\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

இளையோர் பட்டறை

Tamil Immersion Jul2016 59 620 x 411மினசோட்டா தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்ப் பள்ளி இணைந்து  வருடந்தோறும் நடத்தும் கோடைக் காலத் தமிழ்க் கலை, பண்பாட்டு இளையோர் பட்டறை (Tamil Immersion Youth Camp), இந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதியன்று மினசோட்டா யங் அமெரிக்கா நகரில் இருக்கும் பெய்லர் ரிஜினல் பார்க்கில் (Baylor Regional Park) நடைபெற்றது. இந்தப் பட்டறையின் நோக்கம், நம் தமிழ்க் குழந்தைகள் இங்கு அமெரிக்காவில் தவறவிடும் தமிழ்ப் பண்பாட்டு அனுபவத்தை மீட்டெடுத்து அவர்களுக்குக் கொடுப்பதே.

தமிழ்ச் சங்க மற்றும் பள்ளி தன்னார்வலர்களால் முன்னெடுத்து நடத்தப்படும் இந்தப் பட்டறையில், இந்த ஆண்டு இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 9 வயதிற்கு மேற்பட்ட இளையோர்களுக்கு, காலை 9 மணியில் இருந்தும், 9 வயதிற்குக் குறைந்த குழந்தைகளுக்கு மதியத்தில் இருந்தும் பல்வேறு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

வந்திருந்த பங்கேற்பாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் பசுமையான நினைவுகளை அடையும் தினமாக அது இருக்கும் என்பதைக் குறிப்பது போல், மென் பச்சை நிற டி-சர்ட் வினியோகிக்கப்பட்ட பின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, முதலில் யோகா கற்றுத் தரப்பட்டது. யோகாவின் பயன்கள் விளக்கப்பட்டு, சில வகைப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டன.

யோகா முடிந்தபின், காலைச் சிற்றுண்டியாகக் கேழ்வரகுக் களியும், கருப்பட்டிப் பாகும், கூடவே பலவகைப் பழக்கலவையும் அளிக்கப்பட்டன. பிறகு, வெளியே புல்வெளியில் சிலம்பம் கற்றுத் தரப்பட்டது. சிறுவர், சிறுமிகள் வெகு ஆர்வத்துடன் சிலம்பத்தைக் கற்றுக் கொண்டனர். பின்பு, தமிழ்ப்பள்ளியில் நடக்கும் சிலம்பப் பயிற்சியில் சேர்ந்து கொள்ளவும், அவர்களில் பலர் விருப்பம் தெரிவித்தனர்.

சிலம்பத்திற்கு அடுத்ததாக, பம்பரம் சுற்றக் கற்றுக் கொடுக்கப்பட்டது. இங்கிருக்கும் பல குழந்தைகள், பம்பரத்தைப் பற்றி அறிந்தே இருக்க மாட்டார்கள். அவர்கள் வியப்புடன், அதைச் சுற்றி மகிழ்ந்தனர். அடுத்ததாக,கோலம் கற்றுத்தரப்பட, குழந்தைகள் அவர்களாகவே அழகாகக் கோலம் போடத் தொடங்கி விட்டனர்.

பிறகு, கோ கோ விளையாட்டுக் கற்றுத் தரப்பட்டு, மாணவர்கள் விளையாடத் தொடங்கினர். குழப்பத்துடன் ஆரம்பித்த விளையாட்டு, பிறகு விளையாட்டுப் புரிய ஆரம்பித்து, விறுவிறுப்புடன் சென்றது. ஒரு கட்டத்தில், ஆர்வம் தாங்க முடியாமல், பெரியவர்களும் இளையோர்களுடன் இணைந்து கொள்ள, விளையாட்டு சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்தச் சூட்டைக் குறைக்க, அனைவருக்கும் நீர்மோர் அளிக்கப்பட்டது!!

ஓடியாடி களைத்த சிறார்களுக்கு, அடுத்ததாக, உட்கார்ந்த படியே கற்கும் வகையில் பாரதியார் பாட்டுச் சொல்லித் தரப்பட்டது. “வலிமையற்ற தோளினாய் போ போ போ” என்ற பாரதியின் பாடல், விளக்கத்துடன் சொல்லிக் கொடுக்கப்பட்டு, ராகத்துடன் பாடப்பட்டது. புரட்சிக் கவி பாரதி பற்றியும் அப்போது சொல்லிக் கொடுக்கப்பட்டது.

பாட்டுப் பயிற்சிக்குப் பிறகு உணவு இடைவேளை. மதிய உணவாக, உளுந்த வடை, அப்பளம், சாதம், சாம்பார், வெண்டைக் காய்ப் புளிக் குழம்பு, பீன்ஸ் பொரியல், உருளைக் கிழங்கு வறுவல், ரசம், மோர், ஊறுகாய், பாயாசம் என முழுமையான நம்மூர் சாப்பாடு வகைகளை அனைவரும் திருப்தியுடன் சாப்பிட்டனர். உண்ட களைப்பு, பெரியோர்களுக்கு மட்டுமே ஏற்பட, இளையோர்கள் சிறிது நேரத்தில் அடுத்ததாகப் பட்டம் விடச் சென்று விட்டனர்!!

Tamil Immersion

பிறகு, அவர்களுக்கு நொண்டிச் செல்லும் விளையாட்டுச் சொல்லித் தரப்பட்டது. எந்த விளையாட்டைச் சொல்லிக் கொடுத்தாலும், உடனே கற்றுக்கொண்டு, அதில் விற்பன்னர்கள் ஆகிவிடுவார்கள் குழந்தைகள். அவர்களது கற்றுக் கொள்ளும் வேகமும், ஆர்வமும் வியப்பளித்தன. அடுத்து, அவர்கள் உள்ளே அறையினுள் அழைக்கப்பட்டு, கிராமிய நடனமும், ஒயிலாட்டமும் சுருக்கமாகக் கற்றுத் தரப்பட்டன. இந்தச் சமயத்தில், அவர்கள் சிறிது களைப்பை உணர, அவர்கள் உட்கார்ந்து விளையாடும் வண்ணம், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி, தாயம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு, பயிற்றுவிக்கப்பட்டது. குழு, குழுவாக அமர்ந்து அமைதியாக இந்தப் பலகை விளையாட்டுகளில் மூழ்கிப் போயினர் நம் குழந்தைச் செல்வங்கள்.

இதற்குள் மாலை ஐந்து மணி ஆகிவிட, மாலைச் சிற்றுண்டியாக நிலக் கடலை, பட்டாணி, மாங்காய் சுண்டல் ஆகியவவை வழங்கப்பட்டன. பெரியவர்களுக்குத் தேனீரும் அளிக்கப்பட்டது. சிறிது ஓய்வுக்குப் பிறகு, கபடிப் போட்டி ஆடப்பட்டது. தேர்ந்த வீரர்கள் போல், ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தங்கள் ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் இவர்களது ரசிகர்கள் ஆனார்கள். கபடியால் களைத்த இந்தச் சிறு வீரர்களுக்குச் சுவையான பானக நீர் அளிக்கப்பட்டது.

பின்பு, இளையோர்கள் அனைவருக்கும், அன்றைய தினத்தின் சிறப்பு விருந்தினர்களான ஒரு பங்கேற்பாளரின் தாத்தா-பாட்டியால் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அச்சமயம், அவர்கள் இந்தப் பட்டறையில் அவர்களுக்குப் பிடித்த அம்சங்களை விளக்கினர். பெரும்பாலோருக்கு, கோ கோ விளையாட்டுப் பிடித்திருந்ததை அறிய முடிந்தது. உணவில், அப்பளம் !!

அத்துடன், நிகழ்ச்சிகள் அனைத்தும் திட்டமிட்டப்படி, சிறப்பாக முடிய, அந்த அறை ஒழுங்கு படுத்தப்பட்டு, சுத்தப் படுத்தப்பட்டு, அனைவரும் கிளம்ப ஆயத்தமாயினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு, அருமையான நினைவுகளைச் சுமந்து கொண்டு கிளம்பினர்.

நாம் சிறுவயதில் நம்மூரில் அனுபவித்த விஷயங்களை, இங்கிருக்கும் நம் குழந்தைகளால் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இல்லாத பெற்றோர்கள் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் இம்மாதிரி நிகழ்வு, ஒரு வரப் பிரசாதம். அன்று குழந்தைகள் மட்டுமில்லாமல், பெரியவர்களும் இந்த அனுபவத்தால் பெருமகிழ்ச்சி கொண்டனர். வருடத்தில் ஒருநாள் தான் என்றாலும், இதில் முதன்முறையாக அறிந்து, பிடித்துப் போன ஒரு தமிழ்ப் பண்பாட்டு விஷயத்தை இக்குழந்தைகள் மேலும் கேட்டறிந்து, அவர்தம் வாழ்வில் தொடர வாய்ப்பு உண்டு. அப்படி நிகழுமானால், அதுவே இந்த நிகழ்வின் பெரும் பயனாக இருக்க முடியும்..

சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad