மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
“இயல், இசை, நாடகத்தில் ஆர்வம் கொண்ட பெருமக்களே!! உங்களுக்கு ஒரு நற்செய்தி. வரும் ஆகஸ்ட் நான்காம் தேதி முதல் பதினான்காம் தேதி வரை, மினியாபோலிஸில் ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் (Fringe Festival) நடக்கப் போகிறது. அதிலும், மிக முக்கியமாக, தமிழின் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தெருக்கூத்தாக மேடையேறப் போகிறது. மதுரையை எரித்த கண்ணகியை, மினசோட்டாவில் காண வாய்ப்பு.
அது போலவே, சென்ற வருடம், சாதனை படைத்த நிகழ்ச்சியை அளித்த பாலிவுட் டான்ஸ் சீன் குழுவும் தங்கள் பங்குக்கு, தங்களது பிரத்யேக நகைச்சுவை, நடன, நாடகத்துடன் கலக்க இருக்கிறார்கள். தவற விடாதீர்கள்!!…”
டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்
—-
மேலே போவதற்கு முன், லைட்டாக ஃப்ரிஞ்ச் வரலாற்றைப் பார்த்து விடலாம். 1947 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகரான எடின்பராவில் இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் தொடங்கப்பட்டது. அதுவரை, இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்டு, களைத்துப் போன மக்களுக்கு, புத்துயிர் ஊட்டும் விதமாகவும், ஐரோப்பிய கலை வடிவங்களை மேடையில் அரங்கேற்றும் விதமாகவும், இந்த எடின்பரா இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆரம்பிக்கப்பட்டது. அதில் கலந்து கொள்ளச் சென்ற எட்டுக் குழுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த எட்டுக் குழுக்களும், இதனால் சோர்ந்து வீடு திரும்பிவிடவில்லை. நகரின் முக்கிய அரங்கங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நடக்க, இன்னொரு பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட குழுவினர், நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில், தங்களின் படைப்புகளை மேடையேற்றினார்கள். அதற்குக் கிடைத்த வரவேற்பு தான், ‘எடின்பரா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்’ என்று வருடந்தோறும் பெரும் வரவேற்புடன் தொடரத் தொடங்கியது. எடின்பராவில் தொடங்கிய இந்தப் பயணம் இன்று உலகம் முழுக்கப் பிரபலமாகி, பல நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஃப்ரிஞ்ச் என்றால் குஞ்சம், ஜரிகை போல் ஓரத்தில் செய்யப்பட்ட அலங்காரங்கள். அதிகாரப்பூர்வ விழா, ஒரு பக்கம் நடக்க, இன்னொரு ஓரத்தில் நடத்தப்பட்ட, இந்தச் சிறு, குறு நிகழ்ச்சிகளும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க, ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் இந்த விழாக்கள் பிரபலம் அடையத் தொடங்கின.
இந்த ஃப்ரிஞ்ச் விழாவில் கலந்து கொள்வதற்கு எவ்வித அதிகாரப்பூர்வ விதிமுறைகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அனுபவம், குறிப்பிட்ட கலை வகை, பிரபலம் என்று எந்தத் தகுதியும் தேவையில்லை. இங்குக் கலைக்குத் தணிக்கை கிடையாது. உண்மையான ஜனநாயகம். அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது அந்தந்தச் சமூகத்தின் பக்குவத்தைப் பொறுத்தது. அனைவருக்கும் மேடை கிடைப்பது மூலம், தகுதி படைத்தவர்கள் வளருவார்கள். திறமை கொண்டவர்கள் பாராட்டுப் பெறுவார்கள், சமூகப் படைப்பாளிகள் சிந்தனையைத் தூண்டுவார்கள்.
—
1994இல் இருந்து மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில், முதலில் வருபவர்களுக்கு வாய்ப்பு என்ற முறையில், பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். 2004இல் இருந்து, அந்த முறை மாற்றப்பட்டு, குலுக்கல் முறையில் தேர்வு என்ற நடைமுறை வந்தது. அமெரிக்காவின் மிகப் பெரிய ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல்களில் ஒன்று, மினசோட்டா ஃபெஸ்டிவல்.
இந்தாண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதியில் இருந்து 14 ஆம் தேதி வரை, நகரின் பல்வேறு அரங்கங்களில் நடைபெறுகிறது. சில நிகழ்ச்சிகள், காட்சியின் தேவைக்கேற்ப வெளிப்புறங்களில், பிற இடங்களிலும் நடக்கும்.
இந்தாண்டு ஃப்ரிஞ்ச் திருவிழாவில், இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பில், இரு நாட்டிய நாடகங்கள் மேடையில் அரங்கேறுகிறது. மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில், ‘The lost anklet’ என்ற தெருக் கூத்தும், பாலிவுட் டான்ஸ் சீன் குழுவின் சார்பில் ‘Bezubaan – The Voiceless’ என்ற நடனத்துடன் கூடிய நாடகமும் மினசோட்டா ஃப்ரிஞ்ச் ரசிகர்களின் முன் மேடையேறுகின்றன.
—
தமிழர்களுக்குத் தொலைந்த சிலம்பைத் தெரிந்திருக்கும். இந்த ஃப்ரிஞ்ச் திருவிழாவில், தொலைந்த சிலம்பைப் பற்றியும், அதன் பின்னால் இருக்கும் காதல், பிரிவு, வலி, சோகம், கோபம் ஆகிய அனைத்தைப் பற்றியும் பிற மாநிலத்தவரும், நாட்டினரும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ‘The lost anklet’ தெருக்கூத்தின் மூலம் உருவாகியுள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன், தமிழ் மண்ணில் இளங்கோவடிகள் எழுதிய காப்பியம், இன்றும் உலகின் வேறொரு பகுதியில் தமிழர்களால் மேடையேறும் சிறப்பை என்னவென்று கூற?
மாதவியின் நவரசம் கூடிய நடனம், கண்ணகியின் உணர்வு கலந்த ராகங்கள், மதுரைத் தமிழ் மண்ணின் சிறப்பிற்குரிய இசை எனக் கிட்டத்தட்ட 25 கலைஞர்களின் பங்களிப்பில், கீழே குறிப்பிடப்பட்ட தினங்களில் சதர்ன் தியேட்டரில் இந்தத் தெருக்கூத்து மேடையேறுகிறது. வண்ண மயமான ஒளி மற்றும் இனிமையான ஒலியுடன் கூடிய கலைப்படைப்பாக அரங்கேறுகிறது.
வெள்ளிக்கிழமை, 8/5 – 5:30pm
சனிக்கிழமை, 8/6 – 8:30pm
ஞாயிற்றுக்கிழமை, 8/7 – 5:30pm
வியாழக்கிழமை, 8/11 – 10:00pm
சனிக்கிழமை, 8/13 – 4:00pm
இந்தத் தெருக்கூத்து, ஏற்கனவே ‘சிலம்பின் கதை’ என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டு தமிழில் அரங்கேற்றப்பட்டு, மினசோட்டாத் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இம்முறை பாடல்கள் தமிழிலும், வசனங்கள் ஆங்கிலத்திலும் அமைத்திருப்பது, இந்தக் காவியத்தின் அருமையையும், தமிழின் பெருமையையும் பிற மொழியினருடன் கொண்டு செல்லும் என்கிறார் இந்தத் தெருக்கூத்தின் இயக்குனர் சச்சிதானந்தன்.
—
பாலிவுட் டான்ஸ் சீன் என்னும் மினசோட்டாவைச் சேர்ந்த நடனக்குழு, கடந்த சில வருடங்களாகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் பெஸ்டிவலில் கலந்துக்கொண்டு கலக்கி வருகிறார்கள். சென்ற வருடம், அதிகப் பார்வைகள் கிடைத்த நிகழ்ச்சி, இவர்கள் நடனத்தில் உருவாக்கிய ‘Spicy Masala Chai’ என்ற நடன நாடக நிகழ்ச்சியாகும். மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் வரலாற்றில், அதிக டிக்கெட் விற்பனையைக் கண்ட நிகழ்ச்சி இதுதான் என்பது இந்தியர்களுக்குப் பெருமையளிக்கக்கூடிய தகவல்.
இது பற்றிய கட்டுரையை இங்கே காணலாம்.
https://www.panippookkal.com/ithazh/archives/6054
இந்தக் குழு ‘Bezubaan: Voiceless’ என்னும் நடனத்துடன் கூடிய நாடகத்தை இம்முறை அரங்கேற்றுகிறார்கள். புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு, மக்களிடம் தேவைப்படும் மதச் சகிப்புத்தன்மை, பன்முகச் சமுதாயங்களிடையே உருவாகும் சமத்துவம் போன்ற கருத்துகளைப் பேசும் நாடகம் இது. கருத்து பேசினாலும், நகைச்சுவையும் நடனமும் இவர்களது முக்கிய பலம். பாலிவுட் மற்றும் பிறமொழித் திரைப்படப் பாடல்களின் கண்கவரும் நளின நடனம், பார்வையாளர்களின் கரவொலியைச் சந்தேகமில்லாமல் எழுப்பும் எனலாம். இந்த நாடகம், இண்டர்நேஷனல் மார்க்கெட் பின்னணியில் நடக்கும் கதை என்கிறார் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவின் அமைப்பாளர் திவ்யா.
இந்த நிகழ்ச்சி நடைபெறும் தினங்கள்,
வெள்ளிக்கிழமை, 8/5 – 5:30 pm
சனிக்கிழமை, 8/6 – 2:30 pm
ஞாயிற்றுக்கிழமை, 8/7 – 5:30 pm
புதன்கிழமை, 8/10 – 7:00 pm
சனிக்கிழமை, 8/13 – 2:30 pm
நிகழ்ச்சி நடைபெறும் இடம் – U of M Rarig Center Thrust
நடனம், நாடகத்தில் ஆர்வம் கொண்டவர்கள், மிஸ் செய்துவிடக் கூடாத நிகழ்வு – மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல். இதில் உங்கள் பங்கேற்பை உறுதி செய்து, நம்மவர்களுக்கு உங்களது ஆதரவை அளிக்கவும்.
மேலும் தகவலுக்கு,
Bezubaan: The Voiceless – https://www.fringefestival.org/show/?id=20160598
-சரவணகுமரன்.
Excellent Article and gives overview. If translated in English properly, could be used as a marketing article.
நன்றி சரவணன் 🙂