குமார்ஸ் தென்னிந்திய உணவகம்
வட அமெரிக்காவில் பல இந்திய உணவகங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு உணவுகளுக்கெனப் பிரத்யேக உணவகமாக, முதலில் டெக்ஸாஸில் தொடங்கப்பட்டு, இன்று அமெரிக்காவில் பல நகரங்களில் கிளை பரப்பி வருகிறது, குமார்’ஸ் தென்னிந்திய கிராமத்து சமையல் முறை உணவகம் (Kumar’s South Indian Village Cuisine).
மினியாபொலிஸ் ஆப்பிள் வேலி பகுதியில் சமீபத்தில் உதயமாகியிருக்கும் குமார்’ஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு. ராமையும், குமார்’ஸ் உணவகத்தின் முதல் கிளையை டெக்ஸாஸில் தொடங்கி, பிறகு பல இடங்களிலும் அமைக்க உதவி வரும் திரு. ப்ரேம்குமாரையும் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
அந்த உரையாடலின் சிறு பகுதி இங்கே,
கேள்வி – குமார்’ஸ் உணவகம் முதலில் டெக்ஸாஸில் தொடங்கிய போது எவ்விதமான வரவேற்பு இருந்தது?
ப்ரேம் – டெக்ஸாஸ் மாநிலத்தில் தமிழர்கள் அதிகம். அதனால் அங்கு வரவேற்பு மிகவும் அதிகமாக இருந்தது. இதுவரை ஆரம்பித்த அனைத்து கிளைகளிலுமே, ப்ளானோவில் ஆரம்பித்த கிளைக்குக் கிடைத்த வரவேற்பு அபரிமிதமானது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம். போலிஸ் எல்லாம் வந்து, ஏதோ பிரச்சினையோ என்கிற அளவுக்குப் போனது. நல்ல கூட்டம். மெனு முழுக்கத் தமிழ் உணவுகளாக இருந்தது மக்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. தமிழ் அல்லாத மற்ற மக்களோ, டிக்கா மசாலா போன்ற ரெகுலர் இந்திய உணவு இல்லாமல், நாட்டுக்கோழி வறுத்த கறி, பரோட்டா போன்றவற்றைப் பார்த்து என்ன, ஏது என்று கேட்டுக் குதூகலம் ஆனார்கள். நம்மூர் சாப்பாடு வந்துருச்சி என்று தமிழ் மக்களுக்குச் சந்தோஷம் தான்.
கேள்வி – மினியாபொலிஸில் தொடங்கிய போது வரவேற்பு எப்படி இருந்தது?
ராம் – மற்ற கிளைகள் தொடங்கப்பட்டபோது கிடைத்த அனுபவங்களின் படி, வரவேற்பு நன்றாக இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான். ஆனால், டாலஸ் மாதிரியான இடங்கள் போல இங்கே தமிழ் மக்களின் எண்ணிக்கை இல்லை. அதனால், எந்த விதத்தில் கூட்டம் வரும் என்பது ஆரம்பிக்கும் வரை கொஞ்சம் நிச்சயமில்லாமல் தான் இருந்தது. ஆனால், எதிர்பார்த்ததைவிட முதல் நாளிலிருந்தே நல்ல கூட்டம் வந்தது எங்களுக்கு வியப்பாகத்தான் இருந்தது. இங்கேயும் ரொம்ப நல்ல வரவேற்பு என்று தான் சொல்லணும்.
கேள்வி – தமிழ்நாட்டு உணவுகளின் சுவையை எப்படி இங்கே கொண்டு வருகிறீர்கள்?
ப்ரேம் – இது எல்லாம் மதுரையில் கடைகளில் போய்ச் சாப்பிட்டுப் பார்த்ததில் இருந்து தான் தொடங்கியது. மதுரை, திண்டுக்கல், கோயமுத்தூர் பகுதிகளில் இருந்து பெரும்பாலான மெனு ஐட்டங்கள் வந்தன. அப்புறம், சேலம் பக்கம், திருப்பூர் பக்கம், பொள்ளாச்சி பக்கம் என்ன கிடைக்கிறது, அங்கு என்ன ஸ்பெஷல் என்று தேடினோம். ஒவ்வொரு பகுதியிலும் நிறைய ஐட்டங்கள் என்று இருக்காது. ஏதாவது ஒன்று ஸ்பெஷாக இருக்கும். உதாரணத்திற்கு, பள்ளிப்பாளையம் சிக்கன் என்று ஒன்று தேங்காய் செதில் செதிலாக வெட்டிப்போட்டு இருக்கும். இந்த மாதிரி ஒவ்வொன்றாகத் தேடி சென்று, சுவைத்துப் பார்த்து உருவானது தான் எங்கள் மெனு.
கேள்வி – நம்ம உணவகத்தில் நீங்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு எது?
ராம் – எனக்குக் கொத்து பரோட்டா ரொம்பப் பிடிக்கும். மதுரை கோரிப்பாளையத்துல எப்படிக் கிடைக்குமோ, அப்படியே நம்ம கடையில் கொத்துப் பரோட்டா கிடைக்கும். எனக்குச் சொந்த ஊர், மதுரை. அங்கே நான் சாப்பிடாத இடம் கிடையாது. அதனால், எனக்கு அங்கிருக்கிற சுவை நன்றாகத் தெரியும். ஆனால், வருகிற வாடிக்கையாளர்களும் அதைப் போன்று தான் சொல்கிறார்கள். அங்கிருக்கும் சுவை போன்றே இங்கு நீங்கள் கொண்டு வந்தது நன்றாக இருக்கிறது என்று சொல்லி பாராட்டிவிட்டு செல்கிறார்கள்.
கேள்வி – உங்கள் உணவகத்திற்கு அமெரிக்கர்களின் வருகை இருக்கிறதா? அவர்கள் இந்த வகை உணவைச் சாப்பிட்டு என்ன சொல்கிறார்கள்?
ராம் – நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு இந்த விஷயத்தில் பயிற்சி அளித்திருக்கிறோம். அதாவது அமெரிக்கர்களுக்கு நம் உணவு முறை பற்றித் தெரிந்திருக்காது. அதனால், நாம் தான் அவர்களுக்கு நம் உணவுகள் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்து, அதைப் பற்றி விளக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். உதாரணத்திற்கு, இரண்டு வாரத்திற்கு முன்பு, பத்து பேர் ஒரு குழுவாக வந்திருந்தார்கள். அவர்கள் சிக்கன் டிக்கா மசாலா போன்ற ஐட்டங்களைத் தான் எதிர்பார்த்து வந்திருந்தார்கள். மெனுவைப் பார்த்துவிட்டு ‘நாங்கள் சாப்பிடுவதில் 2-3 ஐட்டங்கள் தான் இதில் இருக்கிறது. இதெல்லாம் என்ன?’ என்று கேட்டார்கள். நாங்கள் அவர்களிடம் நீங்கள் ‘மினி இட்லி’ யிலிருந்து ஆரம்பிங்க, அது எங்கள் ஸ்பெஷல் என்று அறிமுகப்படுத்தினோம். அதிலிருந்து ஆரம்பித்து, நம்மூர் உணவு வகைகள் நாலைந்து சாப்பிட்டார்கள். அதன் பிறகு, ரெகுலராக வருகிறார்கள். ‘வீகன்’ என்று பார்த்தோமானால், அடிப்படையிலேயே நம்மூர் உணவில் பல ஐட்டங்கள் ‘வீகன்’ என்ற பிரிவில் வந்துவிடும். ‘வெஜ்’ என்று எடுத்தாலும் பல ஐட்டங்கள் உள்ளன. வாராவாரம், ‘வெஜ்’ மீல்ஸ் சாப்பிடவும் அவர்கள் வருகிறார்கள்.
இந்த உரையாடலின் முழுப் பகுதியும், வீடியோ வடிவில் பனிப்பூக்கள் யூ-ட்யூப் சானலில் விரைவில் வெளியாகும்.
குமார்’ஸின் சிறப்பு உணவு வகைகள் என்னென்ன?
சிக்கன் சிந்தாமணி போன்ற காரமான உணவுகளை ஆர்டர் செய்தால் முன்னெரிக்கை கொடுத்து விடுவீர்களா?
தமிழ் மக்களின் உணவு ஆர்வம் எப்படிப்பட்டது?
இது போன்ற உணவகங்கள் நடத்துவதில் உள்ள சிரமங்கள் என்னென்ன?
குமார்’ஸ் அமெரிக்கக் கிளைகள் உருவான கதை?
எதிர்காலத் திட்டங்கள் என்ன?
இது போன்ற பல கேள்விகளும், அதற்கான பதில்களும் இந்த உரையாடலில் இடம்பெற்றுள்ளன.
உணவகத்தின் முகவரி – 14871 Granada Ave, Apple Valley, MN 55124
நேர்காணல் – சரவணகுமரன்
ஒளிப்பதிவு & புகைப்படங்கள் – ராஜேஷ்