ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்
டிசம்பர் முதல் வாரயிறுதியில் (12/3 & 12/4), திருமதி. பெக்கி டக்லஸ் (Becky Douglas) அவர்கள் மினசோட்டாவில் வசிக்கும் தமிழர்களுக்கு “ரைசிங் ஸ்டார் அவுட்ரீச்” (Rising Star Outreach) அமைப்பைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தார். சனிக்கிழமை அன்று ஹாப்கின்ஸ் மினசோட்டாத் தமிழ்ச் சங்கப் பள்ளியிலும், ஞாயிற்றுக்கிழமை அன்று மினசோட்டா ஹிந்து மந்திர் கோவிலிலும் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்த அறிமுகத்திற்குப் பிறகு தமிழகத்திற்கும் இந்த அமைப்பிற்கும் இருக்கும் தொடர்பு, வந்திருந்தவர்களுக்கு ரைசிங் ஸ்டார் அவுட்ரீச் மீது ஒருவித நெருக்கமான உணர்வை அளித்தது எனலாம்.
ரைசிங் ஸ்டார் அவுட்ரீச் அமைப்பு, தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் தொழு நோயாளிகளுக்கும், அவர்களது குடும்பத்திற்கும் சேவைப்புரியும் ஒரு தொண்டு அமைப்பு. ஒருமுறை இந்திய சுற்றுப்பயணம் சென்ற பெக்கி, அங்குத் தொழு நோயாளிகள் படும் இன்னல்களைக் கண்டு, துயரம் கொண்டு, அமெரிக்கா திரும்பியவுடன் அவர்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று முடிவெடுத்தார். அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த அமைப்பைத் தொடங்கியது அப்போது தான்.
இவர்கள் தமிழகத்தில் இருக்கும் தொழு நோயாளிகளுக்குச் செய்யும் சேவை, நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பெரியது. நோயாளிகளின் உடலில் இருக்கும் புண்களைச் சுத்தம் செய்வது, மருந்திடுவது, வேறு தேவையான மருத்துவ உதவிகளைச் செய்வது, அவர்களுக்கான வேலை வாய்ப்புகளைச் செய்து தருவது, அவர்கள் வீட்டு குழந்தைகளுக்கென உயர்தரத்தில் ஒரு பள்ளிக்கூடம் அமைத்து தரமான கல்வியுடன், விளையாட்டுகளிலும் பயிற்சி அளித்து அவர்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் உன்னதப் பணியைச் செய்து வருகிறார்கள். ஏராளமான தன்னார்வலர்கள் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இவர்களுக்கு உதவி வருகிறார்கள்.
பெக்கி, தான் எப்படி இந்த அமைப்பைத் தொடங்கினேன், யாரெல்லாம் உதவி செய்தார்கள், அந்த மக்கள் தொடக்கத்தில் தங்களை எவ்வாறு எதிர்கொண்டார்கள், பிறகு எப்படி ஆதரவுடனான நன்றியும் அளித்தார்கள் என்பதை நெகிழ்ச்சியுடன், புகைப்படங்கள், காணொளியுடன் பகிர்ந்துக்கொண்டார். கலந்துகொண்டவர்கள் அனைவரையுமே, அவருடைய பேச்சு நெகிழ்வுற செய்தது. முன்னாள் இந்திய ஜனாதிபதி வெங்கட்ராமனின் மகள் பத்மா அவர்கள் இந்தியாவில், இவர்கள் அமைப்புடன் இணைந்து தொழு நோயாளிகளுக்குச் சேவையாற்றுவது குறிப்பிடத்தகுந்தது. நாமும் எப்படி இங்கிருந்தோ, அல்லது இந்தியா சென்றோ, அவர்களுக்கு உதவலாம் என்று கூறினார். மாதம்தோறும் ஒரு சிறு தொகை நன்கொடையில் எப்படி அவர்களது வாழ்வில் மாற்றம் கொண்டு வர முடியும் என்று விளக்கினார். இவருடைய பேச்சுப் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதை, முடிவில் அவர்கள் பெருமளவில் முன் வந்து உதவி புரிந்ததைக் கண்டபோது தெரிந்தது.
ஔவையார் சொன்னது தான். மனிதராய் பிறந்து, உடல் ஊனமில்லாமல் வளர்ந்து, கல்வி பெற்று, செல்வம் அடைந்து, அதைத் தானம் செய்து வாழும் வாழ்வு அரிதானதாம். வாழ்வில் கொடியது என்னவென்றால், குணமடையாத நோயுடன், இளமையில் வறுமையுடன், அன்புடையவர்கள் பக்கமில்லாமல் இருப்பதாம். அரிதான வாழ்வை வாழ்பவர்கள், இப்படிக் கொடிய வாழ்வினை வாழ்பவர்களைக் கைத்தூக்கி விடுவது உதவி என்று சொல்பதை விட, கடமை என்று தானே சொல்ல வேண்டும்!!
Rising Star
இந்த அமைப்பைப் பற்றிய மேலதிக விவரங்களை கீழேயுள்ள இணைப்புகளில் காணலாம்