ஸ்பைசி மசாலா சாய் – ஒரு கலக்கல் கலாட்டா
“ஸ்பைசி மசாலா சாய்” என்ற நிகழ்வைக் கேட்டதும் என்னதான் டீ ஆத்தறாங்க என பார்த்துவிட ஆர்வம் தொற்றிக் கொண்டது. சனிக்கிழமை ஆகஸ்ட் 1 மாலை 5:30 மணி U O M Rarig centerல் நிகழும் காட்சிக்கு 5 மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்த எமக்கு பெரும் வியப்பு. இந்த நிகழ்வுக்கு நுழைவுச் சீட்டுபெறும் வரிசை மட்டும் சாலை வரை நீண்டுகொண்டே போனது. காட்சி நேரத்திற்குச் சரியாக அனுமதிக்கப் படுவோமா என்ற ஐயம் ஒருபுறம், இந்த நிகழ்வை ரசிக்க அமெரிக்கர்கள் அதிகம் முட்டி மோதியது மற்றொருபுறம். வரிசையில் நிற்போரை குதூகலப்படுத்தியது ஒரு கும்பல். இந்த நிகழ்வில் கரவொலி, விசில், சிரிப்பு மற்றும் நடனம் எனப் பார்வையாளர்கள் நிச்சயம் கொண்டாட்டடத்தில் பங்குபெற வேண்டும் என அன்புக் கட்டளை வேறு.
ஒரு வழியாக உள்ளே சென்று அமர்ந்த ஓரிரு நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்கியது. பஞ்சாபி, தமிழ், மேற்கத்திய உடைகள் எனக் கதைக்கு ஏற்ப வண்ண வண்ண ஆடைகள் அணிந்து வந்து அசத்தினர் கலைஞர்கள். சலங்கை, கம்பு மற்றும் வண்ணமயக் கருவிகளைப் பயன்படுத்தி ஆடிய நடனங்கள் அசத்தலாய் இருந்தன. 6 முதல் 60 வரை எல்லா வயதிலிருந்தும் கிட்டத்தட்ட 60 கலைஞர்கள் கலந்துகொண்டது பெரும் சிறப்பு. குழந்தைகளின் ஆடல் அமர்க்களப்பட்டது. பாங்க்ரா, பரதம், குத்தாட்டம் மற்றும் மேற்கத்திய நடனம் எனக் கலக்கி ஒரு விருந்தே படைத்துவிட்டனர்.
பஞ்சாபின் கிராமத்தில் இருந்து அமெரிக்கா செல்ல முற்படும் இளைஞன் பண்டியை வைத்துக் கதை துவங்குகிறது. அவனை வழி அனுப்ப வரும் சுற்றமும் நட்பும் கொடுத்தனுப்பிய பையில் முறுக்கு சீடை ஊறுகாய் என அடுக்குவது “நள தமயந்தி” படத்தில் வரும் மாதவனை நினைவு படுத்தி விடுகிறது. அமெரிக்காவிற்கு முதல் முறை வரும் பிள்ளையை நான்கு மாதம் உடன் தங்கிப் பார்த்துக்கொள்ள வரும் ஆண்டியைக் (Aunty) கண்டு வியக்கும் நண்பர்கள். இந்த உரையாடலில் நையாண்டியை நாசூக்காய்க் கலந்துவிடுகிறார் அந்த ஆண்டி. அம்மா இங்க “பாத் டப்” இருக்கு என்று வாய் பிளக்கும் பண்டியின் நடிப்பு அருமை. ஆர்வக் கோளாறில் “ட்ரை வாஷ்” செய்ய வேண்டிய கஷ்மீர் ஸ்வட்டரை தவறுதலாய் வாஷிங் மஷினில் போட்டெடுத்து, சுருங்கி விட்டதே என்று வாங்கிக் கட்டிக்கொள்கிறார் ஆண்டி.
புதியதாய் அறிமுகமாகும் ஷ்யாம் எனும் வாலிபனுக்குத் திருமணப் பரிந்துரையும் அறிவுரையும் அள்ளி வீசுகிறார் ஆண்டி. இடை இடையே தமிழ் ஐயர் மாமி தன்னை பஞ்சாபி சிங்குமாமா சுத்தி சுத்திக் காதலித்ததைச் சொல்லி சிலிர்த்துக் கொள்ளும் ஆண்டியின் அழகே தனி. ஃப்ளாஷ்பேக்கில் “சத்தியமா நீ எனக்குத் தேவையே இல்ல” பாடலுக்கு சிங்குமாமா இறக்கிய குத்தாட்டம் பார்ப்போரைக் கவர்ந்தது. அமெரிக்காவில் நடக்கும் எல்லா இந்திய மேடை நிகழ்வுகளிலும் தவறாமல் கேட்கும் IST (Indian Stretchable Time) நகைச்சுவையை இங்கே கேட்டது கொஞ்சம் புளித்தது.
முக்கோணக் காதல் நாம் நிறைய கேள்விபட்டிருப்போம். ஆனால் இங்கே மூன்று தனிக் கோணங்களில் மூன்று காதல் கதைகள் அரங்கேற்றப் படுகின்றன. பொறுப்பைக் கண்டு விலகியோடும் ஷ்யாம், இந்தியப் பாரம்பரியம் விரும்பும் பெண்ணைத் தேடியோடும் காதல் ஒன்று. மேற்கத்திய பெண் வாண்டா, அறியாத பையன் பண்டியின் குறும்பிலே மயங்கும் காதல் இரண்டு. பல பதக்கங்கள் பெற்ற படிப்பாளி கிட்சாவிற்கும் அவனா நீ ஸ்டீவிற்கும் ஏற்படும் புரிதல் மூன்று. ஒவ்வொரு சோடியின் கதையையும் சொல்ல அமைக்கப்பட்ட நடனக்காட்சிகள் அருமை.
நான் சென்ற அந்தக் காட்சி ஹவுஸ் ஃபுல் என்றார்கள். அதன் பிறகுதான் அறிந்தேன் அவர்கள் நடத்திய ஐந்து காட்சிகளுமே ஹவுஸ் ஃபுல்லாம். பாலிவுட் டான்ஸ் சீன் ப்ரொடக்ஷன் இந்த நிகழ்ச்சியை அருமையாக அரங்கேற்றியது. சென்ற ஆண்டு அரங்கேற்றிய “ஹாய் ஹலோ நமஸ்தே” என்ற நிகழ்ச்சிக்குக் கிடைத்த அங்கீகாரமே இவ்வாண்டு உந்துதலாக இருந்தது என்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கலக்கிய நண்பர் விஜய் அஸ்வத் தன்னுடன் பணிபுரிந்த கலைஞர்களை அறிமுகம் செய்தது நெகிழ வைத்துவிட்டது. மார்ச் மாதம் தேர்வு நடத்தி பல மாதங்களாகப் பயிற்சி செய்து அரங்கேற்றிய அருமையான இந்த நிகழ்வின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியின் பிரசவிப்புதான்.
சச்சிதானந்தன் வெ