\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அழகிய ஐரோப்பா – 4

(அழகிய ஐரோப்பா – 3/அந்த ஏழு நாட்கள்)

முதலிரவு

எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது.

“லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி இருக்கும் என்று தெரியாது” என்றேன்.

“இது பரவாயில்லை சில நேரம் இரண்டு மூன்று மணி நேரம் ரோட்டிலையும் நிக்க வேண்டி வரும்” என்று பயமுறுத்தினார்

ஒரு பத்து நிமிடங்கள் கார் ஊர்ந்து மெதுவாகப் போனது…

எப்படா இந்த ராஃபிக் ஜாம் போகும் என்று பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு நெடுஞ்சாலையில் இறங்கி கார் வேகம் பிடிக்கத் தொடங்கியது.

அமெரிக்க நெடுஞ்சாலைகளுடன் ஒப்பிட்டால் லண்டன் சாலைகள் ஜுஜுபிதான்.

ஆனாலும் ட்ரைவிங்கில் பிடித்த விடயம் ஒன்றைச் சொல்லியே ஆக வேணும். இங்கு வாகனங்கள் இடது பக்கமாகத்தான் போகும். இங்கு அமெரிக்கா போல் எல்லா பக்கத்தாலும் முந்திச் செல்ல முடியாது. டிரைவர் சைடில் மட்டுமே முந்திச் செல்ல முடியும்.  

தேம்ஸ் நதிக்கு மேலால் கார் கடந்து சென்ற போது ஒரு தனிச் சுகம் “படங்களில் மட்டுமே பார்த்து ரசித்த நதி இன்று எனக்குக் கீழே” என்பதை எண்ணியபோது மனதுக்குள் ஒரு பேரானந்தம்..

ஒரு நீண்ட “ரெனல்” கடந்து… (நிலத்துக்கு கீழே உள்ள சுரங்கப் பாதை) ஒரு ஐந்து அல்லது ஆறு நிமிடப் பயணத்தின் பின்னர் டார்ட்போர்ட் இல் உள்ள என் மனைவியின் சித்தியின் வீட்டினைச் சென்றடைந்த போது வரவேற்பு அமர்க்களமாயிருந்தது.

குளித்துவிட்டு வந்தபோது பல வகையான காய்கறி வகைகளுடன் கூடிய கறி, கூட்டு, பழரசம் என விருந்து தடல்புடலாக இருந்தது.

“கலியாணம் முடிஞ்சு பன்னிரண்டு வருஷம் கழிச்சுத்தான் சித்தி வீட்டிலை எனக்கு விருந்து கிடைச்சு இருக்கு” என்றேன்

“உண்மைதான் என்ன” என்றாள் மனைவி

“விருந்து ஓகே ஆனால்… வீர சைவர் போல எல்லாம் சைவமாய் இருக்கே” என்றேன்

“அய்யாக்கு செவ்வாய் கிழமையிலும் மச்சம் கேக்குதோ” என்ற ஒற்றைச் சொல்லில் என்னை அடக்கினாள் மனைவி…

இரவுக்கு சாப்பாட்டுக்கு சிக்கன் கறியுடன் இடியப்பம் என ஜமாய்த்தேன். என் மனைவி மட்டும் செவ்வாய் என அடம் பிடித்தாள்.

மறுநாள் காலையில் லிவெர்பூல் போவதாக இருந்தோம். அங்கு என் மனைவியின் இன்னொரு சித்தியின் மகனைச் சந்திப்பதாக ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.

இரவு பதினோரு மணியைத் தொடுவதற்கு சின்ன முள்ளும் பெரிய முள்ளும் போட்டி போட்டு ஓடிக்கொண்டிருந்தது.  

“எனக்கு நித்திரை வருகுது… படுக்கலாமோ” என்றாள் மனைவி

“அதுக்கென்ன இதுதான் லண்டனிலை நாங்கள் கழிக்கப்போற முதலிரவு” என்றேன்

பயணக் களைப்பினால் பிள்ளைகள் மறுநாள் காலை ஒன்பது மணியாகியும் எழுந்திருக்க மனமின்றி அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

“கொஞ்சம் வேளைக்கு போனால்தான்  நல்லது லிவெர்பூல் போய்வர ஏழு மணித்தியாலம் பிடிக்கும்… “ என்றார் சித்தப்பா.

“இப்ப போனால்தான் மத்தியானச் சாப்பாட்டுக்குள்ள போகலாம்… பிள்ளையள் எழும்பி வெளிக்கிடுங்கோ” என்றபடி என் மனைவி அவசரமாக புறப்படுவதற்குத் தயாரானாள்.

ஒருவாறாக காலை பதினோரு மணிக்கு முன்னதாக வீட்டில் இருந்து கிளம்பியாகி விட்டது.

லண்டனில் வெயில் மினசோட்டாவை விடக் கடுமையாக இருந்தது. நாங்கள் சென்ற காரில் ஏஸி அவ்வளவாக வரவில்லை. கடுமையாக வேர்த்துக் கொட்டியது.

மூன்றரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு நாங்கள் போகவேண்டிய இடத்தில் கார் சென்று நின்றது.

அறுசுவை விருந்துண்டு இரண்டரை மணி நேர பொழுதை மகிழ்வுடன் களித்து மாலை ஐந்து மணியளவில் மீண்டும் வீடு திரும்புவதற்காகக் கிளம்பினோம்.

மாலை நேரம் என்பதனால் சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தன.

அழகிய லண்டன் மாநகரை அடைந்தபோது அகல விரிந்த நடை பாதைகளுடன் கூடிய இடங்கள் கண்ணில் தென்பட்டன.

காரை ஒரு இடத்தில் பார்க்கிங் செய்துவிட்டு இறங்கி நடக்கத் தொடங்கினோம். சாயங்காலத்து லண்டன் பார்ப்பதற்கு மிகவும் அழகானதாக இருந்தது.

தற்செயலாகக் கண்கள் சந்திக்க நேர்ந்த, எதிரே வந்த பெண் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்ந்தாள்.

இங்குள்ள பெண்கள் தங்களை அலங்கரிப்பதற்கு அதிக நேரம் எடுப்பார்கள் போலும். அவர்கள் கடந்து சென்று ஓரிரு நிமிடங்களாகியும் பாடி ஸ்பிரே வாசனை தொடர்ந்து கொண்டிருந்தது.

சாலையின் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு என தனியான தடங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அதைத் தாண்டினால் வீதியோரத்தில் தேநீர் கடைகள் நிறைந்திருந்தன. பிரித்தானியர்களுக்கு தேநீர் மிகவும் பிடித்தமான ஒன்று.

மூன்று தேநீர் சொல்லி விட்டு நடைபாதையின் அருகில் இருந்த காலி நாட்காலிகளில் உட்கார்ந்தோம்.

சிறிது நேரத்தில் தேநீர் வந்தது. அருந்தியபடியே லண்டன் மாநகரின் மாலை நேரத்தின் சுகத்தில் மூழ்கியிருந்தோம்.

தூரத்தில் ஒரு பழுப்பு நிற பெண் வயலினில் புகழ் பெற்ற பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தாள். சரி இனி வெளிக்கிடுங்கோ என்றபடி சித்தப்பா நடக்க, அவரைத் தொடந்து சென்று நாங்களும் காரில் ஏறினோம்.

ஒரு பழமை வாய்ந்த பாலத்தின் மேலாக காரை மடக்கித் திருப்பி அவ்வளவாக வாகன நெரிசல் இல்லாத வண்ணமயமான வீடுகள் நிறைந்த ஒரு குடியிருப்பின் ஊடே ஒட்டிச் சென்றார்.

மூன்று மணிநேர ஓட்டத்தின் பின் வீட்டினை வந்தடைந்த பின் வீட்டினைச் சென்றடைந்தோம். அதன் பின் அவர்களின் சின்ன மகளும் என் இரு குட்டிஸும் செய்யும் குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்தோம். எந்திர மயமான வாழ்க்கைக்குப் பழகிப்போன வாழ்வில் மழலைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புத்தனமும் வெகுவாக ரசிக்கும் படியாக இருந்தது.

அதன் பின் ஒரு குளியல் போட்டுவிட்டு ஃப்ரஷ்ஷாகி டின்னர் சாப்பிடச் சென்றாம்.

“இனி லண்டனில் ஊரைச் சுற்றி பார்க்க வேணும்” என்றாள் என் மனைவி

லண்டனில் என்னென்ன பார்க்க வேண்டும் எங்கு செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்திருந்தோம்.

பயணம் தொடரும்…

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad