\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கண் முன் கடவுள்

Filed in இலக்கியம், கதை by on November 27, 2016 0 Comments

kann_mun_kadavuzh_620x620காக்கிச் சட்டையில் மடிப்புக் கலைந்ததைப் பொருட்படுத்தாது உதறி விட்டு நடந்தார் கன்னியப்பர். அவர்கள் வீட்டு, சின்ன முகப்பில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்தார்.  முன் நெற்றி வழுக்கையை மறைக்கும் விதமாக இருந்த சிறிய முடியை  வலப்பக்கம் திருப்பி வாரினார். முகத்தின் சுருக்கங்கள் கண்ணாடியில் தெரிந்தன.  ஆயிற்று வயது…. இந்தத் தை  பிறந்தா 58 வயசு ஆயிடும். மிடுக்கு, வீம்பு எல்லாம் தளரும் வயது தொடங்கித் தான் விட்டது. சிவகாமி போன போதே பாதி ஆயுள் போயாச்சு.

கண்ணாடிக்குப் பக்கத்தில் இருந்த பழனி முருகனின் படத்தை ஒரு முறை பார்த்து நன்றாகக் கண்ணை மூடி தியானம் செய்தார்.படத்தின் முன் இருந்த ஒரு சிறிய உண்டியல் போன்ற வடிவில் இருந்த சொம்பைக் கையில் எடுத்துக் குலுக்கிப் பார்த்தார். சொம்பில் நிரப்பக் கொஞ்சம் இடம் இருந்தது  சட்டைப் பையில் இருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை அந்தச் சொம்பில் போட்டு முருகன் படத்தின் முன் வைத்தார்.

இன்னும் எத்தனை மாசமா அந்தச் சொம்பில் பணம் சேமிப்ப நீ? “

கேள்வி கேட்டுக் கொண்டே, லுங்கியை மடித்தபடி வந்தான் வீரா.  வாயில் பல் துலக்கும் பிரஷ் . இப்பொழுது தான் எழுந்தான் என்பதன் அடையாளமாக.

அவனின் குதர்க்கமான கேள்விக்கு பதில் அளிக்காமல். “நான் ட்யூட்டிக்கிப் போறேன். நீ வெளில போனா வீட்டை பூட்டிட்டுப் போ “.

இருபத்தி ரெண்டு வயது மிடுக்கு, திமிர், இளமை அனைத்தும் ஒரு சேர வீராவின் ஏளனப் புன்னகை உண்டியல் பக்கம் மீண்டும் ஒரு முறை சென்றது.

சரி இன்னிக்காவது வேலை தேடற யோசனை இருக்கா இல்லை நாள் பூரா அந்தத் தெருவோர டீக்கடைல தான் இருக்கப் போறியா ?

ப்ச்ச்என்ற ஒரு சத்தம் மட்டும் கொடுத்து விட்டு, வீட்டின் பின் பக்கம் சென்று விட்டான்.

    ******

ரொம்ப வருஷம் கழிச்சுப் பிறந்த பையன் அதனால செல்லம் ரொம்பக் குடுத்து வளர்த்தது எவ்ளோ தப்பு . அதுவும் இப்போ எல்லாம் சுத்தமா மரியாதை இல்லை”. கூட நடந்து வந்த நண்பரிடம் வருத்தப்பட்டபடி பேசினார் கன்னியப்பர். இருவரும் பேருந்தில் ஏறினார்கள்.

கன்னியப்பர் பேருந்தில் நடத்துனர்.  

எல்லாம் வயசு தான்… சரியாயிடும். அதுவும் முன்னே எல்லாம் சினிமா பார்த்துக் கெட்டுப் போவாங்க. இப்போ எல்லாம் டிவி, facebook, இப்படி என்ன என்னமோ வந்திடுச்சு. பசங்களக் கட்டுப்படுத்துறது கஷ்டமா தான் இருக்கு.  அவருக்கு சமாதானம் சொன்னபடி ஓட்டுனர் இருக்கைக்குச் சென்றார் பழனி.

வீராவிற்கு எப்போப் பாரு சினிமா தான். ஏதோ அந்த ஹீரோ கடவுள்னு நினைப்பு. ஒரு வேலை தேடி அவனைப் பார்த்துக்கிட்டா சரி. தோளுக்கு மேல வளர்ந்தாச்சு. ஒண்ணும் சொல்ல முடியல.அவன் அம்மா  இருந்திருந்தா அவனைப் புரிஞ்சிருப்பாளோ என்னவோ. என்னோட எப்பப் பாரு சண்டை தான். வீரான்னு பேர் வெச்சதுக்குச் சரியா விரப்பாவே சுத்தறான்”.

