குழப்பத்தின் கோபுரம் பாபேல் – பைபிள் கதைகள்
வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது உலகம். இன, மொழி வேறுபாடுகள் நிறைந்தாதாயிற்று நாம் வாழும் உலகம்.
வீட்டில் பேச ஒரு மொழி, அலுவலகத்தில் ஒரு மொழி, வேலையின் நிமித்தம் வெளியூர் சென்றால் அங்கு வேறொரு மொழி.
குழந்தைக்குச் சில நேரத்தில் வீட்டில் அப்பா என்றழைக்க வேண்டும் பள்ளியில் டாடி என்றழைக்க வேண்டும் ….
அந்தச் சிறு உள்ளத்தில் ஒரு மொழிப் போராட்டம்……
டாடியா……. அப்பாவா… முடிவில் டப்பாவான தந்தை
அம்மாவா…. மாம்மியா…… முடிவில் அம்மியான தாய்…
அந்தக் குழந்தைக்கு மட்டுமல்ல… நமக்கும் இது போன்ற குழப்பங்கள் வந்திருக்கும்… காரணம் ஆதி மனிதனுக்கே அந்தக் குழப்பம் வந்ததே…
ஒரே மொழி, ஒரே இனம், ஒரே சிந்தனை… உலகம் எப்படி இருந்திருக்கும்….. நினைக்கவே ஆச்சரியமா இருக்கா?…. அப்படிப்பட்ட ஒரு உலகம்…
பாவம் கொண்ட மக்கள் நிறைந்த உலகை, பெருத்த வெள்ளம் கொண்டு அழித்தார் கடவுள். அதில் மிகப்பெரிய பெட்டகத்தில் (Noah’s Arc) தப்பியது நோவா குடும்பத்தினரும் மற்றும் ஒவ்வொரு விலங்குகள், பறவைகள், ஊர்வன பறப்பனவற்றில் ஒரு சோடி உயிரினங்களும் ஆகும்.
நோவாவிற்குப் பிறகு பல தலைமுறைகள் கடந்தபின், உலகம் மீண்டும் பாவபூமியானது. மனிதர்கள் கடவுளை மறந்து தங்கள் பெருமைகளில் ஊறிக்கிடந்தனர்.
செல்வச் செழிப்பு கொண்ட அந்த மனிதர்களில் நிம்ரோது என்ற ஒரு மனிதன் இருந்தான். அவன்தான் முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்.
செல்வச் செழிப்பு… நானே வல்லவன் என்ற மமதை…..
கடவுளா? மனிதானா? …………வானமா? பூமியா?…..என்ற விவாதம்….
பேரழிவு தரும் வெள்ளத்திலிருந்து காத்துக்கொள்ளவும், சொர்க்கத்தையே தொடுமளவு தனது வலிமையைக் காட்டவும் நிம்ரோது தலைமையில் மக்கள் எல்லாரும் சேர்ந்து உலகிலேயே உயரமான கோபுரத்தைக் கட்ட முடிவு செய்தனர்.
எல்லோரும் ஒன்றாய்க்கூடி “நாம் நமெக்கென, வானகங்களை முட்டுமளவிற்கு கோபுரம் ஒன்றை எழுப்புவோம். நாம் பிரிந்து பூமி எங்கும் பரவிப் போகாமல் அதில் ஒன்றாய் வாழலாம். நம் புகழை அந்தக் கோபுரம் நிலைநாட்டும்” என முடிவெடுத்து பாபேல் என்ற கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்தனர்.
பாபேல் என்பது பபிலோனுக்குத் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேயப் பெயராகும்.
நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
நகரமும் ஒரு நாட்டினுடைய அரசியல், ஆட்சி, மற்றும் பொருளாதாரம் ஆகியவையும் அந்த நாட்டின் கட்டடங்களில் தெரியும். ஒரு நாட்டினுடைய நகரங்களை வைத்து அந்த நாட்டை எடை போடுவர்.
இப்போது கூட ஒவ்வொரு நாடும் பெரிய, பெரிய கட்டடங்களையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்ட விரும்புவதைக் காணலாம். எவ்வளவு பெரிய கட்டங்களை கட்டுகின்றார்களோ, அந்தளவிற்கு அவர்களுடைய அதிகாரமும், பலமும் தெரியும்.
அதே போலதான் இந்த பாபேல் கோபுரம் உயர்ந்தது.
மனிதனின் கர்வமும் உயர்ந்தது…….
கோபுரம் வானை எட்டுமளவுக்கு வளர்வதைக்கண்டு கடவுள், “இவர்கள் ஒன்றாய், ஒரே மொழி பேசுபவர்களாய் இருப்பதினால் தங்களால் முடியாததெதுவுமில்லை என நினைக்கிறார்கள். இவர்கள் பல மொழிகள் பேசுபபவர்களாக மாறட்டும்.” என்றார்.
அப்படியே பூமியின் மக்கள் வெவ்வேறு மொழிகளைப் பேச ஆரம்பித்தனர். ஒருவர் சொல்வது மற்றவர்க்குப் புரியாமல் போனதால் கூட்டம் கூட்டமாய்ப் பிரிந்து தனித்தனியாய் வாழ ஆரம்பித்தனர்.
பாபேல் என்பதற்கு ‘குழப்பம்‘ என்று பொருள்.
- ஹனிபால் பெஞ்சமின்