஒரு பரத நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இசையுடன் கூடிய சிலம்ப நிகழ்ச்சியும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழர் மரபுக் கலைகளை, அமெரிக்காவில் உள்ள அடுத்தத் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இலக்கிய ஆர்வலர்களைக் கவரும் இலக்கிய வினாடி வினா, குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி, எழுத்துப்போட்டி, வினாடி வினா ஆகியவை கொண்ட தமிழ்த் தேனீ, திருக்குறளைக் கூறும் குறள் தேனீ ஆகிய போட்டிகளும் இந்த விழாவில் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், இதற்கான பயிற்சிகளில் கடந்த சில வாரங்களாகவே ஈடுபட்டு வருகின்றனர்.

முதன்மை மேடையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற, இணையரங்க நிகழ்வுகளாகப் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கம், திரைப்பட, குறும்படப் பயிற்சிப் பட்டறை, பேலியோ டயட் கருத்தரங்கம், குடியேற்றச் சட்ட மாற்றங்கள் குறித்த கருத்தரங்கம், பண்ணிசைப் பயிற்சிப் பட்டறை எனப் பல்வேறு இணையரங்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. முழு நாள் நிகழ்வாக நடைபெற உள்ள தொழில் முனைவோர் கருத்தரங்கில், அமெரிக்க அவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, ஆச்சி குழுமத் தலைவர் பத்மசிங், வேல்ஸ் பல்கலைகழகத் தலைவர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேச இருக்கின்றனர். அமெரிக்காவில் தொழில் தொடங்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு, இந்த நிகழ்ச்சி பெரும் உதவிகரமாக இருக்கும் என நம்பலாம். திரைப்படப் பட்டறையை இயக்குனர் மிஷ்கினும், பேராசிரியர் சுவர்ணவேலும் நடத்த இருக்கிறார்கள். பேலியோ டயட் கருத்தரங்கில், சமூக வலைத்தளங்களிலும், தமிழகத்திலும் பேலியோ டயட்டைப் பெருமளவு கொண்டு சேர்த்த நியாண்டர் செல்வன் அவர்கள் பேச இருக்கிறார்.

இவ்விழா நடக்கும் சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் மதிய உணவும், இரவு உணவும் விழா நடைபெறும் மினியாபொலிஸ் கன்வென்ஷன் செண்டரில் பரிமாறப்படுகிறது. வெள்ளி இரவு நடக்கும் நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இருந்து ஞாயிறு இரவு வரையான விருந்துகளில் பல தமிழ் மரபு உணவுவகைகளும் பல்வேறு பிற வகை உணவு பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ளன. கருப்பட்டி மைசூர்ப்பாகு, கருப்பட்டிப் பொங்கல், அதிரசம், கேழ்வரகு அடை, பச்சைப் பயிறு பாயாசம், பனங்கற்கண்டு பால் போன்ற சிறப்பு உணவு வகைகளுடன், தலப்பாக்கட்டி கோழிக்கறி, ஆட்டுக்கறி சுக்கா வறுவல், செட்டி நாட்டுக் கோழிக்கறி போன்ற அசைவ உணவு விரும்பிகளைக் கவரும் பலவகை உணவுவகைகளும் உண்டு.

இந்த நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களுக்கான விழா முன்பதிவு, பயண ஏற்பாடுகள், தங்கும் வசதிகள், விழா மலர் தயாரிப்பு, விழா அரங்க அலங்காரம், பரிசுப் பொருட்கள் ஏற்பாடு, போக்குவரத்துத் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல், பயிற்சி, ஒத்திகை என இந்த நிகழ்வில் பங்குபெறும் ஒவ்வொருவரும் கடந்த சில வாரங்களாகக் கடும் உழைப்பைப் கொட்டி வருகின்றனர். மின்னசோட்டாவில் நடைபெறும் மிகப்பெரும் தமிழர் சார்ந்த விழா என்பதால், இதில் கலந்து மின்னசோட்டாவாசிகள் மட்டுமின்றிப் பிற மாகாணத்தினரும் பெரும் ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மின்னசோட்டா வருவது மூலம், அவர்களுக்கு மின்னசோட்டாவைச் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் சேர்ந்து கிடைக்கிறது.

ஆக, மின்னசோட்டாத் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியத் தருணமாக, ஜூலை 1ஆம், 2ஆம் தேதிகளில் நடைபெறும் இந்தப் பேரவை விழா இருக்கப்போகிறது. இதில் கலந்து கொள்ள வாய்ப்புடைய அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்குக்கொள்வது, இவ்விழாவின் வெற்றிக்குச் சாட்சியாக அமையும். இவ்விழாவில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவருக்கும் எமது வாழ்த்துகள்.

  •    சரவணகுமரன்.

 

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Ashok kumar says:

    Wishing all success to the function. The hard effort of the organisers is highly appreciated.

    Ashok kumar.
    Chennai.
    India.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad