\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஓவியா – தி பிக் பாஸ்

சமூக வலைத்தளங்கள் அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. செய்தித் தளங்கள் தினமும் இது குறித்த செய்திகள் வாசித்துக் கொண்டிருக்கின்றன. ஆய்வுக்கட்டுரைகள் குவிகின்றன. ஒப்பீட்டுக் கவிதை பரவலாகப் பரவுகிறது. மீம்ஸ் கொட்டுகின்றன. எல்லாம் ஸ்கிரிப்ட் தான் என்று சொல்லிக் கொண்டே, தவறாமல் பார்க்கிறார்கள். டிஆர்பி எகிறுகிறது. தியேட்டரில் கூட்டம் குறைகிறது. போட்டி சேனல்களில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவ்வேளையில் தினமும் ஒளிபரப்புகிறார்கள். ஆனாலும், பிக் பாஸும் அதன் வெற்றியும் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.

டிவியில் இருந்து சிவகார்த்திகேயனைச் சினிமாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, சினிமாவில் இருந்த கமலஹாசனை டிவிக்குக் கொண்டு வந்த விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றித் தான் எங்கும் பேச்சாக இருக்கிறது.

நாம் புரட்சிப் பெண்ணாகப் பார்த்த ஜுலி, லூசுப் பெண்ணாக மாறி விட்டார். ஜொள்ளுப் பார்ட்டியாக நமக்கு இருந்த நமிதாவின் லொள்ளு தாங்கவில்லை என்கிறோம். எப்போதும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த ஆர்த்தியை, இப்போது பார்த்துக் கடுப்பாகிறோம். சப்பை ஃபிகராகப் பார்க்கப்பட்ட ஓவியாவுக்கு, இப்போது சப்போர்ட் குவிகிறது. எல்லாம் பிக் பாஸுக்குப் பிறகு.

அதிலும், ஓவியாவுக்குச் சமூக வலைத்தளங்கள் எங்கும் ரசிகர் பட்டாளங்கள். ஓவியா கூறும் “நீங்க ஷட்டப் பண்ணுங்க” போன்ற வார்த்தைகளெல்லாம், பஞ்ச் டயலாக்ஸ் ஆக மாறுகின்றன. டி-சர்ட் வாக்கியங்களாக மாறுகின்றன. கூடிய விரைவில் இமான் இவற்றைப் பாடல்களாக மாற்றுவார். வாரா வாரம் அவருக்கு மக்களிடம் இருந்து குவிகிற வாக்குகளைப் பார்த்து, அவருடன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் மட்டுமின்றி, அன்புமணி போன்ற அரசியல்வாதிகளே பொறாமைபட்டுப் பெருமூச்சு விடுகிறார்கள்.

ஹெலன் நெல்சன் என்ற இயற்பெயரைக் கொண்ட ஓவியா, 2007 இல் தனது பதினாறாவது வயதில் சினிமாவில் நடிக்க வந்தார். மலையாளத்தில் ப்ரிதிவிராஜூக்கு ஜோடியாகக் கங்காரு என்ற படத்தில் அறிமுகமானவர், 2010இல் தமிழில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானார். மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சிறு பட்ஜெட் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும், அவர் சினிமாவில் கடந்த 10 வருடங்களில் பெறாத புகழை , பிக் பாஸில் பத்து நாட்களில் பெற்று விட்டார்.

அவரது நேர்மை, வெளிப்படையான பேச்சு, அன்புடன், பரிவுடன் பழகுவது, காலை எழுந்தவுடன் உற்சாகமாக ஆட்டம் போடுவது, மழை வந்து விட்டால் தயங்காமல் சென்று நனைந்து விட்டு வருவது, எரிச்சலடையும் சமயங்களில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவது, கோபமான சந்தர்ப்பங்களில் “நீங்க ஷட்டப் பண்ணுங்க” என்று ‘மரியாதை’யுடன் எதிர்ப்பைத் தெரிவிப்பது, தனக்கெதிராக மொத்தக் குழுவும் இருக்கும் போது அவர்களைத் தைரியமாக எதிர்கொள்வது, தேவைப்பட்டால் தயங்காமல் மன்னிப்புக் கேட்பது என ஓவியாவின் பண்புகள் அனைத்தும் பார்வையாளர்களைக் கவர்ந்து விட்டன ஓவியா ஆர்மி, ஓவியான்ஸ், ஓவியா வெறியர்கள் என்று விதவிதமான பெயர்களில் இவரது ரசிகர்கள் வலைத்தளங்களில் வலம் வருகிறார்கள்.

ஒரு நாள் சக்தியும் ஓவியாவும் ஒரு வாக்குவாதத்தில் இருக்கிறார்கள். ஓவியா மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கிறார். நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்த சக்தி கோபத்தில் ‘அறை விடுவேன்’ என்றவாறு கையை ஓங்க, ‘எங்க அடி பார்க்கலாம்’ என்று எழுந்து அவரது முகத்திற்கு நேராக வந்து நின்றார் ஓவியா. சக்தி தான் இரண்டு அடி பின் செல்ல வேண்டி இருந்தது. தளபதியில் வரும் ‘தொட்ரா பார்க்கலாம்’ சீன் போல இருந்தது. இன்னொரு முறை, அங்கிருந்த திரையில் ஜூலி சொல்லிக்கொண்டிருந்தது பொய் என்று நிரூபணம் ஆகிக்கொண்டிருந்த சமயம், எழுந்து ஜூலிக்கு ஒரு குத்து விடுவது போல் ஆக்ஷன் கொடுத்ததைக் கண்டு, அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, டிவியில் பார்த்துக்கொண்டிருந்தவர்களும் கை தட்டி ஆர்ப்பரித்தனர். அடுத்த நாள், தனது தனிமையை நினைத்துக் கண் கலங்கினால், பார்த்துக்கொண்டிருப்போரும் கலங்குகிறார்கள். இப்படி, ஒரு மாஸ் ஹீரோ இல்லாத குறையை ஓவியா தான் பிக் பாஸில் தீர்த்து வைத்துக்கொண்டிருக்கிறார்.

இது டிவி நிகழ்ச்சிக்கான நடிப்பல்ல. இது தான் அவரது இயல்பு என்று அவருடன் பழகியவர்கள் கூறுகிறார்கள். சென்ற வருடம் தனது தாயை கேன்சரில் இழந்தவர், அவரைக் காப்பாற்றப் பலவாறு போராடி இருக்கிறார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து, தாயைக் காப்பாற்ற முயன்றவரால் அது முடியாமல் போய்விட்டது. இந்த வயதில் தனியாகச் சினிமா போன்ற ஒரு துறையில் தாக்குப் பிடிப்பவரால், பத்துப் பேரைஒரு வீட்டில் தாக்குப் பிடிக்க முடியாமலா போகப் போகிறது? தவிர, இந்த ஆட்டத்தின் விதிமுறையைப் புரிந்து கொண்டு, தனது இயல்பையும் மாற்றத் தேவையில்லாத நிலையுடன் விளையாடுவதால், வாரா வாரம் தனது போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டாலும், மக்களின் பெருத்த ஆதரவு ஓட்டுகளால் அடுத்தடுத்த வாரங்களைச் சிரித்தவாறே கடக்கிறார்.

போகிற போக்கைப் பார்த்தால், ரஜினி, கமலை விட்டுவிட்டு ஓவியாவைத்தான் அரசியலுக்கு அழைப்பார்கள் போல உள்ளது. அரசியல்வாதிக்கே உரிய ஒரு பக்கத் திமிர், மற்றொரு பக்க அரவணைப்பு போன்ற தகுதிகளுடன் இருக்கும் நிலையில் அதிலும் ஜொலிப்பார் என்றே கருத வேண்டி உள்ளது. விஜய் டிவியில் நகைச்சுவை நடிகர்களை ரெடி செய்திருக்கிறார்கள், கதாநாயகர்களை ரெடி செய்திருக்கிறார்கள், இயக்குனர்களை ரெடி செய்திருக்கிறார்கள். கிடைக்கும் வரவேற்பைப் பார்த்தால், ஒரு அரசியல்வாதியையும் ரெடி செய்து விடுவார்கள் போல் உள்ளது. ஓவியா தான், நமக்கு வாய்த்த அடுத்த புரட்சித் தலைவி என்றால், வேறென்ன செய்வது?

எது எப்படியோ, மனித மனங்களின் இயல்பான குணங்களை வைத்துக் கொண்டு, நமது வரவேற்பறையில் ஒரு புதுவித நாடகம் ஓடிக் கொண்டிருக்கிறது. இது வரையிலான காட்சிகளில் இதன் ரசிகர்களைக் கவர்ந்த ஓவியா, அதை இனியும் தொடர்வாரா அல்லது, பாஸின் திரைக்கதை பரமபத ஆட்ட மாற்றத்தில் கீழே விழுவாரா என்று தெரியாது. ஆனால், தற்போதைய சூழலில் தனது இயல்பான, நேர்மையான குணத்தால் மக்கள் மனதில் ‘தி பிக் பாஸ்’ ஆக ஒரு நல்ல இடத்தைப் பிடித்து விட்டார் என்பது தான் உண்மை.

– சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad