\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினியாபோலிஸ் ஸ்கைவே – சமத்துவ நடைபாதை

skyway001_620x349சென்ற வருடம், ஆகஸ்ட் மத்தியில் வேலை மாற்றம் காரணமாக மினசோட்டா வந்தேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாள், முதன்முதலாக இங்குள்ள அலுவலகத்திற்குச் செல்கிறேன். அலுவலகம் இருக்கும் இடம், மினியாபோலிஸ் நகர மத்தியில் டவுண்டவுனில். ஞாயிற்றுக் கிழமை சாயந்திர வேளையில், அடுத்த நாள் செல்லப்போகும் அலுவலகத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று காரை எடுத்துக்கொண்டு சென்றேன். ஜி.பி.எஸ் வழி காட்ட, அலுவலகம் அருகே சென்று, பிறகு பக்கத்தில் இருக்கும் ஒரு பார்க்கிங்கில் காரை பார்க் செய்து விட்டு, மீண்டும் அலுவலகம் அருகே சென்று சுற்றிப் பார்த்தேன். வானுயர்ந்த கட்டிடம். முதன்முதலாக, டவுண்டவுனில் இருக்கும் அலுவலகத்தில் வேலை பார்க்கப் போவது கொஞ்சம் குறுகுறுப்பாக இருந்தது. என்னதான் நாம் பார்க்கப் போகும் வேலை ஒரே மாதிரி இருந்தாலும், நம்மைச் சுற்றி ஒரு பரபரப்பான உலகம் இருப்பது வித்தியாசமாக இருக்கப்போகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

காரை எடுத்துக்கொண்டு, தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பும் போது, டவுண்டவுனிலேயே எங்காவது சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று ஜி.பி.எஸ்ஸில் தேடினோம். அதில் ஒரு தெரிந்த கடைப் பெயரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அது காட்டிய வழியில் சென்றோம். அது காட்டிய இடத்தில், கடை எதுவும் தெரியவில்லை. டவுண்டவுன் சாலை என்பதால், தொடர்ந்து வாகனங்கள் போய்க்கொண்டே இருந்ததால், காரை ஓரமாக நிறுத்தித் தேடவும் முடியாது. சரி, வேறு ஒரு கடைக்குப் போகலாம் என்று இன்னொரு கடையை ஜி.பி.எஸ்ஸில் தேர்ந்தெடுத்துச் சென்றால், அங்கும் கடையைக் காணவில்லை. கடை மூடியிருந்தால் பரவாயில்லை, கடை இருக்கும் சுவட்டையே காணவில்லையேஎன்று நொந்துக்கொண்டும், இது என்னடா வித்தியாசமான ஊராய் இருக்கிறதே என்று வியந்து கொண்டும் டவுண்டவுனில் இருந்து கிளம்பினோம். கடையைக் காணவில்லை என்று கம்ப்ளெயிண்டா கொடுக்க முடியும்?

அடுத்த நாள், அலுவலகத்தில் பணியில் சேர்ந்துவிட்டு, ஒரு நண்பரைக் கூட்டிக்கொண்டு, ‘கோ கார்ட்’ எனப்படும் உள்ளூர் பேருந்தில் சென்று வருவதற்கான மின்னணு அட்டையை வாங்கச் சென்றோம். இரண்டு சாலைகளுக்கு அப்பால் இருக்கும் கட்டிடத்திற்குச் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், நண்பர் சாலையில் இறங்கவே இல்லை. கட்டிடங்களுக்கு உள்ளேயே சில படிக்கட்டுகளில் ஏறினோம், இறங்கினோம். கட்டிடங்களுக்கு இடையேயான, இணைப்புப் பாதை வழியே சாலையைக் கடந்தோம். நாங்கள் போக வேண்டிய கட்டிடத்தை அடைந்தோம். அப்போது தான், நண்பர் அந்த வார்த்தையைச் சொல்ல, நான் முதன்முதலில் கேட்டேன்.

”ஸ்கைவே”.

இங்குப் பெரும்பாலான கட்டிடங்கள், இரண்டாம் தளத்திற்கு இடையேயான பாலங்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதனால், ஸ்கை வே. ஆனால், சில கட்டிடங்களில் பாதை தரை வழியாகவும், சில இடங்களில் சுரங்கமாகவும் செல்கிறது. மொத்தத்தில், கட்டிடங்களிடையேயான உள் வழி பாதை என்பதால், அக வழிப் பாதை எனலாமோ?

மின‍சோட்டா, குளிருக்குப் பெயர் போன மாநிலம். வருடத்தில் பெரும்பான்மையான நாட்கள் குளிரும். குளிரும் என்றால் ‘குளிரும்’ . குளிர்காலத்தில், ஜெர்கின், கிளவுஸ் எனச் சில பல இன்ச்கள் தடிமனில் உடலைக் காத்தாலும், முகத்தைக் காக்க ஹெல்மெட் போட்டுக் கொண்டு வெளியில் நடமாட முடியாதல்லவா? அதனால், கடும் குளிர்காலத்தில் மினசோட்டாவாசிகள் சில நிமிடங்களுக்கு மேல் வெளியில் தலை காட்ட மாட்டார்கள். (காட்ட முடியாது!!!). இந்த நிலையில், டவுண்டவுன் போன்ற இடங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு என்ன செய்வது?

இந்தக் கேள்விக்குப் பதிலாக, ஒரு புண்ணியவான் யோசித்தது தான் – ஸ்கை வே. தீர்க்கதரிசியாக யோசித்த அந்த புண்ணியவான் பெயர் லெஸ் பார்க் (Les Park).

ஓகே. வரலாற்றைப் பார்ப்போம் அமைச்சரே!!!. இந்தப் பாதை அமைப்பு, அரசால் உருவாக்கப்பட்டது அல்ல. அரசுக்குச் சொந்தமானதும் அல்ல. கட்டிடங்களை இணைக்கும் பாதைகள் அனைத்தும் அந்தந்தக் கட்டிடங்களுக்குச் சொந்தமானது. இவையனைத்தும் மொத்தமாக ஒரே சமயத்தில் உருவாக்கப்பட்டதல்ல. ஐம்பது வருடங்களுக்கு மேலாக, ஒவ்வொன்றாக அமைக்கப்பட்டு, இன்று 8 மைல் தூரத்தைக் கடக்கும் வண்ணம் வளர்ந்துள்ளது. இதுதான் உலகில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட ஸ்கைவேக்களில் பெரியது. என்பது மினியாபோலிஸில் இருப்பவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. ஆக, மின்னியாபோலிஸ் ஸ்கைவேயில் நடக்கும்போது நினைவில் வைத்துக் கொள்ளவும் – நீங்கள் உலக பிரசித்தி பெற்ற ஒன்றில் நடந்து பெருமை சேர்த்துக் கொள்கிறீர்கள் என்று!!! (கனடாவில் உள்ள ஸ்கைவேயின் நீளம் 11 மைல்கள், ஆனால் அவை முழுவதும் தொடர்ச்சியாக இல்லை)

ஏன் ஸ்கைவே? முன்பே சொன்னது போல், குளிரைத் தாக்குப்பிடித்து மாமூல் வாழ்க்கையை வாழத்தான். அலுவலகங்கள், கடைகள், உணவகங்கள், அடுக்குமாடி வீடுகள் – இவையனைத்தும் இந்த ஸ்கைவேயினால் இணைக்கப்பட்டுள்ளன. அதனால், டவுண்டவுனில் வசிப்பவர்களும், வேலைக்கு வருபவர்களும் குளிர்காலத்தில் குளிருக்குப் பயந்து எதையும் இழக்கத் தேவையில்லை. மற்ற இடங்களில் வசிப்பவர்கள், வீட்டை விட்டு வெளியே சென்றாலே, தடிமனான ஜாக்கெட்டுடன்தான் வாசலைத்தாண்டிக் காலை வைக்க முடியும். இங்கு டவுண்டவுனில் வசிப்பவர்கள் மெல்லிய சட்டையுடனேயே ஸ்கைவே உபயத்தில் கட்டிடங்கள் மட்டுமல்லாமல், குளிர்காலத்தையே தாண்டிவிடலாம். ஜாக்கெட் செலவு மிச்சம். ஆக, மாமூல் வாழ்க்கையில் நாம் கடக்கும் வீடு, அலுவலகம், மளிகைக் கடை, உணவகம், வங்கிகள், மருந்துக்கடை, தபால் அலுவலகம், டீக்கடை, முடிவெட்டுமிடம், துணிக்கடை, புத்தகக்கடை, அரசு அலுவலங்கள், ஜிம், விளையாட்டு அரங்கங்கள், கல்லூரி, பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிறுத்தங்கள் என அனைத்தும் ஸ்கைவேயினால் இணைக்கப்பட்டுள்ளன. கட்டிடங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் குட்டி உலகம் இது.

இப்போது புரிகிறதா, முதல் பத்தியில், நான் ஜி.பி.எஸ்ஸில் கடைகள் தேடிய போது அது ஏன் கண்ணாமூச்சி காட்டியது என்று?. கடைகளோ, கட்டிடத்திற்குள்ளே முதல் தளத்திலோ, இரண்டாம் தளத்திலோ உள்ள ஸ்கைவே பாதையில் இருக்கும். நாம் ரோட்டில் தேடினால், எப்படிக் கிடைக்கும்?

