\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பெயல் நீர் சாரல் – நூல் நயம்

ஒரு நல்ல கவிதைக்கு உடல், உயிர், உள்ளம், உயிர்த்துடிப்பு எல்லாமே இருக்கிறது. உள்ளடக்கத்துக்கு தகுந்த வடிவமும் (form) வடிவத்துக்கு தகுந்த உள்ளடக்கமும் (content)  பொருத்தமுற அமைந்து விட்டால் அது சிறந்த கவிதையாக அமைந்துவிடும். இந்த வகையில் 42 தனிக் கவிதைகளைக் கொண்டு தொகுத்த கவிஞர் சங்கர் தங்கவேலு அவர்களின் “பெயல் நீர் சாரல்” கற்பனை பொங்கிப் பிரவாகித்து முட்டி மோதும் அருவியாக விழுகிறது. 

எனக்கு தமிழ்க்கவி பிரமிள் அவர்களை மிகவும் பிடிக்கும். `காவியம்’ என்ற தலைப்பில் பிரமிள் எழுதிய;

`சிறகிலிருந்து பிரிந்த 

இறகு ஒன்று

காற்றின் 

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை 

எழுதிச் செல்கிறது’ 

என்ற காலம் கடந்தும் வாழும் கவிதை ஒன்றே அவர் புகழுக்குச் சான்று. கவிஞர் சங்கர் தங்கவேலு அவர்களின்; 

“…விலாசம் கொடுங்கள் 

நகர்ந்த பொழுதுகளையும் 

கரைந்த காலங்களையும் 

மீண்டும் 

ஒருமுறையேனும் மீட்டெடுக்க” 

என்ற வரிகள் தமிழ்க்கவி பிரமிள் அவர்களை ஞாபகப்படுத்துகின்றது. 

“தமிழ் பசி போக்கிய கடல் புறா” 

என்பதில் இவர் சாண்டில்யனின் தீவிர ரசிகன் என்பதும் தெரிகிறது.

கவிஞர் சங்கர் தங்கவேலு அவர்கள் அரசியல் சார்ந்தவரோ என்பதை நான் அறியேன், ஆனாலும் இவருடைய கவிதைகளில் அங்கங்கே அரசியல் வாடை வீசுவதைக் கவனிக்க முடிகிறது. 

“தமிழன் உயிர் அரசியல் 

வியாதிகளின் விற்பனைக்கல்ல” என்ற வரிகள் இதற்குச் சான்று. 

“நான் எரிந்து கொண்டிருக்கும் போது நெருப்பாகத்தானே இருப்பேன்” என்று முன்னெப்போதோ எங்கேயோ படித்ததாக ஞாபகம். அதுபோல் சமகால நிகழ்வுகளிலிருந்து விலகி நிற்காமல், இவருடைய கவிதைகளிலும் முத்துக்குமார், செங்கொடி, விக்னேஷ், பேரறிவாளன், அனிதா , நீட் , நெடுவாசல், ஆழ்துளைக்கிணறு, தேர்தல் மோசடி மற்றும் கதிராமங்கலம் போன்ற சமகால நிகழ்வுகளை – கையறு நிலைகளைப் பேசு பொருளாகக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இவருடைய காதல், காமம் பற்றிய சில கவிதை வரிகளையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டி உள்ளது. 

“…இறுக தழுவிய நிமிடங்கள் 

பரிமாறிய முத்தங்கள்…”

“…பரிதாபப் பார்வை பார்த்தாய்…”

“…முத்தம் கொடு என்றாள் 

கட்டி அணை என்றாள்…”

“குவிந்த அதரங்கள் மட்டும் 

பேசும் வார்த்தைகள்…”

“…இவள் ஒருத்தி தினம்தோறும் 

என் இரவைத் தின்கிறாள்…”

இவ்வாறு காதலை ஏற்றும் மறுத்தும்; மனதுக்குள் புதைத்து வைத்த காதலின் வலிகள் சொன்ன அழகிய கவிதைகள் பல.

“புதிய பதிவர்” , “பூத்ததிங்கே வலைப்பூவில்” ஆகிய இரு கவிதைகளிலும் இவருடைய வலைப்பூ (google blog) அனுபவம் தெரிகிறது. “அழகாய் மனிதர்கள் செதுக்கிய ஓவியம்” , “12C மயிலை பேருந்து” ஆகிய இரண்டு கவிதைகளும் பயண அனுபவம் பற்றியன. 

இன்னும் இயற்கை, பணம், கற்பு, பெண்மை இயலாமை, தமிழ் போன்ற இன்னோரன்ன பேசு பொருட்களைக் கொண்டு கவி படைத்த இவர் ஈழம் பற்றியும் ஈழத் தமிழர்கள் பற்றியும் பேசிய “உண்ணா விரதம்” , “முன்னாள் போராளிகள்…”, “மே 18 ஒரு இந்திய பாவம்”, “நல்ல வேளை தமிழ் நாட்டில் நானில்லை”, “இன்னும் எத்தனை உயிர்கள்”, “நந்திக் கடல்…” போன்ற கவிதைகள் கடல் தாண்டியும் நீளும் இவரின் மனித நேயத்துக்குச் சான்று பகர்வன.

ஒரு கவிஞன் தனது கவிநயத்தை வெளிப்படுத்த சிறந்த உத்தியைக் கையாள்கிறான். “வெற்று தாளில் வெள்ளை எழுத்துக்கள்” என்ற கவிதை கலைப் படிமங்கள் (artistic images) நிறைந்து உயிரோட்டமுள்ள முருகியல் நோக்குடன் சிக்கனச் சொற்களின் வண்ணக் கலவையாகச் சிறகு விரிக்கிறது.

“உங்களுக்கு எதற்கு ஈரம்” என்ற கவிதை தொல்காப்பியர் கூறும் உள்ளுறை உவமம், உவமைப் போலி, இறைச்சி போன்ற குறியீடுகள் (symbols) நிறைந்த கவிதையாக உள்ளது. கவிஞன் தான் கண்ட ஒரு “மரக்கட்டையை” குறியீடாக்கி அதற்கென்று அர்த்தம் கற்பிக்க முயன்று செவிக்கும் மனதுக்கும் மகிழ்வை ஊட்டி விடுகின்ற தன்மையை இக் கவிதையில் காண முடிகிறது.

இன்னும் உவமைகளும் உருவகங்களும் இவருடைய கவிதைகளில் அங்கங்கே அழகு சேர்கின்றன. 

“…மட்டைப் பந்துக் குச்சிகளாய் 

அந்த நட்சத்திரங்கள்…”

“வயலோர வரப்புகள் 

அது அழகாய் 

மனிதர்கள் செதுக்கிய ஓவியம்…”

“நீ ஏன் துன்பச் 

சிலுவைதனைச் சுமக்கிறாய்…” 

இங்கு காட்டப்பட்ட உவமைகளும் உருவகங்களும்; பெரும்பாலானவை எம்முடைய அன்றாட வாழ்வில் பழக்கப்பட்டவையாக இருந்தாலும், அவற்றில் ஒருவகையான புதுமையினைக் காண முடிகிறது. 

எளிமையின் ஒரு பகுதியாக கவிதைகளில் உபயோகிக்கப்படும் சாய்வு (oblique) மொழியின் தாக்கம் ஆங்காங்கே தென்பட்டாலும் கவிதைகளின் வசீகரம் அவற்றை புலப்படுத்தும் விதம் என்பவற்றால் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்திருக்கும் கவிஞர் சங்கர் தங்கவேலு அவர்களின் “பெயல் நீர் சாரல்” பாராட்டுக்குரியதே.

நன்றி 

-தியாவின் பேனா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad