பிரக்ஸிட்டும் கேலக்ஸிட்டும் (Brexit & Calexit)
சமீப காலங்களில் பிரபலமடையத் துவங்கியுள்ள ஒரு ஒட்டுச்சொல் ‘எக்ஸிட்’. அவற்றில் ஒன்று நம் வீட்டின் கொல்லைப் புறக் கதவைத் தட்டத் துவங்கியுள்ளது. உலக அரங்கில் நடந்த பல நேர்வுகள், அமெரிக்கத் தேர்தலால் அதிக முக்கியத்துவம் பெறாமல் போயின. அவற்றில் ஒன்று ‘பிரக்ஸிட்’ .
பிரக்ஸிட் (Brexit)
முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னர் உலகம் முழுதும் பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டன. பஞ்சம், பட்டினி, நோய்கள், வறுமை எனப் பல கொடுமைகள் பூதாகாரமாக வளர்ந்து உலக நாடுகளை அச்சுறுத்தின. இன்னுமொரு போரை நாடு தாங்காது என்ற நிலையில் 1951ம் ஆண்டு ஜெர்மனியும், ஃபிரான்ஸும் நிலக்கரி மற்றும் இரும்புத்தாது வர்த்தகத்தை ஒருங்கிணைந்து நடத்துவது என முடிவு செய்தன. அப்படி உருவானது தான் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் இரும்பாலை சமூகம் (European Coal and Steel community – ECSC). பின்னர் 1957ம் ஆண்டு ஃபிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், லக்ஸம்பர்க் ஆகிய நாடுகள் இணைந்து ஐரோப்பிய வர்த்தக சபையை (European Economic Community – EEC) உருவாக்கின.
இதன் மூலம் இந்நாடுகளுக்கு இடையே நிலவிய வர்த்தகத் தடைகள் நீங்கி ‘பொதுச் சந்தை’ (Common Market) ‘ ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம்’ (European community – EC) உருவானது. போர்களற்ற, வர்த்தகத் தடைகளற்ற, பொதுவான நல்லெண்ணங்கள் கொண்ட நாடுகளை உருவாக்க வேண்டும் என்பது தான் இவ்வமைப்பின் குறிக்கோள்.
துவக்கத்தில் இவ்வமைப்புகளில் நம்பிக்கையில்லாத பிரிட்டன் இதில் பங்கேற்க மறுத்தது. பின்னர் இக்கூட்டமைப்பு நாடுகளின் வெற்றியைக் கண்டு 1973ல் இதில் இணைய முன்வந்தது. ஃபிரான்ஸ் இதை விரும்பவில்லை என்றாலும் மற்ற நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் இதற்கு ஒத்துக் கொண்டது. பிரிட்டனின் வருகையால் இக்கூட்டமைப்பு மேலும் பலம் பெற்றது. தொடர்ந்து அயர்லாந்து, டென்மார்க் , கிரீஸ் போன்ற பல நாடுகள் இதில் இணைய, 1990ல் ஐரோப்பிய ஒன்றியம் (European Union – EU) எனும் மிக வலுவான கூட்டமைப்பு உருவெடுத்தது. இதன் படி இதன் உறுப்பினர் நாடுகள் தங்களுக்கென ஒரு அரசாங்கத்தை நிறுவிக் கொண்டாலும், அதனை நிர்வகிக்கும் அங்கமாக ஐரோப்பிய ஒன்றியம் அமைந்தது . இந்நாடுகளுக்குத் தேவையான உதவிகளையும் ஐரோப்பிய ஒன்றியம் செய்து வந்தது. இதன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ள நாம் அமெரிக்காவின் ‘மத்திய அவசரக்கால நிர்வாக அமைப்பை (FEMA) எடுத்துக் கொள்ளலாம். தனி மாநிலங்கள் ஒவ்வொன்றும் இதற்கான சந்தாவைக் கட்டி வந்தாலும், வெள்ளம், பஞ்சம் , நில நடுக்கம் போன்ற பேரிடர்கள் ஏற்படாத வரையில் அம்மாநிலங்கள் எவ்விதப் பயனும் பெறாது. ஆனால் இவ்வமைப்பில் இடம் பெறுவது ஒவ்வொரு மாநிலத்துக்கும் பாதுகாப்பானது.
அதே போன்று உறுப்பினர் நாடுகள் இவ்வமைப்பில் பங்கு பெற ஒரு கட்டணத்தைக் கட்டி வந்தன. ஒருங்கிணைந்த அரசியலமைப்பை ஏற்படுத்தி பொருளாதார எல்லைகளற்ற, வேறுபாடுகளற்ற, ஒன்றுபட்ட கலாச்சாரத்தை உருவாக்குவதே ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிக்கோள். இதன் மூலம் ஐரோப்பிய கண்டத்தில் ஒற்றுமையையும், அமைதியையும் நிலைப்படுத்தி, உற்பத்தியை அதிகரித்து, மக்களுக்குப் பாதுகாப்பளித்து உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்க இவ்வமைப்பு முனைந்தது. 1995ல் யூரோ பிரதேசம் (Euro Zone), யூரோ நாணயமுறை (Euro currency) போன்றவை அறிமுகமாயின.
ஷெங்கேன் பிரதேசம் (Schengen Territory) என்று உருவாக்கிக் கொண்ட பல உறுப்பினர் நாடுகளிடையே நில எல்லைகள் அகற்றப்பட்டு, விஸா, பாஸ்போர்ட் போன்ற கட்டுப்பாடின்றி மக்கள் பயணிக்க முடிந்தது. யூரோ பணமுறை பல நாடுகளிடையே பிரபலமடைந்தது.
2020ல் இந்நாடுகளின் தனிப்பட்ட நாணயங்கள் வழக்கொழிந்து யூரோ நாணயமுறையைப் பின்பற்ற இந்நாடுகள் முடிவு செய்திருந்தன. உலகப் பொருளாதாரத் தாராள மயமாக்கலுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெற்றியும் ஒரு காரணமாக அமைந்தது.
ஆனால் 2002ல் அமெரிக்காவில் தொடங்கி மெதுவே உலகமெங்கும் பரவிய பொருளாதாரத் தேக்கமும், பின்னடைவும் ஐக்கிய ஒன்றியத்தின் பல நாடுகளிலும் பிரதிபலித்தது. கிரீஸ் போன்று சில நாடுகள் மிகப் பெரிய வீழ்ச்சியைக் கண்டன. இங்கு நிலவிய பணவீழ்ச்சி, பொருளாதார நிலையின்மை போன்றவை மற்ற நாடுகளைக் கவலையுறச் செய்தன.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தப்படி எந்த நாடும் அகதிகளை மறுக்க முடியாது. அண்டை நாடுகளில் பெரும் புரட்சிகள் வெடிக்கத் துவங்கி மக்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் பெற முயன்ற போது அவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய நிர்பந்தம் இந்நாடுகளுக்கு உருவானது. இவற்றில் அகதிகளாக ஏதேனும் ஒரு நாட்டுக்குள் நுழையும் தீவிரவாதிகள் சுதந்திரமாக மற்ற நாடுகளுக்குப் பயணிக்க முடிந்தது. இதனால் ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் பாதுகாப்பு பெரும் பிரச்சனையாகிப் போனது.
மேலும் அயல் நாட்டினர் எவ்விதத் தடையுமின்றி ஒரு நாட்டுக்குள் நுழைய முடிந்ததால் உள்நாட்டில் பலருக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து போயின. ஒவ்வொரு நாட்டுக்கிடையே வழங்கிய பல்வேறு மொழிப் பயன்பாட்டினாலும் சிக்கல்கள் எழத் துவங்கின.
இவ்வாறு எழுந்த சிக்கல்கள் மெதுவே கிளர்ச்சியுற்று, வளர்ந்து, அரசியல் முக்கியத்துவம் பெறத் துவங்கின. அவ்வகையில் ஐக்கிய ராஜ்ய சுதந்திரக் கட்சியைச் சார்ந்த திரு. நிகல் ஃபராஜ், ஐக்கிய ராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கையிலிருந்துவெளியேற வேண்டும் என்ற அழுத்தமான கருத்துக்களைப் பரப்பத் துவங்கினார். ஏற்கனவே பல ஆண்டுகளாக உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டிருந்த இந்தக் கருத்துகள் ஆங்காங்கே போராட்டங்களாக வெடிக்க, வாக்கெடுப்பு மூலம் மக்கள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த பொது வாக்கெடுப்பின் படி 52 சதவித மக்கள் பிரிட்டன் ஐக்கிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற முடிவைத் தெரிவித்திருந்தனர். மூன்று கோடி மக்கள் கலந்து கொண்ட வாக்கெடுப்பில் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமானோர் இம்முடிவைத் தேர்ந்தெடுத்தது ஐரோப்பியக் கண்டத்தில் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை முற்றிலும் எதிர்பாராத பிரதம மந்திரி திரு. டேவிட் கேமரூன் பதவி விலகிட, புதிய பிரதம மந்திரியாக திருமதி. தெரசா மே பொறுப்பேற்றார்.
இன்னும் இரண்டாண்டுகளில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முற்றிலுமாக வெளியற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிகவும் பலம் பொருந்திய ஐக்கிய ராஜ்ஜியம் வெளியேறிய உடனேயே ஃபிரான்ஸ், போலந்து போன்ற பல நாடுகள் ஐக்கிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறத் துடிக்கின்றன.
கேலக்ஸிட் (Calexit)
பிரக்ஸிட் ஒரு புறமிருக்க, சென்ற வாரம் வெளியான தேர்தல் முடிவுகளுக்குப்
பின்னர் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் வலுப்பெறத் துவங்கியிருக்கும் இயக்கம் கேலக்ஸிட்.
உலக நாடுகளின் ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி’ யை வரிசைப்படுத்தினால் கலிஃபோர்னியா மாநிலம் ஆறாவது இடத்தைப் பிடிக்கிறது. ஐக்கிய அமெரிக்கா (கலிஃபோர்னியா இல்லாமல்), சீனா, ஜப்பான், ஜெர்மனி, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்க, அமெரிக்காவின் ஒரு மாநிலமான கலிஃபோர்னியா ஆறாவது இடத்தைப் பிடிக்குமளவுக்கு பலம் பெற்று விளங்குகிறது
கலிஃபோர்னியா மக்கட் தொகையைப் பொறுத்தளவில் பெரும்பான்மையானோர் போர்த்துகீஸ், ருமேனியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளான சீனா, வியட்நாம், இந்தியா, ஜப்பான், கொரியா போன்றவற்றிலிருந்து இங்கு வந்து குடியுரிமை பெற்றுள்ளவர்கள்.
பழமைவாதி, முற்போக்குவாதி, மிதவாதி என எப்படியும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாத திரு. டானல்ட் ட்ரம்பின் வெற்றியை கலிஃபோர்னியா மாநிலத்தவரால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்து வந்த இவர்களுக்குச் சிறுபான்மையினரைத் துவேஷிக்கும் திரு. ட்ரம்பின் தலைமையை ஏற்க பெரும் தயக்கம் ஏற்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாநிலத்தவர் கட்டும் வருமான வரிக்கு ஈடாக மத்திய அரசிடமிருந்து எந்தப் பலனும் கிடைப்பதில்லை என்பது இவர்களது குறை.
திரு. லூயிஸ் மாரிநெல்லி என்பவர் தொடங்கிய ‘எஸ் கலிபோர்னியா’ (Yes California) தனி இயக்கம் சமூகத் தளங்களில் இவ்வுணர்வை அழுந்தப் பதிய வைத்துக் கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து எப்படி ஐக்கிய ராஜ்ஜிய நாட்டுக்குள் ஒரு நாடாக விளங்குகிறதோ அது போன்று கலிபோர்னியா, அமெரிக்க நாட்டுக்குள் தனிநாடாக இருக்க வேண்டுமென்பது இவர்களது கோரிக்கை.
சமூகத் தளங்கள் மிகப் பலம் வாய்ந்த ஆயுதமாக உருவெடுத்துள்ள கால கட்டத்தில், அடுத்த இரண்டு தலைமுறைகளுக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்க நாட்டுக் கொடியில் 49 நட்சத்திரங்கள் மட்டுமே இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
– ரவிக்குமார்