மினசோட்டாவில் “கறி விருந்து”
உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்!
(நறுந்தொகை)
இனி வரும் தை(சனவரி) திங்கள்கள் தமிழ் மரபுத் திங்களாகக் கொண்டாடப்படும் என்ற கனேடிய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து “வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை” அனைத்துத் தமிழ்ச் சங்கங்களையும் தமிழ் மரபுத் திங்களைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளது. நமது மரபுகளும் பல தலைமுறைகளாக ஒன்றிலிருந்து மறு தலைமுறைக்குக் கடத்தப்பட்டுத் தழைத்து, இன்று மரபு எச்சங்களாக நம்மிடம் புழக்கத்தில் இருப்பவற்றில் முதன்மையானதான விருந்தையும் விருந்தோம்பலையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சொல்லவேண்டியது ஒவ்வொரு தமிழரின் சமுதாயக் கடமையாகும்.
மினசோட்டாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் இங்கு வளர்ந்து வரும் அடுத்தத் தலைமுறைக்கும் விருந்தின் சிறப்பினைக் கொண்டுசெல்லக் கடந்த இரண்டு ஆண்டுகளாக “வாழை இலை விருந்து” நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர் மினசோட்டா தமிழ்ச் சங்கத்தினர். இதன் நீட்சியாகவும், அமெரிக்காவில் முதல் முயற்சியாகவும், அடுத்த ஆண்டு மினசோட்டாவில் நடைபெறவுள்ள பேரவையின் “30 வது தமிழ் விழா -2017 ” நிகழ்ச்சியை இங்கு வசிக்கும் தமிழ் நண்பர்களிடம் கொண்டுசெல்லும் நோக்கிலும் “கிடா விருந்து” நிகழ்ச்சி நவ 6 தேதி அன்று ஹாப்கின்ஸ் பள்ளியில் நடத்தியிருந்தார்கள் இவர்கள்.
இவ்விருந்தில் கிடா பிரியாணி, இறால் தொக்கு ,வஞ்சிரம் வறுவல் உட்படப் பதினைந்து வகையான உணவுகள் வாழை இலையில் முந்நூறு பேருக்குப் பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“கிடா விருந்து” அறிவிக்கப்பட்ட சில தினங்களில் நுழைவுச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டது தெரிந்தது. ஒவ்வொரு உணவிற்கும் தனிச் சிரத்தையெடுத்துச் சமைப்பதற்கு மற்றும் உதவிக்கென்று தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து உணவுகளும் விருந்து நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சமைக்கப்பட்டு ஒத்திகை விருந்தும் நடைபெற்றதாம்.
தரமான மூலப் பொருட்களின் தரத்தை உணர்ந்து ஆடு, கோழி இறைச்சி வகைகளை நேரடியாகப் பண்ணைகளிலிருந்து வாங்கியிருந்தனர். வஞ்சிரம், இறால் வகைகளைத் தேடித் பிடித்து வாங்கியிருந்தது தெரிந்தது. முன்னூறு பேருக்குச் சமைக்க தேவையான மளிகைப் பொருட்கள், அடுப்புகள், மிகப் பெரிய பாத்திரங்கள் , சமையல் உபகரணங்கள் போன்றவற்றைச் சேகரித்து, காலையில் சமைக்கத் தொடங்கி, மதியத்திற்குள் சுடச்சுட உணவு வகைகளை விருந்தினர் மண்டபத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
(திருக்குறள்)
விருந்தினர்கள் அனிச்சம் பூவைப்போன்று மென்மையானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை உபசரிப்பதே விருந்தின் சிறப்பு என்பதனை நன்குணர்ந்து அதற்கான தனிக் குழுக்களும் அமைத்திருந்தனர்.
தலை வாழையிலைப் போட்டுத் தண்ணீரும் அதில் தெளித்து நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டபின் விருந்தினர்கள் பந்தியில் அமரவைக்கப்பட்டனர். அனைத்து உணவுகளும் அவர்களின் தேவைக்கேற்ப நிறைவாகப் பரிமாறபட்டன. விருந்தினர்கள் பலரும் தமிழ் மரபு ஆடை அணிந்து, கிடா விருந்தின் அழகை மெருகூட்டி சிறப்பாக்கினர். விருந்தின் மகிழ்ச்சி உணவின் சுவையைவிட யாருடன் உண்கிறோம் என்பதிலே தான் அடங்கியுள்ளது. வெளிநாடுகளில் உற்றாராகவும் உறவுகளாகவும் அமைந்த நண்பர்களுடன் கூடிக் கிடா விருந்து சாப்பிட்டதில் கூடுதல் மகிழ்ச்சி.
பேரவையின் 30 வது தமிழ் விழா அடுத்த ஆண்டு மினசோட்டா நடக்கவிருப்பதையும் அதற்கு அனைவரையும் வரவேற்கும் விதமாகவும் தொடர்ச்சியாக அறிவிப்புகள் செய்தனர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள். மினசோட்டாத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியின் ஓர் அங்கமாகவே அமைந்துபோன பெட்டிக்கடையில் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட கடலைமிட்டாய் தேன்மிட்டாய் இலந்தைவடை மதுரை மல்லி மற்றும் வெற்றிலை போன்றவை இம்முறையும் விற்கப்பட்டன.
பாரம்பரியமான முறையில், பல வகை இறைச்சி உணவுகளைச் சிரத்தையுடன் சமைத்துப் பரிமாறியிருந்த மினசோட்டா தமிழ்ச்சங்க நிர்வாகத்தினருக்கும், தன்னார்வலர்களுக்கும் பனிப்பூக்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கள்.
விஜய் பக்கிரி