வண்டியை வெளியில் எடுத்துத் திருப்பினார் பழனி.

கன்னியப்பருக்கு பதில் சொல்லத் தெரியாமல் பழனி பேச்சைத் திசை திருப்ப முயற்சித்தார்

குல தெய்வக் கோயிலுக்குப் போகப் போறேன்னு சொன்னியே. எப்ப போகப் போறே?”.

உண்டியல்ல காசு சேர்த்து வரேன். எப்ப உண்டியல்ல பணம் முழுசாச் சேருதோ அப்போ தான் போகணும்.

பேருந்தில் பயணிகள் ஏற ஏற இவர்கள் பேச்சுத் தடை பட்டுப் போனது.

    ******

அப்பா. எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் வேணும்.”

சாயங்காலம் உள்ளே வரும் போதே வீராவின் குரல் கேட்டது.

வேலையின் அலுப்பும், வயோதிக அலுப்பும் ஒன்று  சேர்ந்து கொண்டது.

எதுக்கு?” என்று கோபமாக வந்தது.

எனக்கு ஒரு அவசரத் தேவை

அவனுக்குப் பதில் சொல்லாமல் உள்ளே வந்து சட்டையைக் கழட்டி, சமையல் வேலையைத் தொடங்கினார் வேலப்பன்.

அப்பா

ஹ்ம்ம். இன்னிக்கு ஏதாவது வேலை தேடிப் புடிச்சியா?..

இல்ல.”

படிப்பு முடிச்சாச்சு. என்ன பண்றதா உத்தேசம்? உங்க அம்மா போய் அஞ்சு வருஷம் ஆச்சு. எனக்கும் வயசு ஆகுது. நீ வேலையைப் பார்த்துக்கிட்டா எனக்கு ஒரு கவலை மிச்சம்.”

வெங்காயம் நறுக்கிய படி அவர் பேசப் பேச,

ஒரு அசால்டான பார்வையோடு அவர் கேட்ட எதுக்கும் பதில் சொல்லாமல்,

ஆமாம் என்ன பண்ற? வெங்காயம் நறுக்கி”,

ஒரு பெரிய மூச்சோடுஉப்புமாஎன்றார்.

குமட்டுவது போல முகம் வைத்தான். “எப்பப் பாரு உப்புமா தானா? ரோட்டுக் கடைல நான் பரோட்டா தின்னுக்கிறேன். எனக்கு வேணாம்

பொசுக்கென்று கோபம் வந்தது.

ஆமாம் துரை சம்பாதிக்கிறீங்க . வீட்ல தானே இருக்கே. நீ ஏதாவது பண்ண வேண்டியது தானே?”

அது சரி.. எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் குடு“.

எதுக்கு?”

ஒரு வேலைக்கு வேணும்னு கேட்டேனே

வேலைக்குப் போகப் போறியா ? அப்ளிகேஷன் செலவா?”

சீ சீ அதுக்கெல்லாம் இல்ல . வேற ஒரு செலவுக்கு

படிப்பு முடிச்சு ஒரு வருஷம் ஆச்சு.  வேலை தேடற யோசனை இருக்கா இல்லையா?

திரும்பியும் அதே பாட்டப் படாதே.” பணம் குடுப்பியா மாட்டியா? ஆயிரம் ரூபாய்க்கு ஆயிரம் கேள்வியா?”

எதுக்கு அந்தப் பணம்னு சொல்லு?

என்னோட தலைவருக்கு ஒரு பொக்கே வாங்கணும்

சினிமாப் பைத்தியம் பிடித்துத் திரியும் ஒரு சராசரி இளைஞன் வீரா. ஏதோ ஒரு நடிகரைத் தலைவன் என்று ஏற்றுக் கொண்டு, அவரைப் போல நடை உடை பாவனை செய்வது தான் புது ஸ்டைல் என்று ஏதோ சும்மாத் திரிந்து கொண்டு இருந்தான்.

என் கிட்ட பணம் இல்ல

சரி அப்ப அந்த உண்டியல்ல சேர்த்து வைச்சு இருக்கிற பணத்தை எடுத்துக் கொடு.”

