\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பிளாஸ்டிக் அரிசி

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டிருந்தாலும்  மீண்டும் சில நாட்களாகச் செய்தித் தளங்களிலும், சமூக ஊடகங்களிலும்  தலையெடுத்திருக்கும் ஒரு விஷயம் கலப்பட அரிசி. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒன்றும் புதிதல்ல என்று தோன்றும்; அரிசியில் கல்லும், மண்ணும், மற்ற தானியக் கழிவுகளும் இன்னும் பல அருவருக்கத்தக்க பொருட்களும் கலப்பது பல வருடங்களாக நடைபெறும் ஒரு விஷயம் என்றும் தோன்றும். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் கலப்படம் செய்யும் பொருள் மாறியுள்ளது.

பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கால் செய்யப்படும் அரிசியில்லை. சக்கரைவள்ளி மற்றும் உருளைக்கிழங்கு மாவுடன் இரசாயனப் பிசின் சேர்த்து தயாரிக்கப்படுவதாகும். உருளைக்கிழங்கும், சக்கரைவள்ளியும் நாம் உண்ணக் கூடிய பொருட்கள் தாம் என்றாலும், அவற்றுடன் சேர்க்கப்படும் பிசின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.  மண்ணில் செயற்கை  உரங்களையிட்டு வளர்க்கப்படும் பயிர்களால் உடல் உபாதைகளும், நோய்களும் வருகின்றன என்ற குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருக்க, நேரிடையாக இராசாயனப் பொருளை உண்பது கண்டிப்பாகப் பல விளைவுகளை உண்டாக்கக் கூடும்.

இவ்விதப் பிளாஸ்டிக் அரிசி, சீனாவில், ஷாங்ஷி மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக அண்டை நாடுகளான வியட்நாம், சிங்கப்பூர், தென் கொரியா ஆகியவை குறிப்பிடுகின்றன. இந்த அரிசியில் கலக்கப்படும் பிசின் மனிதர் உண்ணத் தகுந்தவையா, அந்நாட்டின் உணவுத் தரக் கட்டுப்பாடுகளைப்  பூர்த்தி செய்கிறதா என்பது இன்னமும் பெரிய கேள்விக் குறியாகவேயுள்ளது. உலகின் மிகப் பெரிய அரிசி உற்பத்தி நாடான சீனா தான் ஏற்றுமதி செய்யும் இயற்கை அரிசியுடன், பிசின் கலந்து தயாரிக்கப்படும் செயற்கை அரிசியையும் கலந்து வருகிறது என்பது மேற்படி நாடுகளின் குற்றச்சாட்டு.

சென்ற ஜூன் மாதம், இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சுக்ரிவ துபே, ”உலக மயமாக்கல் காரணமாக சீன அரிசி, இந்தியாவில் நுழைந்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியின் தரத்தை அறிய அரசு சார்பில் ஏன் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை” என்ற கேள்வியுடன் வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தார். அந்த வழக்கின் நிலை பற்றிப் பின்னர் பெரிதாக எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை.

இந்தியாவில் சென்றாண்டு நெஸ்லே தயாரிக்கும் மேகி நூடுல்ஸில் கலக்கப்படும் மசாலாத் தூளில் சுவைக்காகச் சேர்க்கப்படும் அஜினோமோட்டோ, அதிக அளவு ஈயம் கொண்டுள்ளது என்ற காரணத்தால்  இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் துறை மேகி நூடுல்ஸ் விற்பனையைத் தடை செய்தது. அது போன்றதொரு ஆய்வு , பிளாஸ்டிக் அரிசியில் நடைபெற்றதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்னர் நைஜீரிய நாட்டில் 2.5 டன் பிளாஸ்டிக் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் இந்நாட்டில் அரிசிக் கொள்முதல் அதிகரித்துக் காணப்படுவதால் சீனாவிலிருந்து அதிக அளவில் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அதில் பெருமளவில் பிளாஸ்டிக் அரிசி காணப்படுவதாகவும் செய்திகள் வந்துள்ளன. ‘உயர் ரக தக்காளி அரிசி’ என்ற பெயரில் இவை இறக்குமதியாகியுள்ளன.

ஏற்கனவே ஏழ்மை நிறைந்த நாடான நைஜீரியாவில் இது போன்ற கலப்படப் பொருட்கள் பலவித நோய்களைப் பெருக்கி, அந்நாட்டின் மனித குல அழிவுக்குக் காரணமாகக் கூடும் என்று பல நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன. இருப்பினும் சீன அரசிடமிருந்தோ, அரிசி ஏற்றுமதியாளரிடமிருந்தோ எந்தவிதப் பதிலும் இல்லை.

சாமான்ய மனிதரால், பிளாஸ்டிக் அரிசிக் கலப்படத்தை அறிய முடியுமா என்றால்,  எளிதில் முடியாது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, சமைக்கும் வரையில் இந்தக் கலப்படத்தை உணரவே முடியாது. இயற்கை அரிசி போன்ற அமைப்பும், திடமும் உள்ளதால் இவை இயற்கை அரிசி போன்றே தோன்றும்.

வேகவைத்த பின்னர் மற்ற (இயற்கை அரிசி) பருக்கைகள் போலன்றி இவை சற்று முரட்டுத்தனமாக இருக்கும்; விரலால் நசுக்கினால் கூட இப்பருக்கைகள் அமுங்காது ; விரலில் பிசுபிசுப்பு இருக்காது; பொதுவாகச் சமைத்த பின்னர் படியும் அரிசிக் கஞ்சியை வெய்யிலில் வைத்தால் அந்த கஞ்சியின் மேல் பிளாஸ்டிக்  தகடு போன்றதொரு படலம் தென்படும்; இதை நெருப்பில் எரித்தால் சக்கரைவள்ளிக் கிழங்கின் மணம் வெளிப்படும் – இது போன்ற பல கருத்துக்கள் ஆங்காங்கே நிலவினாலும் இவை அல்லது இவற்றில் குறிப்பிட்ட ஏதோவொன்று திட்டவட்டமாக பிளாஸ்டிக் அரிசியைக் காட்டிவிடும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

இவ்வளவு பெரிய பிரச்சனையொன்று ஏன் உலக நாடுகளின், மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்பது புரியாத புதிராகவுள்ளது. உலகின் பல நாடுகளில் அரிசியுணவு பிரதான உணவாகவுள்ளது. இன்று வியட்நாம், சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் ஆங்காங்கே தலைதூக்கிய இந்தப் பிரச்சனை நைஜீரிய நாட்டில் ஏற்பட்டது போன்று பெருமளவில் பாதிப்பை உண்டாக்கும் வரை காத்திராமல் ஒருங்கிணைந்த முயற்சிகளை அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும். உண்மையிலேயே இவ்வித ரசாயனங்கள் உண்ணத் தகுந்தவை தானா என்ற ஆய்வினை மேற்கொள்ளவேண்டும்.

ஓசோனில் ஓட்டை, வெப்ப அதிகரிப்பு போன்ற ஆய்வுகளை விட மனிதர் உண்ணும் அடிப்படை  பொருட்களான ஒன்று பாதுகாப்பானது தானா என்ற ஆய்வு மிக மிக அவசியம்.

– ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad