தீபாவளி – ஒரு ஒளிவீசுகின்ற பயணம்
Deepavali – An illuminating journey
ஸ்வரங்களின் வரிசை ஸ்வராவளி , நாமங்களின் வரிசை நாமாவளி, தீபங்களின் வரிசை தீபாவளி. தீப ஒளி இருளை விளக்கும் , வரிசையாக அடுக்கி வைத்த தீபங்கள் மகிழ்வும், நிறைவும் தரும்.
ராமர் காட்டிலிருந்து திரும்பி வந்த நிகழ்வு என ஒரு சாராரும் , நரகாசுரனை கிருஷ்ணர் வதைத்த தினம் என ஒரு சாராரும், மஹாவீரர் வீடு பேறு பெற்ற நாள் என ஒரு சாராரும் , குரு கோவிந்தர் தன்னை விடுவித்துக் கொண்ட தினமாக சீக்கியர்களும், பல்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளி. இந்தியாவின் “வேற்றுமையில் ஒற்றுமை “ என்ற மொழிக்கு எடுத்துக்காட்டாக, காரணங்கள் எதுவாக இருந்தாலும் தீபாவளிப் பண்டிகை என்பது இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் மகிழ்வு தரக்கூடியதே.
கூடுதல் மகிழ்வாக இந்த முறை ஹிந்து ஆலயம் நடத்திய “An illuminating Journey” – “தீபாவளி ஒரு ஒளி வீசுகின்ற பயணம்”, அக்டோபர் 22ம் தேதி மினசோட்டா கன்வென்ஷன் சென்டரில் நடை பெற்றது.
இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் தீபத்தின் ஜோதியைக் கை மாற்றிக் கொண்டே வந்தபடி ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பொடு கூடிய நடனம் அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பகுதியிலிருந்து மட்டும் அல்லாது , தலைமுறை தாண்டி யும் இந்தப் பாரம்பரியம் தொடர வழி வகுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது இந்த நிகழ்ச்சி.
காஷ்மீர் குளிரில் ஆடும் குளிர்ச்சியான நடனத்தில் தொடங்கி, HATS பள்ளி மாணவர்களின் பஞ்சாப் நடனம், டெல்லி தர்பார் என அன்பை வெளிப்படுத்தும் அரேபிய நடனம் , ஹரியானா மாநிலத்திலிருந்து டான்சிங் திவாஸ் தொடர்ந்து, உத்தரப் பிரதேஷ் நடனம் , தொடர்ச்சியாக SILC குழுவின் நடனம் என வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கிச் சென்றது. தெற்கில் கேரளாவின் “கைகொட்டிக் களி,” தமிழ் நாட்டின் “பின்னல் கோலாட்டம் “, பல்வேறு நடனங்களின் இணைப்பாக மற்றும் ஒரு கேரளா நடனம் எனத் தெற்கின் நடனத்தின் வகைகளைக் கடக்கும் பொழுதே , பெண்களின் சிறப்பைப் பறை கொட்டும் படி கவிதை வாசிக்கப்பட்டு , அதன் பின் மேடையேற்றிய நடனம் ஒலிம்பிக்ஸில் இந்தியப் பெண்களின் வெற்றியைப் பறை சாற்றியது பொருத்தமாக இருந்தது.
பெண்மையின் வீரத்தில் திளைக்கும் பொழுதே, வண்ண மயமான ஆடைகளை அணிந்தபடி நடனமாடிய கோவா நடனம் மிக அருமை. இந்தியா உலகப் பார்வையில் என ஆடிய கதக் நடனமும், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் படியாக மகாராஷ்டிரா நடனங்கள், குஜராத் நடனம், பாலிவுட் நடனங்கள் , ராஜஸ்தானிய நடனம் என மீண்டும் வடக்கில் இணையும் விதமாக பஞ்சாபிய நடனத்தில் முடிக்கப்பட்டது. வடக்கிலிருந்து கிழக்காக தெற்கிற்கு வந்து, மீண்டும் மேற்காக வடக்கில் வந்து இணைந்தது போன்று வடிவமைக்கப் பட்ட நிகழ்ச்சிகள் இந்தியா முழுவதையும் மூன்று மணி நேரத்தில் பார்த்தது போன்ற உணர்வை அளித்தது. இடையில் கிழக்கும் மேற்கும் இணைப்பது போன்ற ஒரு இணைப்பு நடனமாக “பேஸுபான்” நடனமும், வடக்கிலிருந்து தெற்காக “தேசி ஃப்யூஷன் ” நடனமும் அருமையாக இணைக்கப்பட்டிருந்தது.
சிறப்பு அம்சங்களாகச் சேர்க்கப்பட்ட SILC தபலா குழுவின் நிகழ்ச்சியும், Katha Dance Theatre வழங்கிய கதக் நடனமும் மிக சிறப்பாகவே அமைந்தது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்போடு நடனம் ஆடிய குழந்தைகள் நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தனர்.
இரண்டாயிரம் பார்வையாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பெரிய நிகழ்விற்கு உழைத்த அத்தனை தன்னார்வலர்களையும் உண்மையிலேயே மனமாரப் பாராட்ட வேண்டும்.
அருமையான உணவு, துணி மற்றும் நகைக் கடைகள், கோலாகலமான உடைகளுடன் நடனங்கள் என தீபாவளிக் கொண்டாட்டங்கள், நிகழ்ச்சியின் பெயருக்கு ஏற்ப ஒளிவீசியது.
Diwali 2016
- லக்ஷ்மி சுப்பு.
- புகைப்படம்: சித்தான்யா போலுமெட்லா