மினசோட்டா குளிர்
மினசோட்டாவின் ஒரு சிறப்பம்சம், அதன் குளிர். ‘என்னது, குளிரா? அதான், இங்கே கடியான விஷயம், பாஸ்!!’ என்பவரா நீங்கள்? 13000 ஆண்டுகளுக்கு முன்பு, பனியுகம் (Ice Age) முடிவுற்ற சமயத்தில், இங்குச் சராசரி தட்பவெட்ப நிலை -16 டிகிரிக்கும் கீழே இருந்தது. இது ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருக்கும் தட்ப நிலை. கால ஓட்டத்தில், நல்லதோ, கெட்டதோ இந்த நிலை மாறி, தற்போது மனிதர்கள் வாழும் நிலைக்கு வந்திருக்கிறது.
இந்தாண்டு டிசம்பர் 18ஆம் தேதியன்று, மினசோட்டாவின் குளிர் -20 டிகிரி ஃபரன்ஹீட்டுக்குச் சென்றது. அதாவது, செல்சியஸில் -30 டிகிரிகள். ஊரே சிறிது நேரத்திற்கு வீட்டுக்குள் முடங்கியது. அடுத்த நாளே, அதாவது 48 மணி நேரத்திற்குள், +26 டிகிரிக்கு சென்றது. அதளப் பாதாளத்திற்கு இறங்கிய தட்பவெப்பம், உடனே பரமபதம் ஆடி, மேலெழும்பி வந்தது.
இதுவரை மினசோட்டாவில் பதிவான தட்பவெப்பங்களில் குறைவானது, மினியாபொலிஸில் இருந்து 220 மைல்கள் தொலைவில் உள்ள டவர் (Tower) என்ற ஊரில், 1996 ஆம் ஆண்டுப் பிப்ரவரி இரண்டாம் தேதி பதிவான -60 டிகிரி ஃபரன்ஹீட் தான். குறைந்த தட்பவெப்பம் நிலவி, அதில் மக்கள் வாழும் இடங்களில் உலகில் இதுவும் ஒன்று.
இப்படிப்பட்ட குளிர் நிலைகளில் நமது உடல் என்னவாகும்? இம்மாதிரி குளிர் நிலைகளைத் தாங்குவதற்கு ஏற்ப, நமது உடல் வடிவமைக்கப்பட்டதல்ல. அதனால், நாம் தான் சில பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக, குளிர் காலத்தில் நமது உடலே சில பாதுகாப்பு முயற்சிகளை எடுக்கும். உடல் தொடர்ந்து அப்படிப்பட்ட குளிர் நிலையில் இருக்கும்பட்சத்தில், அவை பலனளிக்காமல் உடலின் சில பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலையோ அல்லது உயிரே பிரியும் நிலையோ உண்டாகும்.
காற்றியக்கக் குளிர்வு (Wind Chill) என்பது காற்றில் குளிர் அதிகரிக்கும் போது, நமது உடல் நேரடியாக அதை எதிர்க்கொள்ளும் சமயம் உணரப்படும் குளிர். இச்சமயத்தில் காற்றில் இருக்கும் குளிருக்கு ஏற்ப, அதில் உடல் எவ்வளவு நேரம் நேரடியாக இருக்குமோ, அதைப் பொறுத்து உடலில் பனிப்புண்கள் (Frost bite) உண்டாகும். -28 டிகிரி ஃபரன்ஹீட் வரை பனிப்புண் அபாயம் குறைவு. அதற்கு மேலும் டிகிரிகள் குறையும் போது, ஆபத்து நிச்சயம். -28 முதல் -39 காற்றியக்கக் குளிர்வு நிலையில், உடலின் பாகங்கள் பத்தில் இருந்து முப்பது நிமிடங்கள் திறந்த நிலையில் இருக்கும் போது, உறை நிலை தொடங்கிப் பனிப்புண் ஏற்படத் தொடங்கும். -40 இல் இருந்து -47 செல்லும் போது, இந்தப் பாதிப்பு ஏற்பட ஐந்தில் இருந்து பத்து நிமிடங்களே போதும். அதற்கும் கீழே, -48 இல் இருந்து -54 செல்லும் போது, இரண்டில் இருந்து ஐந்து நிமிடங்களும், மேலும் குறைந்தால், இரண்டு நிமிடங்களில் ஆபத்து நெருங்கும்.
பனிப்புண் அல்லது ப்ராஸ்ட் பைட்டின் போது, உடலின் தோல் மட்டும் இல்லாமல், அதற்குக் கீழே இருக்கும் தசை, திசு, கொழுப்பு இவை அனைத்தும் உறைந்துப்போகும். அதிக நேரம் இக்குளிரில் இருக்க நேர்ந்தால், மேலும் பாதிப்பைத் தடுக்க, பாதிக்கப்படும் உடல் பாகங்களை வெட்டி எடுக்கவும் நேரும்.
குளிர்காலத்தில் வெளியிடங்களில் பணிபுரியும் அவசியம் இருப்பவர்கள், கண்ணாடி அணிவது முக்கியம். குளிர் கூடும் போது, கண்ணை மூடி முடி திறக்கும் போது, கண்ணில் அப்போது உருவாகும் திரவத்தால், கண்ணில் விழித்திரை பாதுகாக்கப்படும். இது குறைந்த நேர குளிர் உட்படுதலுக்கே. நீண்ட நேரம், குளிர் காற்றும் சேர்ந்து வீசும் போது, கண்ணாடி இல்லையென்றால், கண் விழித்திரை உறையத் தொடங்கும். கான்டக்ட் லென்ஸ் அணிபவர்கள், இன்னும் கவனமாக இருக்க வேண்டும். லென்ஸ், கண் திரையுடன் ஒட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம்.
நமது உடலின் வெப்ப நிலை, பொதுவாகச் சராசரியாக 37 டிகிரியில் இருக்கும். எப்போதும் அவ்வாறு இருக்கவே முயலும். தொடர்ந்து குளிரில் இருக்க நேர்ந்தால், உடலின் இந்த வெப்பமும் குறையும். அச்சமயம், உடல் நடுக்கம், சோர்வு, வேகமாக மூச்சுவிடுவது போன்றவற்றை உடலில் உணருவோம். 28 டிகிரிக்கு கீழே செல்லும் போது, தீவிரத்தின் உச்ச நிலை அடைந்து, உடல் அதன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். இதை ஹைப்போதெர்மிக் நிலை (Hypothermia) என்பார்கள்.
ஆகவே, தனிநபர் குளிர்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இது போன்ற காலக்கட்டத்தில், முடிந்தளவு பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பனிக்காலத்தில் வாகனங்கள் ஓட்டுவதும் சிரமம், ஒடுவதும் சிரமம். பனிக்குளிர், மனிதர்களை மட்டுமில்லாமல், வாகனங்களையும் பாதிக்கும். கார் டயர் உறையலாம். கார் பேட்டரி செயலிழக்கலாம். கார் இஞ்சினில் இருக்கும் ஆயில் கெட்டியாகலாம். பனிக்காலத்தில் வாகனங்கள் எங்காவது நின்று விட்டால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இவை பேராபத்தை விளைவிக்கும். முக்கியமாக, காரை விட்டு இறங்காமல் இருக்க வேண்டும். அப்போது தேவைப்படும் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, போன் சார்ஜர், பேப்பர், பென்சில், விசில், உணவுப்பொருட்கள் போன்றவற்றை முன்னெச்சரிக்கையாக மறவாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.
சாலை பாதுகாப்புத் தகவல்களை, 511 என்ற எண்ணுக்கு அழைத்துக் கேட்டுக் கொள்ளலாம். இது தவிர, https://www.511mn.org என்ற தளத்திற்குச் சென்றோ, அல்லது அவர்களது மொபைல் செயலியை நிறுவியோ இத்தகவல்களை அறிந்துக்கொள்ளலாம். பனிக்குளிரில் மாட்டிக்கொள்ளும், இக்கட்டான சூழ்நிலையில் தாமதிக்காமல், 911 அழைத்துவிட வேண்டும்.
முன்னெச்சரிக்கைகளைக் கண்டோம். இது போல், முன்னெரிக்கையாக இருந்தோமானால், இந்தக் குளிரில் ரசித்து, ஆராய்ந்து செய்வதற்குப் பல விஷயங்கள் மினசோட்டாவில் உள்ளன. உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிந்துக்கொண்டு, வீட்டுக்கு வெளியே சென்று பனி மனிதன் செய்யலாம். பனிக்கோட்டைகள் உருவாக்கலாம். பனிப்பந்து செய்து வீசியெறிந்து விளையாடலாம். ஸ்கேட்டிங், ட்யூபிங் எனப் பனி சறுக்கு முயலலாம். ஸ்னோ ஷூயிங் (Snowshoeing) எனப்படும் பனி நடை பயிலலாம். பனியில் மூடியிருக்கும் ஏரிகளுக்குச் சென்று அதன் அழகை ரசிக்கலாம். அங்கு உறைபனியில் மீன் பிடித்துக்கொண்டிருப்பவர்களிடம் பேச்சுக் கொடுக்கலாம். ஆர்வமும், பொறுமையும் இருந்தால் கூடச் சேர்ந்து மீன் பிடிக்கலாம்.
குளிர், பனி சார்ந்த இயற்பியல் பரிசோதனைகளைக் குழந்தைகளுடன் இணைந்து செய்து பார்க்கலாம். கடும் குளிரில் வெந்நீரை மேலே வீசினால் என்னவாகும் எனக் காணலாம். குளிரில் சென்று சோப்பு நுரை குமிழ்கள் (Bubbles) விட்டால், அவை என்னவாகும் என்பதைப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளலாம். வெள்ளைப்பனிக்கு வண்ணங்கள் சேர்த்து, பனியில் கலை வண்ணம் காணலாம். பனியின் அழகைப் புகைப்படங்களாகப் பதிவு செய்து சேர்க்கலாம். இப்படிக் குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாடுவதற்குப் பனிக்காலத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன.
முக்கியமாக, இவை எதிலும் இறங்குவதற்கு முன்பு, குளிரின் பாதிப்புகளைப் பற்றி அறிந்துக்கொண்டு இறங்குவது அவசியம். அதுவே இக்கட்டுரையின் நோக்கம். மினசோட்டாவின் குளிரை, பனியை இடைஞ்சலாக நினைக்காமல், இயற்கையின் நியாயத்தைப் புரிந்து, அதன் வழியே நாமும் நம் வாழ்வை இணைத்து, ரசித்து வாழ்வோம்.
உங்களது குளிர்கால நாட்கள் ரம்மியமாக அமைய வாழ்த்துகள்!!
மேலும் தகவலுக்கு,
https://www.511mn.org/
https://dps.mn.gov/divisions/hsem/weather-awareness-preparedness/Pages/winter-weather.aspx
சரவணகுமரன்