\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

எங்கெங்கும் ஏரி…

Lake2 640 X 349
நியூயார்க்கிற்கு
வானுயர்ந்த கட்டிடங்கள், ஃப்ளோரிடாவிற்குக் கேளிக்கைப் பூங்காக்கள், கொலரடோவிற்கு மலைத்தொடர்கள், வேகாஸிற்குச் சூதாட்ட விடுதிகள் என்பது போல மினசோட்டாவிற்குப் பெருமை சேர்ப்பது ஏரிகள். பாருங்கள், எவ்வளவு ரம்மியமான அழகு சேர்க்கும் பெருமை!!

ஒன்றல்ல, இரண்டல்ல பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏரிகள் கொண்ட மாநிலம், மினசோட்டா. இதைக் கேள்விப்பட்டு, பிறகு மினசோட்டாவிற்கு வந்த பிறகு, எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் இருக்க, எனக்குத் தோன்றியது – “இது அனைத்தையும் கூட்டி தான் பத்தாயிரமோ?”. நாங்கள் இருந்த அபார்ட்மெண்டில் கூட, ஒரு சிறு குட்டை இருக்க, அதையும், அதில் நீந்திய வாத்துகளையும் கண்டு வந்த சந்தேகம் இது.

பிறகு, விசாரித்த பிறகு தான் தெரிந்தது. அது அப்படி அல்ல, 10 ஏக்கருக்கு மேல் சுற்றளவு உள்ள ஏரிகளின் எண்ணிக்கை மட்டுமே, பத்தாயிரத்தைத் தாண்டுமாம். இத்தனை ஏரிகளையும் கண்டு ரசித்த உயிரினம் ஏதேனும் இருக்குமா? அப்படி இருந்தால், அதனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், இத்தனை ஏரிகளிலும் நீ ரசித்த அழகு என்ன? இதில் உன்னைப் பெரிதும் கவர்ந்த ஏரி எது?

அத்தனை ஏரிகளையும் பார்த்து விட வேண்டும் என்ற ஆசை கொண்ட பயணம், ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை பார்த்த ஏரிகள் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. மினசோட்டா , ஒரு சொர்க்கம்!!

மினசோட்டா குளிர்காலத்தைச் சரிவரக் கையாளத் தெரியாதவர்கள், இம்மாநிலத்தை நொந்துக் கொள்வார்கள். ஆனால், இயற்கையைப் புரிந்து கொண்டு, இயற்கையுடன் பயணிப்பவர்களுக்குப் புரியும் ரகசியம்நாமிருப்பது சொர்க்கமென்பது.

நகர்ப்புறம், சுற்று வட்டாரம், செல்லும் வழியெங்கும் என இங்கு நீக்கமற நிறைந்திருப்பது ஏரிகள். வானில் இருக்கும் நட்சத்திரங்கள் போல, சாலையில் நாம் காணும் மனிதர்கள் போல, நம் கைரேகையைப் போல ஒவ்வொரு ஏரியும் தனித்துவமானது. ஒவ்வொருவரை, ஒவ்வொரு விதத்தில் கவரக்கூடியது. மினசோட்டாவின் ஏரிகள் அனைத்தையும் பார்த்து விட்ட மனிதர் எவரேனும் இருந்தால், அவர் இயற்கை ரசிகரோ, அல்லது பொதுப்பணித்துறை ஊழியரோ, அவரிடம் கேட்க என்னிடம் கேள்விகள் நிறைய உள்ளன.

நகரின் மையப்பகுதியில் இருக்கும் ஏரிகளில் கோடை வாரயிறுதிகளில் நல்ல கூட்டம் இருக்கும். அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை போன்றவற்றுடன், குடும்பங்கள் இணைந்து உணவருந்துவதற்கும், குழந்தைகள் விளையாடுவதற்கும், உடற்பயிற்சி விரும்பிகள் வாக்கிங், ஜாக்கிங் செய்வதற்கும் தேவையான வசதிகள் இருக்கும். சில ஏரிகளில் போட்டிங், கயாக்கிங் போன்றவைகளும் இருக்கும். இது தவிர, லேக் ஹாரியட் (Lake Harriet) மாதிரியான ஏரிகளில், ஆங்காங்கே அவ்வப்போது, உள்ளூர் இசைக்குழுக்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இம்மாதிரி ஏரிகளுக்குச் சென்றால், இலவசமாக, நிம்மதியாகப் பொழுது போக்கி விட்டு வரலாம். சிலர் தங்களது நாய்களைக் கூட்டிக் கொண்டு வாக்கிங் வருவார்கள். அந்த நாய்கள் குடிப்பதற்கு ஏதுவாக, குடிநீர் வசதிகள் செய்திருப்பார்கள். நோட் பாயிண்ட், அவ்வளவு பெரிய ஏரி இருக்கிறதே என்று எண்ணி, நாயை ஏரியில் தண்ணீர் குடிக்க விடுவதில்லை. அதே சமயம், அவை குடிப்பதற்கும் குடிநீர் ஏற்பாடு செய்து விடுகிறார்கள்.

லேக் ஆப் தி ஐல்ஸ் (Lake of the Isles) போன்ற ஏரிகளைச் சுற்றி நடக்கும் போது, அவ்வப்போது ஏரிகளைச் சுற்றியிருக்கும் வீடுகளையும் காண வேண்டும். ஏரிப் பக்கமாக இடம் வாங்கி வீடு கட்டியிருப்பவர் என்றால், அவர் கலாரசிகராகத் தானே இருக்க வேண்டும்? என்று கேட்கும்படியான டிசைனில் வீடுகள் ஒவ்வொன்றும் இருக்கும். சில ஏரிகளில் வீட்டின் கொல்லைப் புறத்துடன் ஏரி இணைந்திருக்கும். வீட்டிற்கு முன் பக்கம் கார் நிற்பது போல், பின்பக்கம் போட் நிற்கும். வீட்டிற்குப் பின்புறமே போட் நிற்க வேண்டும் என்பதில்லை. சிலர் கார் பார்க்கிங் இல் போட் வைத்திருப்பார்கள். சிலர் ஏரியிலேயே ஒரு இடத்தைப் பார்த்து, அங்கு நிறுத்தி வைத்திருப்பார்கள். நேரம் கிடைக்கும் போது, போட்டை எடுத்துக் கொண்டு ஏரிக்குள் கிளம்பி விடுவார்கள். மெடிசின் லேக்கை (Medicine Lake) சுற்றி வந்தால், இப்படிப்பட்ட வீடுகளைக் காணலாம்.

சில படகுகளில், உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக, டேபிளும், சுற்றி சேர்களும் இருக்கும். வீட்டில் போர் அடித்தால், ஏரியின் மத்தியில் சென்று சாப்பிட்டு விட்டு வருவார்கள். அது ஓர் அனுபவம். அது ஒரு சுவை. போலவே, ஏரிக்கரையோரம் அமர்ந்து சாப்பிடவும், லேக் நோகோமிஸ் (Lake Nokomis) போன்ற ஏரிகளில் வசதியுண்டு.

போட்டிங் தவிர, ஏரியில் விளையாடுவதற்கும், பொழுது போக்குவதற்கும் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அன்றொரு நாள், ஒரு ஏரிக்கரையில் நடந்து கொண்டு இருக்கும்போது, அதைக் கவனித்தேன். ஒருவர் ஏரியின் மத்தியில், தண்ணீரின் மேல் நடந்து கொண்டும், பறந்து கொண்டும் இருந்தார். மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. எப்படி இப்படிப்பட்ட கண்டு பிடிப்புகளை (Flyboarding) வைத்துக் கொண்டு பொழுதை மட்டும் ஓட்டுகிறார்கள் என்று!!

