\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டாவில் கார் ட்ரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்படி?

Filed in இலக்கியம், கட்டுரை by on October 31, 2016 0 Comments

drivers-license_620x401

பொறுப்புத் துறப்பு – இது தனிப்பட்ட, சொந்த அனுபவம் சார்ந்து எழுதபட்டது. ஆளாளுக்கு வேறுபடலாம்.

ஓட்டுனர் உரிமம் வாங்க, கார் ஓட்ட தெரிந்தால் மட்டும் போதாது. அது ஓரளவுக்குச் சுலபம். வாகனத்துறை தேர்வாளரைத் திருப்திபடுத்துமளவுக்கு, கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அது தான் சிரமம். தேர்வாளர் மனதிற்குள் வைத்திருக்கும் அளவுகோல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். ஆளாளுக்கு மாறுபடும். அது புரிபட்டு விட்டால், உங்களுக்கான லைசன்ஸ் தயார்.

மேலோட்டமாகச் சொல்லுவது என்றால், கார் லைசன்ஸ் என்னும் மாயக் கிளியை நெருங்க, இரு மலைகளைத் தாண்ட வேண்டும். முதல் மலை, இன்ஸ்ட்ரக்ஷன் பெர்மிட் (Instruction Permit) எனப்படும் பயிலுவதற்கான உரிமச் சான்றிதழ் வாங்குவதற்கு நடத்தப்படும் கணினி தேர்வு. கணினி தேர்வு தானே என்று குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.

புதிதாக ஓட்டுனர் உரிமம் வாங்க வேண்டும் என்றாலும் சரி, வேறு ஊரில் உரிமம் வைத்திருந்து மினசோட்டா உரிமம் வாங்க வேண்டுமென்றாலும் சரி, கணினி தேர்வு கட்டாயம் உண்டு. நான் மினசோட்டா வந்த சமயம், டென்வர் மாநில ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தேன். அதை மினசோட்டா மாநில உரிமமாக மாற்ற பரீட்சை எடுக்க வேண்டி இருந்தது. நமக்குத் தான் கார் ஓட்ட தெரியுமே என்று படிக்காமல் சென்று விட்டேன். முதலில், ஒரு உதாரணக் கேள்வி காட்டினார்கள். மினசோட்டாவின் தலைநகரம் எது? ரொம்ப மப்பாக, மினியாபோலிஸ் என்று பதிலளித்துப் பல்ப் வாங்கினேன். அந்த உதாரணக் கேள்வியே எனது அன்றைய ரிசல்ட்டைக் காட்டிவிட்டது.

அடுத்த முறை, ஒழுங்காகப் படித்துச் சென்று பயிலுனர் உரிமம் வாங்கி வந்தேன். அதனால், இந்தத் தேர்வுக்குப் போக்குவரத்து விதிகளை வாசித்தல் அவசியமாகிறது. இதற்கான மினசோட்டாவின் போக்குவரத்து விதிகள் கையேடு, வாகனத்துறை இணையத்தளத்தில் பிடிஎப் வடிவிலும், ஒலிவடிவிலும், வாகனத்துறை அலுவலகங்களில் காகிதப்புத்தக வடிவிலும் கிடைக்கின்றன. அவரவர் வசதிக்கேற்ப, இதை வாங்கிப் படிக்கலாம். கேட்கலாம்.

https://dps.mn.gov/divisions/dvs/forms-documents/Pages/default.aspx

அடுத்து, படித்தது ஒழுங்காக மண்டையில் ஏறியிருக்கிறதா என அறிந்து கொள்ள, மாதிரி தேர்வுகளை எடுக்கலாம். மாதிரி தேர்வுகள், பல இணையத்தளங்களில் கிடைக்கின்றன. அவுட்டான கேள்வித் தாள் கிடைக்குமா என்று தேடுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஓரிரு முறை இந்த மாதிரி தேர்வுகளில் பாஸ் செய்து விட்டீர்கள் எனில் நேரடியாகத் தேர்வுக்குச் சென்று விடலாம்.

