ஐநூறாம் ஆயிரமாம்
ஃப்ளைட் விட்டிறங்கி ஏர்ப்போர்ட் விட்டு வெளியில் வருகையில் டாக்ஸி எடுத்துக் கொண்டு செல்லக் கூடக் கையில் சல்லிக்காசில்லை என்ற நிலை சாதாரணமாக நம் போன்ற வணிகப்பயணிகளுக்கு ஏற்படுவதில்லை… ஆனால் சமீபத்தில் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம்… திடீரென, அறிவிக்கப்பட்ட நான்கே மணி நேரத்திற்குள் நம் பாக்கெட்டிலிருந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வெறும் காகிதங்களாக மாறி எதற்கும் பயனில்லாதவையாகிப் போயின. இந்தியப் பிரதமர் நவம்பர் 8 ஆம் தேதியன்று இரவு, சரியாக 8 மணிக்குத் தொலைக்காட்சிகளில் தோன்றி, இன்று இரவு நடுநிசியோடு உங்கள் கைகளிலுள்ள அனைத்து ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும் செல்லாதவையாகிவிடும் என்று ஒரு பெரிய அணுகுண்டு போன்ற செய்தியை நாட்டு மக்களுக்கு அறிவித்தார். இது போன்ற அறிவிப்பை நம் வாழ்நாளில் எந்த நாட்டிலும் கேட்டதில்லையென்ற காரணத்தால், நம் செவிகளை நம்மாலேயே நம்ப இயலவில்லை. அன்று வெளியாகவிருந்த அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் இரண்டாம் பட்சமாகிப் போயின. இந்தியா முழுமையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்ட அறிவிப்பு அது என்றால் மிகையாகாது.
அறிவிப்பைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஏன் இரண்டு மூன்று தினங்களுக்குப் பிறகுதான், அதன் உண்மையான விளைவு பெரும்பாலானோருக்கு விளங்க ஆரம்பித்தது. இந்த நிலையில், பலப்பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நூற்றி இருபது கோடி மக்கட்தொகை கொண்ட, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகமாகிய இந்தியாவில் இதுபோன்ற பல கருத்துக்கள் வெளிவரும் என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. இந்தத் தடாலடி நடவடிக்கை குறித்து, நம் சொந்தக் கருத்தைப் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் அனைத்துக் கருத்துக்களும் எழுத்தாளனாகிய என்னுடைய சொந்தக் கருத்து மட்டுமே என்றும், பனிப்பூக்கள் பத்திரிகையின் கருத்து என்று கருதலாகாது என்றும் முன்னுரையாகக் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
இந்த நடவடிக்கை சாதாரணமான பொது ஜனத்தின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க இயலாது.அன்றாடம் ஒரு வேலை செய்து, சம்பளத்தை ரொக்கமாகப் பெற்று, அரிசி பருப்பு வாங்கி குழந்தைகளுக்குச் சோறூட்டி குடும்பம் நடத்தும் பல்லாயிரக்கணக்கானசாதாரணமானவர்களை இது தாங்கொணாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையாகாது. பல்வேறு குடிசைத் தொழில்கள், கட்டிடத் தொழிலாளிகள், சாலைக் கட்டுமானப் பணி நடத்துவோர், சிறுதொழில் அதிபர்கள், கடை முதலாளிகள் எனப் பொதுவாக, வங்கி மூலமன்றி, நேரடியாக பணப்பறிமாற்றத்தில் சம்பளத்தையும், வரவு செலவுகளையும் கையாளும் ஆயிரக்கணக்கானவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. பொதுவாகவே அரசாங்கமோ, வலிமையான முதலாளிகளோ எடுக்கும் பெரிய அளவிலான நடவடிக்கையில் பாதிக்கப்படும் துரதிருஷ்டசாலிகள் இந்த வகையைச் சேர்ந்த பொதுமக்கள்.
உணர்ச்சி பூர்வமாகச் சிந்திப்பதை ஒரு வினாடி ஒதுக்கிவிட்டு, இது போல ரொக்கத்தின் மூலம் தொழில் நடத்துவது, அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய வரியைச் சேர இயலாது செய்து விடும் என்பதையும் மனதிலிருத்துக் கொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறோம். இந்தச் சிறு தொழில் முதலாளிகள் இதனை இனிமேலாவது மனதில் கொள்ள வேண்டுமென்று உணர்த்தி விட்டு, இந்த நடவடிக்கையின் விளைவுகளை நடுநிலையோடு ஆராய்ந்து பார்ப்போம்.
கறுப்புப் பணத்தில் ஊறித்திளைத்த பண முதலைகள் எவ்வாறு வாழ்க்கை மற்றும் தொழில் நடத்துகின்றனர் என்பதைச் சராசரியான இந்தியத் திரைப்படங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே மிகைப்படுத்திக் காட்சியாக்கும் திரைப்படங்களில், இந்த முதலைகளிடம் குவிந்த செல்வங்களாகக் காட்டப்படுவது மிகைப்படுத்தப்படாதது என்பதே நமது நம்பிக்கை. நாட்டையே தன் பிடியில் வைத்திருக்கும், விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில பணக்காரர்களை விட்டுவிடலாம், அவர்களுக்கு, எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை முன்னரே தெரிந்திருக்கும் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் கூறப்படும் கருத்துக்களை உண்மையென்றே கூட எடுத்துக் கொள்ளலாம். சாதாரணமாக, நம் தினசரி வாழ்க்கையில் புகுந்துவிட்ட பணக்காரர்களைக் கணக்கில் எடுத்து ஒரு சராசரிக் கணக்கிடலாம்.
ஒரு சுயநிதிப் பொறியியற் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரியைப் பற்றிச் சற்று எண்ணிப் பார்க்கலாம். இன்றைய தினம், சீட் ஒன்றிற்கு ஒரு கோடி தொடங்கி, ஒன்றரைக் கோடி வரை வசூலிக்கப்படுகிறது என்பது நாடறிந்த ரகசியம். இந்தத் தொகை, அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட எந்தவிதக் கட்டணமும் அல்ல என்பதும் நாமறிந்ததே. இதனை வசூலிப்பதில் எந்த அடிப்படையும் இல்லை என்பதும், இதற்கு எந்தவிதமான ஆவணங்களும் இல்லையென்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த விதத்தில் வசூலிக்கப்படும் அனைத்துத் தொகைகளும் ரொக்கமாக, பெட்டி பெட்டியாகக் கை மாறுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இதைவிட நடுத்தர வர்க்கத்துடன் நேரடித் தொடர்பாகப் புழங்கப்படும், பெரிய அளவிலான கறுப்புப் பணம் வேறெதுவாக இருக்க இயலும்?.
சாதாரண மனிதர்கள், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் தங்களது நிகழ் காலங்களை இருட்டாக்கி, விளைச்சல் நிலத்தில் தொடங்கி அணிந்திருக்கும் திருமாங்கல்யம் வரை அனைத்தையும் விற்றோ, அடகு வைத்தோ பெறும் பணமும் இதில் பெருமளவும் அடங்கும். சராசரியாக ஒரு கல்லூரியில் இருநூறு சீட்களிலிருந்து ஐநூறு சீட்கள் உள்ளன என்று எடுத்துக்கொண்டு, நாடு முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான கல்லூரிகளில் வசூலிக்கப்படும் தொகையைக் கணக்குப் போட்டுப் பார்த்தால், வரி ஏய்ப்புச் செய்து ரொக்கமாகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மொத்தத் தொகையை நினைக்கையில் தலையைச் சுற்றுகிறதல்லவா?
முதலிலேயே குறிப்பிட்டபடி, அரசாங்கத்தைக் கையில் வைத்திருக்கும் ஒருசில பண முதலைகளுக்கு இந்த நடவடிக்கை முன்னரே தெரிந்திருந்து தப்பித்திருக்கக் கூடுமெனிலும், இதுபோன்ற ஆயிரக்கணக்கான கல்லூரி அதிபர்களும் அவர்களைப்போன்ற மத்திய தர நிலையிலிருக்கும் கோடீஸ்வரர்களிடமும், லட்சாதிபதிகளிடமும் பதுங்கியிருக்கும் கறுப்புப் பணம் இந்த நடவடிக்கையால் தெருவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களிலும், பேசித் தொடர்பு கொள்ளும் பல நண்பர்களின் மூலமும், நேரடியாகத் தொடர்பு கொள்ள முடிந்த ஒருசில சந்தர்ப்பங்களில் கிடைத்த கருத்துக்களின் மூலமும் நம்மால் ஒன்று புரிந்து கொள்ள முடிகிறது. சாதாரண நிலையில் இருக்கும் திருவாளர் பொதுஜனம் இந்த நடவடிக்கை குறித்து, மிகவும் மகிழ்ச்சியடைகிறார் என்பதே அது. இன்னும் திட்டமிட்டு, பொதுமக்களுக்குத் தொல்லையில்லாமல் நிகழ்த்தியிருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கும் பலரும், இது மிகவும் தவறான நடவடிக்கை, செய்திருக்கவே கூடாது என்று கூறவில்லை என்பதே கூர்ந்து நோக்கப்பட வேண்டிய உண்மை. இயற்கை முறையில் இறந்து போன ஒரு தலைவருக்காவே நடக்கும் கடையடைப்புகளும், வன்முறைகளும் இந்த நடவடிக்கைக்காக நடக்கவில்லையென்பதும் இன்னொரு குறிப்பிடத்தக்க உண்மை (பொதுவாக இவற்றை நடத்துபவரெல்லாம் கறுப்புப் பண முதலைகளென்பதும், அவர்களின் பணம் முடக்கப்பட்டுள்ளதே நாட்டில் கலவரம் நடக்காமல் இருப்பதற்குக் காரணம் என்ற கருத்திலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது).
புதிய ஐநூறு ரூபாய் நோட்டுக்களை விரைவில் கொணர்ந்திருக்கவேண்டும், அதிக அளவில் நூறு ரூபாய் நோட்டுக்களைப் புழக்கத்தில் கொண்டு வந்திருக்க வேண்டும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை ஏ.டி.எம். இல் விரைவாக நிரப்பி இருக்க வேண்டும் எனச் சில குறைகளை அரசாங்கத்தின் மேல் கூற முடிந்தாலும், இந்த கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்ற முயற்சியை யாரும் குறைகூற முடியாது என்பதையே பொதுமக்களின் வெளிப்பாடாக நாம் உணர்கிறோம்.
இன்றைய அரசியல் நிலவரத்தில், இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தில் ஊழல், கறுப்புப் பணம், அதிகார துஷ்பிரயோகம், பணம் படைத்தவர்களுக்குக் கூழைக் கும்பிடு போடும் தலைவர்கள், நாட்டு நலம் குறித்தும் நாட்டு மக்களின் நலம் குறித்தும் கிஞ்சித்தும் நினைக்காது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் சுயநலவாதிகள் ஆகியவை நிறைந்திருக்கும் நிலையில் இதுபோன்ற ஒரு நடவடிக்கை எடுப்பதற்கு, எண்ணிப்பார்க்க இயலாத அளவு நேர்மையும், மனோதிடமும் வேண்டுமென்பதே நமது முடிவு. தனது கட்சியிலேயே ஊழலில் திளைக்கும் எத்தனையோ தலைவர்களை வைத்துக் கொண்டு, இதுபோன்ற ஒரு முடிவு எடுத்து அதனை நாடு முழுவதும் அமலாக்க முடியும் என்று நம்பிச் செயல்படுவதற்கு அளவிடற்கரிய உறுதி வேண்டுமென்பது திண்ணம். அதுபோன்ற ஒரு இரும்பு மனிதராகவே மோடி நமது கண்களுக்குக் காட்சியளிக்கிறார்.
அவரது கட்சியிலுள்ளவர்களில் சிலருக்கும், அதிகாரம் மிகுந்த ஒருசில கோடீஸ்வரர்களுக்கும் இந்த நடவடிக்கை முன்னரே தெரிந்து, அவர்கள் தங்கள் கறுப்புப் பணங்களையெல்லாம் மாற்றிக்கொண்டனர் என்று கூறப்படுவதில் ஓரளவு உண்மையிருக்கிறதென்று கூடக் கொள்ளலாம். அவர்களைத் தவிர்த்து, நாம் ஏற்கனவே கூறியது போன்ற பல ஆயிரக்கணக்கான கறுப்புப் பண முதலைகளிடம் உள்ளவற்றைக் கைப் பற்றினாலே கிட்டத்தட்ட பதினாறு லட்சம் கோடி (எத்தனை பூஜ்யங்கள் என்று சற்றுக் குழப்பமாக உள்ளது) பணத்தைக் கைப்பற்ற இயலுமென்று அதிகார வட்டங்கள் கூறுகின்றன.
நூற்றுக் கணக்கில் மக்கள் இறந்து விட்டனர், ஆயிரக்கணக்கில் மக்கள் அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவிக்கின்றனர், லட்சக்கணக்கில் மக்கள் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றனர் என்று மனம் போன போக்கில் செய்திகளை வெளியிடும் வெகுஜனப் பத்திரிக்கைகள் ஒரு புறம். மோடி அரசையோ, அவர் சார்ந்துள்ள கட்சியையோ, அதன் சார்பு இயக்கங்களையோ, அவர்களின் கொள்கைகளையோ ஏற்றுக் கொள்ளாத ஒரு சாரார் வெளியிடும் எதிர்ப்புக் கருத்துக்கள் மறு புறம். இவற்றிற்கு இடையே நாம் நேரடியாகப் பார்த்த, கேட்ட, உணர்ந்த ஒரு சில குறிப்பிடத்தக்க வெளிப்பாடுகளை இங்கே தொகுத்துள்ளோம்;
- இரண்டு மூன்று மணி நேரங்கள் வரிசையில் நின்று, நான்காயிரம் ரூபாய் அல்லது அதற்குக் குறைவான அளவு பணத்தை எடுத்துக் கொண்டு செல்பவர்கள சொல்வது, “இது சரியான நடவடிக்கை தான், ஆனால் பணத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக ஏ.டி.எம். மற்றும் வங்கிகளில் கொண்டு வந்திருக்க வேண்டும்”.
- ஆட்டோ ஓட்டுபவர்கள் பலரும், “கையில காசில்லங்க, ஆனா ஒரு வாரம் பத்து நாள்ல நிலைமை சரியாயிரும்” என்கின்றனர்.
- புதிதாகக் கொண்டுவரப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஏற்கனவே இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைவிட மெலிதாக உள்ளன, அதனால் ஏ.டி.எம். ஆல் இவற்றைச் சரியாக பட்டுவாடாச் செய்ய இயலாது என்பதை இந்தக் குழு எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டதே இந்தக் குழப்பங்களுக்கு மிகப் பெரிய காரணம் என்று தொழில் நுட்பத் துறையிலிருக்கும் சில பொதுஜனங்கள் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. அதிக அளவில் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிந்தால் இந்த அளவுத் தொகைகளை முடக்கி இருக்க இயலாது என்ற கோணத்தில் பார்க்கையில், இது போன்ற நுட்பமான குறிப்பு கவனிக்கப்படாமல் போனது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. அனைத்துக் குறிப்புக்களையும் உணர்ந்து எதனையும் தவற விடாது செய்ய வேண்டுமெனில், இன்னும் பலர் இந்தத் திட்டமிடல்களில் உதவியிருக்க வேண்டும், அவ்வாறு உதவியிருந்தால் இந்த ரகசியம் இன்னும் பலருக்கு முன்னமேயே வெளி வந்திருக்கும். அதனால் வரக்கூடிய விளைவை நினைக்கையில், இப்பொழுது மக்கள் சந்திக்கும் ஒரு சில அசௌகரியங்களே பரவாயில்லையென்றே நமக்குத் தோன்றுகிறது.
- பொதுவாகவே மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களுக்குக் கூட, தனக்குப் பிடிக்காத அரசியல் தலைவரையோ அல்லது கட்சியையோ குறை கூறும் திருவாளர் பொதுஜனம், தொலைக்காட்சியிலும் ஊடகங்களிலும் கருத்துக் கூறுகையில் இந்த நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது என்று சொல்லவில்லை என்பது மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்க உண்மை.
சரி, இந்த நடவடிக்கை எடுத்ததால் இனி இந்தியாவில் கறுப்புப் பணத்தின் தாக்கமே இல்லையென்று ஆகிவிடுமா என்ற கேள்வி எழுகிறது. இதற்குப் பதில் “அப்படி ஆகாது” என்பதே. மனிதன் எங்கெல்லாம் வாழ்கின்றானோ அங்கெல்லாம் விதிகளுக்குப் புறம்பான செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டேதானிருப்பான் என்பதே நிதர்சனம். ஆனால், இப்பொழுது அழிக்கப்பட்ட அல்லது ஒழிக்கப்பட்ட தொகைகளைப் போன்ற பெரிய அளவிலான கறுப்புப் பணத்தை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டுவர பல ஆண்டுகள் பிடிக்கும் என்பதே உண்மை. அந்தக் கால கட்டத்திற்குள் என்னென்ன நன்மைகள் உருவாகலாம் என்ற கற்பனைகளே நம் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. பதினாறு லட்சம் கோடி கறுப்புப் பணம் அரசாங்கத்தின் கஜானாவிற்கு வரித்தொகையாக வந்து சேர்ந்தால் அரசாங்கத்தால் செய்ய முடிந்த மக்கள் நலத் திட்டங்கள் நம் மூடிய கண்முன் நடனமாடத் தொடங்குகின்றன. செயற்கையாக வான் அளவு உயர்ந்திருக்கிற ரியல் எஸ்டேட் சரியான மதிப்பிற்குக் கொண்டுவரப் படுவது நடுத்தர மக்களுக்குச் சொந்த வீடு என்ற கனவை நனவாக்குவதாக நம் கனவில் வந்து போகிறது. அடுத்த தலைமுறை படித்து நம் குடும்பத்தைக் கரை சேர்க்க வேண்டுமென்ற நிலையிலிருக்கும் பெற்றோர் அவர்களைப் படிக்க வைக்க கோடிக் கணக்கில் பணம் வேண்டாம், ஒரு சில லட்சங்களே போதும் என்ற நிலைக்கு வருவதால் உண்டாகும் மகிழ்ச்சி நம் மனக்கண் முன் தாண்டவமாடுகிறது,
இவையெல்லாமே நடந்து ராமராஜ்யம் நாளையே தோன்றிவிடும் என்று கண்மூடித்தனமாக நம்புமளவுக்கு நாம் முட்டாளில்லை. ஆனால் இது போன்ற ஒரு நிலையை அடையும் பாதையை நோக்கிய ஒரு திருப்பம் இது என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக எந்த அரசும் நடத்தியிராத, நினைத்துக் கூடப் பார்த்திராத ஒரு அதிசயத்தை இந்த அரசு நடத்தியிருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். (இரண்டாயிரத்துப் பதினான்கில் காங்கிரஸ் அரசு இதுபோன்ற ஒரு நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ததாகவும், அதற்கு பி.ஜே.பி மறுப்புத் தெரிவித்ததாகவும் வரும் செய்திகளில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றாலும் அந்த நடவடிக்கைக்கும் இதற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன என்பதுதான் உண்மை. அதுபற்றி வேறொரு கட்டுரையில் பார்க்கலாம்).
இதுபோன்ற பெரிய அளவு நடவடிக்கை எடுக்கப்படுகையில், பொதுமக்களுக்குப் பாதிப்பு வருமென்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இயற்கைச் சீற்றங்களோ, ஆளும் கட்சிகளின் கொள்கை மாற்றங்களோ எதுவாக இருப்பினும் உடனடியாக, நேரடியாக பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கமும் வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் திருவாளர் பொதுஜனமும் தான் என்பதும் வருந்தத்தக்க உண்மை. அதுபோன்று, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நமது உளமார்ந்த வருத்தத்தை உரித்தாக்கும் அதே சமயத்தில், மற்ற வகையான துயரங்களுக்கு உள்ளாகுகையில், நினைத்துப் பார்த்து ஆறுதலடைய எதுவுமில்லாத அந்தப் பொது ஜனம், குறிப்பிட்ட இந்த நடவடிக்கையில், இதன் மூலம் வரும் ஒரு சில ஆண்டுகளுக்காவது கறுப்புப் பண நடவடிக்கை குறைந்திருக்கும், அதன் மூலம் பல அத்தியாவசியங்களின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று நம்பி மகிழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளது என்பது மகிழ்ச்சியடையக் கூடிய நிலையே !!.
வெ. மதுசூதனன்.