உடையாத கண்ணாடிக் கூரை
நடந்து முடிந்த தேர்தலில், அரசியல் கொள்கைகள், என்பதைக் கடந்து அமெரிக்க மக்கள் எதிர்பார்த்திருந்த விஷயம், ‘உடையாத அந்த கண்ணாடிக் கூரை’ உடையுமா என்பது தான்.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, ஊடகங்களில் பல பெண்கள், குறிப்பாக சிறுபான்மையின பிரிவைச் சார்ந்த பெண்கள் மிகவும் வருத்தப்பட்டு ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்ததைக் காண முடிந்தது. முடிவுகள் வெளியான இரவன்று தூங்கச் சென்ற தங்கள் பெண் குழந்தைகளிடம், பலர் நாளைக் காலையில் அமெரிக்காவில் முதல் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் என்று சொல்லி இருந்ததாகவும், மறுநாள் காலையில் முடிவைக் கேட்ட குழந்தைகள் தேம்பித் தேம்பி அழத் துவங்கியதாகவும் வருந்தி இருந்தனர். பல பள்ளிகள், கல்லூரிகளிலும் இந்த ஏமாற்றத்தைக் காண முடிந்ததாக ஆசிரியர்கள் பகிர்ந்திருந்தார்கள் .
அமெரிக்க நாட்டில் மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது பாலின வேறுபாடுகள் ஏறக்குறைய ஒழிந்து விட்டது என்றே தோன்றும். பள்ளிகள், கல்லூரிகள் , தொழிற்சாலைகள், அலுவலகங்கள், காவல், பாதுகாப்பு, விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றுவதோடு பல இடங்களில் மிக உயரிய பதவிகளையும் வகித்து வருகின்றனர். எனினும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வருமான வித்தியாசங்கள், சலுகைகள் போன்றவை ஏற்றத்தாழ்வுடன் இருப்பதை மறுக்க முடியாது.
1920ம் ஆண்டு, 19வது சட்டத் திருத்தம் மூலம் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட நாள் முதல் பெண்கள் அரசின் பல நிர்வாகப் பொறுப்பிலிருந்து வருகிறார்கள். 1925ம் ஆண்டு, திருமதி நெல்லி ராஸ், அப்போது ஆளுநராக இருந்த அவரது கணவன் இறந்தபோது, ஆளுநராகப் பொறுப்பேற்றார். 1964ம் ஆண்டு மார்கரெட் ஸ்மித் அதிபர், குடியரசுக் கட்சியின் சார்பில் வேட்பாளராக நின்றார். ஆனால் அவரால் இறுதிச் சுற்று வரை செல்ல முடியவில்லை .
1997ம் ஆண்டு திருமதி மேட்லின் ஆல்ப்ரைட் முதல் பெண் வெளியுறவுச் செயலாளர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் காண்டலிசா ரைஸ் இப்பதவியை வகித்தார். பின்னர் ஒபாமா அதிபரான பின்பு, ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலாளராகப் பணியாற்றினார்.
இந்த ஆண்டு ஜனநாயகக் கட்சியின் சார்பில், போட்டியிட்டு, கட்சியின் பெரும்பான்மையினரின் ஆதரவோடு முதல் பெண் அதிபர் வேட்பாளராக திருமதி. ஹிலரி தேர்ந்தெடுக்கப்பட்ட போது 240 ஆண்டு காலமாக உடையாத, கனத்த கண்ணாடிக் கூரை உடைந்து விடும் என்று தான் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் எதோ ஒரு மூலையில், அந்தச் சாபத்தின் பிரதிபலிப்பு ஒட்டிக் கொண்டிருந்ததாகவே தோன்றுகிறது.
உலக அரங்கில், ஒரு நாட்டை வழி நடத்தும் உயரிய பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற புகழைப் பெற்றவர் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயகே. 1959ம் ஆண்டு, அப்போதைய சிலோன் நாட்டின் பிரதம மந்திரியான அவரது கணவர் திரு. சாலமன் பண்டாரநாயகே இறந்த பின்பு கட்சிப் பொறுப்பை ஏற்று, தொடர்ந்து பிரதம மந்திரி தேர்தலிலும் வெற்றி பெற்றார் திருமதி சிறிமாவோ.
ஏறக்குறைய அதே முறையில், தனது தந்தை திரு. ஜவஹர்லால் நேருவின் இறப்புக்குப் பிறகு, அப்போதைய பிரதமர் திரு. சாஸ்திரியின் அரசில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகப் பணிபுரிந்து, திரு. சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர் பிரதமராகப் பொறுப்பேற்றார் திருமதி. இந்திரா காந்தி .
பின்னர் வங்காளதேசம், பாகிஸ்தான், ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளிலும், ஐக்கிய ராஜாங்கம், ஜெர்மனி, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், பிரேசில், சிலி, அர்ஜென்டினா போன்ற தென்னமெரிக்க நாடுகளிலும் பெண்கள் நாட்டை ஆளும் தலைவர்களாகப் பொறுப்பேற்றனர். ஆனால் ஐக்கிய அமெரிக்க நாடு இன்னமும் அந்தப் பெருமையை அடையவில்லை.
2006 ல், ஹிலரி அதிபர் தேர்தலுக்கான பூர்வாங்கத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த போது பத்தில் ஆறு பேர் பெண், நாடு பெண் அதிபர் ஒருவருக்கு தயாராகி விட்டதாகத் தெரிவித்திருந்தனர். 2008௮ ல் இது பத்தில் எட்டு பேர் என்ற நிலைக்கு உயர்ந்தது. இந்தாண்டு துவக்கத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் பத்தில் எட்டு பேர் இதற்கு உடன்பட்டிருந்தனர்.
கட்சி ரீதியாக இக்கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட போது, 34 சதவிகித குடியரசுக் கட்சியினரும், 84 சதவிகித ஜனநாயகக் கட்சியினரும், பெண் ஒருவர் நாட்டை ஆள்வது, பெண்கள் சமமாகக் கருதப்படுவதற்கு அவசியமான குறியீடு என்று தெரிவித்திருந்தனர்.
தேர்தலுக்கு முன்னர் பல சமயங்களில் ஹிலரி உடல் ரீதியாக பலம் ( stamina) இல்லாதவர் என்று விமரிசிக்கப்பட்டார். இடையில் உடல் நலம் குன்றிய பின்பு, இக்கருத்து மேலும் வலுப்பெற்றது. ஹிலரி சிரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றவொரு கருத்துப் பகிரப்பட்ட போது, பெண்கள் வசீகரப் பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள் என்ற ஒரு கருத்து ஓரிரு பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டாலும் யாருடைய கவனத்தையும் அது ஈர்க்கவில்லை. பெண் ஒருவர் தலைமைத் தளபதியாக இருப்பதில் பழந்தலைமுறையினருக்கு உடன்பாடில்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.
அது போன்றே, எலிசபெத் வாரனின் பெயர் துணை அதிபருக்கான தேர்வில் அடிபட்ட போது இரண்டு பெண்களா என்ற கேள்விக்குறியும் ஆங்காங்கே எழும்பியது.
2008ல் சாரா பேலின் துணை அதிபராகப் போட்டியிட்ட போதும் இது போன்ற சர்ச்சைகள் கிளம்பியது நினைவிருக்கலாம். அழகுப் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றிருந்ததும், எதிர் தரப்பில் போட்டியிட்ட ஒபாமாவுக்குப் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததை முறியடிக்கவும் மட்டுமே சாராவுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதாகப் பேசப்பட்டது. பின்னர் அவர் உடைகளுக்கு அதிகம் செலவிடுகிறார் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. ‘பன்றிக்கு உதட்டுச்சாயம்’ என்ற மரபுத்தொடர் மறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது.
ஹிலரியின் தனிப்பட்ட குறைகள், கொள்கைகள், புதுமையான திட்டங்கள் ஏதுமில்லாமல் தற்போதைய திட்டங்களின் நீட்சியாகவே அறிக்கைகள் இருந்ததும் ஹிலரியின் தோல்விக்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், இது போன்ற குறைபாடுகள் இல்லாத ஒரு பெண் அதிபராகப் போட்டியிட்டால் வெற்றி பெறுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில், அதிகச் சத்தமில்லாமல் இந்தக் கண்ணாடிக் கூரையை உடைக்க உருவாகி வருகிறார் திருமதி. கமலா ஹாரிஸ். நடந்து முடிந்த தேர்தலில் கலிஃபோர்னியா மாநிலத்திலிருந்து அமெரிக்க செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ். சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவர் இவர். இரண்டு முறை கலிஃபோர்னியா மாநில அட்டர்னி ஜெனராலாகப் பணியாற்றியுள்ளார். 2020ல், ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்தல் களத்தில் இறக்கப்படவிருக்கும் பெயர்களில் கமலா ஹாரிஸின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
கமலா அந்தக் கண்ணாடிக் கூரையை உடைத்தெறிவார் என்று எதிர்பார்ப்போம்.
– ரவிக்குமார்.