நகரைச் சுற்றி பல இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளன. போவதற்கு முன், அங்குக் கணினி தேர்வு எடுக்க முடியுமா என்று இணையத்தில் பார்த்து விட்டு செல்லவும். சில வாகனத்துறை அலுவலகங்களில் தேர்வு எடுக்க முடியாது. எந்த அலுவலகத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்று இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.

https://dps.mn.gov/divisions/dvs/locations/Pages/find-office-locations.aspx

மறக்காமல், தேவைப்படும் டாகுமெண்ட்ஸை எடுத்து செல்லவும். அடையாள அட்டைகள், முகவரி சான்றிதழ் போன்றவை இதற்குத் தேவை. மேலும் தகவலுக்கு, இந்த லிங்கைக் காணவும்.

https://dps.mn.gov/divisions/dvs/forms-documents/Documents/IdentificationRequirements_English.pdf

தேர்வு நிலையத்தில் கணினியும், ஹெட் போனும் இருக்கும். ஒவ்வொரு கேள்வியையும் ஒலிவடிவத்தில் கேட்கவும் செய்யலாம். நன்கு நிதானமாகப் பார்த்து, கேட்டு எழுத அவகாசம் இருக்கும். மொத்தம் 40 கேள்விகள். 32 கேள்விகளுக்காவது சரியான பதில்களை அளித்திருக்க வேண்டும். பாஸா, ஃபெயிலா என்பதைப் பரீட்சை முடிந்தவுடன் உடனே தெரிந்துக் கொள்ளலாம். சிலருக்குப் பரீட்சை நடக்கும் போதே தெரிந்து விடும். தேர்ச்சி பெறாவிட்டால், இன்னொரு முறை இலவச தேர்வு எடுக்கலாம். மூன்றாவது முறையில் இருந்து பத்து டாலர் கட்டணம் உண்டு.

பாஸானால், விண்ணப்பம் பூர்த்திச் செய்து, கட்டணம் செலுத்தி, ஃபோட்டோ எடுத்து, பயிலுனர் உரிமச் சான்றிதழை உடனே வாங்கிக் கொள்ளலாம். அட்டை வீட்டிற்குச் சில வாரங்கள் ஆகும். அது வரும் வரை கார் ஓட்டிப் பழகக் காத்திருக்கத் தேவையில்லை. பயிற்சியைத் தொடங்கிவிடலாம்.

இனி அடுத்தக் கட்டம். பயிற்சி மற்றும் சாலை தேர்வு. இந்தியாவில் கார் ஓட்ட தெரிந்திருந்தால், இங்குக் கார் ஓட்ட சிரமம் இருக்காது. அங்குச் சாலை விதிகளைக் கண்டு கொள்ளாமல் ஓட்டி விட்டு, அவற்றை இங்குக் கடைபிடிப்பது தான் முதலில் சிரமமாக இருக்கும். இன்னொன்று, ஹைவேயில் வேகமாகக் கார் ஓட்டுவது மற்றும் அதே வேகத்தில் லேன் மாறுவது. இதுவும், சிலருக்குச் சிரமமாக இருக்கும். இந்திய லைசன்ஸ் வைத்திருந்து, சாலை தேர்வுக்கு இடமிருந்து, உங்களுக்கு ரொம்பவும் தன்னம்பிக்கை இருந்தால், கணினி தேர்வை முடித்த கையோடு, சாலை தேர்வையும் ஒரு கை பார்த்துவிடலாம். அப்படி இல்லையெனில், பயிற்சி எடுத்துக்கொண்டு, சாலை தேர்வுக்கு முன்பதிவு செய்துவிட்டு செல்லவும்.

இங்குள்ள கார்களில் கியர், கிளட்ச் இருப்பதில்லை என்பதால், கார் ஓட்ட பயில்வது சுலபமே. தொடர் பயிற்சி இருந்தால், உள்ளூர இருக்கும் சாலைகளில் ஓட்டி, ஓரிரு வாரங்களில் ஓட்டப் பழகிவிடலாம். அதிக வாகனங்கள் இல்லாத தொலைத்தூர பயணங்களில் ஓட்டுவதும் ஓகே தான். உடன் வருபவரின் கண்காணிப்புச் சரியாக இருக்க வேண்டும். நகருக்குள் இருக்கும் நெடுஞ்சாலைகளில், வாகனகங்களுக்கிடையே ஓட்ட, திறமையைக் காட்ட வேண்டியிருக்கும். சாலை தேர்வில், அனைத்துவகைப் பார்க்கிங் (Parallel parking, 90 degree parking, Uphill parking & downhill parking) பற்றியும் கேட்டு, காரை நிறுத்த சொல்லி சோதிப்பார்கள். அதனால், இவை அனைத்தையும் முறையாகப் பயிற்சி செய்து, இவற்றில் தேர்ச்சிப் பெறுவது அவசியமாகிறது. இதற்காக, கோன்களுடன் (cones) கூடிய மாதிரி பார்க்கிங் இடங்கள் சில பள்ளி கார் நிறுத்துமிடங்களில் இருக்கும். பக்கத்தில் இருக்கும் பள்ளிகளில் சென்று, இந்தப் பயிற்சியைப் பெறலாம். பார்க்கிங் சரியாக வராதவரை, லைசன்ஸ் கிடைக்காது என்று நினைத்துக்கொண்டு பயிற்சி பெறவேண்டும். இணைவான கார் நிறுத்தல், செங்குத்தான கார் நிறுத்தல் – இவை இரண்டிற்கும் சில சுலப வழிமுறைகள் உள்ளன. அவற்றை யூ-ட்யூபில் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். இது பற்றி தெரிந்தவர்கள் நேரடியாகச் சொல்லிக்கொடுத்தால் இன்னும் உசிதம். ஏற்றமான இடங்களில் காரை நிறுத்துவதற்கும், இறக்கமான இடங்களில் காரை நிறுத்துவதற்கும், கார் டயரை எந்தப் பக்கமாகத் திருப்பி வைக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

கற்றுக்கொள்வதற்கு, அடுத்த முக்கியமான விஷயம் – லேன் எனப்படும் சாலைகளில் இருக்கும் கோடுகளைப் பற்றி அறிந்துக்கொள்வதும், எங்கு எப்போது எப்படி மாறுவது என்று தெரிந்துக்கொள்வது. தேர்வின் போது, திருப்பங்களில் எந்த லேனில் இருந்து எந்த லேனிற்கு மாற வேண்டும் என்பதைத் தெரிந்து மாற வேண்டும். நாம் சாலையில் ஓட்டிக் கற்றுக்கொள்ளும் போது, இவற்றைப் பெரிதாகக் கவனிக்க மாட்டோம். தேர்வின் போது, இவற்றை நுணுக்கமாகக் கவனிப்பார்கள். நிறையப் பேரின் முதல் தோல்விகளுக்கு, இவையே காரணமாக இருக்கும். தேர்வு நடைபெறும் மையங்களில் இருக்கும் சில சாலைகளில், இந்தக் கோடுகளே இருக்காது. இது மேலும் குழப்பத்தைக் கொடுக்கும். அதனால், கோடுகள் இல்லாவிட்டாலும், கோடுகள் இருப்பதாக நினைத்து ஓட்டுவது எப்படி என்று தெரிந்திருக்க வேண்டும். இதற்கு ஒரு சுலப வழி – கூகிள் மேப்ஸ் போன்று ஏதேனும் ஒரு மேப்ஸ் இணையத்தளத்திற்குச் செல்லவும். நாம் தேர்வு எடுக்கப்போகும் தேர்வு மையத்தை வரைப்படமாகப் பார்க்கவும். எந்தச் சாலைகள் எப்படிச் செல்கிறது என்று தெரியும். எது ஓர் வழி சாலை, எது இருவழி சாலை என்று தெரியும். எங்குக் கோடுகள் உள்ளன, எங்கு இல்லை என்று தெரியும். நமது சாலைத் தேர்வை, வீட்டிலேயே பேப்பரில் ஹோம் வொர்க் செய்துக்கொள்ள இது உதவும்.

கார் ஓட்டுவதைத் தவிர, இன்னும் சிலவற்றை அறிந்துக்கொள்ள வேண்டும். சில பரிசோதகர்கள், நாம் காலணி அணிந்து கார் ஓட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதனால், காலணி அணிந்து கார் ஓட்டவும். சிலர் நாம் எப்படிக் கார் ஸ்ட்டியரீங்கை பிடிக்கிறோம், எப்படி ப்ரேக் பிடிக்கிறோம் என்பதைக் கவனிப்பார்கள். என்ன வேகத்தில் ஓட்டுகிறோம் என்று கவனிப்பார்கள். பதட்டமாக இருக்கிறோமா என்று பார்ப்பார்கள். அதனால், சகஜமாக இருப்பது அவசியம். சில சந்தேகங்கள் இருந்தால், தேர்வாளரிடம் தேர்வு தொடங்குவதற்கு முன்பு கேட்டுக்கொள்ளலாம். சந்தேகத்தில், பயத்தில் கார் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

தேர்வின் போது, காரில் ஏறி உட்கார்ந்தவுடன், காரில் இருக்கும் கருவிகளைப் பற்றிக் கேட்பார்கள். உதாரணத்திற்கு, எமர்ஜென்ஸி விளக்குப் பொத்தான்கள், ஹாண்ட் ப்ரெக் போன்றவை எங்கு இருக்கும் என்று கேட்பார்கள். அதனால், அது பற்றித் தெரிந்திருக்க வேண்டும். தேர்வு முடிந்தவுடன், நாம் கார் ஓட்டியதைப் பற்றிய அவர்களது கருத்தைக் கேட்டுக் கொள்வது நல்லது. தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டால், இது அடுத்தத் தேர்வுக்கு உதவும். மூன்றாவது தேர்வில் இருந்து இருபது டாலர்கள் கட்டணம் உண்டு. தேர்ச்சி அடைந்துவிட்டால், அடுத்து அலுவலகத்திற்குள் சென்று விண்ணப்பம் பூர்த்திச் செய்து, புகைப்படம் எடுத்துவிட்டு மகிழ்வுடன் வீடு திரும்பலாம். ஓட்டுனர் உரிம அட்டை வீடு வந்து சேர, சில வாரங்கள் எடுக்கும். அதுவரை, அவர்கள் கொடுக்கும் சான்றிதழ் கொண்டு கார் ஓட்டலாம்.

மினசோட்டாவில் சாலை தேர்வுக்கு அப்பாயின்மெண்ட் எடுக்க வேண்டும். இந்த அப்பாயின்மெண்ட் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை. அப்பாயின்மெண்ட் இல்லாமல், அங்குச் சென்று காத்திருந்து தேர்வு எடுக்கவும் வழியுண்டு. ஆனால், தேர்வு எடுப்பது உறுதி கிடையாது. வேறு ஏதும் வேலை இல்லை எனில், இப்படிக் காத்திருக்கலாம். இல்லாவிட்டால், முன்பதிவு உதவும். நமக்குப் பக்கத்தில் இருக்கும் மையத்தில் முன்பதிவு இல்லை என்றால், அடுத்துத் தொலைவில் இருப்பதில் முயற்சி செய்யலாம். சிலர் ஒரு மையத்தில் எடுப்பது சுலபம், மற்றதில் கடினம் என்பார்கள். அதை நம்பாதீர்கள். உங்களது பயிற்சி சரியாக இருந்தால் எங்கு வேண்டுமென்றாலும் உங்களால் தேர்ச்சி பெற முடியும்.

தனியார் பயிற்சி மையங்களில் ஒரு மணி நேர பயிற்சிக்கு 40-50 டாலர்கள் கட்டணம் பெற்றுக்கொண்டு பயிற்சி அளிப்பார்கள். அங்குச் சென்று பயிற்சி எடுக்க வேண்டுமா என்றால் அது கட்டாயம் தேவையில்லை. உங்களுடன் நேரம் செலவிட்டு, கார் ஓட்ட கற்றுக்கொடுக்க ஒரு ஜீவன் இருக்கிறதென்றால் அதுவே போதும். சில டெக்னிக்ஸ் தெரிந்து கொள்ள, இது போன்ற தனியார் பயிற்சியாளர்கள் உதவுவார்கள். மற்றபடி, தொடர் பயிற்சி கண்டிப்பாகத் தேர்ச்சியினைக் கொடுக்கும். விரைவில் தேர்ச்சி பெற்று உரிமம் பெறவும், பாதுகாப்பாகக் கார் ஓட்டவும் எங்களது வாழ்த்துகள்.

மேலும் தகவலுக்கு,

https://dps.mn.gov

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad