\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கிறிஸ்த்மஸ் தினச் செய்திகள்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 25, 2016 0 Comments

பனிப்பூக்கள் வாசகர்கள் அனைவருக்கும்  கிறிஸ்தமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இறைமகன் இயேசு பாலன், உங்கள் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் அன்பையும் சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் நிரம்ப பொழிந்து, அனைவரையும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாக மாற்றி நமக்கு புனித வாழ்வின் மகத்துவத்தை உணர செய்து, ஒருவரை ஒருவர் ஏற்றுகொண்டவர்களாக அன்பையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்ற வாழ்த்துகிறேன்.

கிறிஸ்துமஸ் என்பது உலகத்தில் இறைவனுடைய அவதாரத்தை நினைவு கூறுவது.  இந்த கிறிஸ்து பிறப்பு வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வோ அல்லது வருடம் ஒருமுறை வரும் விழாவோ மட்டும் அல்ல. எப்போதெல்லாம் நமது மனம் தீய இயல்புகளிலிருந்து விடுபட்டு நன்மையைத் தேடிச் செல்கிறதோ அப்போதெல்லாம் கிறிஸ்து இயேசு நம்மில் பிறக்கிறார்.

இயேசு கிறிஸ்து ஏன் உலகத்தில் மனிதனாகப் பிறந்தார் என்ற கேள்வி நம் மனத்திலே எழலாம். அவர் நம்மிடையே இருக்கும் பாவ அரக்கனைஅழித்துப் புது வாழ்வு கொடுக்கவும், மனித மாண்பினைப் பாவத்திலிருத்து மீட்டு, ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் அவதாரம் என்று உணர்த்தவும் குழந்தையாக அவதரித்தார்.

ஏழ்மையில் பிறந்த இயேசு:

இறைமகன் இயேசு கிறிஸ்து இந்த உலகில் மனிதனாக அவதாரம் எடுத்த பொழுது அவர் மாட மாளிகையில், அரண்மனையில் ஒரு அரசனின் மகனாகப் பிறக்கவில்லை.  

யூத இனத்தில், சமுகத்தில் பின் தங்கிய ஒரு சிறிய கிராமத்தில் சாதாரணத் தச்சனின் மகனாக, ஏழ்மைக் குடிலில் பிறந்தார். இளம் கன்னிப் பெண்ணின் இயற்கையிலிருந்து மாறுபட்டு, பரிசுத்த தூய ஆவியானவரின் ஆசிர்வாதத்தால்  கருவுற்று இயேசு பாலன் பிறந்தார்.  இயேசு கிறிஸ்துவின் அவதாரம் மிகவும் எளிமையானது.  

இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பும், தாய் மரியாளும் தங்களுடைய சொந்த ஊருக்குப் பயணம் கொண்ட போது மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. சொந்த ஊரில் சத்திரத்தில்கூட இடமின்மையால் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இந்த மாட்டுதொழுவத்தில் பிறந்த இறைவன் தனக்கு மனித இதயத்தில் இடம் கிடைக்குமா என்ற அவரின் ஏக்கத்தை இது உணர்த்ததுகிறது.

நிலையில்லா உலகின் நிலை உணர் மனமே:

இங்கு யோசேப்பும் மரியாளும் பயணிகள் என்ற உண்மை நமக்கு உணர்த்துவது: இந்த உலகத்தில் நாம் அனைவரும் பயணிகள். உலகம் நமக்கு நிரந்தரம் அல்ல என்பதே. தீமையிலிருந்து நன்மைக்கு நமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இரவைத் துரத்தும் நிலவு போல, மக்களின் அறியாமை, வெறுப்பு, கோபம், பெருமை என்ற இருளைப் போக்க  மென்மையான ஒளியாக எளிமை, அன்பு, அமைதி  ஆகியவற்றுடன் சமாதானத்தின் உருவான இயேசு பிறந்தார். உலகத்தில் நமக்கு நிலையானது எதுவுமில்லை. இது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை என்றாலும் நமது மனம் ஏனோ…. இது நிலையில்லாத உலகம் என்பதை ஏற்க மறந்து விடுகிறது.

கிறிஸ்துவின் பிறப்பு கடவுளின் வெளிப்பாடு:

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கடவுள் உலகத்தின் மீது, குறிப்பாக நம்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு.  அந்த அன்பின் வெளிப்பாட்டினால், புனித நூலின் ஆதியாகமத்தில் குறிப்பிடுவது போல, கடவுள் உலகத்தைப் படைத்து, மானிடன் மீது கொண்ட தனது அன்பையும் வெளிப்படுத்தினார். கடவுள் தான் உலகைப் படைத்த வரிசையிலே தனது வாரிசையும் வெளிப்படுத்தினார்.

கடவுள் தன் இறைமகன் இயேசுவின் பிறப்பை முதலில் இயற்கைக்கும் பின்பு ஐந்தறிவு கொண்ட விலங்குகளுக்கும், இறுதியில் ஆறறிவு கொண்ட மனிதருக்கும் வெளிப்படுத்தினார்.

இந்த மாபெரும் அவதாரம் முதலில் படிப்பறிவு இல்லாத பாமர இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது.  வானில் வான துதர்களால்  தோன்றிஇறைமகன் இயேசு பிறந்துள்ளார்,  சென்று காணுங்கள்”  என உரைக்கக் கேட்ட இடையர்கள் இருளையும் பொருட்படுத்தாது பாலன் இயேசுவைத் தரிசிக்க ஓடினார்கள். அரசவையில் இருந்தோரோ குழந்தையை அழிக்கத் தேடினார்கள்.

அதே சமயம் வெவ்வேறு திசையிலிருந்த ஞானிகளோ இயற்கையின் மாற்றத்தை உணர்ந்து தங்களுடைய நுண்ணறிவுத் திறனால் ஆராய்ந்து நீண்ட பயணத்தில் வால் நட்சத்திரம் வழிகாட்ட இயேசு பிறந்த மாட்டுத்தொழுவத்தை வந்து அடைந்தார்கள்.  

எளிமையானவர்களுக்குக் கடவுளின் வெளிப்பாடு நேரடியாக, எளிமையாக இருந்தது.  உலக நுண்ணறிவுத் திறன் கொண்ட ஞானிகளுக்கோ நேரடியாக எளிமையாக வெளிப்படுத்தப் படவில்லை.

நம் அன்றாட வாழ்வில் நாம் எளிமையானவர்களாக  இருந்தால், இறைவனை எளிதில் உணரமுடியும்.  

எளிய மனத்தோராய் இறைவனோடும், இறைவனின் படைப்புகளோடும் ஒன்றுபடுவோம்.

இறைமகன் இயேசு பாலன் இந்த உலகிற்கு  அன்பையும், எளிமையையும், பணிவையும்  நமக்காகக் கொண்டுவந்தார்.

ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்து, மற்றவர்களை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் உண்மையான மகிழ்ச்சி என்றும் நிலைபெறும்.

இந்த உண்மையை உணரும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் இறைமகன் இயேசு பாலன் நம்மில் பிறக்கிறார்.

உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் அன்பும் சமாதானமும் பெருக அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தந்தை  தாமஸ் ராயர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad