நானே ராசா நானே மந்திரி
நமது சிற்றூர்களில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொழுது, சாயும் வேளையில் கட்டை வண்டிகள் கடகட மடமட என ஓடி வருவதைக் கேட்டிருப்போம். சரக்கு ஏற்ற கட்டை வண்டி இருந்ததைப் போல, சொகுசுப் பயணம் செய்ய அலங்கரிக்கப்பட்ட வில் வண்டிகள் பல இருந்தன. ஆனால் இன்று காலவோட்டத்தில் புகையைக் கக்கி, காதைக் கிழிக்கும் எந்திர வண்டிகள் எங்கும் பரவி, கட்டை வண்டிகளை ஓரம் கட்டி விட்டன. நமது பயன்பாட்டில் இல்லை என்றாலும் நமது நினைவுச் சாலையில் அவ்வப் பொழுது இவ்வண்டிகள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. கட்டை வண்டி பற்றிய சுவையான சில விடயங்களை இங்கே கட்டுரையாக்குகிறேன்.
நமது வாழ்க்கையிலும், வணிகத்திலும் இரண்டறக் கலந்திருந்த கட்டை வண்டிகள் தமிழ் இலக்கியங்களிலும் கலந்திருந்ததில் வியப்பொன்றும் இல்லையே. வள்ளுவன் வலியறிதல் அதிகாரத்தில் “பீலிபெய் சாகாடும்” எனும் குறளில் சாகாடு எனச் சொல்வது நம்ம கட்டை வண்டியைத்தானே! “அகலிது ஆக வனைமோ” எனும் புறநானூற்றுப் பாடலில் “அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறுவெண் பல்லி” என்ற வரிகள் வருகின்றன. “வண்டியின் அச்சினைத் தாங்கும் உருளையில் (குடம்) உள்ள ஆர்க்காலைப் பற்றிக்கொண்டே வந்த பல்லி” என்ற காட்சியைப் பல வழிகள் கடந்து கணவனுடன் சேர்ந்தே பயணிக்கும் மனைவி என்று ஒப்புமை செய்கிறார் புலவர். “ஆறு இனிது படுமே” எனும் மற்றொரு புறநானூற்றுப் பாடலில் வரும் வரிகள் ” கால்பார் கோத்து ஞாலத்து இயக்கம் காவற் சாகாடு”. சக்கரமும் (கால்) அடிமரமும் (பார்) சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம் என்று உவமைப் படுத்தப்படுகிறது.
ஒரு வட்டத்தின் சுற்றளவை “π” யே பயன்படுத்தாது பழக்கத்தில் கணக்கிட்டனர் நம் முன்னோர்கள். பொதுவாக வண்டிச் சக்கரம் 7 அடி உயரம் இருக்கும். இந்தச் சக்கரத்தை இறுக்கிப் பிடிக்க 22 அடி சுற்றளவு கொண்ட இரும்புப் பட்டையை பயன்படுத்தினர். சுற்றிப்பிடிக்கும் இரும்புப்பட்டை, தேக்கு போன்ற உறுதியான மரத்தால் ஆன 12 ஆர்க்கால்கள், ஆர்க்கால்கள் தாங்கி உருளும் குடம் என எல்லாம் சேர்ந்ததே சக்கரம். இரும்பால் ஆன அச்சை மையமாகக் கொண்டே இரு சக்கரங்களும் உழல்கிறது. சக்கரங்கள் வண்டியில் இருந்து விலகிச் செல்லாதிருக்க அச்சில் கடையாணிகள் போட்டிருப்பர். சலங்கை கோர்த்த கடையாணிகள் குலுங்கி எழுப்பும் சத்தம் பலருக்கு உயிர்நாடியாக ஒலித்தது. அச்சுடன் இணைந்த அடிமரம், அடிமரத்தின் மேலே அமையும் பலகைகள், அடிமரத்துடன் இணைக்கப்பட்ட ஏர்க்கால், ஏர்க்காலை வண்டியின் முன் கீழே தாங்கும் எதிர்முட்டி என எல்லாம் சேர்ந்தே வண்டி ஆகிறது. ஏர்க்காலின் மீது நுகத்தடி பொருந்தியிருக்கும். நுகத்தடியை நொனா மரம் அல்லது கொடுக்காப்புளி மரம் கொண்டு செய்வர். “தும்பை விட்டு வாலைப் பிடிச்சா” இப்புடித்தான்னு யாருனா சொன்னா, ஆமாம் ஆமான்னு தலையாட்டி இருப்போம் ஆனா தும்புன்னா என்னான்னு தெரியுமா? மாட்டின் கழுத்தை நெரிக்காமல் லாவகமாக வண்டியின் நுகத்தடியுடன் பிணைக்கும் கயிற்றைத்தான் தும்பு என்பர்.
வண்டி அச்சின் மீது சக்கரங்கள் உராயாது வழுக்கிச்செல்ல வைக்கோலை எரித்த கரியுடன் விளக்கெண்ணை கலந்த மசகினைத் தடவுவர். வண்டியின் தன்மை மற்றும் எருதுகளின் வலிமை அறிந்தே வண்டியில் பண்டங்களை ஏற்றுவர். நம்மில் பலர் இவ்வண்டிகளில் பயணித்திருப்போம். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராக இருக்கும் நிலக்கடலை கொல்லைக்குக் காலையிலேயே கட்டை வண்டியைப் பூட்டிக்கொண்டு குடும்பமே சென்றுவிடும். விடுமுறை நாளாக இருந்தால் நானும் அந்தப் பயணத்தில் ஒரு அங்கம். நிலக்கடலைக் ப் பிடுங்கி எடுத்துக் குவியல் குவியலாய் வைத்துக் கொள்வர். பின்னர் நிழலில் அமர்ந்து கொடியில் இருக்கும் கடலையை ஆய்ந்து (பிய்த்து) எடுப்பர். மாலை சாயும் நேரம் ஆய்ந்த கடலைகளை மூட்டைகளில் கட்டி வண்டியில் ஏற்றுவர். இடம் இருந்தால் நிலக்கடலைக் கொடியையும் வண்டியில் ஏற்றிக்கொள்வர். இந்தக் கொடி மாட்டிற்குப் பிடித்த தீவனம். அனைத்தையும் அடுக்கி, முன் பாலு பின் பாலு சரி பார்த்துப் பெரிய கயிற்றைக் கொண்டு பொருளை வண்டியுடன் இணைத்துக் கட்டிவிடுவர். மாட்டை நுகத்தடியில் பூட்டி வண்டியின் முன் பகுதியில் அமர்ந்து ஒருவர் வண்டியைச் செலுத்துவார். கட்டை மாட்டு வண்டி ஒய்யாரமாக ஊர்த் தெருவில் பவனி வரும். பல நாட்கள் எந்தக் கவலையும் இல்லாமல் நான் வண்டியில் அமர்ந்து வலம் வந்த தருணங்கள் எனக்குச் சொர்க்கமோ என்று தோன்றுகிறது. ஆங்கே நானே ராசா நானே மந்திரி!
நன்றி:
சச்சிதானந்தன் வெ