இன்னொரு குரூப்பைக் கவனிக்கலாம். ஏரியில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோவாளியுடனும், தூண்டிலுடனும் குறைந்த பட்சம் நாலைந்து பேர் கண்டிப்பாக இருப்பார்கள். நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை, குளிர்காலத்தில், தண்ணீர் எல்லாம் உருகி ஜஸ் ஆனாலும், மீன் பிடிப்பவர்கள் ஏரியில் இருப்பார்கள். தண்ணீராக இருக்கும் போது, ஏரிக்கரையோரம் நின்று மீன் பிடிப்பவர்கள், தண்ணீர் ஐஸ் ஆனதும், ஐஸ் மீது ஏறி, அதில் துளையிட்டு, பின்பு அந்தத் துளை வழியாக மீன் பிடிப்பார்கள். துளை போடுவதற்கு ஒரு கருவி, மீன் அசைவுகளைக் கண்காணிக்க ஒரு கருவி, ஐஸ் ஏரியின் மீது ஒரு கூடாரம் எனத் தொழில் முறை மீன்பிடிப்பவர்களை விட இந்தப் பொழுதுபோக்குமுறை மீன்பிடிப்பவர்களிடம் தான் அதிகக் கருவிகள் இருக்குமோ என நினைக்கும் வண்ணம் அலப்பறைக்குக் குறைச்சலிருக்காது!! “அடேய், நாங்களே இந்தக் குளிரில் ஓடி ஒளிந்து வாழ்கிறோம். இந்தக் குளிரிலும் எங்களைப் பிடிக்க ஏன்ப்பா உங்களுக்கு இந்தக் கொலவெறி?” என்று அந்த மீன்கள் நினைப்பது, இவர்களுக்குத் தெரிவதில்லை.

இது தவிர, எந்த அட்வென்சரோ, ஆக்டிவிட்டியோ இல்லாமல், அமைதியாக ஏரியின் இயற்கை அழகை ரசிப்பவர்களையும் நிறையக் காணலாம். ஏரிகளைச் சுற்றி இருக்கும் பெஞ்ச்களில் உட்கார்ந்து கொண்டோ, புல் தரையில் படுத்துக்கொண்டோ, மரங்களுக்கிடையே ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டோ, வாழ்க்கையை ரசனையோடு வாழ்பவர்களையும் காணலாம். கடற்புரமே இல்லாமல் எக்கச்சக்கமான பீச் (ஏரிக்கரை) கொண்ட ஊர் இதுவாகத்தான் இருக்கும். அதனால், குழந்தைகளுக்கும் பிடித்தவைகளாக இந்த ஏரிகள் இருக்கின்றன.

இப்படிப் பலதரப்பட்ட மக்களையும் கவர்பவைகளாக இந்த ஏரிகள் உள்ளன. லேக் கேல்ஹூன் (Lake Calhoun) மாதிரியான ஏரிகளைச் சுற்றி வந்தால், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருசேரக் காணலாம். வாரயிறுதியில் திருவிழா போல் ஜே ஜே என்றிருக்கும். தனிமை விரும்பிகள் என்றால் நகரின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஏரிகளுக்குச் சென்று வரலாம்.

மினியாபோலிஸ் நகர்பகுதியில் இருக்கும் ஏரிகளையும், பூங்காக்களையும் இணைத்தவாறு இருக்கும் கிராண்ட் ரவுண்ட்ஸ் (Grand Rounds Scenic Byway), இக்கட்டுரையில் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 50 மைல் தூரம் கொண்ட பாதை இது. நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லுவதற்கு ஏதுவாகப் பாதை என்பதால், நகரின் முக்கிய ஏரிகளை, ஒரு ரவுண்டில் சென்று காண இந்தப் பாதை உதவும்.

இதெல்லாம், சில மணி நேரப் பொழுது போக்குக்கான ஏரிகள். நகர்ப்புறத்தைச் சுற்றியிருப்பவை. நாள் கணக்கில் ஒரு ஏரியை நின்று ரசிக்க வேண்டுமென்றால், லேக் சுப்பிரியருக்குச் செல்லலாம். அது ஏரிகளின் ராணி. இங்கு படகுகளைப் பார்க்கலாம் என்றால், அங்கு கப்பல்களைப் பார்க்கலாம்.

பொதுவாக, இந்த நிலப்பரப்பில் ஏரிகள் எப்படி உருவாகுமோ, அப்படித்தான் இங்குள்ள ஏரிகளும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு உருவாகியுள்ளன. அதாவது, பனிநிலைக் காலத்தில் (Ice Age) நிலப்பரப்பு மேல் எங்கும் பனியாக இருந்த போது, ஆங்காங்கே நிலத்தினுள் ஊடுருவிய பனிப் பாளங்கள், பின்பு ஏரியாக உருவெடுத்தன. ஆனால், மினசோட்டாவாசிகள் ஒரு சுவாரஸ்யமான கதையையும், இதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள். அமெரிக்க நாட்டுப்புறக் கதைக் கூறலில் பால் பன்யன் (Paul Bunyan) என்றொரு ராட்சத மரவெட்டி கதாபாத்திரத்திற்கு முக்கிய இடம் உண்டு. அவனிடம் இருந்த நீல நிறக் காளை அங்கும் இங்கும் ஓடியதில் பதிந்த கால் தடங்களே, இந்த ஏரிகள் என்பது அந்தக் கதை.

ஒரு பக்கம் மினசோட்டாவின் பொருளாதாரம், ஏரிகளால் வளருகிறது என்றால், இன்னொரு பக்கம் சரியாகப் பராமரிக்கப்படாத ஏரிகளால், மினசோட்டாவின் பொருளாதாரம் பாதிக்கும் சூழ்நிலையும் உள்ளது. மினசோட்டாவின் சில ஏரிகள், பாசிகளால் சூழப்பட்டு, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிலையும் இங்கு உண்டு. இவ்வகை ஏரிகள் மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அதிகம் உள்ளன. மினியாபோலிஸ் நகர்ப் பகுதியில் உள்ள ஏரிகள் அவ்வளவு மோசமில்லை. அதே சமயம் ஆஹா ஓஹோ ரகமுமில்லை. நல்ல சுத்தமான ஏரிகள் என்றால், பெமிட்ஜி (Bemidji) பக்கமும், துலூத் (Duluth) பக்கமும் செல்ல வேண்டும்.

என்ன இருந்தாலும், மினசோட்டாவின் ஏரிகளில் கோடைக்காலத்தில் நிரம்பத் தண்ணீரும், குளிர்காலத்தில் மூடியவாறு பனியும் இல்லாமல் இருப்பதில்லை. போலவே, வழிபாடு என்ற பெயரில் எதையும் ஏரித் தண்ணீரில் கரைப்பதில்லை. ஏரியை மூடி, ஃப்ளாட் போடுவதிலலை. ஏரிகளைச் சுற்றிக் கடைகள் திறந்து, கழிவை ஏரியில் கலப்பதில்லை. அதனால், மினசோட்டாவின் ஏரிகள் எங்கெங்கும் ஸ்பெஷல் தான். என்றென்றும் ஸ்பெஷல் தான்.

Lake1 640 X 349 Lake4 640 X 349 Lake3 640 X 349 Lake5 640 X 349 Lake6 640 X 349 Lake7 640 X 349

Lake8 640 X 349 Lake9 640 X 349

மேலும் தகவல்களுக்கு,

https://en.wikipedia.org/wiki/List_of_lakes_in_Minnesota

https://www.minneapolisparks.org/parks__destinations/trails__parkways/grand_rounds_scenic_byway_system/

https://www.lakeaccess.org/ecology/lakeecologyprim1.html

https://en.wikipedia.org/wiki/Paul_Bunyan_and_Babe_the_Blue_Ox

https://www.twincities.com/2015/09/25/minnesotas-lakes-and-its-economic-backbone-under-algae-siege/

சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad