கனவுக் கன்னி
கண் மூடி நான் நினைத்தால்
கனவு போல் நிழல் உருவம்
கலை நயம் மிகுந்த பிரம்மன்
கருவி கொண்டு செதுக்கிய சிற்பம்
அடி தொடங்கி முடி வரை
அற்புதம் சொலிக்கும் அழகுப் பதுமை
அன்பு ததும்பும் அவளின் பெருமை
அனைத்தும் நினைத்திட மலர்ந்த கவிதை
ஆறடி நீண்ட அடர்த்திக் கூந்தல்
ஆறாத் தாகத்தை ஆற்றிடும் மேகம்
ஆசை துறந்த முனிவனும் கவிழும்
ஆழ்ந்த பக்தி அறிவிக்கும் அகலநுதல்
இதயம் நோக்கிக் கணையதைத் தொடுக்கும்
இந்திர தனுசாய் வளைந்த புருவம்
இன்பத் தடாகத்தில் நீந்திடும் கயல்களாய்
இருபுறம் முகத்தில் ஒளிரும் கண்கள்
ஈர்த்து அழைத்து இறுக அணைத்து
ஈரம் சேர்க்க ஏங்கவைக்கும் அதரங்கள்
ஈன்றவள் அன்பில் இதமாய்த் தந்த
ஈரம் காய்ந்திடாக் குளுகுளுக் கன்னங்கள்
உலகம் முழுதும் ஓயாது தேடிப்பெற்ற
உயர்வைரம் உண்மையில் பொருந்தும் நாசி
உரோமங்கள் சிலவும் அரூபமாய்த் தோன்றி
உன்னதம் ஆக்கிய உயர்வான உதடுகள்
ஊறிய தேனது உள்ளிருந்து வழிந்து
ஊர்நனையாது காத்திடும் முத்துப் பற்கள்
ஊஞ்சல் மேல் ஒய்யாரமாய் நின்று
ஊசலாய் ஆடிடும் ஒப்பிலா நன்நாக்கு
எண்ணிலாக் கடல்தேடி மூச்சடக்கி முத்தெடுக்க
எங்குமிலா வலம்புரி மிஞ்சும் கழுத்து
எண்பதடி உயரமாய் எல்லோரும் பயனுறும்
எழில்மிகு மூங்கில் போன்றவிரு தோள்கள்
ஏங்கித் தவிக்கும் இளைஞன் அவனிடம்
ஏற்றமுற நின்று எழில்கூட்டும் முன்னழகு
ஏக்கம் அதிகமுற இறங்கியதவன் பார்வை
ஏகமாய்த் தளர்ந்து நிலைப்பதவள் உதரத்தில்
ஐயோ தவறென விலக, தோன்றிய
ஐயம் இல்லையோ உண்டோவென்ற இடை
ஐந்தில் தொடங்கிய ஆண்மையின் ஆர்வம்
ஐம்பதிலும் தொடர வித்திட்ட பெண்மையழகு
ஒய்யாரமாய் வளர்ந்த வாழைத் தண்டொத்த
ஒப்பிலாத கவர்ச்சிக் குறுத்தான தொடைகள்
ஒப்புமை கூற விழைந்தால் அவையிரண்டில்
ஒன்றுக்கு மற்றொன்றே எனும் பின்னழகு
ஓவியமாய் என்னுள்ளே ஒளிவீசி வீற்றிருக்கும்
ஓங்காரப் பொருளாய் என்னுள் அமைந்தவள்
ஓரணங்கு அவளே என்னும் ஒருசொல்
ஓராயிரம் முறைசொல்வேன் ஒருபோதும் மாற்றிடேன்
கண் மூடி நான் நினைத்தால்
கனவு போல் நிழல் உருவம்
கலை நயம் மிகுந்த பிரம்மன்
கருவி கொண்டு செதுக்கிய சிற்பம் !!!
– வெ. மதுசூதனன்.
Tags: love
Awesome…Wonderful thought and compilation…Un Kavidhai aatralukku naan adimai.
நன்றி ராகவன். சந்தங்களை சாவதானமாகக் கவியில் கொண்டு வரும் உங்களின் பாராட்டு என்னைப் பூரிப்படைய வைக்கிறது. நன்றி பல.