முதல் ஸ்கைவே பாதை திறக்கப்பட்டது – 1962இல். அதன் பிறகு, ஒவ்வொரு கட்டிடமாக,  கட்டிட உரிமையாளர்களின்  சொந்த விருப்பத்தின் பேரில், ஸ்கைவேயால் இணைக்கப்பட்டன. பெரும்பாலான முக்கியக் கட்டிடங்கள் அனைத்திற்கும் ஸ்கைவே மூலமாகவே சென்றுவிடலாம். ஒரு சில கட்டிடங்களே இதற்கு விதிவிலக்கு. அவற்றுக்கும் அவற்றின் பக்கமிருக்கும் கட்டிடம் வரை சென்று விட்டு, பிறகு சாலை வழியே செல்லலாம். டவுண்டவுனின் முக்கிய மருத்துவமனை ஒன்று, அவ்வாறு இணைக்கப்படாதது ஒரு பெரிய குறை. அதே சமயம், சில கட்டிடங்கள் நான்கு திசையிலும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஊருக்கு வந்த நாள் முதல், ஸ்கைவே மேல் இருக்கும் ஈர்ப்பு எனக்குச் சற்றும் குறையவேயில்லை. டவுண்டவுனில் இருக்கும் பெரும்பாலான முக்கியக் கட்டிடங்கள் ஸ்கைவேயினால் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்கைவே வழியே, கிட்டத்தட்ட டவுண்டவுனைச் சுற்றி வந்து விடலாம். வாக்கிங் போக ஆசைப்படும் என்னைப்போன்றவர்களுக்கு இது மிகப்பெரிய வரபிரசாதம்.

ஆரம்பத்தில் நான்  இதில் நடப்பது இயற்கைச் சூழலில் நடப்பது போல் இருக்குமா என்று யோசித்ததுண்டு. குளிர்காலத்தில் வெளியே நடப்பது இயலாத காரியம் என்பது மட்டும் இல்லாமல், வேறு சில சாதக அம்சங்கள் ஸ்கைவே நடையில் இருக்கின்றன. உதாரணத்திற்கு, வித விதமான கட்டிடங்களும் வகை வகையான மனிதர்களும் என்றும் சலிப்பதில்லை மேலும் சிக்னலில் காத்திருக்க வேண்டியது இல்லை, மழையில் நனைய வேண்டியது இல்லை, வெயிலில் காய வேண்டியது இல்லை, போக்குவரத்துப் புகையைச் சுவாசிக்க வேண்டியது இல்லை, உடல் தாக்குப்பிடிக்கும் சீரான தட்பவெட்பம் என நிறைகள் நிறைய. தவிர, வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லச் சில வழிகள், அமைதியாக யோசித்துக் கொண்டே நடக்கச் சில வழிகள், முப்பது நிமிட நடைக்கு ஒரு வழி, ஒரு மணி நேர நடைக்கு ஒரு வழி, திரும்பி நடந்தால் ஒரு வழி காலை ஒரு வழி, மாலை ஒரு வழி அல்லது நேரம் கிடைக்கும் போது ஒரு வழி எனப் பெர்முடேஷனும், காம்பினேஷனும் எக்கச்சக்கம்.  இதனால், தற்சமயம் ட்ரெட்மில் தயவு தேவையில்லாமல் போனது.

சில கட்டிடங்களுக்கு உள்ளே செல்லும் போது, ஹாரி பாட்டரில் வரும் கட்டிடங்களில் இருப்பது போன்ற பழமையும், சில கட்டிடங்களில் நவீனக் கட்டிடக்கலையின் புதுமையும் காணக் கிடைக்கும். பழமைக்கு சிட்டி ஹாலையும், புதுமைக்கு சிட்டி சென்டரையும் உதாரணமாகச் சொல்லலாம். அதிலும், சிட்டி ஹாலுக்குள் இருக்கும் ஒரு பிரமாண்ட மனித சிலையை முதலில் பார்க்கும் சிலிர்க்குமென்றால், சிட்டி சென்டரில் நடுவில் கொட்டும் தண்ணீர் அருகே அமர்ந்து ஐஸ்கிரிம் சாப்பிடும் போது குளிரும்.

எழுபதுக்கும் மேற்பட்ட பாலங்களால், டவுண்டவுனில் இருக்கும் சுமார் எழுபது பிளாக்குகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான தர அளவுகள் அனைத்தும் அரசு அமைப்பால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஸ்கைவேயால் இணைக்கப்பட்ட கட்டிடங்களில் வாடகை அதிகம் என்பது மார்க்கெட் நிலவரம்.

பொதுவாக, அலுவலகக் கட்டிடங்கள் சாமனியர்களை உள்ளே அனுமதிக்காத மிடுக்குடன் இருக்கும். இந்த ஸ்கைவே, அனைத்தையும் எளிமையாக்குகிறது. அலுவலக டென்ஷனுக்கிடையே, ஸ்கைவே வரும்போது, ஒரு சின்னஞ்சிறு குழந்தை தனது பிஞ்சுக் கால்களால் ஒரு பிரத்யேக நடை நடந்து செல்வதைக் காணக்கிடைத்தால் எப்படி இருக்கும்? இங்குக் காணக்கிடைக்கும்.

ஆரம்பத்தில் ஒரு குளிர்கால அவசரக்காலை வேளையில், வீட்டில் சாப்பிடாமல் அலுவலகம் வந்தேன். பசித்தது. ஸ்கைவேயில் நடந்தேன். சில திருப்பங்களுக்குப் பிறகு ஒரு இந்திய உணவகத்தைக் கண்டேன். தோசை, சட்னி, சாம்பார், டீ. அடடா!!! என்னவென்று சொல்வது? இந்த வசதியை வேறெங்கு கண்டேன்? சாயந்தர வேளைகளில், அந்தக் கடைப்பக்கம் சென்றால், சமோசா, பக்கோடாவுடன் மொக்கைகளையும், கடலைகளையும் காணலாம்.

skyway002_620x349 skyway003_620x349 skyway004_620x349 skyway005_620x349 skyway013_620x349 skyway012_620x349 skyway011_620x349 skyway010_620x349 skyway009_620x349 skyway008_620x349 skyway007_620x349 skyway006_620x349

பூட்டிய கடைக்குள், மக்களை நடமாட விடுவார்களா? இங்கு விடுவார்கள். மேசிஸ் போன்ற கடைகளுக்கு உள்ளாக, இந்தப் பாதைச் செல்லும். கடை சாத்தப்பட்டிருக்கும் நேரங்களில், ஒரு சிறு சிகப்பு ரிப்பன் தான் காவல். நம்பிக்கையை விடுங்க. வியாபாரம் புரியும் இடத்தை மக்களின் நடைபாதைக்குத் திறந்து விடும் சகிப்புதன்மையை என்னவென்று புகழுவது? மக்களின் நடைபாதையில் வியாபாரம் செய்தவர்களை மட்டுமே பார்த்தவனுக்கு இது ஆச்சரியமாகத்தானே இருக்கும்?

முக்கியக் குறை. இந்த ஸ்கை வேக்கள் 24 மணி நேரமும் திறந்திருப்பதில்லை என்பதுதான். இவை, அந்தந்தக் கட்டிடங்களுக்குச் சொந்தமானதால், இவை திறந்திருக்கும் நேரங்களும் வேறுபடும். இங்கு இருக்கும் பெரும்பாலான கடைகளும், அலுவலக வேலை நேரங்களில் மட்டுமே திறந்திருக்கும். விடுமுறை நாட்களில் சொற்ப நேரங்களே திறந்திருக்கும். அதனால், சுற்றிப் பார்க்க என்று செல்ல முடியாது. சும்மா பராக்குப் பார்க்கச் செல்பவர்கள் ஆபிஸ் ஹவர்சில் செல்வது உசிதம்.

சவால்கள் நிறையும் போது, அதை எப்படிக் கடந்து செல்கிறோம் என்பது தான் நமது இருப்பை உறுதி செய்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல, இடங்களுக்கும் அதே விதி தான். குளிருக்கு அடங்கி விடாமல் தனது வளர்ச்சியைத் தக்க வைப்பதற்கும், எந்த நிலையிலும் நின்றுவிடாமல் ஓடிக்கொண்டே இருப்பதற்கும், மினியாபோலிஸிற்கு இந்த ஸ்கைவே எனப்படும் பாதை அமைப்பு உதவியாக இருக்கிறது.

முதல் ஸ்கைவே திறந்து ஐம்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இவை காலத்திற்கேற்றாற்போல் மாற்றமடைந்துள்ளன. இத்தனை வருடங்களாக, எத்தனை எத்தனை லட்ச, கோடி பாத அடிகளை உள்வாங்கிக் கொண்டு இடங்களை இணைக்கிறது? இன்னமும் நிற்கிறது. வளர்கிறது.

நிக்கலட் மாலைக் கடக்கும் ஸ்கைவேயில் நின்று பார்க்கிறேன். தூரத்தில் ஒரு கட்டிடம் உருவாகிக்கொண்டிருக்கிறது. கூடவே, ஒரு ஸ்கைவேயும்.

தரவுகள்

https://www.skywaydirectory.com/history.php

https://en.wikipedia.org/wiki/Minneapolis_Skyway_System

https://www.skywaymyway.com/

https://www.ci.minneapolis.mn.us/parking/other/WCMS1P-112121

தொகுப்பு மற்றும் புகைப்படங்கள் – சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad