\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஸ்திதப் பிரக்ஞன்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments

இந்த சமஸ்கிருத வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டது, சமீபத்தில் மறைந்த திரு. சோ ராமசாமி அவர்கள் முன்னாளைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்து 1990 களில் எழுதிய கட்டுரையில்தான். இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று புரிந்திராத காலமது. சோ அவர்கள் மொரார்ஜி தேசாய் குறித்து எழுதுகையில், இந்த வார்த்தையில் பொதிந்துள்ள பல தத்துவார்த்தப் பொருட்களை விளக்கியிருப்பார். அவற்றில் ஒன்று, சாதாரண மனிதராகவே வாழ்ந்து, உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் சாட்சி பாவத்தில் பார்த்திருந்து, நடுநிலைமையில் மட்டுமே செயல்படுவது, விமரிசிப்பது என்பதும். இந்தக் காரணத்திற்காக, இந்த வார்த்தையை நமக்கு அறிமுகப்படுத்திய திரு. சோ ராமசாமி அவர்களை அதே பெயரால் அழைப்பது பொருத்தம் என்பது நமது கருத்து.

அவரின் துக்ளக் பத்திரிகையைப் படிப்பதை முப்பது வருடங்களுக்கும் மேலாக வழக்கமாகக் கொண்டிருக்கும் நாம், அவரின் ஆழமான சிந்திக்கும் திறனை நினைத்து வியக்காத அவரது படைப்புகளே இல்லையெனக் கூறிவிடுவோம். தெளிவான சிந்தனை, இன்றைய பொதுவாழ்வில் பெரும்பாலானவர்களுக்கு இல்லாத மித மிஞ்சிய நேர்மை, தயவு தாட்சண்யம் இல்லாமல் தவறுகளைச் சுட்டிக் காட்டும் துணிவு, அதே நேரத்தில் நாட்டின் நன்மைக்காக ஒரு சில இடங்களில் வளைந்து போக வேண்டுமெனில் சிலவற்றை விட்டுக் கொடுக்கும் பக்குவம் (சொந்த நலனுக்காக வளைந்து கொடுப்பதைப் பக்குவம் என்று வர்ணிக்க இயலாது), தான் நம்பும் விஷயத்தை, உலகம் முழுமையும் எதிர்க்கும் என்று தெரிந்தாலும், துணிச்சலுடன் வெளியிடும் ஆளுமை, இவை எல்லாவற்றையும் ஏளனமும் நகைச்சுவையும் ததும்பும் விதமாக எழுதும் லாவகம் – இவரின் அரசியல் சார்ந்த பத்திரிக்கைத் துறைத் திறமைகளை விவரித்துக் கொண்டே போகலாம்.

இது மட்டுமல்லாமல் ஆன்மிகத்துறையை எடுத்துக் கொண்டால், எத்தனை அருமையான படைப்புக்களைத் தந்துள்ளார் இவர்? “ஹிந்து மகா சமுத்திரம்”, “மகாபாரதம் பேசுகிறது”, “எங்கே பிராமணன்”, ”வெறுக்கத்தக்கதா பிராமணீயம்”, “வால்மீகி ராமாயணம்” போன்றவை இவரின் ஆழமான தத்துவப் புரிதல்களையும், சடங்குகளின் உண்மையான நோக்கங்களையும் அறிந்து கொள்ள ஏதுவான படைப்புக்களாகும். மேலெழுந்தவாரியாகப் பார்த்து, கோயில்களுக்குச் செல்வதும், சடங்குகளைக் கடைபிடிப்பதும் மட்டுமே ஆன்மிகம் என நினைத்து, சடங்குகளைச் சாடும் அறிவிலிகள், அதிலும் குறிப்பாக பகுத்தறிவுவாதி எனத் தங்களை அழைத்துக் கொள்ளும் நாத்திகவாதிகள் இவற்றைப் படித்தால் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளும் அளவு ஆழமான தத்துவங்களை எளிதாகச் சொல்லியிருப்பார். நாட்டில் பெரும்பான்மையினர் பின்பற்றும் ஹிந்து மதத்தைப் பற்றிப் பேசுவது, எழுதுவதே மத வெறித்தனம் என்றும், ஹிந்து மதத்தைச் சாடி, பிற சிறுபான்மை மதங்களைப் போற்றியோ அல்லது ஆதரித்தோ எழுதுவதும் பேசுவதும் மட்டுமே மதச்சார்பின்மை என்றும் மாற்றிவிட்ட ஓட்டு வங்கி அரசியல்வாதிகளின் மத்தியிலே, அவர்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்குச் சற்றும் பயப்படாமல் உண்மை நிலை என்ன என்பதை விளக்குவதற்கு இவர்போல் இன்னொருவர் இருப்பாரா என்பது சந்தேகமே.

ஸ்ரீனிவாஸ ஐயர் மற்றும் ராஜம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்த திரு. ராமசாமி பெரிய பாரம்பரியம் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். இவரின் தந்தை புகழ் பெற்ற வழக்கறிஞர். அவரின் தந்தை, அதாவது சோ அவர்களின் தாத்தா திரு ராமனாத ஐயர் மாநிலம் கடந்து, நாடு முழுவதும் பிரபலமான வழக்கறிஞர். ஒரு முறை, கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவன் இவரிடம் வந்து தானே அதைச் செய்ததாகவும், தன்னைக் காப்பாற்றினால் பெரும் தொகை தருவதாகவும் கூறியதைத் தொடர்ந்து, இதுபோன்ற குற்றவாளிகளுக்கு தான் பெற்ற பட்டம் உதவுவதல் ஆகாது என்று முடிவெடுத்து, வழக்கறிஞர் பயிற்சியையே நிறுத்தி விட்டாராம். பிற்காலத்தில் அவர் எழுதிய சட்டப் புத்தகம், சட்டத்திற்கான லெக்ஸிகன் என்று புகழப்படுமளவு பிரசித்தி பெற்றது. பொருளாதாரத்திலும் உயரிய நிலையிலிருந்த அவர், திடீரென அனைத்தையும் உதறித்தள்ளி, விரக்த கதியில் துறவறம் மேற்கொண்டு காசி நகர் சென்று விட்டாராம். எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்திருந்து, ஞான மார்க்கத்தில் தன்னை முழுவதுமாய் ஈடுபடுத்திக் கொண்ட அவரின் பெயரனான சோ ராமசாமிக்கு ஆன்மிகத்தின் மீதும், ஞான மார்க்கம் மீதும் நாட்டமிருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

தாத்தாவைப் போல, தந்தையைப் போலவே சட்டப்படிப்புப் படித்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணி புரிந்து கொண்டிருந்த சோ, ஒரு நிலையில் அந்தப் பணியைக் கைவிட்டு, வேறு வேலைகளில் ஈடுபடலானார். விவேகானந்தா கல்லூரியில் பயின்ற நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, “விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்” என்ற குழுவை அமைத்து, நகைச்சுவை மேடை நாடகங்களை அரங்கேற்றத் தொடங்கியிருந்தார் சோ. சரித்திர நாடகங்களும், நீதிக் கதைகளையும், குடும்பக் கதைகளையும் கருவாகக் கொண்ட சமூக நாடகங்களும் பிரபலமாக இருந்த காலத்தில், நகைச்சுவையை முன்னிலைப்படுத்தி நாடகங்கள் எழுதுவதற்கு ஒரு துணிவு வேண்டும். அதிலும், அன்றைய நிலையில் நாட்டுக்குத் தேவையான அரசியல் விவகாரங்களை நையாண்டி எனும் முறையில் நாடகமாகக் காட்டி, நகைச்சுவையாகவும் அதே சமயத்தில் விழிப்புணர்வைத் தூண்டுமாறும் செயல்படுவது போற்றத்தக்கதான ஒன்று. நாடகத் துறையின் ஜாம்பவான்களான ஒய். ஜி. பார்த்தசாரதி, ஆர். எஸ். மனோஹர், கல்யாண்குமார், கே. பாலச்சந்தர் போன்றோர் மேடைகளில் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்திலே, தனக்கென ஒரு இடத்தைத் தனது நையாண்டியாலும், அதன் மூலம் ஊட்டிய விழிப்புணர்ச்சியாலும் பிடித்துக் கொண்ட சோ, இருபது நாடகங்களுக்கு மேல் எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இவை, மொத்தமாக 4,500 முறைக்கு மேல் மேடையேறியுள்ளனவாம். ஒரே நாளில் மூன்று காட்சிகள் ஒரு நாடகத்தை அரங்கேற்றியவர் சோ – அன்றைய தமிழ் நாடக உலகில் வேறெவரும் செய்திராத சாதனையாம் இது. இவை தவிர 27 தொலைக்காட்சி நாடகங்களும் எழுதி, இயக்கி நடித்துள்ளார் சோ.

இவர் எழுதிய “முகமது பின் துக்ளக்” நாடகம் பிரசித்தி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. மொகலாயச் சக்ரவர்த்திகளுள் கேலிக்குரியவராகவும், கேள்விக்குரியவராகவும் இருந்த சுல்தான் முகமது பின் துக்ளக் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து, இந்தியப் பிரதமராக ஆவது போன்ற கற்பனை இந்தக் கதை. இந்தக் கற்பனையை முகாந்திரமாக வைத்து, அன்றைய மத்திய, மாநில ஆளுங்கட்சிகள் மற்றும் பொதுவாக அரசியல்வாதிகள் அனைவரின் இரட்டை வேடங்களையும் நகைச்சுவையுடன் தோலுரித்திருப்பார் இந்த நாடகத்தில். முதல் முறையாக 1968 ஆம் ஆண்டு  மேடை ஏற்றப்பட்ட இந்த நாடகத்தை, 2001 ஆம் ஆண்டு மேடையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது நமக்கு. நாடகம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சோ’வின் குரலில் ஒரு அறிமுக வசனம் ஒலியாக வரும். ”1968ல் எழுதப்பட்ட இந்த நாடகத்தின் வசனங்களில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. அன்று எழுதப்பட்ட வசனங்களை இன்றும் பொருத்தமாக வைத்திருக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி” – நாற்பது வருடங்களுக்கும் மேலாக மாற்றமடைந்திராத அரசியல் நிலையை நையாண்டி வசனமாக அறிமுகப்படுத்தும் இந்த நாடகம் தமிழ் அரசியல் விமரிசனத்திற்கு ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது.

மிகவும் பிரபலமடைந்த இந்த நாடகம் பின்னர் திரைப்படமாக வந்தது. ஏற்கனவே பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து திரைத்துறை அனுபவமிருந்த சோ, இந்தத் திரைப்படத்தை கதை, வசனமெழுதி நடித்ததுடன் மட்டுமல்லாமல் இயக்கி, தயாரித்தும் இருந்தார். பத்துத் திரைப்படங்களுக்கு மேல் இயக்கிய இவர், இருநூறு திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். தமிழ்த் திரைப்பட முன்னணி நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், நாகேஷ், மனோரமா, ஜெயலலிதா, ரஜினிகாந்த், கமலஹாசன் எனப் பலருடனும் இணைந்து நடித்துள்ளார். ஒருவரை ஒருவர் அடித்து, அசிங்கமாகப் பேசுவதுதான் நகைச்சுவை என்று நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய சந்ததியினர், சோ’வின் அரசியல் நையாண்டியை அறிவுபூர்வமான வசனங்களாகத் தரும் பல திரைப்படங்களைப் பார்த்தால் நகைச்சுவை நடிகரின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ளக்கூடும். தமிழ்த் திரைத்துறையில் கொடி கட்டிப் பறந்த, “சின்னவர்” என்று பயத்துடனும், மரியாதையுடனும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் எது செய்தாலும் சரி என்ற காலம் ஒன்றிருந்தது. அவர் தாமதமாக செட்’டிற்கு வந்தால், காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை மற்றவர்களுக்கு. அந்தத் தருணத்தில், சில மணி நேரம் காத்திருந்து விட்டு, எம்.ஜி.ஆர். வராததால் அங்கிருந்து கிளம்பிச் சென்ற தைரியம் கொண்டவர் சோ. இந்தச் செய்கையும் பின்னாளில் இவர்தான் தனக்கு அரசியலில் சரியான அறிவுரை வழங்க வல்லவர் என்று எம்.ஜி.ஆரை நினைக்க வைத்ததற்கு ஒரு காரணமாம்.  

பன்முகத் திறமையாளரான சோ, அரசியல் விமர்சகராகவும், பல தலைவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவுரை வழங்குபவராகவும், இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் சாணக்கியராகவும், ஐந்து ஆண்டுகள் ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவை அரசியலில் அவர் பங்களிப்பு. இவற்றில் ஓரிரண்டு குறித்து விவரிப்பது பொருத்தமாக இருக்குமென நம்புகிறோம்.

இந்திய முன்னாள் பிரதம மந்திரி 1975 ஆம் ஆண்டு இந்தியா முழுமைக்கும் “அவசர நிலை” பிரகடனம் செய்தார். மொத்த நாட்டையும் ஸ்தம்பிக்கச் செய்த இந்தச் சரிவாதிகாரம் கிட்டத்தட்ட 21 மாதங்கள் தொடர்ந்தது. “இம் என்றால் சிறை வாசம், ஏனென்றால் வனவாசம்” என்று கூறப்பட்ட ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தையும் விடக் கொடுமையான நிலை அப்போது. சக்தி வாய்ந்த தலைவர்களும், புகழ் பெற்ற பத்திரிகைகளும் சிறைக்கும், அடக்கு முறைக்கும் பயந்து வாய் மூடி மௌனிகளாக இருந்த காலம், அந்த நிலையிலும் தைரியமாக ஆளுங்கட்சியை எதிர்த்து எழுதி, எதிர்க் கட்சிகளில் இந்த நிலையை மாற்றத் தகுந்த தலைவர்களை ஒன்று சேர்த்து அரசியல் தந்திரத்துடன் துணிந்து செயல்பட்ட ஒரு சிலர்களில் சோ மிகவும் முக்கியமானவர். இவரின் அன்றைய பணிக்கு இந்தியர்கள் அனைவரும் நன்றிக் கடன் பட்டிருக்கிறார்கள்.

அதன் பின்னர் வென்று வந்த ஜனதா கட்சியின் ஆட்சியில், மொரார்ஜி தேசாயின் தலைமைக்குப் பெருமளவு உதவிகரமாக இருந்தார் சோ என்றே சொல்ல வேண்டும். பின்னாளில், ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் அழைப்பின் பேரில் ராஜ்ய சபா எம்.பி. ஆக அழைக்கப்பட்டதற்கு, இந்தச் சேவைகளும் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. இவர் 1999 முதல் 2005 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கையில், தனக்குக் கொடுக்கப்பட்ட பட்ஜெட் தொகையையும், அவற்றை எவ்வாறு செலவளித்தார் என்ற கணக்கு வழக்கையும் (பேலன்ஸ் ஷீட்) தனது பத்திரிக்கை மற்றும் சில வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியிட்டு, அவற்றின் மேலெழும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கும் தயாராக இருந்தார். ஒளிவு மறைவின்றிப் பொது வாழ்க்கை நடத்த வேண்டுமென்ற அவரின் ஆர்வத்திற்கு இதுவுமொரு சான்று.

அவரது அரசியல் ஈடுபாட்டிற்கும், பங்களிப்பிற்கும் இன்னொரு எடுத்துக்காட்டு 1991 – 1996 வரை தமிழக அரசியல் சூழலில் அ.இ.அ.தி.மு.க ஏற்படுத்தியிருந்த மிகப் பெரிய அளவிலான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக நிலையைக் களைவதற்கான முயற்சி. அன்றைய தமிழக மாநில காங்கிரஸ் தலைவரான திரு ஜி.கே. மூப்பனாரையும் தி.மு.க வையும் இணைய வைத்து, அதற்கு அப்பொழுது மிகப்பெரிய அளவில் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. செல்வி. ஜெயலலிதாவின் நண்பர் என்று இருந்தாலும், நாட்டின் நிலையென்று வருகையில் சொந்த விருப்பு வெறுப்புக்களைக் கருத்தில் கொள்ளாதவர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.

நாடகத்துறை, திரைப்படத் துறை, அரசியல், வழக்காடுதல் எனப் பல துறைகளிலும் கை தேர்ந்தவரான சோ, முக்கியமாக அறியப்படுவது பத்திரிக்கைத் துறையினாலேயே என்றால் மிகையாகாது. 1970 ஆம் ஆண்டு தொடங்கிய அரசியல் விமரிசனப் பத்திரிக்கையான துக்ளக், 46 ஆண்டுகளாகக் கட்டுக்கோப்பாக நடத்தப்பட்டு வரும் நிறுவனம். தொடக்கத்தில் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வெளியாகி வந்த இந்தப் பத்திரிக்கை பின்னர் வாரப் பத்திரிக்கை ஆக்கப்பட்டது. கவர்ச்சிப் படங்கள், நடிக நடிகையரின் கிசுகிசு, சுவாரஸ்யத்தைத் தூண்டுவதற்காக உண்மையோ இல்லையோ பரபரப்பான விஷயங்களை வெளியிடுவது, எவரோ ஒருவர் அடிவருடி அவரின் ஆதரவைப் பெறுவது என்று எந்தவித குறுக்கு வழியும் இல்லாமல், உண்மை, நேர்மை மற்றும் திறமை ஆகியவற்றை மட்டுமே நம்பி, 46 வருடங்களாக ஒரு பத்திரிக்கையை நடத்தியிருக்கிறார். இந்த 46 வருடங்களில் எத்தனையோ சவால்களைச் சந்தித்திருக்கிறார். அரசியல் கட்சிகளால் குண்டர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கிறார். தீவிரவாதக் குழுக்களின் “ஹிட் லிஸ்ட்”இல் இருந்து அன்றைய “இஜட்” பிரிவுப் பாதுகாப்பிலிருந்தவர்; ஒரு காலத்தில், அந்தப் பாதுகாப்பே தேவையில்லை எனத் தூக்கியெறிந்தவர். எவருக்காகவும், எதற்காகவும் நேர்மைக்குப் புறம்பானதைச் சொல்வதில்லை என்ற உறுதியிலிருந்திருக்கிறார் என்பது அவரது எழுத்துக்களிலேயே வெளிப்படும்.

ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகும் இந்த வார இதழின் ஆண்டு விழா ஒவ்வொரு ஜனவரி மாதம் 14 ஆம் தேதியும்  நடைபெறும். தமிழ் நாட்டின் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்று வந்த இந்த விழா, அவரின் வயது காரணமாக, கடந்த சில வருடங்களாக  சென்னையில் மட்டுமே நடந்து வந்தது. ஆயிரக்கணக்கானோர் கூடும் சீரணி அரங்கு, பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் பள்ளித் திடல், மியூஸிக் அகாடமி, காமராஜ் அரங்கம், நாரத கான சபா எனப் பல இடங்களில் நேரில் பார்த்து, இவரின் பேச்சைக் கேட்க வருபவர்களின் எண்ணிக்கையைக் கண்டு  வியந்த ஆயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். இந்த விழாவில் முக்கியமான ஒரு அங்கம் வாசகர்கள் மேடையேறி ஆசிரியரைக் கேள்வி கேட்கலாம், அவரும் அசராமல், நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்கும் வண்ணமும் தன்னிச்சையான பதில்களைத் தருவார். துக்ளக் பத்திரிக்கையின் மிகச் சிறந்த அம்சம் என்றால் அதில் வெளிவரும் ”கேள்வி பதில்” என்று அதனைப் படிக்கும் அனைவருக்கும் தெரியும்.

இந்தக் ”கேள்வி பதில்” உருவானது எப்படி என்பதைப் பார்க்கலாம். 1971 ஆம் ஆண்டு துக்ளக் பத்திரிக்கை ஆரம்பித்து முதல் வருடம் முடிவடைந்த நிலை. இதனைக் கொண்டாடுவதாகவும், அதற்காக வாசகர் கூட்டம் ஒன்றை ராதாகிருஷ்ணன் சாலையிலுள்ள வுட்லண்ட்ஸ் ஓட்டலில் கூட்டுவதாக அறிவித்து விட்டாராம் சோ. ஆனால், அவரது எதிர்பார்ப்பு, அதிகப் பேர் வரமாட்டார்கள், வரும் ஒரு சிலரை “ஏப்ரல் ஃபூல்” செய்வது என்பதே. அவர் குறிப்பிட்ட அந்தத் தினத்தில் அந்த நிகழ்ச்சிக்குச் செல்லவில்லையாம், அனால் அங்கே நூற்றுக்கணக்கான வாசகர்கள் கூடிவிட, வேறு வழியில்லாமல் அங்கே வரவழைக்கப்பட்டு ஏதேனும் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் சோ. தயாரிப்பு எதுவும் இல்லாத காரணத்தால், வாசகர்கள் என்னைக் கேள்வி கேட்கலாம் என்று தொடங்கிய பாரம்பரியமாம் இது.

துக்ளக் பத்திரிக்கையை, “பிக் விக்” என ஆங்கிலத்திலும் தொடங்கினார் சோ, ஆனால் அது பெரிய அளவில் தொடராமல் போனது. ஆங்கிலப் பத்திரிக்கையும் நடத்துமளவுக்கு மொழியாற்றல் பெற்ற சோ, 22 புத்தகங்களுக்கும் மேல் எழுதியுள்ளார்.

நேர்மையாக வாழ்ந்து, அரசியல் விமரிசனத்தின் மூலமும், தலைவர்களுக்கு அரசியல் அறிவுரை வழங்குவதன் மூலமாகவும் நாட்டிற்குத் தொண்டாற்றிய திரு சோ ராமஸ்வாமி தனது 82 ஆவது வயதில் காலமானார். அன்னாரின் மறைவுக்கு, பனிப்பூக்களின் சார்பில் நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.

வெ. மதுசூதனன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad