\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பேஸுபான் – பாலிவுட் டான்ஸ்

Bezubaan 06AUG2016 83 620 X 293மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில் பாலிவுட் டான்ஸ் குழுவின் பேஸுபான் (Bezubaan) என்னும் நடன நாடகக் காட்சியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது.

Bezubaan என்றால் குரலற்றவன். இந்தத் தலைப்பைக் கேட்டால், ஏதோ ஒரு சீரியஸான ஃபீல் கிடைக்கிறதல்லவா? ஆனால், இது ஒரு வண்ணமயமான, ஆடல், பாடல், ஜாலி, ஃபீல் குட் நாடகம். ஒரு சீரியஸான மையக் கருத்துடன்.

பாலிவுட் டான்ஸ் சீன் – மினசோட்டாவின் ஃபேமஸ் இந்திய நடனக்குழு. நடனம் தான் இந்தியத் தன்மை கொண்டது. மற்றபடி, அனைத்து நாட்டினரும் ஆடுவார்கள். பாலிவுட் டான்ஸ் என்று சொல்லிக் கொண்டாலும், க்ளாசிக் முதல் டப்பாங்கூத்து வரை அனைத்தையும் ஆடுவார்கள். ஆனால், எதை ஆடினாலும், உயர் தரத்துடன், தேர்ந்த நிபுணவத்துவத்துடன் ஆடுவார்கள்.

நம்மூர் பாலிவுட் பட அமைப்பைப் போன்றே கொஞ்சம் ட்ராமா, அடிக்கடி நகைச்சுவை, அவ்வப்போது செண்டிமெண்ட், நிறைய டான்ஸ் என வரிசையாகத் தொடர்ந்து வைத்து, கவனத்தை எங்கும் சிதறவிடாமல் மேடையை மட்டுமே கவனிக்க வைக்கிறார்கள். ஆக்ஷன் ப்ளாக் தான் இல்லை!!

கதை – மினசோட்டா இண்டர்நேஷனல் மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் அப்பா என்னும் அப்பு மேனனையும், அவரது குடும்பத்தாரையும் சுற்றிச் சுழலுகிறது. பிற சமூகங்கள் மீதான சகிப்புத்தன்மையை மையமாகக் கொண்ட கதை. அப்புமேனனுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். முதல் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. பையன், அமெரிக்கக் கலாச்சாரத்தில் ‘Dude’ ஆக வாழ்கிறான்!! இளைய பெண், தந்தையின் கடைக்குப் பக்கத்தில் புதிதாகத் தரைவிரிப்புக் கடை திறந்திருக்கும் ஒரு முசல்மானைக் காதலிக்கிறாள். Dude பையன், ஒரு அமெரிக்கப் பெண்ணைக் காதலிக்கிறான். அந்த அமெரிக்கப் பெண், முசல்மான் நடத்தும் டான்ஸ் பள்ளியில் டான்ஸ் கற்றுக்கொண்டு இருக்கிறாள். அவளைக் கவர, அதாவது கவர் செய்ய, Dude பையனும் அந்த நடனப்பள்ளிக்குச் செல்கிறான். அமெரிக்கப் பெண்ணைக்கூட மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும் அப்பா, ஒரு முஸ்லிமை மருமகனாக ஏற்க மறுக்கிறார். காரணம் – அவருடைய ஃப்ளாஷ்பேக் மற்றும் பொதுவான சமூகப் பார்வை. பிறகு, அப்பாமனம் திருந்துகிறாரா? இந்த ஜோடிகள் இணைகிறார்களா? என்பது கண்டே பிடிக்க முடியாத (!!!) இந்தக் கதையின் முடிவு. இந்தக் கதையின் சுவாரஸ்யமான ஓட்டத்தைத் தள்ளிவிட, நடு நடுவே இரு தொகுப்பாளர்கள் மேடையேறி நமக்குக் கதையை விளக்குகிறார்கள். ஒரு கட்டத்தில், இந்தத் தொகுப்பாளர்களும் கதைக்குள் குதித்துவிடுகிறார்கள்.

எவ்விதக் குழப்பங்களும் இல்லாத சிம்பிள் கதை. அதை அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களுக்கும், ஆடும் நடனத்திற்கும் தொடர்ந்து அரங்கத்தில் கரவொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வசனமெழுதிய ஹிமான்ஷு அகர்வாலும், வர்கீஸ் அலெக்சாண்டரும் இதற்காகப் பாராட்டுக்குரியவர்கள். பாடல்களுக்கு நடனம் அமைத்த அனைத்து பயிற்சியாளர்களுமே கலக்கியிருக்கிறார்கள்.

வசனங்களில் எங்கும் எள்ளலும், சுய பகடியும், சமூகச் சாடலும் பரவியுள்ளன. வசனகர்த்தாவுக்குத் தமிழுக்கும் மலையாளத்துக்கும் வித்தியாசம் தெரியாது எனத் தங்களைத் தாங்களே நக்கல் அடித்துக் கொள்கிறார்கள். மொழி தெரியாதவர்களும், ஹிந்தி பாடலுக்கு வாயசைத்து ஆடிக் கொள்ளலாம் என்று பாலிவுட்டையும் வாருகிறார்கள். அப்படியே சென்று, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிற்பவர்களையும் ஒரு குத்து விடுகிறார்கள். நாடகம் முழுக்கக் கொண்டாட்ட மனநிலை தான். ஏதோ வடக்கத்திய கல்யாண வீட்டுக்குச் சென்று வரும் உணர்வு கிடைக்கிறது.

மொத்தம் எட்டுப் பாடல்கள். அதில் ஒன்று மலையாளப்பாடல். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். விதவிதமான உடைகள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் சிறப்பாக ஆட்டம் போடுகிறார்கள். ஆவெனப் பார்வையாளர்கள் வாயைப் பிளக்கும் வகையில் மேடையில் சுழலுகிறார்கள். அனாயசமாக ஜிம்னாஸ்டிக் செய்கிறார்கள். இன்னொரு பக்கம், அனைவரும் நடிப்பிலும் சிக்ஸர் அடிக்கிறார்கள்.

சென்ற ஆண்டு ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவலில், அதிகப் பார்வையாளர்கள் பார்த்தது – இவர்களுடைய ஸ்பைசி மசாலா சாய் நாடகம் தானாம். இந்த வருடமும் அரங்கம் நிறைந்தே இருந்தது. கடந்த மே மாதத்தில் இருந்து தயாராகி, கடும் பயிற்சி எடுத்து மேடைக்கு வந்திருக்கிறார்கள். அது மேடையில் நன்றாகவே தெரிகிறது. நடப்புக் காலத்திற்கு ஏற்ற, தேவையான கருத்தை, அனைவரையும் மகிழ வைத்து, சிரிப்புடன் சேர்த்து, புகட்டி விடுகிறார்கள்.

எக்கச்சக்கமான கலைஞர்களின் பங்களிப்பை அருமையாக ஒருங்கிணைத்து, ஒரு பிரமாண்ட சினிமாவின் கனவுப் பாடல் காட்சியைப் போல், எந்த வி.எப்.எக்ஸும் இல்லாமல், அழகான அந்த எஃபெக்டை, இந்தச் சிறு மேடையிலேயே கொண்டு வந்து விடுகிறார்கள். படங்களில் காட்டுவது போல், பல வயது அப்புமேனனை, ஒரே சமயத்தில் மேடையில் காட்டுகிறார்கள். இப்படி வியப்பளிக்கும் பலவற்றை, இந்த ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் மேடையில் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இந்த நாடகத்தின் இயக்குனர்களான ஸ்டீஃபன் அலெக்சாண்டரும், மது பெங்களூரும்.

நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான திவ்யா, இறுதியில் கிட்டத்தட்ட இதில் பங்கேற்ற நூறு கலைஞர்களையும் ஒரு சேர மேடையில் கொண்டு வந்து, வந்திருந்த பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, விருப்பமுள்ளவர்களைத் தங்கள் குழுவில் சேர அழைப்பு விடுத்தார். அடுத்த வருடம், இருநூறு பேரை மேடையில் ஏற்றி விடுவாரோ? இதற்காகவே, மினசோட்டா ஃப்ரிஞ்ச் ஃபெஸ்டிவல் அமைப்பு, இவர்களுக்கு இன்னும் பெரிய மேடை அமைத்துத் தரவேண்டும்!! இப்படி ஒரு பிரமாண்டமான, வண்ணமயமான நிகழ்வை விருந்தளித்த மினசோட்டாவின் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவிற்கு, நமது அன்பான சியர்ஸ்!!

பாலிவுட் டான்ஸ்

-சரவணகுமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad