மினியாபொலிஸில் இருந்து யாழ்ப்பாணம் வரையான பயணப் பாதையில்…
மிகவும் நெருக்கடியான ஒரு மாலைப் பொழுதில் அன்றொருநாள் எனது தாய் நிலத்தை விட்டு நீங்கியே ஆக வேண்டிய கட்டாயச் சூழலில் இரவோடு இரவாக ஊர்விட்டு நீங்கினோம். எனது தாய்நாட்டையும் உறவுகளையும் பிரிந்து சரியாகப் பத்து வருடங்கள் கழித்து மீண்டும் தாயகம் நோக்கிய எனது பயணம் மினியாபொலிஸ் விமான நிலையத்தில் இருந்து தொடங்கியது சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தான் ஆண்டுப் பலன் நன்றாக எனக்கு வேலை செய்திருக்கின்றது போல.…
இந்தப் பயண ஏற்பாடு ஒன்றும் சட்டென்று எடுத்த முடிவல்ல. சுமார் இரண்டு வருடங்களாக எனக்கும் எனது துணைவிக்கும் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஏற்பட்ட அதிரடி முடிவு இது. போற வழியில் “துபாய்” நகரில் இரு இரவுகளைக் கழித்து, சுற்றிப் பார்த்து விட்டு அதன் பின் ஈழம் நோக்கிய எங்கள் பயணத்தைக் தொடரலாம் என்பது என் துணைவியின் ஆசை.
நாலு கிழமை விடுமுறையில் இடை நடுவில் எல்லாம் நாட்களை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை அதனால் அந்த யோசனை உடன்படிக்கையில் இருந்து நீக்கப்பட்டது.
இரண்டு மாதங்களாக கடை கடையாய் அலைந்து வாங்கிய எல்லாவற்றையும் பெட்டிகளில் அடுக்கி முடிப்பதற்கே இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. அது போதாதென்று எனது மகளும் மகனும் தங்களுக்கென இரண்டு பெட்டிகளை வேறு ஒதுக்கியிருந்ததால் என்பாடு பெரிய திண்டாட்டமாய்ப் போயிருந்தது. இது போதாதென்று தங்கள் உறவினர்களுக்குக் கொடுப்பதற்கென எமது குடும்ப நண்பர்கள் சிலர்; சில – பல பொட்டலங்களைத் தந்திருந்தார்கள்.
பயண நாளன்று அதிகாலை 6:30 க்கு விமானம் புறப்பட இருந்ததால் முதல் நாள் இரவு தூங்க வேண்டியதைப் பகலே தூங்கி எழுந்து சாமம் கழித்து மினியாபொலிஸ் விமான நிலையத்தைச் சென்றடைந்தோம். வானம் இடித்து மின்ன, மழை கொட்டித் தீர்த்தது. ஆரம்பமே பெரிய அமர்க்களமாய் இருந்ததால் இந்தப் பயணம் எப்படி அமையப் போகிறதோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.
விமானம் புறப்பட வேண்டிய நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பினாலும் “புளோரிடா” வில் இருந்து “துபாய்” க்கான அடுத்த விமானப் பயணத்துக்கான தங்கு நேரம் மூன்று மணிகளுக்கு மேல் என்பதாலும், உள்ளூர் விமான நிலையம் என்பதாலும் மனதில் அவ்வளவாக பயம் இருக்கவில்லை.
எங்கள் பயணத்தின் முதல் பகுதியாக மினியாபொலிஸ் விமான நிலையத்தில் இருந்து கிளப்பிய விமானம்; சாத்தானின் முக்கோணம் என அழைக்கப்படும் “பெர்முடா” முக்கோணத்தின் ஒரு முனையை அண்டி அமைந்துள்ள அழகிய “புளோரிடா” வின் “ஒர்லாண்டோ” நகரை நோக்கி விரையத் தொடங்கியது. இங்குதான் உலகப்புகழ்பெற்ற “டிஸ்னி லேண்ட்” மற்றும் “யுனிவெர்சல்” பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன.
பயணம் தொடரும்…
-தியா