பகீரென்று இருந்தது வேலப்பனுக்கு.

பழனி முருகனைப் பார்க்கப் போகணும். ரொம்ப நாளா சேர்த்துட்டு வரேன் வீரா.”

குரலில் தளர்ச்சி மேலோங்கியது. உனக்கு ஒரு வேலை கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு பழனி முருகனைப் பார்க்க வர சேர்த்து கிட்டு இருக்கேன். என் காலத்திற்கு பிறகு உன்னை நீயே பார்த்துக்கணுமேன்னு எனக்கு ஒரே கவலை தான் இருக்கு.

வீராவின் இளமை மிடுக்கு , செருக்கு அவரின் எந்த உணர்ச்சியையும் உணர வில்லை..

சரி சரி சரி  எனக்குப் பணம் தருவியா மாட்டியா?”..

உணர்ச்சி கோபமாய் உருவெடுத்து இருவரிடமும் சர்ச்சை தான் தொடங்கியது.

*****

காலை வழக்கம் போலக் கிளம்பினார் வேலப்பன். முதல் நாள் நடந்த சண்டையால் இருவரும் சாப்பிடாமல் விட்டதால், சமையல் அறையில் மிகுந்து இருந்த உப்புமாவை ஒரு டப்பாவில் அடைத்துக் கொண்டு கிளம்பினார். முருகர் முன் நின்று வீராவிற்கு நல்ல புத்தி வர வேண்டிக் கொண்டார்.

வெளியில் சோம்பேறியாகப் படுத்திருப்பான் என நினைத்த வீராவைக் காண வில்லை. எங்காவது தெருவில் சுற்றிக் கொண்டு இருப்பான் என நினைத்தபடி வேலைக்குச் சென்றார்.

வழக்கமான வேலையின் பளுவின் இடையிடையில் வீராவின் நினைவும், கவலையும் வந்து போனது.

மாலை வீடு திரும்பிய பொழுது வீட்டின் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

யார் வந்திருப்பது என்று புருவம் நெரித்தபடி உள்ளே வந்தார்.

வீரா உள்ளே விசில் அடித்தபடி தலையை வாரி வந்தான்.

யாரு ஆட்டோல வந்தது?”.

நான் தான்

அவன் கையில் ஒரு பெரிய பொக்கே வைத்திருந்தான்.

யார் கிட்ட பணம் வாங்கின?”.

பொக்கேயைத்  தொடப்  போனார் வேலப்பன்.

தலைவருக்காகப் பண்ணின பொக்கே .. தெருக்கோடில இருக்கிற கடைல நானே ஸ்பெஷலா பொறுக்கி எடுத்துப் பண்ணி இருக்கேன். ஆயிரத்து ஐநூறு ரூபாய். ஆமாம். யாருக்குப் போகுது? என் தலைவனுக்கு இல்ல

திமிராகக் காலரைத் தூக்கியபடி தலையை வாரினான் .

வேலப்பனுக்கு பகீரென்றது. சாமி முன் இருந்த உண்டியலைப் பார்த்தார்.

அவர் மனம் புரிந்தவன் போல

உன் சாமிப் பணம் எடுக்கல . வெளில நிக்கற ஆட்டோக்கு நான் தான் டிரைவர். மாசம் வாடகை கொடுக்கணும். அது போக மீதி வர வருமானம் என் சம்பளம். இன்னிக்கு ஒரு நாள் மட்டுமே ஆயிரத்து ஐநூறு கிடைச்சுது. உன் பேர் சொல்லித்  தான் வாடகை எடுத்து இருக்கேன். முதல் பணத்துல  என் சாமிக்கு பொக்கே “.

ஒரு நாள் முழுக்க உழைச்ச பணம் வெறும் ஒரு பொக்கேவுக்கே செலவு பண்ணிட்டியா?

நீ மட்டும் இத்தனை நாள் உழைச்ச பணம் சாமியப் பார்க்க தான சேர்க்கற. எனக்கு என் சாமி தலைவர் தான்“.

சொல்லி விட்டு பொக்கே எடுத்தபடி கிளம்பினான்.

திரும்பியுமே உப்புமா பண்ணாதே. நான் கடைல பரோட்டா வாங்கி வெச்சிருக்கேன். அதச் சாப்பிடுஆட்டோ கிளம்பியது.

  • லக்‌ஷ்மி சுப்பு­

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad